பாணினியின் அஷ்டாத்யாயி – 2

முந்தைய பகுதிகள்: பகுதி 1

பாணினி என்ற பெயர்

பாணின என்பவரின் மகன் அல்லது “பணின்” என்பவரின் பேரன் அல்லது பணி என்பவரின் மகன் என்று பலவிதமாக “பாணினி” என்ற சொல்லின் இலக்கணம் (etymology) கூறப்படுகிறது. “பாணினி” என்ற பெயரைத் தவிர தாக்ஷி புத்ர “தாக்ஷி என்பவரின் மகன்”, ஸாலாதுரீய “ஸாலாதுர” என்ற மற்ற பெயர்களும் உண்டு.

பாணினியின் காலம்

கி.மு 7ஆம் நூற்றாண்டிலிருந்து 4ஆம் நூற்றாண்டு வரை, அறிஞர்கள் இவருடைய காலத்தை ஏதோவொரு நூற்றாண்டைக் குறிப்பிடுகிறார்கள். பொதுவாக இவரது காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டாக இருக்கலாமென்று நம்பப் படுகிறது.

பாணினியின் பிறந்த இடம்

இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள ஸாலாதூர என்ற கிராமம் பாணினியின் பிறந்த இடமென்று நம்பப் படுகிறது. இது தற்சமயம் பாகிஸ்தானில் உள்ள லாகூர் என்ற இடமாக இருக்கக் கூடும் என்பது பெரும்பாலான கருத்து.

பாணினியின் சூத்திரங்களின் அமைப்பு

சுருக்கமாகக் கூறும் வகையிலமையும் சூத்திர நடையில் பாணினி தனது இலக்கணத்தில் விதிகளை அமைத்துள்ளார். இதற்காகச் சில கலைச் சாதனைகளைத் (Technical Device) தனது இலக்கண நூலில் கையாண்டுள்ளார். அவைகள் வருமாறு:

1. பிரத்தியாஹாரங்கள்

பாணினி பிரத்யாஹாரம் அமைக்கும் விதத்தை ஒரு சூத்திரத்தில் விளக்கியுள்ளார் (1.1.71) ஒரு சூத்திரத்தில் தேவையான எழுத்துக்களையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து விவரித்துக் கூறாமல், அதற்குள்ளடங்கும் எழுத்துக்களெல்லாவற்றையும் சுருக்கமாக பிரத்யாஹாரங்கள் மூலம் சுட்டலாம். இதற்காக ஸிவ சூத்திரங்களில் காணப்படும் எழுத்துக்களைப் பெரும்பாலும் பாணினி பயன்படுத்தி உள்ளார். காட்டாக, அச் என்ற பிரத்யாஹாரத்தைப் பயன்படுத்தும் போது ஸம்ஸ்க்ருத மொழியின் எல்லா உயிரெழுத்துக்களையும் இதற்குள்ளடக்கி விடலாம். இதைப்போன்ற ஹல் என்ற பிரத்யாஹாரத்தைப் பயன்படுத்தி இம்மொழியின் எல்லா மெய்யெழுத்துக்களையும் சுட்டலாம். ஆகவே இவ்வெழுத்துக்களை மீண்டும் மீண்டும் கூறாமல் இப்பிரத்தியாஹாரங்களைப் பயன்படுத்தி சூத்திரங்களைச் சுருக்கமாக அமைத்துள்ளார்.

2. அனுபந்தம்

அனுபந்தம் என்ற சொல்லை பாணினி தனது இலக்கணத்தில் பயன்படுத்தவில்லை. இதைவிடச் சிறப்பான இத் என்ற சொல்லை இதனிடத்தில் பயன்படுத்தியுள்ளார். இ(போ) என்ற தாதுவிலிருந்து ஆக்கப் பட்டது இத் என்ற சொல். இது மறைதல் என்ற பொருளைச் சுட்டும். அடிச்சொல் (பிரக்ருதி), ஒட்டு (பிரத்யய), ஆகமம், பதிலி (ஆதேஸம்) ஆகியவைகளுடன் அனுபந்தமெனப்படும் எழுத்து இணைக்கப் படும். விகரணம், குணம், விருத்தி, சுரம் போன்ற மாற்றங்களேற்படுவதை இவ்வனுபந்தம் சுட்டும். முழுமையான சொல்லாக்கப் பட்டவுடன் இவ்வனுபந்தம், இதன் பெயருக்கேற்ப (போதல்) மறைந்து விடும்.

எந்தெந்த எழுத்துக்கள் “இத்” ஆக பயன்படுத்தப் படுமென்பதை சூ.1.3.2 – 9, ஆகியவைகளில் குறிப்பிட்டுள்ளார். இச்சூத்திரங்களில் இருந்து, தேவநாகரியின் நெடுங்கணக்கில் காணப்படும் பெரும்பாலான எழுத்துக்கள் இத்-ஆக பயன்படுத்தப் படுமென்று தெரியவருகிறது. எந்தெந்தச் சூழல்களில் எந்தெந்த எழுத்துக்கள் “இத்”ஆக வருமென்பதையும் பாணினி சுட்டிக் காட்டியுள்ளார். ஐ, ஔ என்ற இரண்டே எழுத்துக்களைத் தவிர மற்ற எல்லா உயிரெழுத்துக்களையும் த³, த⁴, ப³, ஹ என்ற நான்கையும் தவிர்த்த ஏனைய மெய்யெழுத்துக்களையும் இத்-தாகப் பாணினி பயன்படுத்தியுள்ளார். பிரத்தியாஹாரங்களாக்குவதற்கு அனுபந்தங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. (பார்க்க சிவசூத்திரம், பிரத்தியாஹாரம்).

சிவ சூத்திரங்களிலிருந்து மட்டுமல்லாமல் அஷ்டாத்தியாயியின் சூத்திரங்களில் இருந்தும் பிரத்தியாஹாரங்கள் அமைத்து, பாணினி தனது விதிகளில் பயன்படுத்தியுள்ளார். காட்டாக சூ.4.1.2-இல் வேற்றுமையுருபுகளைக் கூறுகிறார். இதிலிருந்து ஸுப் என்ற பிரத்யாஹாரத்தை உண்டாக்கி எல்லா வேற்றுமை உருபுகளையும் சுட்டுவதற்கு பயன்படுத்தி உள்ளார். இதே போல திப் என்பது வினையோடு இணைக்கப்படும் எல்லா இடவொட்டுக்களையும் சுட்டும். (2) த் என்ற அனுபந்தத்தை ஓர் உயிரெழுத்தை அடுத்து இறுதியில் வைத்து ஆக்கப்படும் பிரத்தியாஹாரம் அந்த ஒரேயொரு உயிரெழுத்தைச் சுட்ட பயன்படுத்தியுள்ளார்.

காட்டாக அத் என்ற என்ற பிரத்தியாஹாரம் அ என்ற உயிரெழுத்தையும், ஆத் என்ற பிரத்தியாஹாரம் ஆ என்ற உயிரெழுத்தையும் சுட்டுமாறு பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. இதைப் போன்று, மெய்யெழுத்துக்களின் ஒரு வர்க்கத்தின் (வகுப்பு) முதலெழுத்தை அடுத்து உ என்ற அனுபந்தத்தைச் சேர்த்தாக்கப்படும் பிரத்தியாஹாரம் அவ்வர்க்கத்தைச் சேர்ந்த எல்லாவெழுத்துக்களையும் சுட்டும். காட்டாக சூ, சு என்ற பிரத்தியாஹாரங்களை முறையே பின்னண்ணவொலிகள், அண்ணவொலிகள் ஆகியவைகளைச் சுட்டப் பயன்படுத்தியுள்ளார்.

(3) பெண்பாலைச் சுட்டும் ஒட்டான ஈ, ஙீன், ஙீப், ஙீஷ் என்ற மூன்று ஒட்டுக்களால் குறிக்கப் படுகின்றன. இவைகளின் முதலில் காணப்படும், இத்-தான ங் அவைகளெல்லாவற்றையும் பொதுவில் குறிப்பிடப் பயன்படுகிறது. ன், ப், ஷ் என்ற இத் எழுத்துக்கள் அவைகளின் செயற்பாடுகளின் வேறுபாடுகளைச் சுட்டப்பயன்படுகின்றன. ஆகவே ங் என்றவெழுத்தால் பெண்பாலொட்டுக்களைப் பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது. இதைப் போன்று சாப், டாப், டாப்³ என்று பெண்பாலொட்டுக்களைச் சுட்ட ஆப் என்ற பொதுவான வொட்டைப் பயன்படுத்துகிறார் பாணினி.

சில அனுபந்தவெழுத்துக்கள் முதலிலும் வேறு சில இறுதியிலும் நிற்கும்.

ஒவ்வொரு அனுபந்தமும் தனித்தனிச் செயற்பாடு கொண்டது. சில அனுபந்தங்கள் சுரத்தைச் சுட்டுவதாகவும் காணப்படுகின்றன. காட்டாக ப் என்ற அனுபந்தம் அனுதாத்த சுரத்தைச் சுட்டுமென்று பாணினி கூறுகிறார். (3.1.4.)

3. கணங்கள்

பார்க்க க³ணபாடம் சொற்களை ஒரு வகுப்பிலமைத்துக் கூறும்போது, ஒரு விதியில் அவ்வகுப்பின் முதல் முதலில் நிற்கும் சொற்களை மட்டும் குறிப்பிட்டு விட்டு காட்டாக அம்ஸ்வாத³ய (6.2.193) அவ்வகுப்பைச் சேர்ந்த மற்ற சொற்களிலும் அவ்விதி அவ்வாறே செயல்படுமென்பதைக் குறிப்பிட இயலும். இம்முறையினால் எல்லாச் சொற்களையும் தனித்தனியாக கூறுவதைத் தவிர்க்க முடிகிறது.

4. கலைச்சொற்கள்

கி⁴ (‘இ’ அல்லது ‘உ’ வீற்றுப் பெயரடிச் சொற்கள்), கு⁴ (தா³, தா⁴ என்ற தாதுக்கள்) நதீ ‘ஈ’ அல்லது ஊ வீற்று பெண்பாற் சொற்கள்) போன்ற கலைச்சொற்களைப் பயன்படுத்தி, மேலே கூறியவெழுத்துக்களை ஈறாகக் கொண்ட, எல்லா அடிச் சொற்களையும் தனித்தனியாகக் கூறுவதைத் தவிர்த்திருக்கிறார் பாணினி. இக்கலைச் சொற்களைப் பயன்படுத்தி தனது சூத்திரங்களையமைக்கும் போது இவைகளெல்லாவற்றையும் ஒரே விதிக்குள் அடக்குவது எளிதாகிறது.

5. அனுவிருத்தி

முதலில் கூறப்பட்ட விதிகளில் சில சொற்களைப் பயன்படுத்தி, அவைகளை அதையடுத்து வரும் சூத்திரங்களில் பயன்படுத்துவதில்லை. இச் சொற்களை அனுவ்ருத்தி மூலம், தேவையான இடங்களில் கொண்டு வந்து பொருள் விளக்குவது வழக்கம். இம்முறைக்கு அனுவிருத்தி என்று பெயர். பாணினி இம்முறையைப் பின்பற்றி சூத்திரங்களை அமைத்த போதிலும், அனுவிருத்தி என்ற சொல்லை அவர் பயன்படுத்தவில்லை. பிற்கால உரையாசிரியர்கள் இதை அனுவிருத்தி என்று கூறி பொருள் விளக்குகிறார்கள். இதன் மூலம் சொற்களை மீண்டும் மீண்டும் விதிகளில் பயன்படுத்துவதைத் தவிர்க்க இயலுகிறது.

இந்த விதமாகத் தேவையான சொற்களை முந்திய சூத்திரங்களிலிருந்து அடுத்துவருஞ் சூத்திரங்களில் இணைப்பது தொடர்ச்சியாக அமையும். சில சமயங்களில் அவ்வாறு தொடர்ச்சியாக அமையாமல், அதாவது தேவையில்லாத இடங்களில் அச்சொற்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு, மறுபடியும் தேவை எழும்போது அச்சொற்களைக் கொண்டு வந்து பொருள் காண்பதும் உண்டு. இதற்கு மண்டூக ப்லுதி “தவளைக் குதி” என்று பெயர். தலைப்புகளைத் தொடங்கும் அதிகாரச் சூத்திரங்கள் அனுவிருத்திக்குச் சிறந்த எடுத்துக் காட்டு.

அஷ்டாத்யாயியின் கருவி மொழி (Meta-language)

கருமொழியை அதாவது ஸம்ஸ்க்ருத மொழியின் அடிப்படையில் பாணினி கருவி மொழியை அமைத்திருந்த போதிலும் இவ்விரண்டுக்கும் வேறுபாடுகள் உண்டு:

 1. பாணினி தனது கருவி மொழியில் சொல்லின் தொடக்கத்தில் சில கூட்டு மெய்களை அமைத்திருக்கிறார். காட்டாக ஹம்யந்த (7.2.5), ம்வோஸ்ச (3.2.64) இச்சொற்களின் முதலில் காணப்படும் கூட்டு மெய்கள் ஸம்ஸ்க்ருத மொழியில் சொல்லின் முதலில் வாரா.
 2. ஸம்ஸ்க்ருத மொழியில் ஸந்தி விதிப்படி, நிற்கும் சொல்லின் இறுதி மூக்கொலி, வருஞ் சொல்லினுயிரெழுத்துக்கு முன்னால் பொதுவாக இரட்டிக்கும். காட்டாக ப்ரஹஸன் + உவாச = ப்ரஹஸன்னுவாச. ஆனால் அஷ்டாத்யாயியின் கருவி மொழியில், இந்த இரட்டித்தல் காணப்படவில்லை. இகோ யணசி (யண் + அசி) (6.1.77) .
 3. கருவி மொழியில் வினைச்சொற்களே பயன்படுத்தப் படவில்லை. பெயர்ச்சொற்களே காணப்படுகின்றன. இச்சூத்திரங்களின் பொருட்களை விளக்க, வினைச் சொல்லை நாமாகவே அவைகளுடன் சேர்க்கவேண்டும். காட்டாக வ்ருத்³தி⁴ ஆத்ஐச் (1.1.1) அதே³ங்கு³ண: (1.1.2) என்ற சூத்திரங்களில் வ்ருத்தி, ஆத், ஐச், அத், ஏங், கு³ண: என்ற சொற்களே காணப்படுகின்றன. இவைகளுடன் அஸ்தி அல்லது ப⁴வதி (ஆகு) என்ற வினைகளை சேர்த்து விளக்கவேண்டும்.
 4. ஸம்ஸ்க்ருத மொழியில் காணப்படும் எட்டு வேற்றுமைகள், கருவி மொழியில் காணப்படவில்லை. இதில் ஐந்தே வேற்றுமைகள் தான் பயன்படுத்தப் பட்டுள்ளன. முதல் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமைகள் கருவி மொழியில் காணப்படுகின்றன. 2, 4, 8 ஆம் வேற்றுமைகள் கருவி மொழியில் பயன்படுத்தப் படவில்லை.

கருமொழியில் சுட்டும் பொருட்களையே கருவி மொழியிலும் இவ்வேற்றுமைகள் சுட்டவில்லை. கருவி மொழியில் இவைகள் சுட்டும் பொருட்களை பாணினி விளக்கிக் கூறுகிறார். சூத்திரத்தில் பயன்படுத்தியுள்ள ஆறாம் வேற்றுமைச் சொல் அதனிடத்தில் என்ற பொருளையும் (1.1.49), ஏழாம் வேற்றுமைச் சொல் “எது முன்னால் நிற்கிறதோ” என்ற பொருளையும் (1.1.66) என அவைகள் சுட்டும் பொருட்களை வரையறுத்துள்ளார். இதை ஒரு எடுத்துக் காட்டுடன் விளக்குவோம். “இகோ யண் அசி” (5.1.77) என்ற சூத்திரத்தில் இக் ஆறாம் வேற்றுமைச் சொல். யண் முதல் வேற்றுமைச் சொல், அசி ஏழாம் வேற்றுமைச் சொல். அச்-சுக்கு முன் நிற்கும் இக்-குக்குப் பதிலியாக யண் வரவேண்டும் என்பது சூத்திரத்தின் பொருள்.

காலம் வினை நோக்கு ஆகியவைகளைச் சட்டப் பயன்படுத்தியுள்ள ல-காரம் கருவி மொழியில் மட்டும் காணப்படும் சொல் அவ்வாறே தத்தித வொட்டுக்களான பி² ( = ஆயன), க்² (இன்) போன்ற ஒலியன்களும் கருவிமொழியில் இவ்வாறு பயன்படுத்தப் படமாட்டாது.

(அஷ்டாத்யாயில் விதிகளின் வகைகள்…  தொடரும்) 

5 Comments பாணினியின் அஷ்டாத்யாயி – 2

 1. KSS Rajan

  குறைந்த அள்வே பயிற்சியும் ஞானமும்{ஸம்ஸ்க்ருதத்தில் } உள்ளஎன்னைப்போன்ற் ஆரம்பநிலையிலுள்ளோர்க்கு இக்கட்டுரையைப் புரிந்து கொள்வது மிகவும் ஸ்ரமம்

 2. srini

  சார், தென்
  இரண்டாம் தமிழ் சங்க நூலான தொல்காப்பியத்தில் வடசொல் கொண்டு தமிழில் செய்யுள் எழுதலாம் என்று உள்ளது. இதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் வடமொழி சமஸ்க்ருததையே குறிக்கிறது. அவ்வாறு இருக்க நீங்கள் பாணினி சமஸ்க்ருதத்திற்கு இலக்கணம் எழுதியது கி.மு. 7 ஆம் நூற்றாண்டு என்று சொல்கிறீர்களே.

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)