தமிழில் பாணினியின் அஷ்டாத்யாயி

சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சமஸ்க்ருத இலக்கண நூலான பாணினியின் அஷ்டாத்யாயி முழுவதையும் தமிழில் மொழியாக்கம் செய்து முதற்பதிப்பாக 1998ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. முனைவர் கு. மீனாட்சி அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார். இந்நிறுவனம் ஸ்வப்ன வாசவ தத்தம் போன்ற புகழ் பெற்ற வடமொழி காப்பியங்களையும் தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் திரு. இராமர் இளங்கோ இந்நூலுக்கு வழங்கிய அணிந்துரையிலிருந்து…

அணிந்துரை

சமஸ்க்ருத மொழி என்பதற்கு “செம்மை செய்யப்பட்டது” என்பது பொருளாகும். சமஸ்க்ருத மொழியைச் செம்மைப் படுத்துவதற்கு ஏதுவாக அமைந்தவர் இலக்கணப் பேராசிரியர் பாணினி ஆவார். வடமொழியில் கிடைக்கின்ற முதல் மூத்த இலக்கண நூலாகும். பாணினி என்னும் இந்நூல ஆசிரியர் பெயரால் “பாணினீயம்” என்றும் அழைக்கப் படுகிறது.

பாணினி காலம் கி.மு 8ம் நூற்றாண்டு என்று கோல்ட்ஸ்டூக்கர் கருதுகிறார். ஆயின் பெரும்பாலான ஆய்வாளர்கள் பாணினி காலம் கி.மு. 4ம் நூற்றாண்டு என்று குறிப்பிட்டுள்ளார். ரிக், யசூர், சாம, அதர்வண முதலிய வேதங்களோடு அமைப்பு வேறுபடும் வகையில் பாணினி அஷ்டாத்யாயி எனும் இலக்கண நூலை இயற்றியுள்ளார்.

அற்றை நாளில் சமஸ்க்ருத மொழி இருவகை வழக்குடையதாக விளங்கிற்று. கற்றறிந்த அறிஞர்கள் பேசிய மொழி முதல் பிரிவிலும், ஏனையோர் பேசிய மொழி இரண்டாவது பிரிவிலும் அடங்கும். பாணினி முதல் பிரிவைச் சார்ந்தவர்கள் பேசுகின்ற மொழிக்கு இலக்கணம் வகுத்தார் என்பர்.

பாணினி இலக்கணம் சூத்திரங்களால் ஆனது. சில சொற்களில் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் தன்மை உடையன இச்சூத்திரங்கள். இந்நூல் 8 அத்தியாயங்களையும் 4000 சூத்திரங்களையும் கொண்டதாகும். அவையன்றி 14 சிவ சூத்திரங்கள் அல்லது மாகேசுவர சூத்திரங்கள் முன்னதாக இணைக்கப் பட்டுள்ளன. இந்த இலக்கண நூலுக்கு காத்தியாயனர், பதஞ்சலி ஆகியோர் உரை எழுதி உள்ளனர். அவர்களுடைய உரைகள் வார்த்திகம், மகாபாஷ்யம் என்ற பெயர்களைக் கொண்டவை.

வடமொழி இலக்கண நூலோர் இந்த இலக்கணத்தையும் உரைகளையும் மூன்று முனிவர்கள் இலக்கணம் என்ற பொருளில் “முனித்ரய வ்யாகரணம்” என்று குறிப்பிடுவர். பாணினியைப் புரிந்து கொள்ள இவ்விரு உரைகளும் மிகத் தேவையாக அமைகின்றன.

இந்நூல் குறித்து “வடமொழி இலக்கிய வரலாறு” நூலுள் திரு. கைலாசநாதக் குருக்கள், “நமது கைக்கெட்டிய முழு இலக்கண நூல்களுள் பழையது பாணினீயமே. இங்கு வைதீக இலக்கணம் விரிவாகக் கூறப் படாது சிற்சில விதிகள் மட்டும் கூறப் படுவது, நோக்கற்பாலது. இந்நூல் வேத சாகைகள் ஒன்றுடனாவது இணைக்கப்படாதிருப்பதும் கவனிக்க வேண்டுவதே. இது எழுந்த காலம் சமயப் பற்றற்ற தனி நிலையில் நூலமையச் சூழ்நிலை பொருந்திய காலம். சமயத்துடன் தொடர்பு பெற்றுச் சமய அடிப்படையிலேயே சாஸ்திரங்கள் தோன்றின. எனினும், ஆசிரியர்கள் படிப்படியாக இவ்வழியினின்றும் விலகித் தனிவழி நின்று சமயப் பற்றற்ற நூல்களை எழுதும் மரபையும் தொடங்கி வைத்தனர். (பக். 192-193)

அஷ்டாத்யாயி மூன்று பாகங்களும்

அபிதான சிந்தாமணி, பாணினி ஒரு மகரிஷி. இவர் தமது உள்ளத்தில் உலகமுய்ய வியாகரணம் அருளிச் செய்ய வேண்டிச் சிவமூர்த்தியைத் தரிசித்து நிற்கையில், சிவமூர்த்தி இவரது மன எண்ணமறிந்து தமது திருக்கரத்தில் இருந்த நாதமயமாகிய டமருகத்தைச் சிறிது அசைத்தனர். அதிலிருந்து எழுத்துக்கள் உண்டாயின. அவ்வெழுத்துக்களை அருகில் இருந்த இவர் பன்னிரண்டு சூத்திரங்களாக்கினார். இதற்கு பதஞ்சலி முனிவர் பாஷ்யம் செய்தனர். என்கின்றது. (பக். 1095 – 96). இவ்வாறு பாணினி எழுதிய இலக்கண நூலுக்குத் தெய்வீக தொடர்புடைய புராணக் கதையும் கூறப் படுகிறது.

பாணினி அஷ்டாத்யாயி பலரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. ஆயினும் தமிழில் இதுகாறும் இந்த நூல் மொழிபெயர்க்கப் படவில்லை. வடமொழியில் கிடைக்கின்ற மூத்த இலக்கணமான இந்நூலினை முனைவர் கு. மீனாட்சி முதல் முதலாகத் தமிழாக்கம் செய்துள்ளார். அத்துடன் அஷ்டாத்யாயி தொடர்புடைய காத்தியாயனரின் வார்த்திகம், பதஞ்சலியின் மகா பாஷ்யம் உரைகளில் உள்ள தொடர்புடைய கருத்துக்களையும் மொழிபெயர்த்துள்ளார். “தமிழிலாப் பிறமொழி நூல் அனைத்தும் நல்ல தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்” என்ற பாரதிதாசனின் கருத்திற்கிணங்க வடமொழி இலக்கண நூலான இதனைத் தமிழ் ஆக்கம் செய்த முனைவர். கு. மீனாட்சி அவர்கள் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர். இவர் தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றில் வல்லுநர். இவருடைய மும்மொழிப் புலமை இந்நூலிலும் நன்கு வெளிப்படுகிறது. இந்நூலினை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மூன்று தொகுதிகளாக வெளியிடுகிறது.

ஆசிரியரின் முகவுரை

இந்தியாவில் முதல் இலக்கண நூல் பாணினியின் அஷ்டாத்யாயி என்று சிலரும், தொல்காப்பியம் என்று சிலரும் கூறி வருகின்றனர். இந்நூலாசிரியர் இருசாராரின் ஐயத்தை நீக்கும் வகையில் “Tolkappiyam and Ashtadhyayi” என்னும் நூலை நிறுவனத்தின் வழி வெளியிட்டுள்ளார்.
தொல்காப்பியரின் வடமொழி இலக்கணத் தேர்ச்சி அனைவரும் அறிந்ததே. தொல்காப்பிய உரையாசிரியர்கள், பின்னால் வந்த வீரசோழிய ஆசிரியர் போன்றவர்களும் வடமொழி இலக்கணங்களில் தேர்ச்சி பெற்றவர்களே.

பல மொழிபெயர்ப்பு நூல்கள் தொல்காப்பியர் காலத்திலேயே இருந்தன என்பது தொல்காப்பியரே, முதல் நூல், வழி நூல் என்ற சொற்களைப் பயன்படுத்தியிருப்பதிலிருந்து விளங்கும். இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுச்சிப் புலவர் பாரதி “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்” என்று வேறுமொழிகளையும் கற்றுணர்ந்த தமிழறிஞர்களுக்கு ஆணையிட்டுக் கூறுகிறார்.

அஷ்டாத்யாயி உள்ளே

பாணினியின் அஷ்டாத்யாயி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. ஆனால், தமிழ் இலக்கண நூல்களில் ஆழ்ந்த அறிவுள்ள பல தமிழறிஞர்கள், பாணினியின் இலக்கணத்தோடோ அல்லது அதன் ஆங்கில மொழிபெயர்ப்புகளோடோ நேரிடைத் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் காணப் படுகிறார்கள். உரையாசிரியர்களின் உரைகளிலிருந்துதான் வடமொழி இலக்கணங்களைப் பற்றி, அவர்கள் அறிந்து கொள்ள இயலுகிறது. பல மேல்நாட்டு அறிஞர்களால் மிகவும் புகழப்பட்ட அஷ்டாத்யாயியை அதன் தமிழாக்கத்தையாவது படித்து அறிந்து கொள்வதற்குக்கூட இதுவரையில் அதன் தமிழாக்கம் தமிழரிஞர்களுக்குக் கிடைக்கவில்லை. இத்தகைய நூலின் தேவையைப் பல அறிஞர்கள் புரிந்து கொண்டும் இருக்கிறார்கள். இந்தக் குறையை நிறைவு செய்வதற்காக எடுத்துக் கொண்ட எனது எளிய முயற்சிதான் இந்த தமிழாக்கம். இப்பணி முதன்முதலில் பல்கலைக் கழக மானியக் குழுவின் (University Grants Commission) நிதி உதவியுடன், உயர்மட்ட ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ்ச் செய்யப் பட்டது.

அஷ்டாத்யாயி என்ற பாணினியின் இலக்கணத்துடன் காத்தியாயனரின் வார்த்திகம், பதஞ்சலியின் மகாபாஷ்யம் ஆகிய மூன்றையும் சேர்த்துத்தான் படிப்பது தொன்று தொட்ட வழக்கம். அஷ்டாத்யாயி சூத்திர பாடம் மட்டும் தனியாக மொழிபெயர்த்தால் அத்தமிழாக்கம் எளிதில் புரிந்து கொள்ள இயலாது. வடமொழி இலக்கணத்தை முநித்ரய வ்யாகரணம் அதாவது மூன்று முனிவர்களின் இலக்கணம் என்று கூறுவதுண்டு. ஆகவே இம்மொழிபெயர்ப்பில் முதலில் பாணினி சூத்திரங்களைத் தமிழில் கொடுத்து, தொடர்ந்து, மகாபாஷ்யம், வாமனர் ஜயாதித்தரின் காஸிகா என்ற நூல்களின் அடிப்படையில் தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளது. அவ்வாறே, வார்த்திகங்களைத் தமிழில் கொடுத்து, தொடர்ந்து அதன் தமிழ் மொழி பெயர்ப்பும் கொடுக்கப் பட்டுள்ளது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்இந்நூல் கிடைக்கும் முகவரி:
International Institute of Tamil Studies,
C.I.T. Campus, Tharamani,
Chennai – 600013
http://www.ulakaththamizh.org/
அஷ்டாத்யாயி முதல் பாகம் விலை: 95.00
இரண்டாம் பாகம் விலை: 60.00
மூன்றாம் பாகம் விலை: 90.00

9 Comments தமிழில் பாணினியின் அஷ்டாத்யாயி

 1. subbu

  படித்தேன் ரசித்தேன் உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்.
  அன்புடன்
  சுப்பு

 2. nityananda das

  Excellent,This is most awaited very important work. i want to get a copy of these volumes.can you please send me the list of books in tamil on siddhanta kaumudi (sanskrit grammar),nyaya, mimamsa, and its accessebility. is there also any audio recordings available in tamil or english for learning siddhanta kaumudi and other mentioned above? i will be grateful for this help.
  with regards
  Nityananda das

 3. சு பாலச்சந்திரன்

  மிக அற்புதமான தொகுப்பு. இதனை வெளிக்கொண்டுவர உழைத்த நல்ல இதயங்களுக்கு நன்றி. எட்டு திக்கும் சென்று நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் கொண்டுவரும் முயற்சிக்கு இது ஒரு பெரிய சாதனையாக அமையும். உலக தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கு நமது உளம் நிறைந்த பாராட்டுக்கள்.

 4. D P Kannan

  Very good effort and contribution to the Tamils in general and to the Samskrit lovers in particular. Other Samskrit classics also can be translated in the future. Best wishes

 5. Dr NVS

  எந்தரோ மஹாநுபாவுலு – தங்களைப்போன்ற மானவ ஸேவை செய்வோர் மிகவும், மதித்துப் போற்றத்தக்கவர். தன்னலமற்ற தொண்டாற்றும் அனைவருக்கும் இறைவன் எல்லா வளங்களையும், எல்லா நலங்களையும் வழங்கவேண்டுமாய் ப்ரார்த்திக்கிறேன்.

 6. M R Sankararaman

  I am unable to get the 3 books written by Dr. Meenakshi on Ashtadyayi from the World Tamil Research centre ,Chennai. Can anyone let me know where the books can be purchased?. Thanks in advance

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)