பாணினியின் அஷ்டாத்யாயி – 1

அஷ்டாத்யாயி அல்லது அஷ்டகம் (“எட்டு அத்யாயங்களைக் கொண்டது”) என்றழைக்கப் படும் பாணிநியால் எழுதப் பட்ட சம்ஸ்க்ருத மொழியின் இலக்கண நூல் நந்நான்கு பாதங்களாக பிரிக்கப் பட்ட எட்டு அத்தியாயங்களைக் கொண்டது. இதில் கிட்டத்தட்ட 4000 சூத்திரம் எனப்படும் இலக்கண விதிகள் காணப் படுகின்றன. ஒவ்வொரு அத்தியாயத்திலும் விளக்க எடுத்துக் கொண்ட தலைப்பு, அத்தியாயங்கள் அமைக்கப் பட்டிருக்கும் வகைமுறை ஆகியவைகளைப் பொறுத்து ஒவ்வொரு அத்தியாயத்திலும் காணப் படும் சூத்திரங்களின் எண்ணிக்கை வேறுபடும்.

பாணினியின் சூத்திரங்களோடு இணைந்தமையாத ஆனால் அச்சூத்திரங்களைப் புரிந்து கொள்ள இன்றியமையாதவையாக கருதப் படும், தனித்தனியாக அமைந்துள்ள சில துணை நூல்கள் வருமாறு (1) சிவ சூத்திரம் (2) தாது பாடம் (3) கணபாடம் (4) உணாதி சூத்திரம் (5) பிட் சூத்திரம் (6) லிங்கானுசாசனம் (7) ஸிக்ஷா. இந்நூல்களின் ஆசிரியர் பாணினியா அல்லது வேறு ஒருவரா என்று முடிவாக எதுவும் கூறமுடியாத போதிலும், பாணினியின் இலக்கணத்தோடு இவைகளுக்குள்ள நெருங்கிய தொடர்பு பற்றியோ அல்லது அவ்விலக்கணத்தை எளிதில் புரிந்து கொள்ள இந்நூல்களின் அவசியத்தைப் பற்றியோ எந்தவிதக் கருத்து வேறுபாடோ சந்தேகமோ இல்லை.

Panini

1. சிவசூத்திரம்

சிவ சூத்திரம் அல்லது மாஹெஸ்வர சூத்திரம் அல்லது ப்ரத்யாஹார சூத்திரம் எனப்படும் இந்நூல் 14 சூத்திரங்களைக் கொண்டது. சம்ஸ்க்ருத மொழியின் நெடுங்கணக்கு வைப்பு முறையிலிருந்து மாறுபட்ட முறையில் சம்ஸ்க்ருத எழுத்துக்களை இச்சூத்திரங்களில் வைக்கப் பட்டிருக்கின்றன. சிவசூத்திரத்தில் வைக்கப் பட்டிருக்கும் எழுத்துக்களைக் கொண்டு ப்ரத்யாஹார சூத்திரங்கள் அமைக்கப் பட்டு, இவ்விலக்கணத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளன. இச்சூத்திரங்களில் வைக்கப் பட்டிருக்கும் இறுதி எழுத்துக்கு “இத்” அல்லது “அநுபந்தம்” என்று பெயர். இச்சூத்திரத்தில் இருந்து எடுக்கப் பட்ட ஒரெழுத்தை முதலில் வைத்து, அதையடுத்து “இத்” எனப்படும் ஓரெழுத்தைத் தேவைக்குத் தகுந்தவாறு எடுத்து வைத்து இப்ப்ரத்யாஹார சூத்திரங்கள் அமைக்கப் பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக, முதல் சூத்திரத்தின் முதலெழுத்தான அ-வையும் நான்காம் சூத்திரத்தின் இறுதியில் நிற்கும் “இத்” எனப்படும் எழுத்தான ச்-ஐ அதையடுத்து வைத்து அச் என்னும் ப்ரத்யாஹாரம் அமைக்கப் பட்டிருக்கிறது. அச் என்ற ப்ரத்யாஹாரம் அ-வுக்கும் ச்-க்கும் இடையே காணப்படும் எல்லாவெழுத்துக்களையும் சுட்டும். இது எல்லா உயிரெழுத்துக்களையும் சுட்டுவதற்கு பயன்படுத்தப் படும். இவ்வாறே “ஹல்” என்ற ப்ரத்யாஹாரம் எல்லா மெய் எழுத்துக்களையும், அல் என்ற ப்ரத்யாஹாரம் சம்ஸ்க்ருத மொழியின் எல்லா எழுத்துக்களையும் சுட்டும். சிவ சூத்திரங்களில் இருந்து ஆக்கப் பட்ட 44 ப்ரத்யாஹார சூத்திரங்களை பாணினி தனது இலக்கணத்தில் பயன் படுத்தி உள்ளார்.

 

2. தாது பாடம்

பாணினி தனது இலக்கணத்தில் விகரணங்களையும் (Conjugational Sign) அவைகளுக்குரிய ஓட்டுக்கள், அவைகளை நீக்குதல் ஆகியவைகளைப் பற்றியும் பேசும்போது அவைகளை தாதுக்களின் வகுப்புகள மூலம் குறிப்பிடுகிறார். எடுத்துக் காட்டாக, அதி³ப்ரப்⁴ருʼதிப்⁴ய​: ஸ²ப​: (अदिप्रभृतिभ्यः शपः 2.4.72), ஜுஹோத்யாதி³ப்⁴ய​: ஸ்²லு​: (जुहोत्यादिभ्यः श्लुः 2.4.75), தி³வாதி³ப்⁴ய​: ஸ்²யன் (दिवादिभ्यः श्यन् 3.1.69), ஸ்வாதி³ப்⁴ய​: ஸ்²னு​: (स्वादिभ्यः श्नुः 3.1.73), துதா³தி³ப்⁴ய​: ஸ²​: (तुदादिभ्यः शः 3.1.77), ருதா⁴தி³ப்⁴ய​: ஸ்²னம் (रुधादिभ्यः श्नम् 3.1.78), தனாதி³க்ருʼஞ்ப்⁴ய உ​: (तनादिकृञ्भ्य उः 3.1.79), க்ர்யாதி³ப்⁴ய​: ஸ்²னா (क्र्यादिभ्यः श्ना 3.1.81) ஆகியவைகளில் ஸப், ஸ்லு என்ற விகரணங்கள் சில தாதுக்களுக்குப் பின் நிற்கும்போது மறைவதையும் ஸ்யன் முதலிய விகரணங்கள் குறிப்பிட்ட சில தாதுக்களுக்குப் பின் இணைக்கப் படுவதையும் குறிப்பிடுகின்றன. (1)அதா³தி³, (2) ஜுஹோத்யாதி³, (3) தி³வாதி³, (4) ஸ்வாதி³, (5) துதா³தி³, (6) ருதா³தி³, (7) தனாதி³, (8) க்ரியாதி³, (9)சுராதி³ என்ற தாதுக்களின் வகுப்புகள் உள்ளவை என்பது இச்சூத்திரங்களில் இருந்து தெளிவாகிறது. ப்⁴வாத³யோ தா⁴தவ: (1.3.1) என்ற சூத்திரத்தில் இருந்து ப்⁴வாதி³ என்ற வகுப்பும் இருப்பதாகத் தெரிய வருகிறது. சம்ஸ்க்ருத மொழியில் காணப் படும் தாதுக்கள் அனைத்தையும் அவைகளை அடிச் சொல்லாக மாற்றும் போது அவைகளோடு இணைப்படும் விகரணங்களின் அடிப்படையில் 10 வகுப்புகளாகப் பிரிக்கப் பட்டு தாது பாடத்தில் கொடுக்கப் பட்டுள்ளன. அவைகள் வருமாறு (1) ப்⁴வாதி³ (1035), (2)அதா³தி³ (72), (3) ஜுஹோத்யாதி³ (24), (4) தி³வாதி³ (140), (5) ஸ்வாதி³ (35), (6) துதா³தி³ (157), (7) ருதா³தி³ (25), (8) தனாதி³ (10), (9) க்ரியாதி³ (67), (10)சுராதி³ (441). இவ்வகுப்புகளின் பெயர்களுக்கு வலது புறத்தில் காணப்படும் அடைப்புக் குறிக்குள் காணப்படும் எண், அவைகளின் எண்ணிக்கையைச் சுட்டும். இத்தாதுக்களின் மொத்த எண்ணிக்கை 1970 ஆகும்.

 

3. கணபாடம்

தாதுபாடத்தில் தாதுக்களின் வகுப்பைக் கூறியிருப்பது போல கணபாடத்தில் பெயர்ச்சொற்களை குறிப்பிட்ட ஒரு வரிசைக் கிரமப் படி அமைக்கப் பட்டிருக்கிறது. இது இருவகையில் அமைக்கப் பட்டிருப்பதைக் காணலாம் (1) ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அமைக்கப்பட்ட சொற்கள் (2) பெயர்ச்சொற்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடாமல் அமைக்கப் பட்டவை.

தாதுபாடம், கணபாடம் ஆகிய இரண்டின் ஆசிரியரும் பாணினியா அல்லது இவைகள் வேறு ஒருவரால் எழுதப் பட்டவையாவென்று முடிவுக்கு வராத ஒரு விவாதம் இன்றுவரை நடந்து கொண்டு இருக்கிறது. ஆயினும் இவைகளின் ஆசிரியர் யாராக இருந்த போதிலும் இந்நூல்கள் அஷ்டாத்யாயிக்கு எவ்வளவு முக்கியமானது என்று இங்கு விளக்குவது பொருத்தமாக இருக்கும்.

பாணினி தனது சூத்திரங்களின் தாதுக்களை சுரம் அல்லது இத்-தின் தொடர்பாகத்தான் குறிப்பிட்டிருக்கிறார். இத்தகைய சுரம் பெற்ற தாதுக்கள், இத்-தைக் கொண்ட தாதுக்கள் எவை எவை என்பதையறிய தாது பாடத்தின் உதவியைத்தான் நாட வேண்டி இருக்கும். ஏனென்றால் தாதுபாடத்தில் தான் இவைகளின் பட்டியல் கொடுக்கப் பட்டிருக்கின்றது. இத்தகைய சூத்திரங்களைப் படிக்கும் போது தான் தாது பாடம் பாணினியின் விதிகளைப் புரிந்து கொள்ள எத்துனை முக்கியமானது என்பதை உணர்கிறோம். எடுத்துக் காட்டாக, ஆத்மனே பதவினையை வரையறுக்கும் சூத்திரம் அனுதாத்த சுரமோ அல்லது ங்-ஐ இத்-தாக கொண்டதோவான தாதுக்கள் ஆத்மனே பதமாகுமென்று கூறுகிறது (1.3.12) அனுதாத்த சுரங் கொண்ட தாதுக்கள் ங்-ஐ இத்-தாகக் கொண்ட தாதுக்கள் எவையெவை என்பதையறிய தாது பாடத்தின் துணை தேவையாகிறது.

இதைப் போன்று 4.1.76-லிருந்து தொடங்கி 5-ம் அத்தியாய இறுதி வரையில் தத்தித ஒட்டுக்களைப் பற்றி பாணினி பேசுகிறார். அவ்வமயம் ஒரு குறிப்பிட்ட வகுப்பின் பெயரை மட்டும் தான் பாணினி குறிப்பிடுகிறார். அக்குறிப்பிட்ட வகுப்பினுள் அடங்கும் சொற்கள் எவை எவை என்பதை அறிய கண பாடத்தின் உதவியைத்தான் நாட வேண்டி இருக்கும்.

 

4. உணாதி சூத்திரங்கள்

தாதுக்களுடன் சில குறிப்பிட்ட ஒட்டுக்களை இணைத்துப் பெயரடிச் சொற்களாக்கும் விதிகளைக் கொண்டது இந்நூல். இதன் முதல் சூத்திரம் உண்(-உ) என்ற ஒட்டை சில தாதுக்களுடன் இணைத்து பெயரடிச் சொல்லாக்குவதைப் பற்றிய விதியாக அமைகிறது. இச்சூத்திரத்தில் இருந்து இந்நூல் உணாதி சூத்திரங்கள் என்ற பெயர் பெறுகிறது. காட்டாக க்ரு- என்ற தாதுவுடன் உண்-(உ) இணைக்கப்பட்டு காரு-என்ற சொல்லாக்கப் படுவதை விளக்குகிறது இந்நூலின் முதல் சூத்திரம். பஞ்சபாதி³ “ஐந்து இயல்கள் கொண்டது”, த³ஸ² பாதி “பத்து இயல்கள் கொண்டது” என்று இருவகைகளில் கிடைக்கிறது. இதன் ஆசிரியர் யார் என்றும் முடிவாகக் கூற இயலாது.

 

5. பி²ட் சூத்திரங்கள்

பெயரடிச் சொற்களின் ஒலியின் வடிவம் அவைகள் சுட்டும் பொருட்கள் ஆகியவைகளின் அடிப்படையில் அச்சொற்களின் சுரத்தை நிர்ணயிக்கும் விதிகளைக் கொண்டது இந்நூல். ஸந்தநு அல்லது ஸாந்தநு என்பவரால் இந்நூல் எழுதப் பட்டிருக்கலாம் என்ற கருத்து பொதுவாக நிலவுகிறது. இதன் முதல் விதி பி²ஷ் என்ற சொல்லைக் கொண்ட படியால் பி²ட் என்று இது அழைக்கப் படுகிறது.

 

6. லிங்கானுஸாஸனம்

பெயர்ச் சொற்களின் அமைப்பு அவைகள் சுட்டும் பொருட்கள் ஆகியவைகளின் அடிப்படையில் அச்சொற்களின் பாலை நிர்ணயிக்கும் விதிகளைக் கொண்டது லிங்கானுஸாஸனம் என்ற இந்த நூல். ஆண்பால், பெண்பால், நபும்ஸகம், பெண்பால்-ஆண்பால் (ஸ்திரிபும்சக), ஆண்பால்-நபும்சக (புமான் நபும்ஸக), அவிஸிஷ்ட லிங்க (ஒரு குறிப்பிட்ட பாலைச் சுட்டாத) என்ற தலைப்புகளில் பாலைப் பற்றி விளக்கும் விதிகளைக் கொண்டது இந்நூல். கிட்டத் தட்ட 200 சூத்திரங்களில் இவைகள் விவரிக்கப் பட்டுள்ளன. இத்தலைப்புகள் உணர்த்துகிறபடி, சில சொற்கள் ஒரேயொரு பாலைச் சுட்டுவதாகவும் அதாவது . ஆண்பால், பெண்பால், நபும்ஸகம் என்பனவற்றில் ஏதாவது ஒன்றில் அமைவதாகவும் வேறு சில சொற்கள் ஆண்பால்-பெண்பாலாகவும் அல்லது ஆண்பால்-நபும்ஸகமாகவும் மற்றும் சில இம்மூன்று பால்களிலுமே பயன்படுத்தக் கூடியதாகவும் அமைகின்றன. இதன் ஆசிரியர் யாராக இருக்கக் கூடுமென்பது பற்றிய கருத்து வேற்றுமை காணப் பட்டாலும் இதன் ஆசிரியர் பாணினியாக இருக்க முடியாது என்பது பொதுவாக எல்லோராலும் ஒத்துக் கொள்ளப் பட்ட கருத்து.

 

7. ஸிக்ஷா

இதைப் பாணினீய ஸிக்ஷா என்ற மற்றொரு பெயராலும் குறிப்பிடப் படுவதுண்டு. ஆயினும் இந்நூல் பாணினியால் எழுதப் படவில்லை என்பது பெரும்பாலான ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இது ஒரு ஒலியனியல் நூல்.

 

பாணினி இலக்கணத்தின் கருமொழி (Language of Description)

இந்தோ ஆரிய மொழியின் தொடக்க கால நிலையில் அமைந்திருந்த மொழியின் இலக்கணமே அஷ்டாத்யாயி. பாணினியின் காலத்தில் அவர் வசித்து வந்த இந்தியாவின் வடமேற்கு பகுதியில் உயர்மட்ட வகுப்பினரால் பேசப்பட்ட மொழியின் வர்ணனை இலக்கணம் அஷ்டாத்யாயியென நம்பப் படுகிறது. இம்மொழியை பாணினி பாஷா என்று குறிப்பிடுகிறார். தான் வர்ணிக்கும் மொழியைப் பாணினி சம்ஸ்க்ருதம் என்ற பெயரால் தனது இலக்கணத்தில் எங்குமே குறிப்பிடவில்லை. (முதன்முதலாக சம்ஸ்க்ருதம் என்ற சொல் மொழியின் தொடர்பாகப் பயன்படுத்தியுள்ளதை இராமாயணத்தில்தான் காணலாம்) ஆயினும், பாஷாவின் தனிப்பட்ட வர்ணனையிலக்கணம் தான் அஷ்டாத்யாயி என்று கூறுவது பொருத்தமாகாது. காலத்தால் முற்பட்ட வேதமொழியின் மொழிக்கூறுகள் (சந்த³ஸி). இந்தியாவின் கீழ்பகுதி (ப்ராசாம்), வடபகுதி (உதீ³சாம்) ஆகியவைகளில் காணப்படும் மொழிக்கூறுகள், ஆகியவைகளையும் தனது இலக்கணத்தில் வேறுபாடுகளாகப் பாணினி குறிப்பிடுகிறார். இவைகளைத் தவிர தனது காலத்துக்கு முற்பட்ட காலத்து இலக்கண நூலார்களின் கருத்துக்களையும் மொழிக் கூறுகளின் வேறுபாடுகளாகப் பாணினி குறிப்பிட்டுள்ளார்.

அஷ்டாத்யாயிக்கு முன்பும் பல இலக்கண நூல்கள் இருந்தனவென்பதற்கு உட்சான்றுகள் இவ்விலக்கண நூலிலேயே கிடைக்கின்றன. தனது காலத்துக்கு முன் எழுந்த இலக்கண நூல்களில் காணப்படும் மொழிக்கூறுகளின் வேறுபாடுகளைப்பற்றி பேசும்போது பாணினி அந்தந்த இலக்கண நூலார்களின் பெயரைச் சுட்டி அவரது கருத்துப் படி இக்குறிப்பிட்ட சொல் இவ்வாறான வடிவம் பெறுமென்று கூறுகிறார். அவர்களின் பெயர்கள் வருமாறு ஆபிஸலி (6.1.91), கஸ்யப (1.2.15; 8.4.67), கா³ர்க்³ய (7.3.99, 8.3.20; 4.6.7), கா³லவ (6.3.61; 7.1.74), சாக்ரவர்மன் (6.1.130; 4.1.70), பா⁴ரத்³வாஜ (7.2.63), ஸாகடாயன (3.4.111; 8.3.; 4.50), ஸாகல்ய (1.10.16; 6.1.27; 8.3.19), சேனக (5.4.112), ஸ்போடாயன (6.1.23). பதஞ்ஜலி தனது மஹாபாஷ்யத்தில் காஸக்ருத்ஸ்ன (1.12.5-6) என்ற மற்றொரு இலக்கண நூலாரையும் குறிப்பிடுகிறார். ஆயினும் இவர்களுடைய இலக்கண நூல்களில் ஒன்று கூட இப்போது கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.

(தொடரும்…)

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அஷ்டாத்யாயி நூற்தொகுப்பின் முதற்பகுதியில் பதிப்பிக்கப் பட்டுள்ள முன்னுரை இது. வடமொழிக்கு இலக்கணம் வகுத்த பாணினி பற்றியும், அவரது இலக்கண நூலான அஷ்டாத்யாயி குறித்தும் தெரிந்துகொள்ள மிகவும் உதவும் கட்டுரை இது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கு நன்றி.

4 Comments பாணினியின் அஷ்டாத்யாயி – 1

  1. அத்விகா

    நல்ல இனிமையான தகவலை தொகுத்து அளித்திட்ட சங்கதம் தளத்துக்கு மிக்க நன்றி. இதன்விலை எவ்வளவு எப்படி வாங்கவேண்டும் என்ற விவரங்களையும் தந்திருந்தால் இன்னமும் நன்றாக இருக்கும். நன்றியுடன்.

  2. Pingback: பாணினியின் அஷ்டாத்யாயி – 2 | Sangatham

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)