இருபத்தொன்றாம் நூற்றாண்டில் சங்கதம்

இந்திய மொழிகளின் செறிவுக்கு மிகவும் உதவிய காரணி என்று சிந்தித்துப் பார்த்தால் சங்கதத்தின்laptop_ganesh பங்களிப்பு மகத்தானது. சங்கதத்தில் அமைந்த காவியங்களின் சிந்தனைகள், அழகியல், இலக்கண அமைப்பு, நீதிகள், சாத்திரங்கள் என்று பலவற்றின் பாதிப்பு ஏனைய மொழிகளில் இருப்பது மறுக்க முடியாதது. ஆனால் சங்கதத்தின் இன்றைய நிலை திருப்திகரமாக இல்லை – ஆதரவு அற்ற நிலையில் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இப்போது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில், அதாவது முதல் பத்து ஆண்டுகளுக்குள் இருக்கிறோம்.   இந்த நூற்றாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நேரத்தில், சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்த நிலையையும் இப்போதைய நிலையையும் ஒப்பிட்டுபார்ப்பது அவசியம். பொது வாழ்வில் நாம் அரசியல் சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகள் கடந்து விட்டன; நாடு  அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியை அபரிமிதமாக அடைந்துள்ளது.  முன்னேறும் நாடுகள் வரிசையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இதற்கு மாறாக இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலோ சுதந்திரத்துக்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் நம் நாடு அடிமைப் பட்டுக் கிடந்தது.

நாட்டின் இன்றைய நிலை நம்மை பெருமிதமும் நிம்மதியும் கொள்ளச் செய்தாலும், இந்த இரண்டு காலகட்டத்தையும் ஒப்பிடும் பொது சங்கதத்தின் நிலை உற்சாகமளிக்கக் கூடியதாக இல்லை. முதலில் தோன்றும் வித்தியாசம், சென்ற நூற்றாண்டில் சம்ஸ்க்ருத துறையில் மாபெரும் அறிஞர்கள் என்று சொல்லக் கூடிய அளவில் பலர் இருந்தார்கள். சம்ஸ்க்ருத பேரறிஞர் ஸ்ரீ.R.G. பண்டார்கர் அவர்கள் நினைவாக பூனாவில் 1917-ல் துவங்கப் பட்ட பண்டார்கர் கிழக்கத்திய ஆராய்ச்சிக் கழகம் [Bhandarkar Oriental Research Institute] சர்வதேச அளவில் பல ஆராய்ச்சிகளை முதன்மைப் படுத்தியது.

பின்னர் இதே ஆராய்ச்சிக் கழகம் எண்பத்தி ஒன்பதாயிரத்துக்கும் மேலான ஸ்லோகங்கள் கொண்ட  மகா பாரதத்தை [The Critical Edition of MahaBharatha]  பேராசிரியர் S.V. சுக்தாங்கர் போன்ற சம்ஸ்க்ருத அறிஞர்களை கொண்டு ஏறத்தாழ நாற்பதாண்டுகால முயற்சியில் (1919 – 1966) பத்தொன்பது வால்யூம்களாக வெளியிட்டது. இந்திய அரசால் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது அளித்து கவுரவிக்கப் பட்ட ஸ்ரீ. P.V கானே இருந்தார். தனி மனிதராகவே தர்ம சாத்திரங்களின் வரலாற்றை தொகுத்து மிகப் பெரிய ஒன்றாக வெளியிட்டார்.

மைசூர் கிழக்கத்திய ஆராய்ச்சிக் கழகத்தில் [Mysore Oriental Research Institute] ஓலைச் சுவடிகளின் துணை கொண்டு கௌடில்யரின் அர்த்த சாத்திரத்தை பண்டிட் ஷியாமா சாஸ்திரியார் வெளியிட்டார். தனிமனிதராகவே சபரரின் ஜைமினி சூத்திர பாஷ்யத்தையும், நியாய சூத்திர பாஷ்யத்தையும் வெளியிட்டார் பண்டிட் கங்கானாத் ஜா [Ganganath Jha]அவர்கள். சம்ஸ்க்ருத கவிகளின் வரலாற்றையும், இந்திய தத்துவ வரலாற்றையும்  S.K Dey மற்றும் S.N. தாசகுப்தா என்ற இரு பேராசிரியர்கள் முறையே வெளியிட்டார்கள்.

இவைகளெல்லாம் இன்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதார நூல்களாக விளங்குகின்றன. மேலும் பல கிழக்கத்திய ஆராய்ச்சி கழகங்கள் பரோடாவிலும், சென்னையிலும், கல்கத்தாவிலும், மைசூரிலும், திருவனந்தபுரத்திலும் என்று நாடெங்கும் பல பண்டிதர்களின் பெருமுயற்சியால் Calcutta Sanskrit Series, Gaekwad Sanskrit Series போன்ற முக்கியமான சம்ஸ்க்ருத நூல்கள் அதற்கு முன் வெளியிடப்படாத அளவில் பதிப்பிக்கப் பட்டன. இதில் வருத்தம் தரும் செய்தி என்னவெனில், இவற்றிலேயே பல நூல்கள் இன்று அரிதாகி விட்டன.

இருபதாம் ஆண்டின் கால் நூற்றாண்டு துவக்கத்தில் பல பாராம்பரிய சாத்திர அறிஞர்களும் இருந்தனர். பீகாரில் புகழ்பெற்ற தர்மதத்த ஜா (Dharmadutta Jha)  போன்ற நியாய வைசேஷிக அறிஞர்கள் இருந்தார்கள். அனந்த கிருஷ்ண சாஸ்த்ரி, சுப்ரமண்ய சாஸ்த்ரி போன்ற அறிஞர்கள் வாரணாசியில் இருந்தார்கள். இவர்களது அத்வைத – பூர்வ மீமாம்ச உரைகள் புகழ்பெற்றவை. கேரளாவில் ராமவர்மா பரிக்ஷிட் போன்ற நியாய அறிஞர்கள் இருந்தார்கள். நியாய சாத்திரங்களில் தினகரீயம் போன்ற  உரைகளை வெளியிட்டார்கள். இவர்களைப் போல பலர் ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும் இருந்தார்கள். இவர்கள் சம்ஸ்க்ருத மொழியின் உயிர்ப்பும், வளர்ச்சிக்கும் மட்டும் அல்லாது பல சாத்திர துறைகளையும் பெருமளவு வளர உதவினார்.

இவ்வாறு சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்த நிலைக்கும், இன்றைய நிலைக்கும் ஒப்பிட்டு பார்த்தால் பெரும் ஏமாற்றமே ஏற்படுகிறது. இன்று இந்திய தேசமெங்கும் தேடிப்பார்த்தாலும் இது போன்ற சமஸ்க்ருத துறை வல்லுனர்கள் கிடைப்பது அரிது. வெகு சிலரே உள்ளனர். அவர்களும் வயதானவர்கள். நாம் அதிகம் எதிர்பார்க்கக் கூடிய நிலையில் அவர்கள் இல்லை. இன்றும் தொடர்ந்து இயங்கி வரும் சம்ஸ்க்ருத ஆராய்ச்சிக் கழகங்கள் முன்போல் புதிய நூல்களையோ ஆராய்ச்சிகளையோ மேற்கொள்ளும் நிலையில் இல்லை. இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லலாம். ஒன்று பொருளாதாரமின்மை மற்றொன்று சம்ஸ்க்ருத கல்வியறிவும் அர்பணிப்பும் கொண்டு  பணியாற்றும் ஊழியர்கள் இல்லாமை.

பல சம்ஸ்க்ருத ஆராய்ச்சிக் கழகங்கள் மாநில அரசுகள் மற்றும் மாநில பல்கலைக் கழகங்களின் கீழ் இயங்குகின்றன. துரத்ருஷ்டவசமாக மாநில அரசுகளும் சரி, பல்கலைக் கழகங்களும் சரி இவற்றில் ஆர்வம் காட்டுவது இல்லை. மற்றதுறைகளை ஒப்பிடும்போது, சம்ஸ்க்ருத துறையில் குறைந்த பட்ச தகுதி பெற்ற கல்வி சார்ந்த/சாராத ஊழியர்களை பணியமர்த்தவும், நூலகங்களில் அறிய சுவடிகள்  புத்தகங்கள் இவற்றை பாதுகாக்கவும் தேவைப் படும் பணம் குறைவு தான். ஆனால் அரசுகளும் பல்கலைக் கழகங்களும் மிகுந்த ஏமாற்றம் அளிக்கும் வகையில் அலட்சியம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையும் கொள்வதற்கில்லை.

இதில் மத்திய அரசால் சமீபத்தில் அமைக்கப்பட்ட  National Manuscripts Mission அமைப்பு சுவடிகளை ஆவணங்களை கணக்கெடுத்து தொகுப்பதும், அவற்றை பாதுகாக்க உதவுவதும் உண்மைதான். ஆனால் சம்ஸ்க்ருத ஆராய்ச்சிக் கழகங்களில் காலியான இடங்களில் ஊழியர்களை பணியமர்த்துவது மாநில அரசு மற்றும் பல்கலைக் கழகங்களின் பொறுப்பில் இருக்கிறது. இந்த விஷயத்தில் இவற்றின் அலட்சியப் போக்கு கவலை கொள்ள வேண்டிய ஒன்று.

வரலாற்றில் நமது நாட்டின் மீது படையெடுத்து வந்த பலர், நாலந்தா – தக்ஷசீலம் போன்ற  பல அறிய நூல்களை கொண்டிருந்த பெரிய நூலகங்களை தீயிட்டு கொளுத்தி சாம்பலாக்கினர் என்று கேள்விப் படுகிறோம். ஆக இந்த நாடு மதிப்பு மிக்க அறிவுக் களஞ்சியங்களை வெகு நாள் முன்பே இழந்துவிட்டிருக்கிறது. இப்போது காட்டும் அலட்சியம் ஒன்றும், அந்த படையெடுப்பாளர்கள் திடீரென்று விளைவித்த நாசத்தை விட கொடுமையானது இல்லை என்றாலும் இதுவும் இந்த கல்வி அமைப்புகளின் மரணத்துக்கு மிகுந்த வலியுடன் கூடிய மெதுவான வேகத்தில் இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

இருபதாம் நூற்றாண்டின் முடிவிலும், இந்த நூற்றாண்டின் துவக்கத்திலும் சம்ஸ்க்ருத கல்வியில் நிகழ்ந்த சம்ஸ்க்ருத ஆர்வலர்கள் மகிழக் கூடிய ஒரு வளர்ச்சி என்பது சம்ஸ்க்ருத பல்கலைக் கழகங்கள் நிறுவப் பட்டதுதான். சென்ற நூறாண்டின் துவக்கத்தில் ஒரே ஒரு சமஸ்க்ருத பல்கலைக் கழகம் மட்டுமே இருந்து வந்தது – அது வாரணாசியில் இன்றும் இயங்கி வரும் சம்பூர்ணானந்தா பல்கலைக் கழகம். பின்பு பீகாரில் தர்பங்கா பல்கலைக் கழகம் துவங்கப் பட்டது. இவற்றில் தகுதியுள்ள பல ஆசிரியர்கள் இருந்து, சம்ஸ்க்ருத கல்வியில் சிறந்த பல அறிஞர்களை உருவாக்கினார்கள். இப்போது, கடந்த சில இருபது இருபத்தி ஐந்து வருடங்களுக்குள் மேலும் பத்து பல்கலைக் கழகங்கள் உருவாக்கி விட்டன.

இது மட்டும் அல்லாது பல பல்கலைக் கழகங்கள் முதுகலை சம்ஸ்க்ருத துறைகளை உருவாக்கி வருகின்றன. ஆனால் இந்த நூற்றாண்டில் சம்ஸ்க்ருத வளர்ச்சி பற்றி பேசும்போது, இவையெல்லாம் சம்ஸ்க்ருத ஆராய்ச்சியில் புதுமைகளை கொணர போதுமானது தானா என்பதும், இவைகளின் நடவடிக்கை திருப்திகரமானது தானா என்பதும் முக்கியமாக எழும் கேள்விகள். இவற்றில் பலவும் போதுமான குறிக்கோளும், வழிமுறைகளும் கொண்டிருப்பதாக தோன்றவில்லை. இவற்றில் சில மிக மோசமான நிலையில் உள்ளன. இவற்றிலிருந்து அடிப்படையாக எதிர்பார்க்கப் படும் அளவில் கூட கல்விப்பணிகள் நடைபெறுவது இல்லை.

சில சம்ஸ்க்ருத பல்கலைக் கழகங்கள் மாணவர்களை அதிக அளவில் ஈர்ப்பதற்காகவும், பொருளாதாரத்தை ஏற்படுத்தவும், சம்ஸ்க்ருதத்துக்கு  சற்றும் சம்பந்தமில்லாத பாடத்திட்டங்களை துவக்குகிறார்கள் – இதனால் அவர்கள் சம்ஸ்க்ருத பல்கலைக் கழகங்களாக செயல்படுவதே கேள்விக் குரியதாக ஆகும் அபாயமும் இருக்கிறது.  மீதமுள்ள சம்ஸ்க்ருத பல்கலைக் கழகங்களிலும், சாத்திரங்களை முதுகலையில் முக்கிய பாடங்களாக கொடுத்தாலும், வரலாறு – கணிதம் போன்ற மற்ற பாடங்களையும் சேர்த்தே மாணவர்கள் படிக்க வேண்டியுள்ளது. இதனால் முதுகலையில் கடும் முயற்சியால்  சாத்திரத் துறையில் அடிப்படை அறிவு பெறுவதற்குரிய நிலையில் கூட மாணவர்கள் இல்லை. இதனால் பாரம்பரிய பின்னணி கொண்ட ஒரு சிலரைத் தவிர ஏனைய பெரும்பான்மையான மாணவர்கள் சம்ஸ்க்ருத உயர்கல்வியின் பயனைப் பெறுவதே இல்லை.

ஆகையால், சரியான அடித்தளமின்றி இருக்கும் இதே மாணவர்கள் பின்னர்  Ph.D. பட்டத்துக்கும் பதிவு செய்யும்போது, அவர்களது ஆராய்ச்சிகள் தரம் குறைந்து காணப்படுகின்றது. ஆனால், பாரம்பரியமாக சாத்திரங்களை கற்றவர்கள், இதே முதகலை பட்டங்களை பயின்றிருந்தாலும், அவர்களால் நல்ல ஆராய்ச்சிகளை செய்ய முடிகிறது. ஆனால் அவர்கள் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள். இப்போது பயிலும் பட்டதாரிகளின் கையில்தான் சம்க்ருதத்தின் வருங்காலம் இருக்கிறது எனும்போது, மேலே சொன்ன கல்வியியல் குறைபாடுகளை களைய வேண்டியது மிக அவசியமாகிறது.

இதற்கு ஒரு தீர்வு என்னவெனில் முதுகலை பட்டங்களுக்கு பதிவு செய்யும் மாணவர்களை, முதலில் சம்பந்தப்பட்ட கல்வித்துறையில் மூன்று மாதங்களுக்கு நல்ல பயிற்ச்சி கொடுத்து, பின் அவர்கள் அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அனுமதிக்க வேண்டும். இது சம்ஸ்க்ருத கல்வித் துறையில் உயர்ந்த தரத்தை பேண முடியும். உயர்கல்விக்கு உசிதமாக பல்துறை கல்வியை (inter-disciplinary courses) அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

பல அரசு-சார்பற்ற நிறுவனங்கள் சம்ஸ்க்ருத வளர்ச்சிக்கு உதவ முன்வந்திருப்பது நிம்மதி தரக்கூடிய விஷயம். இவற்றில் முன்னோடியாக சம்ஸ்க்ருத பாரதி செயல்பட்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன் இந்திய அரசால் சம்ஸ்க்ருதம் தொடர்பான பல கொள்கைகளை நடைமுறைப் படுத்த அமைக்கப் பட்ட ராஷ்ட்ரிய சம்ஸ்க்ருத சம்ச்தான் அமைப்பு, பின்னர் Deemed University ஆக உருவெடுத்து சம்ஸ்க்ருத வளர்ச்சிக்கு பல திட்டங்களை உருவாக்கி வருகிறது. சமீப வருடங்களில், சம்ஸ்க்ருத பாரதியின் உதவியுடன் இந்த பல்கலைக் கழகம்,  பொருளாதாரத்திலும், சமூகத்திலும் பிற்படுத்தப் பட்ட மக்களையும், அதோடு மருத்துவர்கள், பொறியியலாளர்கள், வழக்கறிஞர்கள் என்று  உயர் தட்டு மக்களையும் அணுகி சம்க்ருத மொழியை பரப்புவதில் மிகுந்த வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இது போன்ற முயற்சிகளே போதும் என்று சம்ஸ்க்ருத ஆர்வலர்கள் எண்ணிவிடக் கூடாது.

சில காலம் முன்பு, இந்திய அரசு எந்த கோரிக்கையும் எழாத போதே, தன்னிச்சையாகவே சம்ஸ்க்ருத மொழியை செம்மொழியாக (classical language) அறிவித்தது. இதற்கு அரசுக்கு என்ன பலவந்தம் இருக்க முடியும் என்று தெரியவில்லை. ஆனால், உண்மை என்னவெனில் உலக அளவில் பல காலமாகவே சம்ஸ்க்ருதம் உயர்தனிச் செம்மொழியாகவே கருதப்பட்டு  வருகிறது.

இப்படி இருக்கையில், சம்ஸ்க்ருதம் அதன் தூய்மையான அளவில் உபயோகிக்கப் படும்போது அதற்கு தனி அழகும் வசீகரமும் ஏற்படுகிறது. இனி வரும்காலத்தில் உருவாக்கப் படும் சம்ஸ்க்ருத இலக்கியங்களில், இந்த இயல்பை காப்பாற்றுவது சம்ஸ்க்ருத ஆர்வலர்களின் கடமையாகும். இயல்பாக அமைந்த கவித்துவமும், சம்ஸ்க்ருத பழம் பெரும் இலக்கியங்களில் கடும் பயிற்சி பெற்று அதனால் பெற்ற மொழி ஆளுமை கொண்டவர்களாலேயே இது போன்ற அழகிய இலக்கியங்கள் இயற்றப்படக் கூடும்.

அது போன்ற மொழி ஆளுமையை உருவாக்கக் கூடிய  கல்வி அமைப்பு இல்லாது போனால், எதிர்கால சம்ஸ்க்ருத இலக்கியங்கள் தரமற்ற கவிதை, கட்டுரை, கதைகளாகவே இருந்துவிடும். ஏற்கனவே இதுபோன்ற தரமற்ற ஆக்கங்கள் குப்பை மேடுபோல குவிந்து விட்டதைக் காண்கிறோம்.

இந்த நாட்டில் சம்ஸ்க்ருதவியலாளர் அல்லாத, பெயரளவில் அறிவு ஜீவிகள் என்று சொல்லிக் கொள்ளும் பலரிடம், சம்ஸ்க்ருதம் ஒரு தனிப்பட்ட குழுவைச் சார்ந்த மத ரீதியான இலக்கியங்கள் மட்டுமே கொண்டது என்று கருதுகிற போக்கு காணப்படுகிறது. இவர்கள் மனதில் எழுந்துள்ள இந்த தவறான கருத்தை களைவது சம்ஸ்க்ருதத்தின் எதிர்காலம் குறித்து சிந்தித்து, திட்டம் தீட்டிவரும் சம்ஸ்க்ருத அறிஞர்களுக்கு முக்கிய கடமையாகும். பழைய சம்ஸ்க்ருத இலக்கியங்களில், சார்வாகம் மட்டும் அல்லாது, வேதத்துக்கு புறம்பான புத்த சைன ஆக்கங்கள், பூர்வ மீமாம்சை போன்ற சித்தாந்தங்கள் பெரிய இடம் வகிக்கின்றன.

சம்ஸ்க்ருதம் மற்ற செம்மொழிகளில் இல்லாத அளவில் மத இலக்கியங்களை பெருமளவில் கொண்டிருந்த போதிலும், மற்ற எந்த மொழிகளிலுமே இல்லாத அளவுக்கு நாத்தீக – மத நம்பிக்கையற்ற கொள்கைகள் இலக்கியங்களையும் கொண்டிருக்கிறது என்று அமர்தியா சென் (The Argumentative Indian, p.no 23) அவர்கள் சொல்லி இருக்கிறார். இந்த தேசம் சம்ஸ்க்ருத இலக்கியங்கள் விதைக்கப் பட்டு, வளமான அறுவடை செய்ய தகுந்த நிலம் என்பது மிகையல்ல. துரதிருஷ்ட வசமாக, இதில் வழிகாட்டக் கூடிய தேர்ந்த அனுபவமுள்ள அறிஞர்கள் அரிதாகவே இருக்கிறார்கள். இருந்தாலும், நேர்மையான உழைப்பை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டால் சமஸ்க்ருத உலகம் பயன்பெறும் என்பதில் ஐயமில்லை.

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த சம்ஸ்க்ருத அறிஞர்களுக்கு, சற்றேறக்குறைய எண்பதுகள் வரை தெரியாமல் போன ஒரு ஆராய்ச்சிப் பகுதி, நமக்கெல்லாம் இப்போது பயன்பாட்டிலுள்ள கணினி மூலம்  மேற்கொள்ளப் படும் மொழியியல் மற்றும் இயற்கை மொழி செயலாக்கம் ( Linguistics and Natural Language Processing). சில வருடங்கள் முன்பு, ராஷ்ட்ரிய சம்ஸ்க்ருத வித்யாபீடம் இரண்டு புதிய பாடத்திட்டங்களை துவங்கியது – ஒன்று “Shabdabodha systems and Computational Linguistics” மற்றும் “Natural Language  Processing“. இத்திறக்கில் ஆர்வம் கொண்ட கணினி விஞ்ஞானிகளை கொண்டு, சம்ஸ்க்ருத பல்கலைக் கழகங்கள் புதிய பாடத்திட்டங்களை வகுக்கலாம். சம்ஸ்க்ருதத்தில் உள்ள பல அறிவுப் பொக்கிஷங்களை கண்டறிய ஆராய்ச்சியாளர்களை வரவேற்கலாம்.

அண்மையில் ஹைதராபாத் IIIT அமைப்பு, மனிதவியல் (Humanities) துறையை துவங்கி இருக்கிறது.  பாரம்பரிய அல்லது நவீன கல்விப் பின்னணி கொண்ட மாணவர்களுக்கு உயர்மட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதே இந்த துறையின் நோக்கம். நியாயம், வைசேஷிகம், வ்யாகரணம், மீமாம்சை போன்ற பாரம்பரிய அறிவின் தங்க சுரங்கங்களாக கருதப்படக் கூடிய இத்திறக்குகளில் ஆய்வு மேற்கொள்ள இவ்வமைப்பு உதவ முன்வந்துள்ளது.

சம்ஸ்க்ருத பல்கலைக் கழகங்களும், கிழக்கத்திய ஆராய்ச்சிக் கழகங்களும் (Oriental Research Institutes) இந்த IIIT Hyderabad அமைப்புடன் இணைந்து செயல்படுமானால் சம்ஸ்க்ருத ஆராய்ச்சி புத்துயிர் பெறும் என்பது உறுதி. இக்கனவு முழுமையாக நிறைவேற வேண்டுமானால் சம்ஸ்க்ருத ஆராய்ச்சியாளர்கள் இரண்டு விஷயங்களை தம் இயல்பாக உள்வாங்க வேண்டும் – அவை நேர்மையும் – உழைப்பும் ஆகும். சொல்லப் போனால் எல்லா ஆராய்ச்சிகளுக்குமே இது தேவை.  பல புதிய வாய்ப்புகளை திறந்துள்ள இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு, இந்த தெய்வீக மொழியை நடைமுறை மொழியாக (empirical language) மாற்றும் என்று நம்புவோம்.

[இது ஒரு ஆய்வு ஏட்டின் தமிழ் மொழியாக்கம்]

2 Comments இருபத்தொன்றாம் நூற்றாண்டில் சங்கதம்

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)