காசிகா – இலக்கண உரை

சம்ஸ்க்ருதத்திற்கு இலக்கண விதிகள் பலரால் தொகுக்கப் பட்டுள்ளன. அவற்றில் முதன்மையானது பாணினியின் அஷ்டாத்யாயி எனப்படும் எட்டு பகுதிகளாக தொகுக்கப் பட்ட விதிகள். அஷ்டாத்யாயி நூலுக்கு முன்னரும் பின்னரும் பலர் சம்ஸ்க்ருத இலக்கண நூல்களை இயற்றி வந்தாலும் பாணினியின் இலக்கணமே பிரபலமானதாக உள்ளது. பாணிநியின் இலக்கணத்தைத் தொடர்ந்து பதஞ்சலியின் மஹாபாஷ்யம் என்னும் விரிவுரை, அதன் பின் காத்யாயனர் அல்லது வரருசியின் வார்த்திகம் எனப்படும் நூல் முக்கியமானதாக அமைகிறது. பாணினி, பதஞ்சலி, காத்யாயனர் ஆகிய மூவரும் முனித்ரயம் அல்லது த்ரிமுனி என்று ஒரே பரம்பரையாக கருதப் படுகிறார்கள்.

பாணினி – காத்யாயனர் – பதஞ்சலி ஆகிய முனிவர்கள் மூவருக்கு பிறகு, இலக்கணத்தில் பர்த்ருஹரியின் வாக்யபாதீயம் என்னும் நூலே ஆதார நூல் ஆகிறது. அந்த வழியில் காலத்தால் அடுத்தபடி தொடர்ந்த நூல் வாமனர் – ஜயாதித்யர் என்னும் இரட்டை ஆசிரியர்களால் இயற்றப் பட்ட காசிகா வ்ருத்தி ஆகும். தற்காலத்தில் நமக்குக் கிடைக்காத, முந்தைய பல இலக்கண நூல்கள் அனைத்திலும் உள்ள சாரத்தை எடுத்து தொகுத்துக் கொடுத்திருப்பதே இந்நூலின் சிறப்பு. இந்நூல் ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டில் இயற்றப் பட்டிருக்கலாம்.

காசிகாவின் மங்கலாசரணம்:

वृत्तौ भाष्ये तथा धातुनामपारायणादिषु |
विप्रकीर्णस्य तन्त्रस्य क्रीयते सारसंग्रह: ||

வ்ருʼத்தௌ பா⁴ஷ்யே ததா² தா⁴துனாமபாராயணாதி³ஷு |
விப்ரகீர்ணஸ்ய தந்த்ரஸ்ய க்ரீயதே ஸாரஸங்க்³ரஹ: ||

மொழியில் உள்ள பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள் இவற்றைக் கற்றுக் கொள்ள, நாம பாராயணம் மற்றும் தாதுபாராயணம் என்று இரு நூல்கள் முறையே இருந்ததாகத் தெரிகிறது. இவை உட்பட வ்ருத்தி, பாஷ்யம் ஆகிய நூல்களில் இருந்து சாரத்தை எடுத்து ஒன்றிணைத்து செய்யப்பட்டது என்று இந்த மங்கலாசரண ஸ்லோகத்தில் காசிகா ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

அடுத்த ஸ்லோகம் இவ்வாறு அமைகிறது,

इष्ट्युपसंख्यानवती शुद्धगणा विवृतगूढसूत्रार्था।
व्युत्पन्नरूपसिद्धिर्वृत्तिरियं काशिका नाम ॥२॥

இஷ்ட்யுபஸங்க்²யானவதீ ஶுத்³த⁴க³ணா விவ்ருʼதகூ³ட⁴ஸூத்ரார்தா²|
வ்யுத்பன்னரூபஸித்³தி⁴ர்வ்ருʼத்திரியம்ʼ காஶிகா நாம || 2||

விதிகள், அவற்றின் விவரங்கள் இணைந்த சுத்தமான தொகுப்பு, பொருள் பொதிந்த சூத்திரங்களின் விவரணம், கடினமான சொற்களின் உருவாக்கம் இவைகள் இணைந்ததே காசிகா எனும் இந்த நூல்…

व्याकरणस्य शरीरं परिनिष्ठितशास्त्रकार्यमेतावत।
शिष्टः परिकरबंधः क्रियते ऽस्य ग्रन्थकारेण ॥३॥

வ்யாகரணஸ்ய ஶரீரம்ʼ பரினிஷ்டி²தஶாஸ்த்ரகார்யமேதாவத|
ஶிஷ்ட​: பரிகரப³ந்த⁴​: க்ரியதே (அ)ஸ்ய க்³ரந்த²காரேண || 3||

இலக்கணத்தின் உடல் காசிகா! அதாவது இலக்கண சாத்திரத்தின் கருத்துக்கள் முழுவதும் காசிகாவில் நிறைந்துள்ளது. இந்நூலின் ஆசிரியரால் உயர்ந்ததாகவும் விதிகளுக்கு உட்பட்டதாகவும் செய்யப் பட்டது இந்த நூல்.

பாணிநீயத்தின் உரையான மஹாபாஷ்யத்தில் கூட காணப்படாத பல நுணுக்கங்கள் காசிகா-வில் காணப்படுகின்றன. இதற்கு காசிகா இயற்றிய இரட்டை ஆசிரியர்கள், அஷ்டாத்யாயி மற்றும் மஹாபாஷ்யம் தவிர்த்து இதர இலக்கண நூல்களை பயின்று அவற்றில் இருந்து பெற்ற நுணுக்கங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று சம்ஸ்க்ருத அறிஞர்கள் கருதுகின்றனர்.

காசிகா நூலை இயற்றிய இருவரில் ஜயாதித்யர் முதல் ஐந்து பாகங்களையும், வாமனர் மீதமுள்ள மூன்று பாகங்களையும் இயற்றியதாகத் தெரிகிறது. இந்தியாவுக்கு வந்த சீன யாத்திரிகர் இத் சிங், ஜயாதித்யர் குறித்து எழுதி உள்ளார். இவர்கள் காசியில் வாழ்ந்திருக்கலாம், அந்த சமயத்தில் இயற்றியதால் காசிகா என்று பெயர் வைத்திருக்கலாம் என்று சிலர் கருதுவர். காசி என்றால் வெளிச்சம், இலக்கணத்தில் வெளிச்சம் காட்டுவதால் காசிகா என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப் படுகிறது.

பாணினி தம் இலக்கணத்தில் சூத்திரங்களின் வரிசைக்கிரமத்தை அமைத்த விதத்திலும் பல நுணுக்கங்களைப் புகுத்தி உள்ளார். இதனால் சூத்திரங்களை முழுமையாக மனனம் செய்த பின்னரே இதன் முழு அர்த்தத்தையும் புரிந்து கொள்ள இயலும். இதிலிருந்து மாறுபட்டு சித்தாந்த கௌமுதி போன்ற நூல்கள் பாணினியின் சூத்திரங்களை மாற்றி அமைத்தும் விளக்கி உள்ளன. ஆனால் காசிகாவைப் பொறுத்த வரை, பாணினி வகுத்த வரிசையிலேயே இலக்கண விதிகள் விளக்கப் படுகின்றன. பாணினி வகுத்த முறையை அப்படியே விளக்க வேண்டும் என்பதே இந்நூலின் முக்கிய உத்தேசம்.

சம்ஸ்க்ருத இலக்கியங்களில் மூல நூல்களைப் போன்றே உரை நூல்களும் முக்கியத்துவம் உள்ளனவாகவும் பிரபலமாகவும் உள்ளன. காசிகா விருத்திக்கும் விருத்திப் பிரதீபம், விருத்தி ரத்னாகரம் போன்ற பல உரைகள் உண்டு. பிரபலமாக ஜீநேந்திர புத்திபாதர் எழுதிய ந்யாசம் என்னும் உரை (காசிகா விவரண பஞ்சிகா என்றும் அழைக்கப் படுகிறது) மற்றும் ஹரதத்தரின் பத மஞ்சரி உரை ஆகிய உரைகள் உள்ளன. ஜீநேந்திர புத்தி என்பவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். இவரது ந்யாசம் என்ன உரை மிகவும் விரிவானது.

ஹரதத்தரின் பதமஞ்சரி உரை, பெயரைப்போலவே காசிகாவில் காணப்படும் ஒவ்வொரு பதத்திற்கும் உரை கொண்டதாக அமைந்துள்ளது. அதே சமயம் சம்ஸ்க்ருத வியாகரனத்தில் புதிதாக நுழைபவருக்கு ந்யாச உரை சற்று புரிந்து கொள்ளக் கூடிய வகையில் உள்ளது. பதமஞ்சரி உரை மிகவும் கடினமாக, பண்டிதர்களுக்கானதாகத் தோன்றும். மேலும் பதமஞ்சரி உரை அதிகமாக பதஞ்சலியின் மகாபாஷ்யத்தை ஒட்டியதாக அமைக்கப் பட்டுள்ளது.

புகழ் பெற்ற பதமஞ்சரி உரை பதஞ்சலியின் மஹாபாஷ்யத்தைப் போலவே முக்கியமாக இருப்பது குறித்து ஒரு ஸ்லோகம்:

अनधीते महाभाष्ये व्यर्था सा पदमञ्जरी ।
अधीते तु महाभाष्ये व्यर्था सा पदमञ्जरी ॥

அனதீ⁴தே மஹாபா⁴ஷ்யே வ்யர்தா² ஸா பத³மஞ்ஜரீ |
அதீ⁴தே து மஹாபா⁴ஷ்யே வ்யர்தா² ஸா பத³மஞ்ஜரீ ||

சுருக்கமாக இதன் அர்த்தம் பதமஞ்சரியைப் படித்துப் புரிந்து கொள்ள மஹாபாஷ்ய பயிற்சி தேவை. மஹாபாஷ்யத்தில் பரிச்சயம் இல்லாமல் பதமஞ்சரியை அணுக இயலாது என்பதாகும்.

காசிகாவை இன்றும் பாரதத்திலும் வெளிநாட்டிலும் பலர் பயின்றும் அதில் ஆராய்ச்சிகள் செய்த வண்ணமாகவும் உள்ளனர். சம்ஸ்க்ருத இலக்கணத்தில் மிக முக்கியமான இந்நூல் நமது மொழி பாரம்பரியத்தின் மிகப்பெரிய சொத்து ஆகும்.

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)