“அவ்யய கோசம்” (Avyaya Kosa – A dictionary of indeclinables)

அவ்யயம் என்ற சொல்லுக்கு அழிவற்றது, மாறுதல் அற்றது என்று பொருள். பகவத் கீதையில் அழிவற்ற ஆத்மா என்று சொல்ல அவ்யயம் என்ற சொல்லே பயன் படுத்தப் படுகிறது. சமஸ்க்ருத இலக்கணத்தில்,  ஆண்பால், பெண்பால், இறந்தகாலம், நிகழ்காலம், ஒருமை பன்மை என்று சொற்கள் எந்த தன்மை கொண்டதாக இருந்தாலும் அவற்றுடன் சேர்ந்து இருந்தாலும் மாறுதல் அடையாத சொற்களை அவ்யயம் என்று அழைக்கப் படுகிறது. ஒரு சொல் வினைஉரிச்சொல்லாகவும் (adverb) இருக்கலாம், இடைச்சொல் (preposition), இணைச்சொல் (conjunction)  இப்படி எதுவாக இருந்தாலும் மாறாத தன்மை கொண்டதாக இருந்தால் அவ்யயம் எனப்படும்.  தமிழில் இதனை மாறிலி என்றும் சொல்லலாம். சமஸ்க்ருத மொழியில் சில மிக எளிய உதாரணங்களைப் பார்ப்போம்.

ச (च) என்ற சொல்லுக்கு “மற்றும்” (அல்லது ஆங்கிலத்தில் “and”) என்று பொருள்.

ராம: ச கிருஷ்ண: ச = ராமனும் கிருஷ்ணனும் 
சீதா ச பார்வதி ச =  சீதையும் பார்வதியும்

இதில் “ச” என்பது இரண்டு பெயர்களையோ, விஷயங்களையோ இணைக்கிறது. இருந்தும் அது மாறுவதே இல்லை.

ராம: ஜலம் ஏவ பிப³தி = ராமன் தண்ணீர் மட்டுமே குடிக்கிறான் (ஏவ = மட்டுமே) 
சீதா ஏவ க³தவதி = சீதா மட்டுமே போனாள்

ஏவ என்பதும் அவ்யயம் தான்.

இதே போல

அபி (கூட) , இதி (இவ்வாறு), இவ (போல), கதா³ (எப்போது) ஷ்வ ( நாளை), ஹ்ய: (நேற்று)

இவ்வாறு  ஏராளமான அவ்யய சொற்கள் சமஸ்க்ருதத்தில் உண்டு. சமஸ்க்ருதம் போன்ற ஒரு மொழிக்கு அவ்யய சொற்கள் அதன் கடினத்தை குறைத்து கொடுக்கின்றன. அந்த வகையில் இவற்றைக் கற்பது அந்த மொழியைப் புரிந்துகொள்ள பெரிதும் உதவும். அவ்யயங்களைக் குறித்து ஒரு ஸ்லோகம் உண்டு, அது:

सदृशं त्रिषु लिङ्गेषु सर्वासु च विभक्तिषु।
वचनेषु च सर्वेषु यन्न व्येति तदव्ययम्॥

ஸத்³ருஸ²ம் த்ரிஷு லிங்கே³ஷு ஸர்வாஸு ச விப⁴க்திஷு| 
வசநேஷு ச ஸர்வேஷு யந்ந வ்யேதி தத³வ்யயம்||

த்ரிஷு லிங்கே³ஷு ஸர்வாஸு விப⁴க்திஷு ச  = மூன்று லிங்கங்களிலும் (ஆண்பால், பெண்பால்…), எல்லா விபக்திகளிலும் (வேற்றுமைகளிலும்)
வசநேஷு ச  = வசனங்களிலும் (ஒருமை, இருமை, பன்மை ஆகியவை)
ஸத்³ருஸ²ம்  = ஒரே போல
யத் ந வ்யேதி = (வ்யத்யாஸ: ந ப⁴வதி) மாறுதல் இல்லாமல் எது இருக்கிறதோ 
தத் அவ்யயம்  = அது அவ்யயம்

அவ்யய சொற்களைக் குறித்து பாணினி, பதஞ்சலி முதற்கொண்டு பல வடமொழி இலக்கண நூல்களில் விளக்கப் பட்டுள்ளது. எனினும் இதில் முக்கியமாக இருப்பது. போஜராஜனின் சரஸ்வதி கண்டாபரணம் என்னும் இலக்கண நூல். இது தவிர போஜராஜனின் மற்றொரு நூலான ஸ்ருங்காரப் பிரகாசம் என்னும் நூலில் முதல் அத்தியாயத்திலும் அவ்யயங்கள் குறித்து பேசப் படுகிறது. இதில் அவ்யயங்களை ஆறுவிதமாக பிரிக்கிறார். நிபாத:, கதி, உபசர்கம், கர்ம-ப்ரவசநீயம், விபக்தி-ப்ரதிரூபகம், அவ்யயம் என்கிற ஆறு வகை அவ்யயங்களைக் குறித்து விவரிக்கிறார்.

சமக்ஸ்ருத மொழியில் செவ்வியல் காலம் (classical period) முடியும் போது (கி.பி. எட்டாம் நூற்றாண்டு முடிவில்), ஏராளமானோர், பாணினி – பதஞ்சலி ஆகியோரின் இலக்கண நூல்களுக்கு உரைகள் எழுதிவிட்டிருந்தார்கள். இதன் பின் வந்த வடமொழி அறிஞர்கள் வடமொழி இலக்கணத்தின் ஒரு சில அம்சங்களை மட்டும் வைத்து விரிவான நூல்கள் எழுதினார்கள். உதாரணமாக க்ஷீரஸ்வாமிந் (கி.பி பதினொன்றாம் நூற்றாண்டு) தாதுக்களை (धातु) மட்டும் க்ஷீரதரங்கிணி என்னும் நூலிலும், கணங்களை (गण) மட்டும் கணவ்ருத்தி என்னும் நூலிலும், நிபாதாவ்யயோபசர்க்கவ்ருத்தி என்னும் நூலில் அவ்யயங்களைக் குறித்தும் விரிவாக அலசப் பட்டுள்ளது.

இது தவிர நவீனகாலத்தில் Barend Faddegon’s “The Grammar of the Indeclinables”, Isiodore Dyen’s “The Sanskrit Indeclinables of the Hindu Grammarians and Lexicographers” ஆகிய நூல்களை அவ்யயங்கள் மட்டுமே விரிவாக ஆராயப் படுகின்றன. Macdonnel’s “A Vedic Grammar for Students” நூலிலும் அவ்யய சொற்களை விரிவாக எடுத்துரைக்கப் படுகிறது.

சென்னையில் இயங்கிவரும் Sanskrit Education Society நிறுவனத்தார் சமஸ்க்ருதம் கற்பவர்களுக்கு உதவும் வகையில் இது போன்ற அவ்யய சொற்களை தொகுத்து “அவ்யய கோசம்” (Avyaya Kosa – A dictionary of indeclinables) என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார்கள். இது 2004ல் மறுபதிப்பு கண்டிருக்கிறது. இந்நூலில் சுமார் ஆயிரம் அவ்யய சொற்களை, அகராதி போல அகர வரிசைக் கிரமத்தில் தொகுத்து வழங்கி இருக்கிறார்கள்.

அமரகோசம், வால்மீகி ராமாயணம், போன்ற புகழ்பெற்ற சமஸ்க்ருத நூல்களிலிருந்து எடுத்துத் தொகுக்கப் பட்டுள்ளது. இது தவிர க்ஷீரஸ்வாமிந், வர்த்தமாந:, சித்தாந்த கௌமுதி, அதன் பாலமனோரமா என்னும் உரை, அமரகோசம், அதன் உரைகளான சுதா, ஹலாயுதா, மேதினி ஆகியவை, மேலும் சப்தகல்பத்ருமா, வாசஸ்பதீயம், மோனியர்வில்லியம்ஸ் அகராதி என்று பலவற்றிலிருந்தும் எடுத்து இந்நூல் வழங்குகிறது.

இந்நூலில் ஒவ்வொரு சொல்லுக்கும் கீழே, அது எந்த வகையை சேர்ந்தது, எங்கிருந்து எடுத்துத் தரப் பட்டுள்ளது, அதன் பயன்பாடுகள் என்று பலவற்றையும் தொகுத்து தரப் பட்டுள்ளது. சமஸ்க்ருதம் கற்க விரும்புகிறவர்களுக்கு மட்டும் அல்லாது, பண்டிதர்களுக்கும் இந்நூல பெரிதும் பயன்படும். ஆனால் இந்த நூலில் முழுக்க முழுக்க சமஸ்க்ருதத்திலேயே எழுதப் பட்டுள்ளதால், சமஸ்க்ருத மொழியின் அடிப்படைகளை அறிந்து கொண்டு இந்த நூலை அணுக வேண்டும். அதோடு இது கற்றுக் கொடுக்கும் நூல் அல்ல. ஒரு ரெபெரன்ஸ் நூலாக மட்டுமே பயன்படும்.

Inside cover -Avyaya Kosa - A dictionary of indeclinables

 

இந்நூலின் பதிப்பாளர்கள்
Sanskrit Eduction Society, 
No 148-150 Luz Church Road,
Chennai – 600 004.

கிடைக்கும் இடம்:
Jayalakshmi Book Depot,
Old No 6 New No 11, Opp To Sanskrit College, 
Appar Swamy Koil Street, 
Mylapore, Chennai – 600004

 

12 Comments “அவ்யய கோசம்” (Avyaya Kosa – A dictionary of indeclinables)

 1. அத்விகா

  Sanskrit Education Society,
  No 148-150 Luz Church Road,
  Chennai – 600 004. மேற்கண்ட முகவரியிலிருந்து மாறி ,

  கீழ்க்கண்ட புதிய முகவரியில் செயல்பட்டுவருகிறது:-

  SAMSKRIT EDUCATION SOCIETY

  212/13-1, St. Mary’s Road,

  Raja Annamalaipuram( Post)

  CHENNAI-600028.

  Phone: 24951402.

  எனவே , அன்பர்கள் புதிய முகவரியில் தொடர்பு கொண்டு, பயன் பெருக.

 2. senthil

  Very Nice Info in Tamil.So far I have seen sanskrit site only in English.Keep posting.If you have a Subscription service thru email pl subscribe my mail id for it.
  Thanks.

 3. KESAVABHARATHI.S

  24.01.2018 அன்று தமிழ் சமஸ்கிருதம் அகராதி திரு.ஹரிஹர சர்மா என்பவரால் ஆளுநர் மற்றும் சங்கராச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.திரு.எச்.ராஜா அவர்களின் தகப்பனார் திரு.ஹரிஹர சர்மா ஆவார்.
  மேற்குறிப்பிட்ட அகராதி எங்கு கிடைக்கும் என்று தெரிவித்தால் நல்லது.

 4. srini

  Sir, the tamil dictionary of Prof. Harihara Sharma, father of H. Raja is available in the below address. You can whatsApp for detail… It costs Rs.800/-…. It is worth to buy. Kudos to Raja’s father he done excellent work in compiling various words in tamil and sanskrit. He also give extensive examples of subdha roopa of various Subdha.

  LKM Publications
  Old No 15/4 New No 33/4, Ramanathan Street, T Nagar, Chennai – 600017, Next to Durga Mansion (Map)

  044-24361141, 24340599
  9940682929

  They are having very good collections of other religious books as well.
  ,

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)