இலக்கிய உரையாசிரியர் மல்லிநாதர்

சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன், காஞ்சிபுரத்தில் வணிகர்களுக்குள் ஒரு பூசல் எழுந்தது. அப்போது காஞ்சிபுரத்தையும் அதனை சுற்றியுள்ள ஊர்களும் விஜயநகர மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டு இருந்தது. தேவராயர் என்னும் விஜயநகர பேரரசர் இந்த பூசலை தீர்த்து வைக்க எண்ணி, அறிவிற்சிறந்த சான்றோர்களாக தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தார்.

அப்படி வந்தவர்களில் ஒருவர் மட்டும் மிகுந்த புத்திமானாகவும், கல்வியில் பல துறைகளிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றவராகவும் இருந்தார். அவர் பூசலை தீர்த்து வைத்ததோடு அல்லாமல் வணிகர் குலத்தைப் பற்றியும், தான் வழங்கிய தீர்ப்பைப் பற்றியும் ஒரு காவியமே விளக்கமாக எழுதி வைத்தார். அந்த காவியத்துக்கு பெயர் “வைஸ்ய வம்ச சுதாகரம்”. எழுதியவர் மல்லிநாத சூரி.

மல்லிநாதர் இந்த நூல் மட்டும் அல்லாது ராமாயண கதை அடிப்படையில் ரகுவீர சரிதம் முதலிய வேறு சில நூல்களும் எழுதி இருப்பதாக தெரிகிறது. ஆனால் சமஸ்க்ருதத்தில் காளிதாசர், ஸ்ரீ ஹர்ஷர் போன்ற மகா கவிஞர்களுக்கு இணையான காலத்தால் அழியாத புகழை இவருக்கு பெற்றுத் தந்து, சமஸ்க்ருத இலக்கிய வரலாற்றில் நீங்கா இடம் பெற்றுத் தந்தது இவர் மற்ற மகா கவிஞர்கள் எழுதிய காவியங்களுக்கு எழுதிய உரைகள் தான்.

சமஸ்க்ருத கவிதைகளில் கற்பனைத் திறனின் உச்சமாக பஞ்சமகா காவியங்கள் என்று ஐந்து காவியங்கள் சொல்லப் படுகின்றன. குமாரசம்பவம், ரகுவம்சம் ஆகிய காளிதாசனின் காவியங்கள், பாரவியின் கிராதார்ஜுனியம், மாகரின் சிசுபாலவதம், ஸ்ரீஹர்ஷரின் நைஷதசரிதம் ஆகியவைதான் பஞ்ச மகா காவியங்கள் என்று அழைக்கப் படுகின்றன.

இது போன்ற மகாகாவியங்களை சாதாரண மக்கள் புரிந்து கொள்ள விளக்க உரைகள் தேவைப் பட்டன. அதிலும் அக்காலத்திய பெருங்காவியங்களில் அன்றைய நாளில் என்னென்ன சாத்திரங்கள், அறிவியல், பொருளாதாரம், சமூகம், அரசியல் என்று பல்வேறு துறைகளில் அன்றைய வளர்ச்சியை பதிவு செய்யப்பட்டிருந்ததை புரிந்து கொள்ள பல்துறை அறிவு தேவைப்பட்டது. அது மட்டுமில்லாது கவித்துவ அழகும் செறிவும் நிறைந்த கவிதைகளின் அழகியலைப் புரிந்து கொள்ள, எளிமையான அதே நேரத்தில் அழகிய, உரைகள் எழுதப் பட்டன – இவற்றுக்கு சமஸ்க்ருதத்தில் டீகை, வ்ருத்தி, பாஷ்யம் என்று பல பெயர்களில் அழைக்கப் படுகின்றன.

இத்தகைய உரைகள் தமது எளிமையும் அழகியலும் இணைந்ததாலேயே மூல நூலுக்கு உள்ள பெருமை இவற்றுக்கும் கிடைத்தது. இத்தகைய உரை இலக்கியங்கள் கவிதை இலக்கியத்தில் காதல், தத்துவம் என்று பல்வேறு துறைகளிலும் எழுதப்பட்டன. இதனால் கவிஞர்களுக்கு உள்ள அதே பெருமை உரையாசிரியர்களுக்கும் கிடைத்தது.

இப்படிப்பட்ட உரையாசிரியர்களில் ஒருவர்தான் மல்லிநாதர். மல்லிநாத சூரி என்றும் இவர் அழைக்கப் படுகிறார். சமஸ்க்ருத காவிய உரைகளைப் பற்றி நினைக்கும்போது இவரைப் பற்றி எண்ணாமல் இருக்க முடியாது. ஏனைய பல உரையாசிரியர்களுள் தலைசிறந்தவராக இவர் மதிக்கப் படுகிறார்.

மல்லிநாதர் ஆந்திராவில் மேதக் மாவட்டத்தில் கொலசெலம் என்கிற கிராமத்தை சேர்ந்தவர். மல்லிநாதரின் பரம்பரை முன்னோர்கள் காகதீய மன்னர்கள் ஆதரவில் இருந்து வந்துள்ளனர். காகதீய அரசு முடிவுக்கு வந்ததும் அங்கிருந்து ராசகொண்டா என்கிற ராஜ்ஜியத்துக்கு இடம்பெயர்ந்து விட்டனர். அங்கே ஆண்டுவந்த சிங்க பூபாலன் என்கிற மன்னன் மல்லிநாதரை ஆதரித்து போற்றி வந்தான் என்று வரலாறு கூறுகிறது.

மல்லிநாதர் பஞ்ச மகா காவியங்களையும் சேர்த்து ஏழு காவியங்களுக்கு மிகச் சிறப்பான உரை எழுதி இருக்கிறார். எழுத்தில் சிறிதும் தேவையற்ற செய்திகள் இல்லாமல், கவிதையின் பொருளும், உட்பொருளையும் மிக அழகாக வெளிப்படுத்துகிறார். மல்லிநாதர் காளிதாசனின் காவியங்களுக்கு “சஞ்சீவினி” என்ற பெயரில் எழுதிய உரையின் துவக்கத்தில் இவ்வாறு உறுதி கூறுகிறார்.

इहान्वयमुखेनैव सर्व व्याख्यायते मया ।
नामूलम् लिख्यते किञ्चिन्नानपेक्षितमुच्यते ।।

“மூல புத்தகத்தில் இல்லாத ஒன்றையோ, விரும்பத்தகாததையோ நான் எழுத மாட்டேன்” என்பதே இதன் பொருள்.

மல்லிநாதரின் உரைகளிலிருந்து சில பகுதிகளைப் பார்ப்போம். ஸ்ரீ ஹர்ஷரின் நைஷத சரிதம் (நளன் – தமயந்தி கதை) என்கிற மகா காவியத்தில் நளன் நிலவைப் பார்த்து பழித்துக் கூறுவதாக ஒரு ஸ்லோகம்,

किमसुभिर्ग्लपितैर्जड मन्यसे
मयि निमज्जतु भीमसुतामन:
मम किल श्रुतिमाह तदार्थिकाम्
नलमुकेन्दुपराम् विबुध: स्मर:

– நைஷதம் 4:52

“ஏ முட்டாள் நிலவே! இறந்தபின்னும் தமயந்தியின் மனது உன்னிடம் வந்து சேரும் என்று நினைத்தாயோ! அவள் மனது என்றும் நிலவை ஒத்த நளனின் முகத்திலேயே கலந்திருக்கும் என்று காமன் ஏற்கனவே சொல்லி விட்டானே!” என்பது இந்த ஸ்லோகத்தின் சாராம்சம்.

அது ஏன் தமயந்தியின் மனது இறந்தபின் நிலவிடம் சென்று சேராது என்று இந்த இடத்தில் நளன் சொல்வதாக வருகிறது என்று புரிந்து கொள்ள உரையாசிரியர்களின் உதவி தேவை. மல்லிநாதர் இதற்கு உரையிடும்போது வேதத்திலிருந்து இதன் உட்பொருளை வெளிக் கொண்டு வருகிறார்.

यत्रास्य पुरुषस्य मृतस्याग्निं वागप्येति वातां प्राणश्चक्षुरादित्यां मनस्चन्द्रं दिस:…

– ப்ருஹதாரண்யக உபநிஷத் (3 – 2 – 13)

யக்ஞவல்க்ய மகரிஷி சொல்கிறார், “ஆயுள் முடிந்து உயிர் பிரியும்போது, பிராணன் வாயுவிடமும், பார்வை சூரியனிடமும், மனது சந்திரனிடமும், உடல் மண்ணிடமும் போய்விடும்.. அப்போது ஆன்மா என்ற ஒன்றில் என்ன மீதம் இருக்கும்?” என்பது கேள்வி. அதாவது அந்தந்த உறுப்புகளின் செயல்பாட்டுக்கு உரிய தெய்வத்திடம் அந்தந்த உறுப்புகளின் சக்தி சென்று விடுகிறது.

இவ்வாறு வேதத்தில் சொல்லப் பட்டபடி மனது இறந்தபின் சந்திரனிடம் போய் விடுகிறது என்பதை நினைவு கூர்ந்து நளன் இவ்வாறு சந்திரனைப் பார்த்து கூறுவதாக கவி சொல்கிறார் என்று மல்லிநாதர் விளக்குகிறார்.

காளிதாசனின் ரகுவம்சத்தில் வலிமை பொருந்தியவனிடம் எளியவன் பணிந்து போவதை சொல்ல “वैतसीम् वृत्तिम्” என்கிற சொல்லை காளிதாசன் பயன்படுத்தி இருக்கிறார். இதை விளக்க மல்லிநாதர் கௌடில்யரின் அர்த்த சாத்திரத்திலிருந்து ஆதாரம் காட்டுகிறார்.

இல்லறத்தில் இருப்பவர்களே மற்ற எல்லா ஆசிரமத்தை சேர்ந்தவர்களையும் காத்து ரட்சிகிறார்கள் என்று இல்லறத்தில் இருப்பவர்களைப் பற்றி உயர்வாக சொல்கிற மனு ஸ்ம்ருதி வாக்கியத்தை ரகுவம்சம் ஐந்தாவது சர்க்கம் பத்தாவது ஸ்லோகத்தின் பொருள் உரை எழுதும் போது நினைவுகூர்கிறார்.

स दक्षिणापान्गनिविष्टमूष्टिं नतांसमाकुन्चितसव्यापादम् |
ददर्श चक्रिकृतचारुचापं प्रहर्तुमभ्युध्यतमात्मयोनिम् |

– குமாரசம்பவம் 3:70

“அழகிய வளைந்த வில்லில் அம்பை பொருத்திய நிலையில், எய்வதற்காக தன் கையை மடக்கி குவித்து அம்பை பிடித்து வலது கண்ணின் அருகில் வரை இழுத்து பிடித்தபடி, தோள்களை குவித்து, இடது காலை மடக்கியபடி இருந்த காமனை பார்த்தான்.”

இந்த ஸ்லோகத்துக்கு மல்லிநாதர் உரை எழுதும் போது, காமன் அம்பெய்ய இருந்த நிலையை தனுர் வேதத்திலிருந்து எடுத்து, காமனின் இந்த நிலைக்கு பெயர் ஆலித காமன் என்று குறிப்பிடுகிறார்.

காவியங்களுக்கு உரை எழுதும் போது, அக்காலத்திய பல நம்பிக்கைகளையும், கவியின் உள்ளத்தில் இருந்த கருத்தை அப்படியே உரையாக விளக்குகிறார் மல்லிநாதர். காளிதாசன் மேகதூத காவியம் ஒரு கந்தர்வன் மேகத்தை தூது விடுவதாக அமைந்திருக்கிறது. இதில் அந்த கந்தர்வன் மேகத்தை ஆம்ரகூட மலையில் ஓய்வெடுத்து விட்டு புறப்படுமாறு கூறுகிறான். இதை ஆராயும் மல்லிநாதர் ஏன் அவ்வாறு காளிதாசன் குறிப்பிடவேண்டும்?

प्रथमावसये यस्य सौख्यम् तस्याखिलेऽहनि |
शिवं भवति यात्रायामन्यथात्वशुभम् ध्रुवम् ||

– நிமித்தநிதானம்

ஒரு பயணி நீண்ட யாத்திரை மேற்கொள்ளும்போது, முதலில் தங்குகிற இடம் மகிழ்வானதாக இருந்தால், பயணம் முழுவதும் இனிமையாக இருக்கும் என்கிறது நிமித்தநிதானம் என்கிற நூல். இதை இங்கே மேகதூத காட்சிக்கு பொருத்துகிறார் மல்லிநாதர்.

சமஸ்க்ருத காவியங்களைப் படித்து அதன் உட்பொருளை உணர்ந்து ரசிக்க மல்லிநாதரின் உரைகள் இன்றியமையாதவை. வாழ்வில் இனிமையான சின்ன சின்ன விஷயங்களில் துவங்கி, அரசியல், தத்துவம் என்று பல சாத்திரங்களிலும் உள்ளவற்றை எடுத்து தொகுத்து வழங்கும் மல்லிநாதரின் உரைகள் மகா கவிஞர்களுக்கு இணையான பெருமை பெற்றிருப்பது சாலப் பொருத்தம்.

[Reference: Mallinatha by P.G. Lalye, Sahitya Academy]

2 Comments இலக்கிய உரையாசிரியர் மல்லிநாதர்

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)