“காளிதாசன் பரத கண்டத்திற்கு வெளியே தோன்றியவர் என்று நம்ப நிச்சயமான காரணங்கள் இருக்கின்றன. “காளிதாசன்” என்னும் அவர் பெயரே வித்தியாசமானது; அவர் பற்றிய கதைகள் கூட, அவரது பெயர் இயற்பெயர் அல்ல, அவரது வாழ்வில் பின்னர் கிடைத்த ஒரு பெயர் என்று கூறுகின்றன. “தாசன்” (அடிமை) என்று பெயரின் பின்னால் ஒட்டிக கொண்டிருக்கும் சொல்லின் சமூகப் பின்புலம் அழுத்தமானது; பழமையான ஹிந்துக்கள் இந்த பெயரை தவிர்த்தார்கள். காளிதாசனின் பிராமணீய பக்தி, புதிதாக மதமாற்றம் ஆன ஒருவரின் உத்வேகத்தையே காட்டிக் கொடுக்கிறது” – இப்படி ஒரு அறிஞர் (Benjamin Walker in “Kalidasa”, Hindu World) காளிதாசன் குறித்து எழுதினார்.
இத்தகைய கருத்து ஒரு தவறான மேற்கத்திய முன்முடிவு (Western prejudice). ஒரு காலனிய மனது எப்படி வேலை செய்யும் என்பதற்கு எடுத்துக் காட்டு. தாசன் என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் வைத்துக் கொண்டு, காளிதாசன் ஒரு வேற்று நாட்டவன், அடிமை, சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருந்தவன் என்று கூறும் இந்த பிதற்றலான கற்பனையை, எளிதில் மறுக்க முடியும். வேதங்களில் பழமையான ரிக் வேதத்திலேயே “திவோதாச” என்ற பெயர்களுடன் பாரம்பரிய அரச வம்சத்தினர் இருந்ததாக கூறுகிறது. “சந்தநதாசன்” என்னும் பெருவணிகன், “கணதாசன்” என்னும் நாட்டிய மேதை ஆகியோர் பற்றிக் குறிப்பிடும் நமது பழமையான இலக்கியங்களில், அவர்கள் பெயருக்கும் அடிமைத் தனத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லாததை பறை சாற்றுகின்றன. இவ்வளவு ஏன், இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மா ஒரு மோகன்’தாஸ்’ தானே!
அப்படியானால் உண்மையில் காளிதாசன் யார்? எங்கே, எப்போது பிறந்து வாழ்ந்தார்? யாரிடம் கல்வி கற்றார்? கேள்விகள் ஏராளம். பதில் யாரும் இன்னும் கண்டுபிடிக்க வில்லை. புதிர்தான். சமஸ்க்ருத இலக்கியத்தில் பெரும் ஆளுமையாக இருக்கும் காளிதாசனைப் பற்றி பல கர்ணபரம்பரை (செவிவழி) கதைகள் உண்டு. இவற்றுக்கு பெரும்பாலும் ஆதாரம் இருக்காது. இவ்வாறு பரவியுள்ளவற்றில், மிக பிரபலமான கதை ஒன்றில், காளிதாசன் முதலில் படிப்பறிவற்ற முட்டாளாக இருந்து, சிலரின் சதியால் ஒரு இளவரசியை மணக்க நேரிட்டதாகவும், பின்னர் அந்த இளவரசி அவரை விலக்க, காளியின் அருளால் கவி பாடும் திறன் பெற்றதாகவும், அதனாலேயே காளிதாசன் என்ற பெயரும் அடைந்ததாக கூறுவர். இதே கதையின் நீட்சியாக காளியின் அருளோடு திரும்பி வந்த காளிதாசனைக் கண்டு அவர் மனைவி “अस्ति कश्चिद् वाग्विशेष:” (அஸ்தி கஸ்²சித்³ வாக்³விஸே²ஷ:) – (பேச்சில் ஏதும் முன்னேற்றம் உண்டா?) என்று கேட்க, இதற்கு பதிலாக காளிதாசன் மூன்று பெரும் காவியங்களை இயற்றினார். இதில் குமாரசம்பவ காவியத்தில் “அஸ்தி…” என்றும், மேகதூத காவியத்தில் “கஸ்சித்…” என்றும், ரகுவம்ச காவியத்தில் “வாக்…” என்றும், துவக்கம் அமைத்து இயற்றப் பட்டது என்று ஒரு சுவாரசிய கூற்று உண்டு.
இன்னொரு கதை இப்படிப் போகிறது. இலங்கை அரசன் குமாரதாசன் அவையில் காளிதாசன் வீற்றிருந்த போது, அவ்வரசன் “कमले कमलोत्पत्ति: श्रुयते न तु दृश्यते” (கமலே கமலோத்பத்தி: ஸ்²ருயதே ந து த்³ருʼஸ்²யதே) – தாமரையில் தாமரை மலர்வது கேள்விப் படுவது மட்டுமே.. எங்கும் கண்டதில்லை என்ற பொருளில் ஒரு வரியை சொல்லி இந்த ஸ்லோகத்தை முழுமையாக்குபவர்க்கு பரிசு என்று அறிவித்தான். பிறகு காளிதாசன் இந்த ஸ்லோகத்தை முழுமை செய்து “बाले तव मुखाम्भोजे कथमिन्दीवरद्वयम़्” (பா³லே தவ முகா²ம்போ⁴ஜே கத²மிந்தீ³வரத்³வயம்) – ஓ பெண்ணே! உன் தாமரைமுகத்தில் எப்படி இரண்டு தாமரைகள் உள்ளன? (அதாவது தாமரை முகத்தில் இரு தாமரை போன்ற கண்கள்) என்ற பொருளில் அந்த ஸ்லோகத்தை நிறைவு செய்து விட்டார். இது அரசனின் காதுக்கு எட்டும் முன் அந்த அவையில் இருந்த நடனப் பெண்ணொருத்தி, அந்த வரியை அரசனிடம் கூறி பரிசு பெற்றுக் கொண்டு விட்டாள். பின் எங்கே காளிதாசன் தான் அந்த ஸ்லோகத்தை நிறைவு செய்தது என்று தெரிய வருமோ என்று அஞ்சி காளிதாசனைக் கொன்று விட்டாள் என்று கூட ஒரு கதை உண்டு.
இதைப் போல நம்பிக்கை சார்ந்து எழுதப் பட்ட நூல்களில் ஏராளமான சுவாரசிய சம்பவங்களும் குறிப்பிடப் பட்டுள்ளன. உதாரணமாக பதினொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த போஜராஜன் அவையில் காளிதாசன் வீற்றிருந்ததாக போஜ சரிதம் கூறுகிறது – இது முற்றிலும் தவறு என்று பலராலும் கருதப் படுகிறது. இது போன்ற கதைகளில் எல்லாம் நாம் காண்பது காளிதாசனை எவ்வாறு மக்கள் நேசித்து, உதாரண மனிதராக, புகழ்ச்சிக்குரியவராக வைத்து போற்றினர் என்று தெரிந்து கொள்ளலாம்.
கால தேச வர்த்தமானங்களை கடந்த நீதி நூலை, திருக்குறளை வழங்கிய திருவள்ளுவர் எங்கே பிறந்து வளர்ந்தார், எப்படி வாழ்ந்தார் என்பது தெளிவில்லை. அதே போல எக்காலத்தும் ரசிக்கப் படும் அழியாத காவியங்களை நல்கிய காளிதாசன் வாழ்க்கை குறித்தும் அங்கொன்றும், இங்கொன்றுமாக இவ்வாறு பல வித ஐதீகங்களின் வாயிலாக தெரிந்து கொள்கிறோமே தவிர நேரடியாகவோ, அகச்சான்றுகள் வாயிலாகவோ காளிதாசனின் வாழ்க்கை குறித்தும், அவரது காலம் குறித்தும் அறிந்து கொள்ள இயல வில்லை. திருவள்ளுவரைப் போலவே காளிதாசனும் தனது பெயரைக் கூட ஒரு இடத்திலும் குறிப்பிட வில்லை. சில அறிஞர்களின் தீர்மானம் என்னவெனில் காளிதாசனின் காவியங்களில் வர்ணனைகளில் இமய மலைச்சாரல், பல்வேறு நதிகள், ஆசிரமங்கள், புனிதத் தலங்கள், ஆகியவை மற்றும் காஷ்மீரி சைவத் தத்துவங்களை ஒட்டிய பார்வை ஆகியவற்றை வைத்து காளிதாசன் கஷ்மீர பிரதேசத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். வேறு சிலர், மகாகாளி வழிபாடு வங்கப் பிரதேசத்துக்கே உரியது. அதனால் காளிதாசன் வங்காளத்தில் தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். வேறு சிலர், மேகதூத காவியத்தில் உள்ள உஜ்ஜைனி நகர வர்ணனையை வைத்து அது நிச்சயம் காளிதாசன் வாழ்ந்த இடம்தான் என்று அடித்துக் கூறுகிறார்கள். இருந்தும் தீர்மானமாக காளிதாசன் வாழ்ந்த இடம் என்று எதுவும் முடிவாகத் தெரியவில்லை.
இதுவும் ஒரு விதத்தில் நன்மையே. படைப்பாளியின் வாழ்க்கைச் சம்பவங்கள் அவரது படைப்பை ரசிக்கும் போது குறுக்கே வராமல், அந்த படைப்பே படைப்பாளியின் பெருமையை பேசுவது நல்லது தான். ஷேக்ஸ்பியரின் வாழ்வில் தன்னைப் பற்றியும், தன் சமகாலத்தவர், அவருடனான உறவு பற்றியும் பதிவு செய்யப் பட்ட செய்திகள் வரலாறே தவிர, ஷேக்ஸ்பியரின் கவிதைகளை ரசிப்பது என்பதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று அரவிந்த கோஷ் கூறுவார். இது காளிதாசனுக்கும் பொருந்தும்.
சமஸ்க்ருதத்தில் காவியங்கள் இயற்றுவது எளிதல்ல. பாஷை இலக்கணம் மட்டும் அல்லாது காவியங்களுக்கே உரியதாக பல இலக்கண விதிகள் விதிக்கப் பட்டுள்ளன. காவியங்களை பல வகையாக பிரித்து ஒவ்வொரு வகைக்கும் லக்ஷணம் சொல்லப் பட்டிருக்கிறது. காளிதாசன் முதலான மாபெரும் கவிகள் இயற்றிய காவியங்களில் இந்த எல்லா லக்ஷணங்களும் குறைவின்றி இருக்கும். உண்மையில், காளிதாசனுக்கு பின் வந்த அணியிலக்கண ஆசிரியர்கள் காளிதாசனின் காவியங்களை வைத்துக் கொண்டு ஆராய்ந்து அதையே இலக்கணமாக வகுத்தனர்!
காளிதாசனின் கவிதைகளின் பாதிப்பு அதற்கு பின் வந்த பல்வேறு கவிஞர்களின் காவியங்களிலும் காணக் கிடைக்கிறது. உதாரணமாக மாளவிகாக்னிமித்ர காவியத்தின் பாதிப்பில் ப்ரியதர்ஸிகா, ரத்னாவளி, கற்பூரமஞ்சரி, வித்தசாலபஞ்சிகா ஆகிய காவியங்கள் எழுதப் பட்டதாக தெரிகிறது. அதே போல மேகதூத காவியத்தின் பாதிப்பில், பவன தூதம், ப்ரமரதூத காவியம், சாதக தூதம், சுக தூதம், சக்ரவாக தூதம், கோகில தூதம் என்று பல தூத காவியங்கள் இயற்றப் பட்டன. தற்காலத்தில் கூட காளிதாசனின் பாதிப்பு கவிஞர்களிடம் இருப்பதைக் காணலாம். ஜெர்மனியைச் சேர்ந்த ஷில்லர், Maria Sturat என்கிற கதையில் சிறைப்பட்ட ஸ்காட்டிஷ் இளவரசி மேகத்தை தூது விடுவதாக அமைத்தது கூட மேக தூத காவியத்தின் பாதிப்பில் தான்!
சில அறிஞர்கள் அஸ்வ கோஷரை (கி.பி. முதல் நூற்றாண்டு) காளிதாசனுக்கு முன்னால் வாழ்ந்தவராகக் கருதுவர். ஆனால் அவரது புத்தசரிதம், சுந்தரநந்தா ஆகிய காவியங்களில் காளிதாசனின் கவிதை வரிகளை அப்படியே எடுத்தாண்டிருக்கிறார். இதிலும் எதிர்மறையாக காளிதாசன் ஏன் அஸ்வ கோஷரின் கவிதை வரிகளை அப்படியே எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். காளிதாசன் ஒரு கவிஞன், கவிதை எழுதுவதை தன் வாழ்க்கையாகக் கொண்டவர், ஆனால் அஸ்வ கோஷர் புத்த மதத்தை பரப்புவதை தொழிலாகக் கொண்டவர் என்பதை கவனித்தால் அஸ்வ கோஷர்தான் காளிதாசனின் கவிதைகளை அப்படியே எடுத்தாண்டிருக்க வேண்டும் என்பது எளிதில் விளங்கும்.
ஒரு உதாரணம் பார்ப்போம்
காளிதாசனின் குமாரசம்பவம் 5ம் காண்டம் 24ம் ஸ்லோகம். | |
स्थिता: क्षणं पक्ष्मासु ताडिताधरा: पयोधरोत्सेधनिपातचूर्णिता: ஸ்தி²தா: க்ஷணம்ʼ பக்ஷ்மாஸு தாடி³தாத⁴ரா: பயோத⁴ரோத்ஸேத⁴நிபாதசூர்ணிதா: மழையின் முதல் துளிகள் |
|
அஸ்வகோஷர், புத்தசரிதம் 8ம் காண்டம் 26ம் ஸ்லோகம் | |
अधीरमन्या: पतिशोकमूर्चिता विलोचनप्रस्रवणैर्मुखै: स्त्रिय: | அதீ⁴ரமன்யா: பதிஸோ²கமூர்சிதா விலோசனப்ரஸ்ரவணைர்முகை²: ஸ்த்ரிய: |
|
|
கம்பராமாயணம், அயோத்தியா காண்டம், நகர்நீங்குபடலம் 184ம் பாடல் | |
திடருடைக் குங்குமச் சேறுந் சாந்தமு மிடையிடை வண்ட லிட்டார மீர்த்தன மிடைமுலைக்கு வடொரீ இ மேகலைத் தடங் கடலிடைப் புகுந்தகட் கலுழியா றரோ”கண்களினின்று புறப்பட்ட கண்ணீர் ஆறு மிகுதியான குங்குமக் குழம்பையும் சிவந்த சாந்தினையும் நடுநடுவே சேறாகப் பொருந்தப் பெற்று மாதரின் முத்து மாலைகளை இழுத்தது… நெருங்கிய தனங்களில் விழுந்து நீங்கி மேகலை அணிந்த இடையில் சென்று சேர்ந்தது… |
இது போன்ற கவிதைகளில் ஒரே மாதிரியான வர்ணனை வெவ்வேறு கவிஞர்களிடம் காணக் கிடைக்கிறது. எத்தனையோ உதாரணங்களில் இதுவும் ஒன்று. இதனாலேயே இவரைப் பார்த்து அவர் எழுதினார் என்று தீர்மானமாக சொல்ல முடியாது. சாயல் இருப்பதை உணரலாம். பாரதத்தின் வடகோடியில் இருந்த அஸ்வகோஷரும், தெற்கே இருந்த கம்பரும், காளிதாசரும் கூட கவிதைகளில் உவமைகளில் சாயலில் ஒத்திருப்பது இவர்களுக்குள் இருந்த தொடர்பை, ஒருவர் இன்னொருவருடைய கவிதையை ரசித்து படித்து உள்வாங்கியதையே புலப்படுத்துவதாகக் கொள்ளலாம்.
காளிதாசன் கவிதைகளில் இது போன்ற சிருங்கார ரசம் மிகுந்து இருக்கிறது. சிருங்காரம் மிகுந்த கவிதைகளில் பரிச்சயம் இல்லாதவர்கள், இவற்றைப் படிக்கும் போது அருவருப்பு கொள்வர். சில அறிஞர்களே, காளிதாசன் ஒரு காமுகன், காமத்தையே அதிகம் எழுதினான் என்று தயங்காமல் கூறுகிறார்கள். அரவிந்தரே கூட “காளிதாசருக்கு அறத்தில் ஊக்கம் உண்டு என்றோ, நன்னடத்தையில் உறுதி கொண்டவர் என்றோ யாரும் கூறத் துணிய மாட்டார். காளிதாசனின் காவியங்களில் சிறந்த கொள்கைகள், உயர்ந்த கருத்துக்கள் இருந்தாலும் அவை அக்கருத்துக்களின் அழகு பற்றிக் கூறுகின்றனவே தவிர, வாழ்க்கையில் அவற்றிற்கு உரிய மதிப்பை கருதி அன்று!” என்று முடிவெடுத்து கூறி விட்டார்.
ரகுவம்சம், குமாரசம்பவம் ஆகிய காவியங்களுக்கு தமிழில் அற்புதமான உரை எழுதிய திரு. வேங்கடராகவாசார்யார் அரவிந்தரின் இக்கருத்தை மறுத்து கூறுகிறார், “இவ்வாறு அரவிந்தர் கூறியது முற்றிலும் ஆதாரமற்றது. காளிதாசர் குணநலன் அற்றவர் என்று கொள்வதற்கு அகச்சான்றோ, புறச்சான்றோ இல்லை. ஸ்ருங்கார ரசத்தை முக்கியமாக அவருக்கே உரியதான தனிப்பட்ட உற்சாகத்துடன் நூல்களில் வர்ணித்துள்ளார் என்பதாலேயே அவர் நன்னடத்தை அற்றவர் என்று அனுமானிப்பது மிகமிகப் பிழைப் பட்டதாகும். ராவணனது அந்தப்புறப் பெண்டிரையும், சரத் கால நதியை இளம்பெண்ணுடன் ஒப்பிட்டும், அகல்யை-இந்திரன் வரலாற்றையும், தாரை-சுக்ரீவன் வாழ்க்கையையும் இன்னும் பல காதற் காட்சிகளையும் வர்ணித்த வால்மீகி முனிவரை குணமில்லாதவர் என்று வரும் கூறத் துணிவதில்லை. வாழ்வதிலே விருப்பு உள்ளவர் காளிதாசர். அழகு ஆனந்தத்திற்காகவே அமைந்தது எனக் கருதிப் போற்றுபவர். உலகத்தை துறந்து ஓடவேண்டும் என்பது அவர் எண்ணமன்று. சுருங்கக் கூறின் “வாழ்க்கை வாழ்வதற்கே” என்பதும், “பக்தியினால் முக்தி பெறலாம்” என்பதும், “பொருளை ஈட்ட வேண்டும்; ஆனால் பேராசையுடன் அல்ல” என்பதும், “உலகப் பொருளை அனுபவிக்க வேண்டும்; விசேஷப் பற்றுதலுடன் அல்ல” என்பதும், “இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு நிமிஷத்தையும் மனிதன் தான் பெற்ற ஒரு பெரிய லாபமாகக் கருத வேண்டும்” என்பதும் அவர் கருத்து. இக்காரணங்களாலேயே அவர் வாழ்வை உற்சாகத்துடன் வர்ணித்தாரே அன்றி வேறு காரணங்களால் அல்ல”.
காளிதாசனின் ரகுவம்ச காவியத்தில் ரகுவம்ச அரசர்களின் சிறப்பியல்புகளை வர்ணிக்கத் துவங்கிய போது, முதலில் சொல்லுவது அவர்களது அகத் தூய்மைதான். அத்தூய்மை பிறவியிலிருந்தே அமையவேண்டும் என்று வலியுறுத்துகிறார். காளிதாசனை சாக்தர் என்றும், அத்வைதி என்றும் கூறுவர். சிவ பக்தியும் அதிகம் உடையவர். வேதத்தில் பற்றுடையவர். அதன் மேன்மையை தன் காவியங்களில் பல இடங்களில் கூறிச் செல்கிறார். அறம், பொருள், இன்பம், வீடுபேறு (சதுர்வித புருஷார்த்தங்கள்) என்ற எக்காலத்துக்கும் பொருந்தும் தர்மமே காளிதாசனின் காவியங்களில் த்வனியாக (உட்பொருளாக) விளங்குகிறது. தீயவர்களை இழித்தும், நல்லோர்களின் நற்குணங்களை எடுத்துச் சொல்லியும் இக்காவியங்கள் நமக்கு வாழ்க்கையில் வழிகாட்டியாகின்றன.
ரகுவம்ச காவியத்தில் எல்லா திசைகளிலும் சக்கரவர்த்தி ரகு வெற்றி பெற்றதை வர்ணிக்கும் கட்டத்தில், இந்த பாரத தேசத்தின் பல்வேறு பகுதிகளைக் குறித்து காளிதாசன் விளக்குகிறார் (ரகுவம்சம் – நான்காவது காண்டம்). இதில் கலிங்கத்தின் (இன்றைய ஒரிசா) சுவையான பானங்கள், மீன்பிடி தொழில் நடக்கும் தமிழக தாமிரவருணி கரைகள், கேரளப் பெண்டிரின் சிகை அலங்காரம், காஷ்மீரத்தின் குங்குமப் பூ, ப்ராக்ஜோதிஷத்தின் (அஸ்ஸாம்) கற்றாழை போன்ற செடி வளரும் தோட்டங்கள் குறித்த வர்ணனைகள் காளிதாசன் இந்த தேசத்தில் எவ்வளவு பயணித்து அனுபவப் பூர்வமாக உணர்ந்து நேசித்து கவிதை எழுதி இருக்க வேண்டும் என்று உணர்த்துகின்றன.
காளிதாசனின் மற்றொரு தனிச்சிறப்பு, அவரது கவிதைகளில் பொதிந்துள்ள உவமைகள் தான். வெறும் சொல் அலங்காரத்தைக் காட்டிலும் உவமையில் தான் காளிதாசன் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார். உதாரணமாக, அவப்பெயர் மக்களிடையே வெகுவேகமாக பரவுவதை, எண்ணெய் நீர் மேல் பரவுவதுடனும், தாளிட்ட அறையில் தாள் நீக்காமலேயே உள்ளே வந்து நின்ற தேவதைக்கு கண்ணாடியில் தோன்றும் பிரதி பிம்பத்தையும், நுரை நிறைந்துள்ள நீலக்கடலுக்கு நட்சத்திரங்களுடன் கூடிய நீல வானத்தையும், மகனில்லாது வருந்திய தசரதருக்குப் புத்திர சோகத்தினால் மரணம் நேரும் என்று முனிவர் கொடுத்த சாபத்திற்கு நிலத்திற்கு வளமூட்டக் கருதி காய்ந்த புல் பரப்பி எரித்தலையும், இந்துமதியுடன் கீழே விழுந்த அஜனுக்கு எண்ணெய்ச் சொட்டுடன் கீழே விழுகின்ற சுடரையும் உவமையாக கூறுகிறார். இவை மிகப் பொருத்தமானவையாக இருப்பதோடு மட்டும் அல்லாமல் சிந்தனையை தூண்டுவதாகவும், மனத்தைக் கவருவதாகவும் உள்ளது காளிதாசனுக்கே உரிய சிறப்பு. காளிதாசனின் ஒவ்வொரு காவியங்களுமே தனித்தனியாக விரித்து ரசிக்கத் தக்கவை. விரிவு கருதி அவற்றை இங்கே அலசவில்லை.
எந்த தேசத்திற்கும், எக்காலத்திற்குமான கவிதைகளை தந்த காளிதாசன் நமது தேசிய கவி என்பதில் நமக்கு பெருமை தானே!
குறிப்புகளுக்கு:
- ரகுவம்ச மகா காவியம் (தமிழில்) – லிப்கோ பதிப்பு
- Kalidasa – K. Krishnamoorthy
மிக அருமையான கருத்துகள் ஆழ்ந்த பார்வை. கட்டுரையாளருக்கு பாராட்டுகள்
Well written. Never boring how many ever times you read about Kalidasa. Where is that first picture from?
The “dUta” kaavya, there are about 80 of them in samskrita literature, likely inspired by meghadutam.
The first picture is in Kalidasa Samskrita Academy in Ujjain.
கவிகளுள் சிறந்தவர் யார் என்று காளிதேவியிடமே காளிதாஸன் கேழ்க்க அதற்கு தேவி
கவிர் தண்டி கவிர் தண்டி கவிர் தண்டி ந ஸம்சய:
என்று சொன்னதாகவும் அதைகேட்டு வெகுண்ட காளிதாஸன் தேவியிடமே சண்டைக்குப் போனதாகவும் காளிதேவி பரிவுடன் உத்தரம் கொடுத்து காளிதாஸனை சமாதானம் செய்ததாகவும் கேட்டதுண்டு. முழு வ்ருத்தாந்தம் நினைவில்லை.
முன்னர் சங்கதத்தில் விக்ஞாபித்த விஷயம். ஸ,ஷ,ஹ,க்ஷ முதலிய எழுத்துக்கள் போன்று “श” என்ற எழுத்துக்கான க்ரந்த லிபி ஏதாவது தமிழ் மென்பொருளில் உண்டா. இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும். மேலும் தமிழ் லிபியில் “श” எழுதும் போது உரிய க்ரந்த லிபியை எழுதினால் அதற்கும் “ஸ” விற்கும் உள்ள வித்யாசம் துல்யமாக தெரிய வருமே.
ஸம்ஸ்க்ருத காவ்யங்கள் மற்றும் புராணங்கள் வாசிப்போரை கவருவது அதிலுள்ள அழகிய வ்ருத்தங்கள். கீழ்கண்ட காளிதாஸன் மற்றும் அச்வகோஷரின் ச்லோகங்களில் வ்ருத்தத்தில் சாம்யதை தெரிகிறது. காளிதாஸன் காவ்யங்கள் லலிதமான பலப்பல வ்ருத்தங்களில் அமைக்கப்பட்டவை எனவும் கேட்டதுண்டு.
स्थिता: क्षणं पक्ष्मासु ताडिताधरा: पयोधरोत्सेधनिपातचूर्णिता:
वलीषु तस्या: स्खलिता: प्रपेदिरे चिरेण नाभिं प्रथमोदबिन्दव:
अधीरमन्या: पतिशोकमूर्चिता विलोचनप्रस्रवणैर्मुखै: स्त्रिय: |
सिषिम्चिरे प्रोषितचंदनान् स्तनान् धराधर: प्रस्रवणैरिवोपलान् ||
முறையாக ஸம்ஸ்க்ருதம் பயிலாததால் குருலகு லக்ஷணங்களின் படி அலகிட்டு வ்ருத்தம் எது என அறிய இயலவில்லை. ஆயினும் சொற்களின் லயத்தின் படி இந்த்ரவஜ்ரா அல்லது உபேந்த்ரவஜ்ரா வ்ருத்தத்தில் மேலிரண்டு ச்லோகங்களும் அமைந்ததோ என தோன்றுகிறது.
அஸ்வகோஷரின் ச்லோகம் சல சலவென ஓடைபோல போகையில் காளிதாஸனின் ச்லோகம் வாசிக்கையில் சொற்களின் லயம் எனக்கு தடைபடுகிறதே. पक्ष्मासु ताडिताधरा: என்ற சொற்களை வாசிக்கும் போது சுலபத்தில் வ்ருத்தத்தின் லயம் கிட்டாதது போலும் पक्ष्मसु ताडिताधरा: என வாசிக்கையில் வ்ருத்தத்தில் அமைவது போலவும் தோன்றுகிறது. எனக்கு பாஷாஞானம் இல்லாததால் என் தவறு எது என சரியாக புரிந்து கொள்ள இயலவில்லை. விளக்கவும்.
மிக தாமதமாக இந்தக் கட்டுரையைப் படித்ததால் மறுமொழியையும் மிகவும் தாமதமாகவே அனுப்புகிறேன். தமிழில் ஶ எளிதில் எழுதலாம். திரு வினோத்ராஜன் அவரது http://www.virtualvinodh.com வலைத்தளத்தில் NHM Writer ல் unicode Tamil 99 and phonetic keyboard extended என்று வழி காட்டியிருக்கிறார். அதைக் கொண்டு மிக எளிதில் ஶ ஶி ஶா ஶு என்று எழுதலாம். தமிழ் 99ல் ஶஃ என்று வருவது போனெடிக்கில் ஶ் என்று அழகாக வரும்.
சங்கதம் காண மகிச்சியாக இருக்கிறது. டம்படமார ஜிங்கோயிஸ்ம் இல்லாத level-headed போக்கு தெரிகிறது. மிக்கவே மகிழ்ச்சி! இதில் பங்கு கொள்ள எனக்கும் ஆசைதான்!
பாலு
இங்கு படிக்கலாம் http://www.kelvi.net/books/comics/index.php?album=Indian+children+stories%2FKalidasa
Great site .Whenever I find time i like to visit this site and LEARN something .
Pls continue this great useful work.
If some one can add some MP3 audios of stories and drama, and some interesting items -welcome.. Perhaps the pages here can be used for them . Only Sanskrit portion need to be provided with audio for the correct pronunciation and phonetics (I saw the audios list already appearing)
Wonderful site, great work. Keep enlighten us.