சம்ஸ்க்ருதத்துக்கும் தமிழ் மொழிக்கும் ஒரே இலக்கணம் – சில முயற்சிகள்

தமிழ் ஒரு தனிச்செம்மொழி, வடமொழிக்கு ஈடான பாரத நாட்டின் செல்வம் என்பதில் ஐயமில்லை. சம்ஸ்க்ருதம் போன்றே தமிழுக்கும் ஏராளமான இலக்கண நூல்கள் தமிழ் அறிஞர் பெருமக்களால் இயற்றப் பட்டு வந்துள்ளன. அவற்றில் சம்ஸ்க்ருதமும் தமிழும் அறிந்த சிலர் இவ்விரண்டு மொழிகளின் சிறப்பையும் போற்றி இவற்றுக்கு ஒரே இலக்கணம் எழுத முற்பட்டனர். மு.வை. அரவிந்தன் என்பார் எழுதியுள்ள “உரையாசிரியர்கள்” என்ற நூலில் இவர்களில் சிலர் பற்றிய தகவல் உள்ளது. ஒரு தகவலாக அந்த நூலில் ஒரு பகுதியை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

***

தொல்காப்பியம் சொல்லதிகார உரையில் சேனாவரையர் வடமொழிக்கும் தமிழுக்கும் இலக்கணம் ஒன்றே என்ற கருத்திற்குக் கால்கோள் செய்தார். அக் கருத்தினை வீர சோழிய ஆசிரியரும் அதற்கு உரைகண்ட பெருந்தேவனாரும் பேணி வளர்த்தனர். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், பிரயோக விவேகம் இயற்றிய ஆழ்வார் திருநகரி சுப்பிரமணிய தீட்சிதரும், இலக்கணக் கொத்தின் ஆசிரியரான சாமிநாத தேசிகரும் வடமொழிக்கு ஏற்றம் தந்து சிறப்புச் செய்து இரு மொழிக்கும் இலக்கணம் ஒன்றே என்று சாதித்தனர்.

தமிழறிஞர்கள் இத்தகைய ஆசிரியர்களின் கொள்கைகளைத் தகர்த்து எறிந்தனர்; கண்டித்துத் தமிழின் பெருமையை நிலை நாட்டினர். நாவலர் சோமசுந்தர பாரதியார் “தமிழ் மரபு உணர்ந்து பேணாத வட நூல் வல்ல உரைகாரரால் இத் தகவிலா வழக்குப் பெருகி, தமிழ் ஒரு தனி மொழி அன்று என இகழும் பியோக விவேகம், இலக்கணக்கொத்துப் போன்ற பனுவல்களும் தமிழில் எழுதப்பட்டன” என்று கண்டிக்கின்றார் (நற்றமிழ் (1955) பக்கம் 25).

தமிழ்மொழி இத்தகைய சூழலை வென்று விளங்குவதை அறிஞர் பெருமக்கள் வியந்து போற்றுகின்றனர். மணி, திருநாவுக்கரசு முதலியார், “வட நாட்டினின்றும் வீறிவந்த ஆரியம் தெலுங்கை அடிமைப்படுத்தியது. மலையாளத்தை மணந்து கொண்டது; கன்னடத்தில் கை வைத்தது; துளுவத்தைச் சூழ்ந்து கொண்டது: செந்தமிழ் மருங்கிலும் செல்லத் தொடங்கியது. ஆனால் அச்சூழலில் அகப்படாது தனது ஒப்பற்ற தன்மையை இன்றும் அழியாமல் காத்துக்கொண்டு அதனோடு சமமாய் எதிர்த்து நின்று ‘நான் நினக்கு ஒருவாற்றானும் எளியேன் அல்லேன்; எவ்வாற்றானும் நின்னினும் சிறந்தேன் என்று ஒளிரும் தமிழ் அன்னையின் கன்னித் தன்மையை என்னென்பேன்!” என்று பாராட்டுகின்றார் (பல்பொருட் கட்டுரை பக்கம் – 145).

சாமிநாத தேசிகர்

சாமிநாத தேசிகர் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டிய நாட்டில் பிறந்தவர், இவர் தோன்றியது சைவ வேளாளாளர் குடியாகும். இளமை முதற்கொண்டே இவர் கல்வியைச் செல்வமாகவும் கற்றோரைச் சுற்றமாகவும் கொண்டு ஒழுகினார். இவருக்குக் தமிழ் கற்பித்தவர், மயிலேறும் பெருமாள் பிள்ளை. வடமொழி பயிற்றியவர் கனகசபாபதி சிவாசாரியார். தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களை எழுத்து எண்ணிப் படித்தவர் என்று தம் காலத்து அறிஞர்களால் இவர் பாராட்டப்பெற்றார்.

இவர் காலத்தில் திருவாரூரில் வாழ்ந்த வைத்தியநாத தேசிகர் இலக்கண விளக்கம் நூலும் உரையும் இயற்றினார். ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்த சுப்பிரமணிய தீட்சிதர் பிரயோக விவேகம் நூலும் உரையும் இயற்றினார். இச் செய்தியைச் சாமிநாததேசிகரே கூறியுள்ளார்.

….என்கண் காணாத்
திருவா ரூரில் திருக்கூட் டத்தில்
இலக்கண விளக்கம் வகுத்துஉரை எழுதினன்;
அன்றியும் தென்திசை ஆழ்வார் திருநகர்
அப்பதி வாழும் சுப்பிர மணிய
வேதியன், தமிழ்ப் பிரயோக விவேகம்
உரைத்து உரை எழுதினான்

என்று தம் நூலில் குறிப்பிடுகின்றார்.

நன்னூலுக்கு உரை இயற்றிய சங்கர நமசிவாயர் இவரிடம் கல்வி கற்ற மாணவர்.

நூலும் உரையும்

இலக்கணக் கொத்து என்ற பெயரால் ஓர் இலக்கண நூலும் உரையும் இவர் இயற்றினார். நூலும் உரையும் பல அரிய இலக்கண ஆராய்ச்சிகள் நிரம்பியவை. “முன்னோர் நூல்களுள் வெள்ளிடை மலை போல விளங்கிக் கிடந்து பயன்படு விதிகள் அளவில்லை; அவற்றுள் இலைமறை காய்போலக் கரந்து கிடந்து பயன்படாதன சிலவற்றுள் சிறிது எடுத்து உரைத்தனன்” என்று இவர் கூறுகின்றார் (இலக்-7).

சொல்லும் பொருளும்

ஆரியன் என்ற சொல்லை இவர் ஆசிரியன் என்ற பொருளில் பயன்படுத்துகின்றார்.

“பகவற்குப் பாடி ஆடினான் பாகவதன்; வடக்கினின்றும் வந்தவன் வடமன்” (இலக்-117) என்பது இவர் தரும் விளக்கம்.

வேறுபாடு

வடமொழிக்கும் தமிழுக்கும் உள்ள வேறுபாட்டை, “இரு திணையும் ஆண்பால் பெண்பால் வினைஈறும் வடமொழிக்கு இல்லை. மூன்று இலிங்கமும் முதலீற்று வேற்றுமைகட்கு உருபுகளும் தமிழிற்கு இல்லை” என்று கூறுகின்றார் (இலக்-7).

வடமொழிப் பற்று

வடமொழிப் பற்றும் புலமையும் மிக்க இவர் தமிழின் தனித் தன்மையை மறந்து விட்டார். இரு மொழியும் வேறு வேறு இயல்புடையவை என்ற உண்மையைப் புறக்கணித்தார்.

தமிழால் அறிய முடியாத செய்திகளை வடமொழி பயின்றால் அறிந்து கொள்ளலாம் என்பது இவரது கொள்கை:

பலகாற் பழகினும் தெரியா உளவேல்
தொல்காப் பியம்திரு வள்ளுவர் கோவையார்
மூன்றினும் முழங்கும்; ஆண்டிலும் இலையேல்
வடமொழி வெளிபெற வழங்கும் என்க
(இலக்-7)
என்று இவர் கூறுகின்றார்.

“வடமொழி தமிழ்மொழி எனும் இரு மொழியினும் இலக்கணம் ஒன்றே என்றே எண்ணுக” என்று இவர் உரைக்கின்றார் (இலக்-7).

வடமொழி மீதிருந்த அளவுகடந்த பற்றின் காரணமாகத் தமிழ்மொழியை இகழவும் தொடங்கிவிடுகின்றார்.

… தமிழ்நூற்கு அளவிலை; அவற்றுள்
ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ?
அன்றியும் ஐந்து எழுத்தால் ஒருபாடை என்று
அறையவும் நாணுவர் அறிவுடை யோரே
(இலக் -7)

என்று தமிழ்மொழியையும் நூல்களையும் இகழ்ந்து அறிஞர் பலருடைய வெறுப்பிற்கும், இகழ்ச்சிக்கும் ஆளாகிவிடுகின்றார்.

செங்கல்வராய பிள்ளை ‘தமிழ் உரைநடை இலக்கிய வரலாறு’ என்னும் நூலில் சாமிநாத தேசிகரைப்பற்றி, “இவர் சிறந்த தமிழறிஞராக இருந்தபோதிலும் தமிழ்மொழி, இலக்கியங்களைப்பற்றி, சில துறைகளில் மிகவும் குறுகிய நோக்கம் உடையவராகக் காணப்படுகின்றார்”1 என்று கூறுகின்றார்.

இவரது கொள்கைகள் சிலவற்றைத் தமிழறிஞர் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் தமிழ் மொழியின் வரலாறு என்னும் நூலில் மறுத்துள்ளார்.

பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரைப் பிள்ளை, சரித்திரம் பேசுகிறது என்னும் நூலில் (1962, பக்-77) பின்வருமாறு சாமிநாத தேசிகரைக் கண்டித்துள்ளார்:

“இந்தியாவிலேயே சமஸ்கிருத ஆதிக்க வாதிகளின் தலைவர் என்று, இலக்கணக் கொத்து ஆசிரியரான சாமிநாத தேசிகரைக் கூறலாம். தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் பொதுவான எழுத்துகளைச் சமஸ்கிருத எழுத்துக்கள் என்று அவர் முடிவு செய்தார். தமிழ்ச் சிறப்பு எழுத்துக்களான ற ன ழ எ ஒ என்ற ஐந்துமே தமிழ் எழுத்துக்கள் என்று கொண்டார். “ஐந்தெழுத்தால் ஒருபாடை, எப்படித் தனிமொழி ஆகும்?” என்று வீறாப்புடன் அவர் வினவினார், தமிழைப் பழித்து அவர் தமிழிலேயே எழுதத் துணிந்தார்”

புலவரைப் போற்றுதல்

வடமொழிப்பற்று மிகுந்த இவர், தமிழ்ப் புலவர்களைப் போற்றிப் புகழும் இடங்களும் உண்டு.

பல்காற் பழகினும் தெரியா உளவேல்
தொல்காப் பியம்திரு வள்ளுவர் கோவையார்
மூன்றினும் முழங்கும்

என்றும், “இலக்கணமாவது தொல்காப்பியம் ஒன்றுமே, செய்யுளாவது திருவள்ளுவர் ஒன்றுமே” என்றும் போற்றுகின்றார் (இலக்-7).

பிழை செய்வது மனித இயல்பு என்றும், அதனைப் பொறுப்பது ஆன்றோர் கடன் என்றும், முன்னோர் நூலில் பிழை இருப்பினும் போற்றுதல் வேண்டும் என்றும் கூறுகின்றார்.

நூலா சிரியர் கருத்தினை நோக்காது
ஒருசூத் திரத்திற்கு ஒவ்வொரா சிரியர்
ஒவ்வொரு மதமாய் உரைஉரைக் குவரே

என்றும்,

நூலுரை போதகா சிரியர் மூவரும்
முக்குண வசத்தால் முறைமறந்து அறைவரே
(இலக்-6)

என்றும் இவர் உலகிற்கு அறிவுரை கூறகின்றார். மற்றோர் இடத்தில், இறைவன் நீங்கலான எல்லா ஆசிரியர்க்கும் ‘மறவி இனைய உடல் கொள் உயிர்க் குணம்’ என்பதனாற் பொது. அவரவர் மறவிகளை விரிக்கின் பெருகுதலானும், அறிதல் அருமையானும், பெரியோர்க்குக் குற்றம் கூறினான் என்னும் குற்றம் வருதலானும் விரித்திலம் என்க” (இலக்-89) என்று உரைக்கின்றார்.

நன்னூலாரை இவர் பெரிதும் போற்றி மதிக்கின்றார். ‘சேற்று நிலத்தி்ல் கவிழ்ந்த பால் தேன் நெய் முதலியனவும் சேறு ஆனாற்போல, நன்னூல் சூத்திரமும் அவ்வுரையுடனே கலந்து குற்றப்பட்டது என்க. முன்னூல் ஒழியப் பின்னூல் பலவினுள் நன்னூலார் தமக்கு எந்நூலாரும் இணையோ என்னும் துணிவே மன்னுக” (இலக்.-8) என்று இவர் கூறி நன்னூலாரைப் புகழ்கின்றார்.

இப்பகுதியில் அவ்வுரை என்று இவர் குறிப்பிடுவது, இலக்கண விளக்க ஆசிரியர் தம் நூலில் மேற்கோளாக நன்னூல் சூத்திரங்களைக்கொண்டு அவற்றிற்கு உரைத்த உரையாகும்.

இலக்கண விளக்க ஆசிரியரை இவர், மேலும் சிலவிடங்களில் குறிப்பாக மறுத்துள்ளார்.

“அ இ உ முதல் தனிவரின் சுட்டே – நன்னூலார்க்குப் பின்னூலார் இச்சூத்திரத்திற்கு அளவிறந்த குற்றம் கூறினார்” என்றும், “(நன்னூல்) சூத்திரம் பிழைப்பட்டதாகக் கருதித் திருத்தி, திருத்தினம் என்றும் இன்னும் பல கருதி மயங்குவர்” (இலக்-117) என்றும் இவர் மறுக்கின்றார்.

இலக்கணத் தொடரும் விளக்கமும்

வேற்றுமை, இரட்டைக் கிளவி, தொகை நிலை ஆகியவற்றிற்குப் பொருளும் விளக்கமும் தருகின்றார்.

வேற்றுமை: “உருபு ஏற்றதனையும், உருபையும் உருபு நோக்கி வந்ததனையும் வேற்றுமை என்பர். வேறுபடுதலால் வேற்றுமை, வேறுபடுத்தலால் வேற்றுமை, வேற்றுமையை முடித்தலால் வேற்றுமை என்று பொருள் உரைப்பர்” (இலக்-20).

இரட்டைக் கிளவி: “இரட்டைக் கிளவியைப் பிரித்தது என் எனின், இது இலை இரட்டை, பூவிரட்டை, காய் இரட்டை, விரல் இரட்டைபோல ஒற்றுமைப்பட்டு நிற்றலானும்; அவ்வைந்தும் மக்கள் இரட்டை, கால் இரட்டை போல வேற்றுமைப்பட்டு நிற்றலானும் என்க” (இலக்-120).

தொகை நிலை தொகா நிலை: “தொகைநிலை தொகா நிலை எனும் சொற் பொருளான் மாறுபடு புலவர்கள் மூவர் என்க.

1. நிலைமொழி வருமொழிக்கு இடையே மறைந்து நிற்றல் வெளிப்பட
நிற்றல் என்றும்,

2. நிலைமொழி வருமொழிகள் கூடிநிற்றல் பிரிந்து நிற்றல் என்றும்,

3. நிலைமொழி வருமொழிகள் ஒன்றாய் நிற்றல் பலவாய் நிற்றல் என்றும்,

பொருள் கூறி, ஒருவரை ஒருவர் மறுப்பர். அவை விரிக்கின் பெருகும்.”

போலி எழுத்து

போலி எழுத்துப் பற்றி இவர் கொண்டுள்ள கருத்து வேறுபட்டது. சிவஞான முனிவர் சந்தியக்கரம் என்று கொண்டதனை இவர் போலி எழுத்து என்பர்.

அ + ய் = ஐ

அ + வ் = ஒள

என்பது இவர் கருத்தாகும்.

“போலி எழுத்தைப் போற்றுதல் கடனே” (இலக்-91) என்று ஒரு நூற்பா இயற்றி, “ஈரெழுத்துக்கூடி ஓர் எழுத்துப் போல வருவனவற்றைத் தள்ளாது கொள்ளுக” என்று உரை கூறிப் பின் வரும் விளக்கமும் எழுதியுள்ளார்:

“வடநூலார் இவ்விலக்கணத்தைத் தள்ளாது சமானாக்கரம் என்று பெயரிட்டு இவ்விரண்டினையும் தழுவினர். அது பற்றித் தமிழ் நூலார், ‘இணை எழுத்து’ என்று மொழிபெயர்க்க. மற்றது ‘போலி எழுத்து’ என்று மொழிபெயர்த்ததனால், போலிச் சரக்கு போலி இலக்கணம் போலியுரை என்னும் சொற்களைப் போல இதனையும் கருதி, முன்னும் பின்னும் பாராது தள்ளினார். அது பற்றியே இச் சூத்திரம் செய்தனம் என்க”

வாக்கியத்தின் வகைகள்

வாக்கியத்தின் வகைகளைப்பற்றி இவர் ஆராய்ந்துள்ளார். ‘ஒரு தொடர் பல தொடர் எனத் தொடர் இரண்டே’ (இலக்-124) என்று சூத்திரம் இயற்றி, ‘இவற்றை வட நூலார் ஏக வாக்கியம், பின்னவாக்கியம் என்பர். அதனான் மொழி பெயர்த்தனம் என்க”

இக்காலத்தவர், ஒரு தொடர் என்பதனைத் தனி வாக்கியம் (Simple sentence) என்றும், பல தொடர் என்பனைத் தொடர் வாக்கியம் (Complex sentence) என்றும் வழங்குகின்றனர்.

சுப்பிரமணிய தீட்சிதர்

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டிய நாட்டில் உள்ள ஆழ்வார் திருநகரியில் தோன்றிய சுப்பிரமணிய தீட்சிதர் பிரயோகவிவேகம் என்ற இலக்கண நூலையும் உரையையும் இயற்றினார். இந்நூல் முழுக்க முழுக்க வடமொழி இலக்கணத்தைப் பின்பற்றியது.

நூலின் தொடக்கத்தில் “பாணினி பதஞ்சலி ஆகிய வடமொழி வல்லுநரின் தாள் வணங்கி நூலை இயம்புகிறேன்” என்று கூறுகின்றார். தம் நூல் அரங்கேறிய வரலாற்றினை,

பேர்கொண்டு நின்றபிர யோக விவேகத்தைச்
சீர்கொண்ட ராமபத்ர தீக்கிதன்தான்-நேர்கொண்டு
கேட்டான் இனிக்கண்ணாற் கேட்கும் பதஞ்சலிதான்
கேட்டால்என் கேளாக்கால் என்

என்ற வெண்பாவால் உணர்த்துகின்றார்.

தம் நூலுக்கு வடமொழிப் பெயரை வைத்ததற்குக் காரணம் கூறும்போது, “வடமொழிப் பிரயோக விவேகத்தினும் சொல்லிலக்கணம் அல்லது எழுத்திலக்கணம் கூறாமையின் சொற்பிரயோக விவேகம் என்றாம்” என்று உரைக்கின்றார்.

தாம் இயற்றிய நூலுக்குத் தாமே பதிகமும் உரையும் செய்து அவ்வாறு செய்தல் வடமொழி மரபு என்கிறார்.

“வடநூலார் தாமே பதிகமும் உரையும் செய்வார். இந்நூலும் வடநூலைத் தற்பவமாகச் செய்தலான், யாமும் பதிகமும் உரையும் செய்து உதாரணமும் காட்டினாம்” என்று கூறுகின்றார் (காரக படலம்-3).

காரக படலத்தின் முதற் சூத்திரவுரையிலேயே, “வட மொழிக்கும் தமிழ் மொழிக்கும் இலக்கணம் ஒன்று” என்றும், “வட மொழிக்கு உரிய குறிஎல்லாம் வடமொழிக்கேயன்றித் தமிழ் மொழிக்கும் உரியன” என்றும் கூறுகின்றார்.

பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே

என்ற சூத்திரம் நன்னூலாருக்குப் பெருமை தருவதாகும். இதனை எடுத்துக்காட்டி இந்நூலாசிரியர், “இச்சூத்திரம் பாணினி கூறியவாறு கூறினார். அது வடமொழியிற் காட்டுதும்” என்கின்றார். (திங்ஙுப்படலம்-16).

நூலின் இறுதியில், “இந் நூலுள் சந்தேகம் தோன்றுவதனை மகாபாடியம், கையடம், சித்தாந்த கௌமுதி, சத்த கௌமதி, வாக்கிய பதீயம், அரிபீடிகை, தாதுவிருத்தி, பதமஞ்சரி, சத்த கௌத்துவம் கற்றவரைக் கேட்க. காசிகா விருத்தி, பிரக்கிரியா கௌமுதி என்னும் இரண்டினும் சித்தாந்தம் பிறவாது ஆதலின் அவை கற்றோரைக் கேளாது ஒழிக” என்று உரைக்கின்றார்.

இவை எல்லாம் வடமொழியில் இவர்க்குள்ள பற்றினையும் புலமையினையும் உணர்த்தும் சான்றுகளாகும்.

வேற்றுமை காட்டல்

மிகச்சில இடங்களில் வடமொழிக்கும் தமிழுக்கும் உள்ள வேற்றுமைகளைச் சுட்டுகின்றார். திங்ஙுப் படலத்தில் (6-ஆம் சூத்), “இருமைக்கு உதாரணம் வடமொழிக்கல்லது தமிழ்மொழிக்கு இல்லை” என்று தெளிவுபடுத்துகின்றார். மேலும்,

சாற்றிய தெய்வப் புலவோர் மொழிக்கும் தமிழ்மொழிக்கும்
வேற்றுமை கூறின் திணைபால் உணர்த்தும் வினைவிகுதி
மாற்றரும் தெய்வ மொழிக்குஇல்லை பேர்க்குஎழு வாய்உருபும்
தேற்றிய லிங்கம் ஒருமூன்றும் இல்லை செழுந்தமிழ்க்கே

என்றும் கூறி இருமொழி இலக்கணத்தையும் வேறுபடுத்துகின்றார் (திங்ஙுப் படலம்-15).

வடமொழித் திணிப்பு

பிரயோகவிவேகம் என்ற தலைப்பில் நூலை இயற்றிய இவர், நூலின் உட்பிரிவுகளுக்கும் வடமொழியை ஒட்டியே பெயரிட்டுள்ளார். காரக படலம், சமாச படலம், தத்தித படலம், திங்ஙுப்படலம் என்ற பெயர்களை அமைத்துள்ளார்.

வடசொற்களை, தமிழ்மொழியின் ஒலிமுறைக்குச் சிறிதும் ஒவ்வாத வகையில் தம் நூலில் எடுத்தாளுகின்றார். சந்தம், வாதேசம், திஙந்த வினை, திங்ஙு போன்ற சொற்களை இவர் உரையில் காணலாம்.

எளிய தமிழ்ச் சொற்களுக்கும், அவற்றோடு ஒத்த வடசொற்களைத் தந்து விளக்கம் தருகின்றார். கீழே சிலவற்றைக் காண்போம்:

“இயற்கை என்பது சகசம். செயற்கை என்பது ஆகந்துகம்” (காரக-5).

“அலங்கார நூலார் இசை எச்சத்தைக் காகு என்பர்” (திங்ஙு-16)

“இலக்கணையாவது, பெயராக வினையாக நிற்கும் சொற்கள் தத்தம் பொருளை உணர்த்தாது, பொருளின் சம்பந்தப் பொருளையும் தாற்பரியப் பொருளையும் அறிவித்தல்” (திங்ஙு-13)

“உரிச்சொல்லாவது பொருளும் தானும் பேதமின்றி அபேதமாதற்குரிய சொல்… அர்த்த நாரீசுவரன் என்னும் பார்வதி பரமேசுவரன் போலப் பொருளும் சொல்லும் பேதாபேதமாய் வரும் என்பாரும் உளர். காளிதாசனும் வாகர்த்தாவிய என்னும் சுலோகத்தால் அவ்வாறு கூறுவன்” (சமாச – 1)

சைவப்பற்றும் தமிழ்ப்புலமையும்

இவர் சைவ சமயத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். தம் உரைகளில் “மானேந்தி, பிறை சூடி, அம்பலத்தாடி” என்ற பெயர்களை உதாரணங் காட்டுகின்றார்.

தமிழறிஞர்களின் கருத்துகளை ஏற்ற இடங்களில் குறிப்பிடுகின்றார். அவற்றுள் சில பின்வருமாறு:

“சதி சத்தமியைத் தொல்காப்பியர் வினைசெய் இடம் என்பர். பரிமேலழகர் வினை நிகழ்ச்சி என்பர்” (காரக-16).

“வஞ்சரை அஞ்சப்படும் என்னும் குறளினும், கொள்ளப்படாது மறுப்ப அறிவில்லன் கூற்றுக்களே என்னும் திருக்கோவையாரினும் பதிமேலழகரும் போராசிரியரும் முதனிலையைப் பிரித்து எழுவாயாக்கி முடித்தலும் காண்க”
(திங்ஙு-2).

சந்தியக்கரம்

சந்தியக்கரம் பற்றி இவர் பின்வருமாறு கூறுகின்றார்:

“இனிச் சந்தியக்கரமாவது,
அகர இகரம் ஏகாரம் ஆகும்.
அகர உகரம் ஓகாரம் ஆகும்.
இகார உகாரம் என்னும் இவற்றோடு
ஆகாரம் ஐ ஒள ஆகலும் உரித்தே.

இவ்வுரைச் சூத்திரங்களால் ஈரெழுத்தாகிய சந்தியக்கரம் என்றும் ஓரெழுத்தாகிய ஏகாக்கரம் என்றும் அறிக” (காரக-5)

[“உரையாசிரியர்கள்” முழு நூலும் இங்கே: http://www.tamilvu.org/library/lA476/html/lA476ind.htm]

2 Comments சம்ஸ்க்ருதத்துக்கும் தமிழ் மொழிக்கும் ஒரே இலக்கணம் – சில முயற்சிகள்

  1. owner of domain

    Both are great languages with fantastic grammars. As a Tamil Brahmin, who studied Sanskrit at school and junior college, I learnt to appreciate the power and beauty of Sanskrit. They belong to different linguistic families and do not have a common origin. The structure and cadences of the words are also fundamentally different. There is no conflict here. Tamil has been enriched by Sanskrit words and religious influences.
    Tamil still retains its identity as a living language while Sanskrit is not in use any more.

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)