சம்ஸ்க்ருத இலக்கண நூல்களில் தலையாயது பாணினியின் அஷ்டாத்யாயி. இதற்கு பல உரைகள் உண்டு. முக்கியமாக மஹாபாஷ்யம் (The Great Lectures) என்ற பதஞ்சலியின் நூல் ஈடு இணையற்றது. அதற்கு அடுத்த படியாக புகழ்பெற்ற நூல் பட்டோஜி தீக்ஷிதர் இயற்றிய வியாகரண சித்தாந்த கௌமுதி என்னும் உரை நூல். இதனை சுருக்கமாக கௌமுதி என்றும் சித்தாந்த கௌமுதி என்றும் அழைப்பது உண்டு. கௌமுதி என்றால் நிலவொளி என்று அர்த்தம். சூரியன் போன்று ஜ்வலிக்கும் அஷ்டாத்யாயியை, கற்பதற்கு அணுகும் மாணவர்களை, சூரியனின் வெப்பம் போன்ற அதன் கடினத் தன்மை நெருங்க விடாமல் செய்துவிடக் கூடும். அதற்கு மாற்றாக அஷ்டாத்யாயியின் அமைப்பை மாற்றி ஆரம்பத்திலிருந்து கற்பதற்கு ஏற்றவாறு அநேக உதாரணங்களுடன் நிலவொளியின் குளுமையை ஒத்ததாக அமைந்த நூலே வியாகரண சிந்தாந்த கௌமுதி என்று அழைக்கப் படுகிறது.
कौमुदी यदि कण्ठस्था वृथाभाष्ये परिश्रमः।
कौमुदी यद्यकण्ठस्था वृथा भाष्ये परिश्रमः।।
கௌமுதீ³ யதி³ கண்ட²ஸ்தா² வ்ருʼதா²பா⁴ஷ்யே பரிஸ்²ரம:|
கௌமுதீ³ யத்³யகண்ட²ஸ்தா² வ்ருʼதா² பா⁴ஷ்யே பரிஸ்²ரம:||
வியாகரண சித்தாந்த கௌமுதியை எவர் கற்றாரோ அவர் பதஞ்சலியின் மஹாபாஷ்யத்தை படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதில் உள்ள அத்தனை கருத்துக்களும் இதில் உண்டு. சித்தாந்த கௌமுதியை எவர் கற்கவில்லையோ அவரும் மஹாபாஷ்யத்தைப் படிப்பது அவசியம் இல்லை – ஏனெனில் மஹாபாஷ்யம் எளிதில் புரிந்து கொள்ள முடியாதது – அதனை புரிந்து கொள்ள சித்தாந்த கௌமுதியின் அடிப்படை விளக்கங்கள் அவசியம். இது ஒரு சமத்காரமான ஸ்லோகம். இதனால் மகாபாஷ்யம் படிப்பது வீண் என்று பொருள் அல்ல – இரண்டு நூல்களுமே படிக்க வேண்டியவை தான். அதே சமயத்தில் வியாகரண சித்தாந்தகௌமுதியின் முக்கியத்துவத்தை புரியவைப்பதற்காக இந்த ஸ்லோகத்தில் இவ்வாறு சொல்லப் பட்டிருக்கிறது.
பட்டோஜி தீக்ஷிதர்
முகலாயர் ஆட்சியில் பாரதம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக செயல்பட்டு வந்த கல்வி நிலையங்கள் அடித்து நொறுக்கப் பட்டன. கல்வியாளர்கள் இஸ்லாமியர்களாக இல்லாவிட்டால் கொலை செய்யப் பட்டனர். இந்நிலையிலும் வட பாரதத்தில் இருந்து தென் தமிழகம் வரை பரவி விட்ட இஸ்லாமிய ஆட்சியினராலும் காசியை ஒன்றும் செய்ய முடியவில்லை. பாரதம் முழுவதிலிருந்தும் அறிஞர்களும், அறிவை தேடி மாணவர்களும் காசிக்கு வந்து கொண்டே இருந்தனர். இவ்வாறு காசி பாரத்தின் அறிவுக் கருவூலமாக விளங்கியது.
அத்தகைய காசியில் வாழ்ந்த சம்ஸ்க்ருத இலக்கண மேதை பட்டோஜி தீக்ஷிதர். இவர் அத்வைத சித்தாந்த ஞானியான அப்பைய தீக்ஷிதரின் சீடர் என்று கூறப்படுகிறது. இவரது தந்தை லக்ஷ்மிதரர், சகோதரர் ரங்கோஜி தீக்ஷிதர், பட்டோஜி தீக்ஷிதரின் மகன் பானு தீக்ஷிதர் ஆகியோரும் பெரும் மேதைகள், படைப்பாளிகள்.
இவரது காலம் பதினாறு – பதினேழாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று கூறுவர். மராட்டியத்தைச் சேர்ந்தவர். பெரும்பாலும் காசியில் வாழ்ந்தவர். கங்காலஹரி போன்ற பெருமை வாய்ந்த நூல்களை இயற்றிய பண்டித ராஜ ஜகன்னாதர், தர்க சங்கிரகம் போன்ற நூல்களை இயற்றிய அன்னம்பட்டா போன்ற மேதைகளின் சமகாலத்தவர்.
இவரது காலத்தில் சம்ஸ்க்ருத இலக்கண – இலக்கியக் கல்வி மங்கிய நிலையில் இருந்தது. சம்ஸ்க்ருத இலக்கணத்தை எளிதாகக் கற்க முடியாமல் இருந்து வந்தது. எளிய உரைகள் எதுவும் எழுதப் படாமல் இருந்தது. இதற்கு ஒரு தீர்வாக இலக்கணத்தில் பெரும் மேதைமை கொண்டிருந்த பட்டோஜி தீக்ஷிதர் சித்தாந்த கௌமுதியை இயற்றினார். இவரது மற்ற நூல்கள்
- அத்வைத கௌஸ்துபம் ( அல்லது தத்வ கௌஸ்துபம்) – அத்வைத சித்தாந்த நூல்
- மத்வமத வித்வம்சனம் – மத்வ சித்தாந்த மறுப்பு நூல்
- சப்த கௌஸ்துபம் – மகாபாஷ்யத்தின் மீதான உரை
- ப்ரௌட மனோரமா – சித்தாந்த கௌமுதியின் மீது தீக்ஷிதரே எழுதிய உரை
- திதி நிர்ணயம் – வானவியல்/சோதிட நூல்
மேலும் வேதபாஷ்ய சாரம் போன்ற பல நூல்களும் பட்டோஜி தீக்ஷிதர் இயற்றியதாகக் கூறப் படுகிறது.
வியாகரண சித்தாந்த கௌமுதி – நூலின் தோற்றம், அமைப்பு
சுமார் ஐநூறு வருடங்கள் முன்பு) எழுந்த தலைசிறந்த இலக்கண உரை சித்தாந்த கௌமுதி. சம்ஸ்க்ருத இலக்கணத்தை நேரடியாக பாணினியின் சூத்திரங்கள் வாயிலாக படிக்கும் மாணவர்கள் உண்டு. முதலில் பாணினி சூத்திரங்களை மனப்பாடம் செய்து பின் பதஞ்சலியின் மகாபாஷ்யம் கற்றுக் கொள்கிற மாணாக்கரும் உண்டு. இவற்றை விட சுலபமாக, இலக்கண சூத்திரங்களை பொருள், அதன் பயன்பாடு ஆகியவற்றுடன் கற்க சித்தாந்த கௌமுதி வாயிலாக கற்கும் முறை முன் சொன்ன இரு முறைகளையும் பின்னுக்கு தள்ளி பிரபலமாகி விட்டது. பாணினியின் இலக்கண சூத்திரங்கள் தன்னளவில் ஒரு முறையில் அமைக்கப் பட்டுள்ளது. அதை சற்று மாற்றி சித்தாந்த கௌமுதி எளிமைப் படுத்துகிறது. இதை விட சிறப்பாக பாணினி சூத்திரங்களை மாற்றி அமைத்து தரும் நூல் வேறு எதுவும் இல்லை.
சித்தாந்த கௌமுதியில் பாணினியின் சூத்திரங்கள், அவற்றின் உட்பொருள் எதுவும் சிதையாமல் அற்புதமாக அமைக்கப் பட்டுள்ளது. அதற்காக பட்டோஜி தீக்ஷிதர் இந்நூலை பூர்வார்தம் (முதல் பாதி), உத்தரார்தம் (கடைசிப் பாதி) இரண்டு பாகமாக பிரித்துள்ளார். முதல் பாகத்தில் சொற்கள், சந்தி அமைப்பு, விபக்தி (வேற்றுமை உறுபு) அமைப்புகள், பெண்பாற் சொற்கள் அமைப்பு (ஸ்த்ரி பிரத்யயம்) போன்ற பகுதிகளும், இரண்டாம் பாகத்தில் தி-ஙந்த, க்ருதந்த பிரகரணங்களும், வேத உச்சரிப்பு விதிகள் கொண்ட வைதிக பிரகரணம், ஸ்வர பிரகரணம் ஆகியவை அமைந்துள்ளன.
உரை நூல்கள்
வியாகரண சித்தாந்த கௌமுதி நூலுக்கு பத்துக்கும் மேற்பட்ட புகழ்பெற்ற உரைகள் எழுதப் பட்டுள்ளன. மேலும் ஆங்கிலம், ஜெர்மன் போன்ற மொழிகளில் கூட உரைகள் உண்டு. சம்ஸ்க்ருத மொழியில் முக்கியமான சில உரைகள்:
- பாலமனோரமா – வாசுதேவ தீக்ஷிதர் இயற்றிய இவ்வுரை மிகவும் எளிமையானது, புகழ்பெற்றது
- ப்ரௌட மனோரமா – பட்டோஜி தீக்ஷிதர் தானே தன் நூலுக்கு எழுதிய விரிவான உரை. இவ்வுரைக்கு கூட பல உரைகள் உண்டு
- தத்வ போதினி – ஞானேந்திர சரஸ்வதி எழுதிய இவ்வுரை அறிஞர்களும் உகக்கும் வண்ணம் உள்ளது
- சப்தேந்துசேகரம் – நாகேச பட்டரால் இரு விதமாக (ப்ருஹத், லகு) எழுதப்பட்ட உரை
- சுபோதினி – ஜெயகிருஷ்ணர் இயற்றியது (முக்கியமாக வைதிக பிரயோகங்கள் குறித்து)
லகுசித்தாந்த கௌமுதி
சித்தாந்த கௌமுதி நூலை அளவில் சுருக்கி ரத்தின சுருக்கமாக இயற்றப்பட்ட இந்த லகுசித்தாந்த கௌமுதி (அல்லது லகு கௌமுதி) என்னும் நூல், இலக்கணம் கற்பதை மேலும் எளிமையாக்கி விடுகிறது. பெரும்பாலும் சம்ஸ்க்ருத காவியங்கள் படித்துப் புரிந்து கொண்டால் போதும் என்று எண்ணுபவர்கள் லகுசித்தாந்த கௌமுதி நூலையே நாடுவர். சித்தாந்த கௌமுதியில் பாணினியின் சூத்திரங்கள் அனைத்துக்கும் (சற்றேறக்குறைய மூவாயிரம்) விளக்கம் தரப் பட்டுள்ளது. ஆனால் லகுசித்தாந்த கௌமுதியில் சுமார் ஆயிரத்துக்கும் குறைவான சூத்திரங்களே உள்ளன. சம்ஸ்க்ருத படித்துப் புரிந்து கொள்ளும் அளவுக்கு இதுவே போதும் என்பது அறிஞர்கள் அபிப்ராயம்.
இந்நூலை இயற்றியவர் வரதராஜ தீக்ஷிதர் ஆவார். இவர் பட்டோஜி தீக்ஷிதரின் சீடர். இவர் சித்தாந்த கௌமுதியை அடியொற்றி மூன்று நூல்கள் எழுதியுள்ளார். மத்ய சித்தாந்த கௌமுதி, லகு சித்தாந்த கௌமுதி, சார சித்தாந்த கௌமுதி ஆகியவை. இவற்றில் மத்ய சித்தாந்த கௌமுதி சற்று விரிவானது. லகு சித்தாந்த கௌமுதி எளிமையானது. இதையும் எளிமைப் படுத்தி மிக மிக சுருக்கமாக எழுதப் பட்டதே சார சித்தாந்த கௌமுதி.
***
வியாகரண சித்தாந்த கௌமுதி மற்றும் அதன் உரை நூல்கள் இன்றும் பிரபலமாக உள்ளன. இணையத்தில் கௌமுதி பாடங்கள் கிடைக்கின்றன. சம்ஸ்க்ருத இலக்கணம் குறிப்பாக பாணினியின் அஷ்டாத்யாயி கற்க விரும்பும் எவரும் சித்தாந்த கௌமுதி நூலைக் கற்பது பெரிதும் உபயோகமாக அமையும்.
இணையத்தில் சித்தாந்த கௌமுதி வகுப்புகள், பாடங்கள் இங்கே இலவசமாக கிடைக்கின்றன.
Pingback: வியாகரண மண்டபம் | Sangatham
बहु सम्यगेव परन्तु इतोपी किंचित विवरणं यदि दत्तं स्यात तर्हि उत्तमम अभाविश्यत आईटीआई मामा मतम
Pingback: முருகன் தந்த வடமொழி இலக்கணம் | Sangatham
बहु उत्तमम् अस्ति। नीति शतकम् श्लोकः, तस्य अर्थः अपि नास्ति। कृपया अप्लोड करोतु
धन्यवाद: