அநேகமாக தெரிந்தது தான்!

சம்ஸ்க்ருதம் கற்றுக் கொள்ளுகையில் சில சொற்களை படிக்கும் பொது ஒரு வியப்பு ஏற்படுகிறது. நாம் சாதாரணமாக உபயோகிக்கும் ஒரு சொல் சம்ஸ்க்ருதத்திலும் இருந்து, அம்மொழியில் அதன் பயன்பாடு என்ன, எப்படி, தமிழில் அந்த சொல்லின் பயன்பாடு எப்படி என்று தெரியும் போது ஏற்படும் வியப்பே அது.

உதாரணமாக ஒன்று என்பதற்கு உரிய சம்ஸ்க்ருத சொல் ஏகம் என்பதாகும். ஒரு குழுவில் எல்லாரும் ஒரு முடிவுக்கு ஒப்புக் கொண்டால் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப் பட்டது, ஏகமனதாக ஏற்கப் பட்டது என்று சொல்கிறோம். இங்கே ஒன்று என்ற பொருளில் வரும் “ஏகம்” என்பதுடன் மற்ற சொற்களை சேர்த்துக் கொள்வது சாதாரணமாக நிகழ்கிறது. ஏகதேசமாக முடிவெடுத்தார் என்பது யாரையும் கேட்காமல் தானே தனியாக முடிவெடுத்தார் என்று அர்த்தம் – இதிலும் ஏகம் இருக்கிறது.

ஒன்று என்று இன்னும் சில இடங்களில் எண்ணிக்கையுடன் கூடிய வார்த்தைகள் அமைக்கப் படுகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று அரசியல் வாதிகள் முழங்குவர். இதில் ஏக அதிபத்யம் என்பதே ஏகாதிபத்யம் என்று எதிர்ப்போர் இல்லாத ஒரே பேரரசாக விளங்குகிறது என்று பொருள்படும்.

அடுத்து தமிழில் அதிகமாக பயன்படும் சொல் அனேகம் என்ற சொல் ஆகும். அநேகமாக மழைபெய்யும் போல இருக்கிறது என்று சொல்லக் கேட்கிறோம். உண்மையில் சம்ஸ்க்ருதத்தில் அநேகம் என்பது பன்மை, எண்ணற்ற தன்மை என்ற அர்த்தத்தில் அமைந்துள்ளது. ஆனால் நாம் வழக்கத்தில் “பெரும்பாலும்” என்ற பொருள் படும் படி தமிழில் உபயோகிக்கிறோம்.

ஏகாந்தமாக இருக்கிறார் என்கிறோம். தனி ஒருவராக இருக்கிறார் என்று சொல்வதற்கு இவ்வாறு ஏகாந்தம் என்று சொல்கிறோம்.

ஏகம் அல்லது ஒன்று என்ற சொல், எங்கெல்லாம் பயன்படுத்தலாம் என்னென்ன அர்த்தத்தில் பயன்படுத்தலாம் என்று வடமொழி இலக்கணத்திலேயே அழகான செய்யுள் மூலம் விளக்கப் பட்டுள்ளது.

एकोऽन्यार्थे प्रधाने च प्रथमे केवले तथा।
साधारणे समानेऽल्पे संख्यायां प्रयुज्यते ।।

ஏகோ(அ)ந்யார்தே ப்ரதானே ச ப்ரதமே கேவலே ததா|
ஸாதாரணே ஸமானே(அ)ல்பே ஸங்க்யாயாம் ப்ரயுஜ்யதே ||

ஒன்று என்பதற்கு வேறொரு பொருள் என்று பிரித்து வைக்க, பிரதானமான பொருள், முதன்முதல் பொருள், தனித்த பொருள், பொதுவானது, சமமானது, எண்ணிக்கை என்று எழுவகை அர்த்தம் கொடுக்கப் பட்டிருக்கிறது.

இன்னொரு ஆச்சரியமான சொல் ஐக்கியம் என்பது. ஒன்று பட்ட தன்மை என்று சம்ஸ்க்ருதத்தில் அர்த்தம். ஐக்கிய நாடுகள் சபை (ஐநா சபை) என்பது ஒருங்கிணைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதில் ஐக்கியம் என்பது ஏகம் என்பதில் இருந்தே வருகிறது.

பழைய நாளில் ஒரு முகப் படுத்திய மனதுடன் இருப்பதை ஏகாக்கிர சிந்தையுடன் இருப்பதாக கூறுவார். ஒரு தடவை சொன்னவுடன் புரிந்து கொண்டு மனதில் நிறுத்திக் கொள்ளும் மாணவனை ‘ஏக சந்த க்ராஹி’ என்று கூறுவர். ஓம் என்கிற மந்திரச் சொல்லை ஏகாக்ஷர மந்திரம் அல்லது ஓரெழுத்து மந்திரம் என்றும் கூறுவர்.
‘அநேகமாக’ இன்னும் கூட சில பயன்பாடுகள் இருக்கக் கூடும்.

சரி, வழக்கு தமிழில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று சொல்ல இடக்கரடக்கலாக ‘ஒன்றுக்கு’ என்று கூறுவது உண்டு. சம்ஸ்க்ருதத்தில் ‘இதற்கு’ எப்படிக் கூறுவார்கள்? ‘அல்ப சங்க்யை’ என்று சொல்லுவார்கள். அல்ப என்றால் ரொம்ப குறைவான, பொருட்படுத்த தகாத, சிறிய என்று அர்த்தம். சங்க்யை என்றால் எண்ணிக்கை. பொருட்படுத்த தேவை இல்லாத எண்ணிக்கை – ஒன்று!

2 Comments அநேகமாக தெரிந்தது தான்!

  1. அத்விகா

    நமது தளத்தில் கட்டுரைகளை எழுதுபவர்களின் பெயர்கள் பல கட்டுரைகளிலும் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் தமிழில் இவ்வளவு தெளிவாக எழுதும் கட்டுரையாளர்களுக்கு நமது பாராட்டுக்கள் உரித்தாகுக. உங்கள் பணி என்றும் தொடர எல்லாம் வல்ல சக்தி மைந்தனாம் முருகப்பெருமான் அருள்புரிவான்.

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)