சமஸ்க்ருத இலக்கண சொற்கள்

அகர்மக க்ரியா (अकर्मक क्रिया) செயலற்ற வினை (intransitive verb). ஒரு வினையில் செயலும் (action), செயலின் பயனும் செயலாற்றுபவரிடமே இருப்பதால் (फलव्यापारयोरेकनिष्ठतायामकर्मक:) அங்கே செயப்படு பொருள் (object) என்று எதுவும் இருப்பதில்லை. எவை எல்லாம் அகர்மக க்ரியை என்பதற்கு ஒரு ஸ்லோகமும் உண்டு:

वृद्दिक्षयभयजीवितमरणं लज्जाशङ्कास्थितिजागरणम् ।
शयनक्रीडारुचिदीप्त्यर्थं धातुगणं तमकर्मकमाहू ॥
(பாடபேதம்: लज्जासत्तास्थितिजागरणं)

உதா: शिशु: शेते

அதிதே³ஸ²: (अतिदेश:) உபயோகத்தில் நீட்சி; (extended application). பாணிநீய வ்யாகரணத்தில் मत्, वत् போன்ற ஒட்டுகளால், ஒன்றின் பண்பு இன்னொன்றுக்கு நீட்டிக்கப் படுகிறது. இவை அதிதேஸ ஆகும்.
உதா: लोटो लाङ्वत्
அதி⁴கரண (अधिकरण) பேசப்படும்/ஆராயப்படும் விஷயம்;
அதி⁴கார சூத்ர: (अधिकार सूत्र) ஒன்றோ அதற்கு மேற்பட்ட சொல்லில் அமைந்துள்ள இலக்கண விதி. இவ்விதியில் இடம் பெறும் வார்த்தைகள் தானே எந்த பொருளும் தராது. ஆனால் இதற்கு பிறகு வரும் விதிகளுடன் இணைக்கப் படுவதால் பொருள் மிகுந்தது ஆகும். உதா: प्रत्यय:, परश्च
அனுதா³த்த (अनुदात्त) வைதிக சம்ஸ்க்ருதத்தில் எழுத்துக்களை உச்சரிக்கும் ஒரு முறை.
அநுநாஸிக (अनुनासिक) ஒரே சமயத்தில் வாயினாலும் மூக்கினாலும் உச்சரிக்கப் படும் எழுத்துக்கள் உதா: अं
அனுப³ந்த⁴ (अनुबन्ध) இலக்கண விதிகளை அமைப்பதற்காக சொற்களின் முன்போ பின்போ சேர்க்கப் படும் எழுத்துக்கள்
அனுபந்தம் எனப்படும்.
அனுவ்ருʼத்தி (अनुवृत्ति) அஷ்டாத்யாயி இலக்கண நூலில் ஒரு இலக்கண விதியில் இருந்து ஒரு சில வார்த்தைகள் அதற்கு அடுத்த அடுத்த விதிகளுடன் சேர்க்கப் படுவது அனுவ்ருத்தி என்று அழைக்கப் படுகிறது. இந்த வார்த்தைகளின் உபயோகம் கங்கை பிரவாகம் போல (गङ्गास्रोतोवत्) தடையின்றி வரிசையாக அடுத்த விதிகளுக்கு உபயோகப் படலாம். அல்லது தவளைப் பாய்ச்சலாக (मण्डूकप्लुत्यानुवृत्ति) ஒரு விதியில் இருந்து வார்த்தைகள் அடுத்த சில விதிகள் தாண்டி வேறொரு விதி வாக்கியத்தில் உயயோகப் படலாம். சில அரிய நிகழ்வுகளாக ஒரு விதியின் சில வார்த்தைகள் பின்னோக்கி சென்று இதற்கு முன்பு கூறப்படும் விதியிலும் இணையலாம். (सिंहावलोकनम् – சிங்கம் திரும்பிப் பார்ப்பது போல).
அனுஸ்வரம் (अनुस्वर) தேவநாகரி லிபியில் ஒரு சொல்லில் ங், ஞ், ண் போன்ற அநுநாஸிக எழுத்துக்களை குறிக்க, அதற்கு முதல் எழுத்தின் மேலே புள்ளி வைப்பது வழக்கம். இது அனுஸ்வரம் எனுப்படுகிறது.
அந்யோந்யாஸ்²ரய (अन्योन्याश्रय) ஒரு விதியை புரிந்து கொள்ள இன்னொரு விதியும் அந்த விதியை புரிந்து கொள்ள முதல் விதியும் தேவைப் படுமானால் அது அந்யோந்யாஸ்²ரய எனப்படும். இது ஒரு தோஷம்.
அபா⁴வ (अभाव) மறைந்து போதல், இல்லாமல் ஆதல்
அல்பப்ராண(अल्पप्राण) உச்சரிக்க குறைந்த அளவு மூச்சுக் காற்றுத் தேவைப்படும் எழுத்துக்கள்
அவக்³ரஹ(अवग्रह) வேத சம்ஹிதைகளில், பதபாடப் பகுதியில் குறிப்பிடப் பட்டுள்ளபடி, சந்தி விதிகளின் படி சேர்ந்த சொற்கள் பிரிக்கப் படுவது அவக்³ரஹ எனப்படும்.
அவச்சே²த³ (अवच्छेद) குறை, ஒரு குறிப்பிட்ட அளவிலான பயன்பாடு.
அவயவ (अवयव) ஒரு பகுதி, அங்கம்
அவஸான (अवसान) நிறுத்தம், pause, termination
அபப்⁴ரம்ʼஸ² (अपभ्रंश) சம்ஸ்க்ருத வார்த்தைகளின் தேய்ந்த வழக்கு; வட்டார வழக்குகள் போன்றவை.
அயோக³வாஹ (अयोगवाह) அநுஸ்வரம், விஸர்க்கம், ஜிஹ்வாமூலியம் (ஹ்க..), உபத்மாநியம் போன்றவை பொதுவாக அயோக³வாஹ என்று அழைக்கப் படுகின்றது. இவ்வெழுத்துக்கள், வேறொரு எழுத்தைச் சார்ந்தே ஒலிக்கும்.
அனுஸா²ஸன (अनुशासन) பாரம்பரிய வழியில் உள்ள குறிப்பு – வழிமுறை. ஒரு விஷயத்தை ஆராய்தல்.
அந்வய (अन्वय) அந்வயம் என்பது ஒரு செய்யுள் அல்லது வாக்கியத்தை புரிந்து கொள்ள மேற்கொள்ளும் முயற்சி. இது தண்டாந்வயம், கண்டாந்வயம் என்று இரு வகை உண்டு. தண்டாந்வயம் என்பது வாக்கியத்தில் உள்ள சொற்களின் வரிசை முறையிலேயே அர்த்தத்தை புரிந்து கொள்ளுதல். கண்டாந்வயம் என்பது வாக்கியத்தில் உள்ள சொற்களை இடம் மாற்றி அர்த்தத்தை புரிந்து கொள்ளுதல்.
அபேக்ஷா (अपेक्षा) ஒரு விஷயத்தை பொருத்த வரை உள்ள விளக்கம்.
அபவாத³ (अपवाद) ஒரு விதிக்கு எதிராக விதிவிலக்கு சூத்திரம் அபவாதம் எனப்படும். விதிவிலக்கிற்கு விதி விலக்கு ஏற்படுவதும் உண்டு. அது அபவாதப்ரதிஷேதம் எனப்படும்.
அவ்யய (अव्यय) ஆண்பால், பெண்பால் போன்ற எந்த பாலினமாக இருந்தாலும், எந்த காலத்திலும், எந்த வேற்றுமையிலும் மாறாமல் இருப்பது அவ்யயம் ஆகும். இதற்கு காசிகாவில் ஒரு விளக்கம் ஸ்லோக வடிவில் உள்ளது:

सदृशं त्रिषु लिङ्गेषु, सर्वासु च विभक्तिषु |
वचनेषु च सर्वेषु यन्न व्येति तदव्ययम् ।
ஆக்²யாத (आख्यात) தாது (வேர்ச்சொல்) அல்லது வினைச்சொல்
ஆத்மநேபதி³ (आत्मनेपदि) வினைச்சொற்களில் ஒரு வகை. மற்றொரு வகை பரஸ்மைபதி. ஆத்மநேபத வினைகளில், அந்த வினையின் பயன் செய்பவரையே சேருவதாக இருக்கும் என்று கூறப் படுகிறது.
ஆதே³ஸ² (आदेश) ஒரு சொல்லின் இடத்தில் அதற்கு பதிலாக வேறொரு சொல் பயின்று வருவது ஆதேசம் ஆகும்.
ஆக்²யாத (आख्यात) தாது (வேர்ச்சொல்) அல்லது வினைச்சொல்
ஆஸ்ய (आस्य) உடலில் சொல் உருவாகும் இடம் (தொண்டை, மூக்கு போன்றவை)
இத் (इत्) பேச்சு மொழியில், வழக்கத்தில் இல்லாத வகையில் இலக்கணத்தை இயற்றும் வசதிக்காக ஒரு சொல்லுடன் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் சேர்க்கப் படும் போது அவை இத் எனப்படும்.

உபதே³ஸ² (उपदेश)
முதன் முதலில் ஒரு ஆசிரியரால் உபதேசிக்கப் பட்டது. சம்ஸ்க்ருத இலக்கணத்தில் பாணினி, காத்யாயனர், பதஞ்சலி, ஆகிய மூன்று முனிவர்களும் கூறியவை உபதேசம் எனப்படுகிறது.
प्रत्यया शिवसूत्राणि आदेशा आगमास्तथा |
धातुपाठो गणपाठ उपदेशाः प्रकीर्तिताः ||
உபஸர்க³ (उपसर्ग) சொற்களின் முன்னால் சேர்க்கப்படும் சிறிய முன்னொட்டு (prefix). உபசர்க்கங்கள், வேர்ச்சொல்லின் அர்த்தத்தில் இருந்து முற்றிலும் மாறான அர்த்தத்தையும் கூட தரக்கூடும். இதை விளக்க கீழ்க்கண்ட ஸ்லோகம் பொதுவாக குறிப்பிடப் படுகிறது.
उपसर्गेण धात्वर्थो बलादन्यत्र नीयते।
प्रहार-आहार-संहार-विहार-परिहार वत् ।।

உபஸர்கே³ண தா⁴த்வர்தோ² ப³லாத³ன்யத்ர நீயதே|
ப்ரஹார-ஆஹார-ஸம்ʼஹார-விஹார-பரிஹார வத் ||

உப⁴யபதி³ன் (उभयपदिन्) ஆத்மநேபதம் மற்றும் பரஸ்மைபதம் இரண்டிலும் இடம் பெரும் வினைச்சொற்கள் உபயபதம் எனப்படும்.
உத்ஸர்க³ (उत्सर्ग) பொது விதி, இதற்கு விதி விலக்கு அபவாதம் எனப்படுகிறது.
உபமா (उपमा) ஒப்பீடு செய்யத் தகுந்த ஒரு உதாரணப் பொருள்
உபமேய (उपमेय) ஒப்பீடு செய்யப் படும் பொருள்
உபலக்ஷண (उपलक्षण) குறிப்பால் உணர்த்துதல்
ஏகாதே³ஸ² (एकादेश) இரண்டு எழுத்துக்களுக்கு பதிலாக ஒரே எழுத்து (ஏகாதேசமாக) உபயோகிக்கப் பட்டால் அது ஏகாதேசம் ஆகும்.

8 Comments சமஸ்க்ருத இலக்கண சொற்கள்

  1. தேவ்

    சிறந்த தொகுப்பு, பாராட்டுகள்.
    புதிய பதிவுகளை அன்பர்கள் உடனுக்குடன்
    தெரிந்துகொள்ள வசதி இணைக்கப்பட்டால்
    நல்லது. இதில் வசதி உள்ளதா ?

    ’அனுஸா²ஸன, ஆதே³ஸ², ஆதே³ஸ²’ இவற்றை
    ’அநுஶாஸந , ஆதே₃ஶ, ஆதே₃ஶ’ என்று sub scriptஆக
    எழுத வசதி உள்ளது [அக்ஷரமுக]. இதனால் வரி நீளம்
    குறைய வாய்ப்புள்ளது.

    http://www.virtualvinodh.com/aksharamukha

    ‘ன’ – பதிலாகத் தந்நகார ‘ந’ பயன்படுத்துவது
    முறை என்பர் பெரியோர்

    அன்புடன்
    தேவ்

  2. B.BALAKRISHNAN

    RESPECTED SIRS,
    Please see that the sanskrit books sellers like motilal banaridas and others donot block, spoil,and sabotage the internet download e books.Many google good foreign authors e books could not be download due sites blocked due to vested interests which make download futile.From Universal librariaries e books downloaded could not be read as it is an attachment or due to file damage.
    Kindly look into this matterand see that all foreign authors sanskrit books could be downloaded.
    RegARDS,
    B.Balakrishnan.

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)