வடமொழி-தமிழ் அகராதி

தற்சமயம் பதிப்பில் உள்ள வடமொழி – தமிழ் அகராதி  இது ஒன்றே ஒன்றாகத்தான் இருக்கும். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வடமொழி வார்த்தைகளுக்கு தமிழ் மற்றும்  ஆங்கிலத்தில் பொருளுடன் தரும் அரும் தொகுப்பு இது. இந்த அகராதியை ஸம்ஸ்கிருதம் பயிலும் மாணாக்கர்கள் அவசியம் தம் வசம் வைத்திருப்பது நல்லது.  ஏற்கனவே மிகுந்த வரவேற்பை பெற்று நான்காம் பதிப்பு கண்டிருக்கும் இந்த அகராதியின் ஆசிரியர் திரு. S.V. ராதாகிருஷ்ண சாஸ்திரி அவர்கள் எழுதிய முன்னுரையிலிருந்து சில பகுதிகள்:

பாரதம் பல மொழிகள் கொண்ட நாடு. ஆனால் அம்மொழிகள் ஒவ்வொரு பிரதேசத்தில் மட்டுமே வழக்கில் உள்ளன. அண்டையிலுள்ள வேற்று மொழி பேசுகிற மக்கள் தொடர்பால் அம்மொழிச் சொற்களும் கலந்து தற்பவம், தற்சமம் என்ற பிறமொழிச் சொல்லை தம் மொழி வடிவில் கொணர்ந்து சொற்கள் பெருகின.

ஸம்ஸ்கிருதம் பாரதநாடெங்கும் பரவிய மொழி. வெளி நாட்டினரின் தொடர்பும் இதற்கு அதிகம். சீன யவன சொற்கள் பல ஸம்ஸ்கிருதத்தில் நுழைந்து  ஸம்ஸ்கிருத சொல் வடிவம் பெற்றுள்ளன. தமிழ், தெலுங்கு, காஷ்மீரி, வங்கம் முதலிய அனைத்து மொழிகளுக்குத் தம் சொற்களை வழங்கியும் தாம் அவற்றிடமிருந்து பெற்றும் ஸம்ஸ்கிருதம் தன்னை வளர்த்துக் கொண்டுள்ளது. எனினும் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் முன் தோன்றிய வால்மீகி, வியாசர், பதஞ்சலி முதலானோர் வழங்கி வந்த சொல்லாட்சி இன்றும் வழக்கில் உள்ளது. மற்ற மொழிகள் காலத்தால் உருமாறிய அளவு ஸம்ஸ்கிருதம் மாறவில்லை. எனினும் பொருள் விரிவு அதிகமே. அமர கோசம் தந்த சொல்-பொருள்-தொடர்பு விளக்கத்தை விடப் பின் வந்த கோச நூல்கள் மிக அதிகப் பொருள் தந்தன. ஒவ்வொரு சாத்திர நூலும் தமது பரிபாஷையாக சொல்லுக்குப் புதுப் பொருள் கூறின. ஜாதி, குணம் போன்ற பொதுச் சொற்கள் கூட சாத்திரங்களில் சிறப்புப்  பொருள் கொண்டன. இப்படி ஒன்றுக் கொன்று, தொடர்பற்ற பல பொருட்களை அறிந்து, இடத்திற்கேற்ற பொருள் காண்கிற அவசியம் அதிகப் பட்டது. பெயர்ச் சொல்லிற்கான லிங்கம், வினைச் சொல்லிற்கான பரஸ்மை – ஆத்மநேபத விதி இவை கூட மாறுபட்டன. அதனால் இன்று வழக்கில் உள்ள சொற்களின் எண்ணிக்கை அளவற்றது.

பல மொழிகளுடன் ஸம்ஸ்கிருத மொழி தொடர்பு கொண்டமையால் அவ்வம் மொழியால் ஏற்பட்ட பாதிப்பு இதில் காணப் பெறுகிறது. வங்கத்தில் व ब, தமிழில் ल – ळ, வடக்கே श – स, ख – ष, கேரளத்தில்  त – ल என்றவாறு எழுத்துக்களிடையே வேற்றுமை காணப் படுவதில்லை. वन्दि – बन्दी, वर्हि – बर्हि, प्रवाल – प्रवाळ, सरल – सरळ, खण्ड – षण्ड, पाखण्ड – पाषण्ड, शस्य – सस्य, शीकर – सीकर, वत्सल – वल्सल என்று எழுத்து மாற்றம் காரணமாக அகராதியில் 2 – 3 இடங்களில் ஒரே சொல் இடம் பெற நேர்கிறது. ख விலா  ष விலா स விலா, எங்கு இந்த சொல்லைத் தேடுவது? குழப்பம் வர வாய்ப்புண்டு.

சொல்லிற்கு ‘கௌணம்’, ‘ரூடி’ என இரு நிலைகள் உண்டு. இரு நிலைகளிலும் பொருள் விரியும். பெரும்பாலும் ஒவ்வொரு சொல்லும் ஒரு வினைச் சொல்லை மூலமாகக் கொண்டு கிருத்தத்தித விகுதி சேர்ந்த சொல்லமைப்பு முறையால் நூற்றுக் கணக்கான வடிவங்களைப் பெரும். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வினைச் சொற்கள் இப்படி கிருத்-தத்தித விகுதிகள் சேர்ந்து லட்சக் கணக்கில் விரிவடைந்துள்ளன.

தமிழ் நாட்டில் ஸம்ஸ்கிருதத்தை மொழியாகக் கொண்டு தோன்றிய நூல்கள் எண்ணற்றவை. ஸம்ஸ்கிருத வளர்ச்சியில் தென்னாட்டின் பங்கு மிக மிக அதிகம். தமிழ் மொழி தன எழுத்தின் வரிவடிவை சுருக்கிக் கொண்டு, விரிவை ஸம்ஸ்கிருதத்திடம் ஈந்தது. அதன் உயர் விளைவான கிரந்த லிபி வேதம், சாத்திரம், சிற்பம், நாட்டியம் முதலிய பல கோணங்களிலும் உதவுவதாக வளர்ந்து, தமிழில் தற்சம – தற்பவச் சொற்களை லட்சக் கணக்கில் சேர்த்தது. இந்த இருமொழிக் கூட்டுறவிற்குக் க்ரந்த லிபி பெரிதும் உதவியது. அதனால் சம்ஸ்க்ருதச்  சொல்லிற்குப் பொருள் விரிவும் கிட்டியது.

இவை அனைத்தையும் இன்று தொகுத்து பொருள் தருவது அவசியமெனினும் அத்தகைய பெருஞ் சொல்லகராதியை உருவாக்குவது இன்று எளிதில் இயலாதது. ஸம்ஸ்கிருதம் கற்க முற்படுபவர்களுக்கு ஆரம்ப நிலையில் தரத் தக்க அகராதியை உருவாக்குவதே இன்றைய தேவை.

முன்னர் கல்வி கற்கும் போது பல நூல்களை மனனம் செய்து உரிய நேரத்தில் நினைவிற் கொள்வது வழக்கம். இன்று மனனம் வழக்கில் இல்லை. இன்று நூல்கள் அச்சிட்டு மலர்ந்துள்ளன. அவ்வப்போது குறிப்பெடுக்கும் அளவிற்கு அவை விரிந்துள்ளன. மனனத்திற்க்கென குறுகிய வடிவில் அமைந்த அமரகோசம் போன்றவை, பொருளகராதி முறையில் பொருளுக்கான சொற்களை தொகுத்துத் தந்தன. ஆனால் பொருளோ சொல்லோ தனியே அகராதி வரிசையில் அமைக்கப் பெறவில்லை. இன்று அகராதி அமைப்பின் தேவை மிகுந்துள்ளது.

1978 ல் சிதம்பரத்தில் ஸம்ஸ்கிருத வித்யா சமிதி (சம்ஸ்க்ருத எஜுகேஷன் சொசைட்டி) தான் நிகழ்த்திய தமிழ்நாடு  ஸம்ஸ்கிருத சம்மேளனத்தில் ஸம்ஸ்கிருத அகராதியை வெளியிடும் பொறுப்பை ஏற்றது. சம்ஸ்க்ருதத்திற்கு தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மும்மொழிகளிலும் சுமார் 7300 சொற்களுக்குப் பொருள் தருகிற ஒரு சிறு அகராதியை 1980 ல் வெளியிட்டது. பின்னர் மேலும் சிறிது விரிவுடன் 1982 ல் அதன் மறுபதிப்பை வெளியிட்டது. அப்புத்தகங்கள் முற்றிலும் தீர்ந்தும், அதனை மேலும் விரிவு படுத்தி வெளியிட வந்தபோது ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் பொருள் தருகிற அகராதிகள் நாட்டில் அதிகமுள்ளதையும் தமிழில் அகராதி இல்லாமையையும் கருத்திற்க் கொண்டு, தமிழில் மட்டும் பொருள் தரும் படி சுமார் 12000 சொற்களுக்குப் பொருள் தருமாறு விரிவு படுத்தி வெளியிட சமிதி முன் வந்தது. ‘ஆங்கிலத்திலும் பொருள் தருவது இன்றைய மாணவர் சமூகத்திற்குப் பெரிதும் உதவக் கூடும். அகராதி வெளியிடுவதன் நோக்கம், இன்றுள்ள சூழ்நிலையில் ஆங்கிலத்தில் அதிக பரிச்சயம் பெற்ற ஸம்ஸ்கிருதம் கற்க விரும்புகிற தமிழ் மாணவர்களுக்கு உதவுவதே” என்ற ஆழ்ந்த நோக்குடன் ஒரு கோசத்தை சமிதி உருவாக்க முற்பட்டது. அம்முயற்சியின் பலனே இந்நூல். சொற்களின் இலக்கண அமைப்பு பற்றி மிகச் சிறு விளக்கம் மட்டுமே தரப் பட்டுள்ளது. முன் வெளிவந்த பதிப்புகளில் இருந்ததை விட அதிகமாக 4000 க்கும் மேற்பட்டச்  சொற்களுக்கு விளக்கம் தரப் பட்டுள்ளது.

இவ்வகராதியின் நான்காம் பதிப்பில் மறு பரிசீலனை பெற்றதுடன் மக்களாட்சி முறை பற்றியும், உடற்கூறு பற்றியும் உள்ள பரிபாஷைச்  சொற்கள் அனுபந்தங்களாக இறுதியில் இணைக்கப் பட்டுள்ளன.“.

–  திரு. S.V. ராதாகிருஷ்ண சாஸ்திரி, ஆசிரியர் ஸம்ஸ்கிருதஸ்ரீ

பதிப்பக முகவரி:

Samskrit Education Society,
212/13-1, St. Mary’s Road,
Mandaiveli, Chennai – 600028.
Ph: 044 – 2495 1402

 

14 Comments வடமொழி-தமிழ் அகராதி

  1. சு பாலச்சந்திரன்

    சு பாலச்சந்திரன்

    எதிர்காலத்தில் இன்று உலகில் உள்ள சுமார் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் நூறு மொழிகள் மட்டுமே உயிர் வாழும் என்றும் ஏனையவை சிறிது சிறிதாக மடியும் என்றும் மொழியியல் வல்லுனர்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். இது நிறைவேறுமா என்று தெரியவில்லை. ஆனால் , கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணக்குப்பதிவியல் , புள்ளியியல், மருத்துவம் ஆகிய துறைகளில் உள்ள கல்விக்கு தேவையான நூல்களை தன்னகத்தே கொண்டுள்ள மொழிகள் இந்த அழிவிலிருந்து காப்பாற்றப்படும். சமஸ்கிருதத்தில் மருத்துவம், ஜோதிடம், கணிதம் தொடர்பான நூல்கள் உள்ளன. பிற துறைகளிலும் வல்லுனர்களாக இருப்பவர்கள் தம் துறை நூல்களை சமஸ்கிருதத்தில் புதிது புதிதாக எழுதி மொழியை வளப்படுத்தவேண்டும். வருங்காலத்தில் மனித சமூகத்தில் சொர்க்கத்தில் மட்டுமே உள்ள இறைவனுக்கு இடமிருக்காது. எங்கும் நிறைந்த இறைவனுக்கே இடமிருக்கும். அதே போல கல்விநிலையங்களில் பயன்படாத மொழிகளுக்கு இந்த உலகில் இனி இடமிருக்காது. இதன் முதல் பலிகடா யாதெனில் சரித்திரமும், இலக்கியமும் ஆக இருக்கும். இனி எதிர்காலத்தில் சரித்திரம் யாரும் படிக்க முன்வரமாட்டார்கள் ஏனெனில் பிழைப்புக்கு அதில் வழி இல்லை என்று சிறுகுழந்தைக்கு கூட தெரிந்து விட்டது. இலக்கியங்கள் படித்து மொத்த மக்கள் தொகையில் ௦.0001 விழுக்காடு கூட பிழைக்கமுடியாது. எனவே சிறுதொழில், விவசாயம், கைத்தொழில், இயந்திரங்களை இயக்கும் வேலைகள் போன்ற படிப்புகளே கைகொடுக்கும்.

  2. K Subramanian

    இது ஒரு மிகச்சிறந்த பதிப்பு –சிறந்த Samiskritha (வடமொழி) சேவை(தொண்டு).இன்த புத்தகம் கிடைக்கும் முகவரி எது? விலை என்ன? எப்படி பணம் அனுப்பவேண்டும். இதுபோல் வடமொழி (Sanskrit Grammer ) வடமொழி இலக்கணம் — தமிழ் — ஆங்கிலம் (Tamil -English Explanation ) விளக்கத்துடன் உள்ளதா . எப்படி பெறுவது .விலை. பதில் போடவும் நமஸ்காரம்.
    சுப்ரமணியன்

  3. சஷ்மிதாஷினி

    சஷ்மிதாஷினி என்ற என் பெயருக்கு அர்த்தம் தெரிய வேண்டும்.

  4. संस्कृतप्रिय:

    ஹாசினி என்பது புன்னகை புரிபவள், பாராட்டப் படுபவள், ஒளி பொருந்தியவள் ஆகிய அர்த்தங்களில் வரும்.

  5. பெரியசாமி.கோ

    இந்த அற்புதமான பணி செய்த உங்களை வாழ்த்துவதில் நான் பெருமை படுகிறேன்.

  6. Punitha

    பிரகதீஸ்வரர்- இந்த பெயரில் பிரகதீ என்ற பெயரின் அர்த்தம் என்ன?

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)