ஸம்ஜ்ஞா ப்ரகரணம்

மாஹேஸ்வர சூத்திரங்கள்

अइउण् । ॠॡक् । एओङ् । ऐऔच् । हयवरट् । लण् । ञमङणनम् । झभञ् । घढधष् । जबगडदश् । खफछठथचटतव् । कपय् । शषसर् । हल् ।

इति माहेश्वराणि सूत्राण्यणादिसंज्ञार्थानि । एषामन्त्या इत: । हकारादिष्वकार उच्चारणार्थ: । लण्मध्ये त्वित्संज्ञक: ।

இதி மாஹேஶ்வராணி ஸூத்ராண்யணாதி³ஸம்ஜ்ஞார்தா²நி | ஏஷாமந்த்யா இத: | ஹகாராதி³ஷ்வகார உச்சாரணார்த²: | லண்மத்⁴யே த்வித்ஸம்ஜ்ஞக: |

இதி மாஹேஶ்வராணி ஸூத்ராணி = இவை மாஹேச்வர சூத்திரங்கள்
அணாதி³ஸம்ஜ்ஞார்தா²நி = அண் போன்ற குறிப்புகளுக்கு உபயோகமானவை.
ஏஷாம் அந்த்யா இத: = இவற்றில் கடைசியில் இருப்பவைகள் “இத்” எனப்படும் சொற்கள்
ஹகாராதி³ஷு அகார உச்சாரணார்த²: = ஹயவரட் முதல் கடைசி சூத்திரம் வரை உள்ளவற்றில் அ காரம் உச்சரிப்பதர்காக
லண்மத்⁴யே து இத் ஸம்ஜ்ஞக: = லண் சூத்திரத்தில் மட்டும் இத் ஆகும்

அ இ உ ண் என்று துவங்கும் இவை மாஹேஸ்வர சூத்திரங்கள் என்று அழைக்கப் படுகின்றன.   இவற்றில் கடைசி எழுத்து “இத்” என்று அழைக்கப் படுகிறது. இந்த சூத்திரங்களில் ஹயவரட் என்னும் சூத்திரத்தில் இருந்து இறுதி ஹல் வரை உள்ள எழுத்துக்களில் உள்ள “அ”காரம் உச்சரிக்க உதவியாக இருப்பதற்காக மட்டுமே. இந்த அ சேர்க்காவிட்டால் ஹயவரட் என்கிற சூத்திரம் ஹ் ய் வ் ர் ட் என்று உச்சரிக்க வேண்டி இருக்கும் – அது கடினம் என்பதால் அ சேர்த்து ஹ ய வ ர என்று கொடுக்கப் பட்டுள்ளது. இவற்றை ஏனைய மற்ற இலக்கண சூத்திரங்களில் பயன்படுத்தும் போது அ வை தவிர்த்து ஒற்று எழுத்தாகவே பயன்படுத்த வேண்டும். லண் என்கிற சூத்திரத்தில் ல் + அ + ண் என்று மூன்று எழுத்துக்கள் வருகின்றன. இதில் அ வும் ஒரு “இத்” ஸம்ஜ்ஞா. ஏன் அ வையும் இத் எழுத்தாக சேர்க்க வேண்டும் என்பது மேலே படித்தால் புரியும். 


अथ संज्ञाप्रकरणम्‌

१ हलन्त्यम्‌  ‌‌‍१ । ३। ३॥

उपदेशेऽन्त्यं हलित्स्यात्‌ । उपदेश आद्योच्चारणम्‌ । सूत्रेष्वदृष्टं पदं सूत्रान्तरादनुवर्तनीयं सर्वत्र ।।.

1 ஹலந்த்யம்‌  ‌‌1 | 3| 3 ||

ஹல் அந்த்யம்

உபதே³ஶே(அ)ந்த்யம்ʼ ஹலித்ஸ்யாத்‌ | உபதே³ஶ ஆத்³த்³யோச்சாரணம்‌ | ஸூத்ரேஷ்வத்³ருʼஷ்டம்ʼ பத³ம்ʼ ஸூத்ராந்தராத³நுவர்தநீயம்ʼ ஸர்வத்ர ||

உபதே³ஶே = உபதேசத்திலே
அந்த்யம் = இறுதியில் இருக்கும்
ஹல் இத் ஸ்யாத்‌ = ஹல் (மெய்யெழுத்து consonant) “இத்” எனப்படும்
உபதே³ஶ = உபதேஶம் என்பது
ஆத்³ய உச்சாரணம்‌ = முதலில் உச்சரிக்கப் படுவது
ஸூத்ரேஷு அத்³ருʼஷ்டம்ʼ பத³ம் = சூத்திரங்களில் காணப் படாத பதம்
ஸூத்ராந்தராத் = வேறொரு சூத்திரத்திலிருந்து
ஸர்வத்ர அநுவர்தநீயம்ʼ = எங்கும் கொண்டு வரப் படவேண்டும்

உபதேஶம் என்பது ஆரம்பத்தில் உச்சரிப்பது – அதாவது மாஹேச்வர சூத்திரங்கள் துவங்கி பாணிநி, காத்யாயநர், பதஞ்சலி ஆகியோர் உபதேசித்தது . இவற்றில் இறுதியில் இருக்கும் மெய்யெழுத்துக்கள் (ண் க் ங் ச் போன்றவை…) இத் எனப்படும். “ஹலந்த்யம்” என்று மட்டுமே பாணிநி சூத்திரம் இருக்கிறது.

சூத்திரத்தை அடுத்து வரும் எண்ணிக்கை, பாணிநியின் அஷ்டாத்யாயியில் உள்ள மூவாயிரம் சூத்திரங்களில் இந்த சூத்திரத்தின் எண் ஆகும்.
வ்ருத்தியில் (உரையில்) உபதேஶே அந்த்யம் ஹல் இத் ஸ்யாத் என்று கூறுகிறார். எங்கிருந்து உபதேஶே, இத் போன்ற சொற்கள் வந்தன? என்றால் இவை இதற்கு முன்னர் உள்ள பாணிநி சூத்திரங்களில் இருந்து வந்தவை. இவ்வாறு வேறொரு சூத்திரத்திலிருந்து சில சொற்களை மட்டும் உபயோகித்துக் கொள்ளும் போது, அச்சொற்கள் அநுவ்ருத்தி என்று அழைக்கப் படுகிறது.


२ अदर्शनं लोप १ । १। ३॥

प्रसक्तस्यादर्शनं लोपसंज्ञं स्यात्‌ ।.

2 அத³ர்ஶநம்ʼ லோப 1 | 1| 3||

ப்ரஸக்தஸ்யாத³ர்ஶநம்ʼ லோபஸம்ஜ்ஞம்ʼ ஸ்யாத்‌

ப்ரஸக்தஸ்ய = உபயோகத்தில்
அத³ர்ஶநம்ʼ = மறைந்து போவது
லோப ஸம்ஜ்ஞம்ʼ ஸ்யாத்‌ = “லோப” என்னும் ஸம்ஜ்ஞா ஆகும்

அடுத்து “லோப” என்கிற சொல்லைப் பற்றி சொல்கிறார். ஒரு சூத்திரத்தை உபயோகிக்கும் போது மறைந்து போகும் எழுத்துக்கள் “லோப” என்று அழைக்கப் படுகின்றன.


३ तस्य लोप १ । ३ । ९ ॥

तस्येतो लोप स्यात्‌ । णादयोऽणाद्यर्था ।.

3 தஸ்ய லோப 1 |  3 | 9 ||

தஸ்யேதோ லோப ஸ்யாத்‌ | ணாத³யோ(அ)ணாத்³யர்தா²

தஸ்ய இத: லோப ஸ்யாத்‌ = அந்த இத் மறைந்து போகிறது
ணாத³யோʼ = ண் போன்ற எழுத்துக்கள்
லோப ஸம்ஜ்ஞம்ʼ ஸ்யாத்‌ = “லோப” ஸம்ஜ்ஞம் எனப்படும். மறைந்து போகும் எழுத்துக்கள்.
ணாத³யோ அணாத்³யர்தா² = ண் போன்ற எழுத்துக்கள் “அண்” என்பது போன்ற பிரத்யஹாரங்கள் அமைப்பதற்காக

ஒரு சூத்திரத்தை உபயோகிக்கும் போது அதன் இத் எழுத்துக்கள் மறைந்து போகின்றன. “அண்”, “ஹல்” போன்ற ப்ரத்யாஹாரங்கள் அமைப்பதற்காக மாஹேஸ்வர சூத்திரங்களில் இந்த இத் எழுத்துக்கள் இறுதியில் சேர்க்கப் பட்டுள்ளன.


४ आदिरन्त्येन सहेता १ । १ । ७१ ॥

अन्त्येनेता सहित आदिर्मध्यगानां स्वस्य च संज्ञा स्यात्‌ यथाऽणिति अ इ उ वर्णानां संज्ञा । एवमच्‌ हल्‌ अलित्यादय ।।.

4 ஆதி³ரந்த்யேந ஸஹேதா 1 |  1 | 71 ||

ஆதி³: அந்த்யேந ஸஹ இதா

அந்த்யேநேதா ஸஹித ஆதி³ர்மத்⁴யகா³நாம்ʼ ஸ்வஸ்ய ச ஸம்ஜ்ஞா ஸ்யாத்‌ யதா²(அ)ணிதி அ இ உ வர்ணாநாம்ʼ ஸம்ஜ்ஞா | ஏவமச்‌ ஹல்‌ அலித்யாத³ய |

அந்த்யேந = முடிவில் இருக்கும்
இதா ஸஹித = “இத்” உடன்
ஆதி³ மத்⁴யகா³நாம் = முதல் எழுத்தும் மத்தியில் இருக்கும் எழுத்துக்களும்
ஸ்வஸ்ய ச = ஆதியுடன் சேர்ந்து
ஸம்ஜ்ஞா ஸ்யாத்‌ = ஸம்ஜ்ஞா எனப்படும்.
யதா² = எப்படியெனில்
அண் இதி அ இ உ வர்ணாநாம்ʼ ஸம்ஜ்ஞா = அண் என்பது அ இ உ ஆகிய எழுத்துக்களின் ஸம்ஜ்ஞா
ஏவம் அச்‌ ஹல்‌ அல் இத்யாத³ய = இதே போல அச், ஹல், அல் ஆகியவை

முதல் எழுத்து துவங்கி, கடைசியில் இருக்கும் இத் – இவ்விரண்டுக்கும் நடுவில் இருக்கும் எழுத்துக்கள் எல்லாம் சேர்ந்து ஸம்ஜ்ஞா உருவாகிறது. உதாரணமாக “அண்” என்பது அ இ உ ஆகியவற்றைக் குறிக்கும். இது போல அச் ஹல் அல் என்று பலவிதமான ப்ரத்யாஹாரங்களை அமைக்க முடியும்.

ப்ரத்யாஹாரங்கள் என்றால் என்ன?
ப்ரத்யாஹாரங்கள் என்பவை கூட்டுக் குறிப்புச் சொற்கள். மேலே தரப்பட்டுள்ள அஇஉண் போன்ற எழுத்துக்களில் இருந்து அண் என்று எழுதும் போது – அ, இ, உ – ஆகிய மூன்று எழுத்துக்களை குறிக்கும். இது அண் ப்ரத்யாஹாரம் எனப்படும். இண் என்றால் – இ, உ – ஆகிய இரண்டு எழுத்துக்களை மட்டுமே குறிக்கும். இது இண் என்று அழைக்கப் படும். அச் பிரத்யஹாரம் என்பது உயிர் எழுத்துக்கள் (ஸ்வர அக்ஷரங்கள்) அனைத்தையும் குறிக்கும் ஏனெனில் அச் என்பது – அ, இ, உ, ரு’, ல்ரு, ஏ, ஓ, ஐ, ஔ – ஆகிய எழுத்துக்கள் அடங்கியது. அதாவது அச் என்பதில் அ-காரத்தில் துவங்கி ச் என்கிற இத் முடிய உள்ளவை. இதே போல ஹல் என்கிற ப்ரத்யாஹாரம் மெய்எழுத்துக்கள் (வ்யஞ்சந அக்ஷரங்கள்) அனைத்தையும் குறிக்கிறது.


५ ऊकालोऽज्झ्रस्वदीर्घप्लुत:  १ । २। २७ ॥

उश्च ऊश्च ऊ३श्च व: । वां कालो यस्य सोऽच्‌ क्रमाद् ह्रस्वदीर्घप्लुतसंज्ञ: स्यात्‌ । स प्रत्येकमुदात्तादि भेदेन त्रिधा ।।

5 ஊகாலோ(அ)ஜ்ஜ்²ரஸ்வதீ³ர்க⁴ப்லுத:  1 |  2| 27 ||

ஊகால: அச் ஹ்ரஸ்வ தீ³ர்க⁴ ப்லுத:

உஶ்ச ஊஶ்ச ஊ3ஶ்ச வ: |  வாம்ʼ காலோ யஸ்ய ஸோ(அ)ச்‌ க்ரமாத்³ ஹ்ரஸ்வதீ³ர்க⁴ப்லுதஸம்ஜ்ஞ: ஸ்யாத்‌ | ஸ ப்ரத்யேகமுதா³த்தாதி³ பே⁴தே³ந த்ரிதா⁴

உஶ்ச ஊஶ்ச ஊ3ஶ்ச வ: = மூன்று உகாரங்கள் (வ என்பது இரண்டுக்கு மேற்பட்ட உ)
வாம்ʼ காலோ யஸ்ய ஸ: அச்‌ = இவற்றின் காலம் எவ்வளவோ அந்த அச் எழுத்துக்கள்
க்ரமாத்³ = முறையே
ஹ்ரஸ்வ தீ³ர்க⁴ ப்லுத ஸம்ஜ்ஞ: ஸ்யாத்‌ = ஹ்ரஸ்வ – தீர்க்க – ப்லுத ஸம்ஜ்ஞா என்று அழைக்கப் படும்.
ஸ: ப்ரத்யேகம் = அவை ஒவ்வொன்றும்
உதா³த்தாதி³ பே⁴தே³ந த்ரிதா⁴ = உதாத்தம் போன்ற மூவகை உட்பிரிவுகள் கொண்டவை

கு³ரு சப்தத்தில் கு³ரு கு³ரூ கு³ரவ: என்று ஒருமை இருமை பன்மை வருவது போல, உ ஊ ஊ: என்ற மூன்றையும் சேர்த்து வ: என்கிறார். இது எழுத்துக்கள் ஒலிக்கும் காலத்தை குறிக்கும் சூத்திரம். ஒரு மாத்திரை அளவு கொண்டு “உ” என்ற எழுத்து ஒலிக்கும் காலம் ஹ்ரஸ்வ எழுத்து, ஊ என்ற எழுத்து ஒலிக்கும் காலம் தீர்க்கம் என்றும் ஊ3 என்ற எழுத்து ஒலிக்கும் காலம் ப்லுதம் என்றும் அழைக்கப் படுகிறது. ஏன் இதற்கு உ என்ற எழுத்தை பாணிநி தேர்ந்தெடுத்தார் எனில் இயற்கையில் தானாக எழும் ஒலியாக இவ்வெழுத்தை தேர்ந்தெடுத்திருக்கலாம். ஹ்ரஸ்வ, தீர்க்க, ப்லுத ஒலிகள் மேலும் உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம் என்றும் மூவகையாக பிரியும். இவ்வாறு ஒன்பது வகைகள் ஒவ்வொரு எழுத்துக்கும் உண்டாகின்றது. (ஹ்ரஸ்வ உதாத்த, தீர்க்க உதாத்த, ப்லுத உதாத்த, ஹ்ரஸ்வ அநுதாத்த.. ஆகியவை)


६ उच्चैरुदात्त  १ । २। २९ ॥

ताल्वादिषु सभागेषु स्थानेषुर्ध्वभागे निष्पन्नोऽजुदात्तसंज्ञ: स्यात् |

6 உச்சைருதா³த்த  1 |  2| 29 ||

உச்சை: உதா³த்த:

தால்வாதி³ஷு ஸபா⁴கே³ஷு ஸ்தா²நேஷுர்த்⁴வபா⁴கே³ நிஷ்பந்நோ(அ)ஜுதா³த்தஸம்ஜ்ஞ: ஸ்யாத்

தால்வாதி³ஷு = மேலண்ணம் (தாலு) போன்ற பகுதிகளில்
ஸபா⁴கே³ஷு ஸ்தா²நேஷு = இரு பகுதிகளில்
ஊர்த்⁴வபா⁴கே³ = மேல் பகுதியில்
நிஷ்பந்ந: = உருவாகும்
அச் = அ இ உ ஏ ஓ ஐ ஔ ஆகிய உயிரெழுத்துக்கள்
உதா³த்த ஸம்ஜ்ஞ: ஸ்யாத் = உதாத்த ஸம்ஜ்ஞா ஆகும்

தொண்டையின் மேல் பரப்பு, நாக்கின் மேலண்ணம் ஆகிய மேற்பகுதிகளில் எழுப்பப் படும் ஒலிகளைக் கொண்ட உயிரெழுத்துக்கள் உதாத்தம் எனப்படும்.


७ नीचैरनुदात्त १ । २। ३० ॥

ताल्वादिषु सभागेषु स्थानेष्वधोभागे निष्पन्नोऽजनुदात्तसंज्ञ: स्यात्

7 நீசைரநுதா³த்த 1 |  2| 30 ||

நீசை: அநுதா³த்த

தால்வாதி³ஷு ஸபா⁴கே³ஷு ஸ்தா²நேஷ்வதோ⁴பா⁴கே³ நிஷ்பந்நோ(அ)ஜநுதா³த்தஸம்ஜ்ஞ: ஸ்யாத்

தால்வாதி³ஷு = மேலண்ணம் (தாலு) போன்ற பகுதிகளில்
ஸபா⁴கே³ஷு ஸ்தா²நேஷு = இரு பகுதிகளில்
அதோ⁴பா⁴கே³ நிஷ்பந்ந: = கீழ்பகுதியில் உருவாகும்
அச் அநுதா³த்த ஸம்ஜ்ஞ: ஸ்யாத் = உயிரெழுத்துக்கள் அநுதாத்த ஸம்ஜ்ஞா ஆகும்

தொண்டையிந் கீழ் பரப்பு ஆகிய கீழ்பகுதிகளில் எழுப்பப் படும் ஒலிகளைக் கொண்ட உயிரெழுத்துக்கள் அநுதாத்தம் எனப்படும்.


८ समाहार स्वरित १ । २। ३१ ॥

उदात्तानुदात्तत्वे वर्णधर्मो समाह्रियते यस्मिन् सोऽच् स्वरितसंज्ञ: स्यात् | स नवविधोऽपि प्रत्येकमनुनासिकत्वाननुनासिकत्वाभ्यां द्विधा ।।.

8 ஸமாஹார ஸ்வரித 1 |  2|  31 ||

உதா³த்தாநுதா³த்தத்வே வர்ணத⁴ர்மோ ஸமாஹ்ரியதே யஸ்மிந் ஸோ(அ)ச் ஸ்வரிதஸம்ஜ்ஞ: ஸ்யாத்| ஸ நவவிதோ⁴(அ)பி ப்ரத்யேகமநுநாஸிகத்வாநநுநாஸிகத்வாப்⁴யாம்ʼ த்³விதா⁴

யஸ்மிந் = எதில்
உதா³த்தாநுதா³த்தத்வே = உதாத்த – அநுதாத்த ஸ்வரங்களிலே
வர்ணத⁴ர்மோ ஸமாஹ்ரியதே = வர்ணங்கள் கலந்து விடுகிறதோ
ஸ: அச் = அந்த அச் (அ இ உ ரு ல்ரு ஏ ஓ ஐ ஔ)
ஸ்வரிதஸம்ஜ்ஞ: ஸ்யாத் = ஸ்வரித ஸம்ஜ்ஞா ஆகும்
ஸ: நவவித⁴: அபி = இந்த ஒன்பது வகையும் கூட
ப்ரத்யேகம் = ஒவ்வொன்றும்
அநுநாஸிகத்வ அநநுநாஸிகத்வப்⁴யாம்ʼ த்³விதா⁴ = அநுநாஸிக, அநநுநாஸிக என்று இரு வகையாக பிரியும்

உதாத்த அநுதாத்த ஸ்வரங்களின் பண்புகள் கலந்து ஒலிப்பது ஸ்வரிதம் எனப்படும். இவையும் கூட ஒவ்வொன்றும் அநுநாசிக, அநநுநாஸிக என்று இரு பிரிவாக பிரியும்.


९ मुखनासिकावचनोऽनुनासिक १ । १ । ८ ॥

मुखसहितनासिकयोच्चार्यमाणो वर्णोऽनुनासिकसंज्ञ स्यात्‌ । तदित्थम्‌ – अ इ उ ऋ एषां वर्णानां प्रत्येकमष्टादश भेदा । लृवर्णस्य द्वादश, तस्य दीर्घाभावात्‌ । एचामपि द्वादश, तेषां ह्रस्वाभावात्‌ ।।.

9 முக²நாஸிகாவசநோ(அ)நுநாஸிக 1 |  1 |  8 ||

முக²ஸஹிதநாஸிகயோச்சார்யமாணோ வர்ணோ(அ)நுநாஸிகஸம்ஜ்ஞ: ஸ்யாத்‌ | ததி³த்த²ம்‌ – அ இ உ ருʼ ஏஷாம்ʼ வர்ணாநாம்ʼ ப்ரத்யேகமஷ்டாத³ஶ பே⁴தா³ | ல்ருʼவர்ணஸ்ய த்³வாத³ஶ, தஸ்ய தீ³ர்கா⁴பா⁴வாத்‌ | ஏசாமபி த்³வாத³ஶ, தேஷாம்ʼ ஹ்ரஸ்வாபா⁴வாத்‌||

முக² ஸஹித நாஸிகயோ: = வாயுடன் மூக்கும் சேர்த்து
உச்சார்யமாண: வர்ண: = உச்சரிக்கும் எழுத்துக்கள்
அநுநாஸிக ஸம்ஜ்ஞ: ஸ்யாத்‌ = அநுநாசிக ஸம்ஜ்ஞா ஆகும்
தத் இத்த²ம்‌ அ இ உ ருʼ ஏஷாம்ʼ வர்ணாநாம்ʼ = அ இ உ ரு எழுத்துக்கள்
ப்ரத்யேகம் அஷ்டாத³ஶ பே⁴தா³ = ஒவ்வொன்றும் பதினெட்டு வகையாகும்
ல்ருʼவர்ணஸ்ய த்³வாத³ஶ = ல்ரு (लृ) எழுத்தில் பனிரெண்டு வகை மட்டுமே
தஸ்ய தீ³ர்க⁴ அபா⁴வாத்‌ = அதற்கு தீர்க்க ஒலி இல்லாமையால்
ஏசாம் அபி த்³வாத³ஶ = ஏச் (எ, ஒ, ஐ ஔ) ஆகிய எழுத்துக்களும் பனிரெண்டு வகை மட்டுமே
தேஷாம்ʼ ஹ்ரஸ்வ அபா⁴வாத்‌ = அவற்றுக்கு ஹ்ரஸ்வ எழுத்துக்கள் இல்லாமையால்

அ, அங், ஆ, ஆங் என்பது போல எழுத்துக்களை மூக்கும் வாயும் சேர்ந்து ஒலிப்பது அநுநாசிக வர்ணம் எனப்படும். வாயால் மட்டும் ஒலிப்பது அநநுநாஸிகம். அ, இ, உ, ரு போன்ற எழுத்துக்கள் (ஹ்ரஸ்வ – உதாத்த – அநுநாசிக “அ”, தீர்க்க – உதாத்த – அநநுநாஸிக “அ”) என்று பதினெட்டு (3 x 3 x 2) வகைகளாக பிரிக்கலாம். ல்ரு என்கிற எழுத்துக்கு தீர்க்க எழுத்து இல்லாமையால் அது பனிரெண்டு வகைகளில் மட்டுமே வரும். அதே போல ஏ, ஐ, ஒ, ஔ ஆகிய எழுத்துக்களில் ஹ்ரஸ்வ ஒலி இல்லாமையால் (வடமொழியில் எ ஏ என்று இரண்டு கிடையாது, ஏ-காரம் மட்டுமே. எ-காரத்துக்கு பதிலாக ய ஒலி உபயோகிக்கப் படுகிறது), அவையும் பனிரெண்டு வகை மட்டுமே.


१० तुल्यास्यप्रयत्नं सवर्णम्‌ १ । १। ९ ॥

ताल्वादिस्थानमाभ्यन्तरप्रयत्नश्चेत्येतद्द्वयं यस्य येन तुल्यं तन्मिथ सवर्णसंज्ञं स्यात्‌ ।

(वा॰) ऋलृवर्णयोर्मिथ सावर्ण्यं वाच्यम्‌) ।

(ऋलृवर्णयोर्मिथ सावर्ण्यं वाच्यम्‌) । अकुहविसर्जनीयानां कण्ठ । इचुयशानां तालु । ऋटुरषाणां मूर्धा । लृतुलसानां दन्ता । उपूपध्मानीयानामोष्ठौ । ञ्माङणनानां नासिका च । एदैतो कण्ठतालु । ओदौतो कण्ठोष्टम्‌ । वकारस्य दन्तोष्ठम्‌ । जिह्वामूलीयस्य जिह्वामूलम्‌ । नासिकाऽनुस्वारस्य । यत्नो द्विधा – आभ्यन्तरो बाह्यश्च । आद्य पञ्चधा – स्पृष्टेषत्स्पृष्टेषद्विवृतविवृतसंवृत भेदात्‌ । तत्र स्पृष्टं प्रयतनं स्पर्शानाम्‌ । ईषत्स्पृष्टमन्तस्थानाम्‌ । ईषद्विवृतमूष्मणाम्‌ । विवृतं स्वराणाम्‌ । ह्रस्वस्यावर्णस्य प्रयोगे संवृतम्‌ । प्रक्रियादशायां तु विवृतमेव । बाह्यप्रयत्नस्त्वेकादशधा – विवार संवार श्वासो नादो घोषोऽघोषोऽल्पप्राणोमहाप्राण उदात्तोऽनुदात्त स्वरितश्चेति । खरो विवारा श्वासा अघोषाश्च । हश संवारा नादा घोषाश्च । वर्गाणां प्रथमतृतीयपञ्चमा यणश्चाल्पप्राणा । वर्गाणां द्वितीयचतुर्थौ शलश्च महाप्राणा । कादयो मावसाना स्पर्‌शा । यणोऽन्तस्था । शल ऊष्माण । अच स्वरा । -क-ख इति कखाभ्यां प्रगर्धविसर्गसदृशो जिह्वामूलीय । -प-फ इति पफाभ्यां प्रागर्धविसर्गसदृश उपध्मानीय । अं अ इत्यच परावनुस्वारविसर्गौ ।।

10 துல்யாஸ்யப்ரயத்நம்ʼ ஸவர்ணம்‌ 1 |  1|  9 ||

துல்ய ஆஸ்ய ப்ரயத்நம்’ ஸவர்ணம்

தால்வாதி³ஸ்தா²நமாப்⁴யந்தரப்ரயத்நஶ்சேத்யேதத்³த்³வயம்ʼ யஸ்ய யேந துல்யம்ʼ தந்மித² ஸவர்ணஸம்ஜ்ஞம்ʼ ஸ்யாத்‌ |

யஸ்ய = எந்த உச்சரிப்பினுடைய
தால்வாதி³ஸ்தா²நம் – ஒலி உருவாகும் தாலு (மேலண்ணம்) போன்ற ஸ்தா²நங்கள்
ஆப்⁴யந்தரப்ரயத்ந = ஒலி எழுப்பும் (உள்முயற்சி=ஆப்யந்தர பிரயத்நம், வெளிமுயற்சி=பாஹ்ய பிரயத்நம்) ஆகிய முயற்சிகள்
துல்யம்ʼ = சமமாக
தத் மித² = அவை ஒன்றுக்கொன்று
ஸவர்ணஸம்ஜ்ஞம்ʼ ஸ்யாத்‌ = ஸவர்ண ஸம்ஜ்ஞம்ʼ ஆகும்

ஒரு எழுத்தின் ஒலி உருவாகும் இடமும், ஒலி எழுப்ப மேற்கொள்ளும் முயற்சியும் ஒன்றாக இருப்பின் அது ஸவர்ண ஸம்ஜ்ஞா (homogenuous letters) ஆகும். இதில் ரு, ல்ரு ஆகிய இரு எழுத்துக்கள் உருவாகும் இடம் வேறாக இருந்தாலும் அவை ஸவர்ண எழுத்துக்கள் என்று காத்யாயநர் வார்த்திகத்தில் கூறுகிறார். எழுத்துக்கள் உருவாகும் முறை குறித்த விளக்கங்கள் பற்றி காணலாம்.

  உச்சரிப்பு உருவாகும் ஸ்தா²நங்கள்

अकुहविसर्जनीयानां कण्ठ ।
அகுஹவிஸர்ஜநீயாநாம்ʼ கண்ட² |
அ, மற்றும் கு வர்க்க (க, க², க³, க⁴, ங), ஹ மற்றும் விசர்க (:) எழுத்துக்கள் ஸவர்ணம், இவை அனைத்தும் கண்ட ஸ்தா²நத்தில் இருந்து (தொண்டையில்) உருவாகின்றன.

इचुयशानां तालु ।
இசுயஸா²நாம்ʼ தாலு |
இ, சு வர்க்க (ச ச² ஜ ஜ² ஞ), ய மற்றும் ஸ2 (श) ஆகியவை மேலண்ணத்தில் இருந்து உண்டாகின்றன, இவையாவும் ஸவர்ணம்

ऋटुरषाणां मूर्धा ।
ருʼடுரஷாணாம்ʼ மூர்தா⁴ |
ரு, டு வர்க்கம் (ட ட² ட³ ட⁴ ண), ர, ஷ ஆகியவை தலையின் உச்சியில் உருவாகும் ஸவர்ண ஒலிகள்

लृतुलसानां दन्ता ।
ல்ருʼதுலஸாநாம்ʼ த³ந்தா |
ல்ரு, து வர்க்கம் (த த² த³ த⁴ ந), ல, ஸ ஆகியவை பற்களில் உருவாகும் ஸவர்ண ஒலிகள்

उपूपध्मानीयानामोष्ठौ ।
உபூபத்⁴மாநீயாநாமோஷ்டௌ² |
உ, பு வர்க்கம் (ப ப² ப³ ப⁴ ம), உபத்⁴மாநீய (அரை விசர்க்கம், ஆங்கிலத்தில் F போன்ற ஒலி) ஆகியவை உதடுகளில் உருவாகும் ஸவர்ண ஒலிகள்

ञमङणननाम् नासिका च ।
ஞமஙணநநாம்ʼ நாஸிகா ச |
ஞமஙணந எழுத்துக்கள் மூக்கில் உருவாகும் ஸவர்ண ஒலிகள்

एदैतो: कण्ठ तालु ।
ஏதை³தோ: கண்ட² தாலு |
ஏ, ஐ, ஓ எழுத்துக்கள் தொண்டையிலும் மேலண்ணத்திலும் உருவாகும் ஸவர்ண ஒலிகள்

ओदौतो कण्ठोष्टम्‌ ।
ஓதௌ³தோ கண்டோ²ஷ்டம்‌ |
ஓ, ஔ ஆகியவை தொண்டை மற்றும் உதடுகளில் உருவாகும் ஸவர்ண ஒலிகள்

वकारस्य दन्तोष्ठम्‌ ।
வகாரஸ்ய த³ந்தோஷ்ட²ம்‌ |
வ பற்கள் மற்றும் உதடுகளில் எழும் ஒலி

जिह्वामूलीयस्य जिह्वामूलम्‌ ।
ஜிஹ்வாமூலீயஸ்ய ஜிஹ்வாமூலம்‌ |
நாக்கின் மேலண்ணத்தில் எழும் ஒலி (ஹ்க, ஹ்க2 போன்ற அரை விசர்கத்துடன் இணைந்த ஒலி)

नासिकाऽनुस्वारस्य ।
நாஸிகா(அ)நுஸ்வாரஸ்ய
மூக்கின் உபயோகத்துடன் எழுவது அநுஸ்வாரம் (अं, इं போன்ற எழுத்துக்களின் மேலுள்ள புள்ளியை அநுஸ்வரம் என்று அழைக்கப் படுகிறது).

உச்சரிப்பு உருவாக மேற்கொள்ளும் முயற்சிகள்

यत्नोद्विधा – आभ्यन्तरो बाह्यश्च ।
யத்நோ த்³விதா⁴ – ஆப்⁴யந்தரோ பா³ஹ்யஶ்ச
எழுத்துக்களை உச்சரிக்கும் முயற்சி என்பது இரு வகைப் படும். அந்தர – பாஹ்ய ஆகியவை – அதாவது வாய்க்குள், வாயையும் தாண்டி வேறு இடங்களில் இருந்து மேற்கொள்ளும் முயற்சி.

आद्य: पञ्चधा – स्पृष्टेषत्स्पृष्टेषद्विवृतविवृतसंवृत भेदात्‌ ।
ஆத்³ய: பஞ்சதா⁴ – ஸ்ப்ருʼஷ்ட + ஈஷத்ஸ்ப்ருʼஷ்ட + ஈஷத்³விவ்ருʼத + விவ்ருʼத + ஸம்ʼவ்ருʼத பே⁴தா³த்
முதலில் சொன்னது (ஆத்ய:) அதாவது அந்தர ப்ரயத்நம், ஐந்து வகைப் படும்,

  • ஸ்ப்ருʼஷ்ட = நாக்கின் அழுந்திய ஸ்பர்ஸம் செய்து உச்சரிப்பது
  • ஈஷத்ஸ்ப்ருʼஷ்ட = நாக்கின் மெல்லிய ஸ்பர்ஸம் செய்து உச்சரிப்பது
  • ஈஷத்³விவ்ருʼத = வாயை சிறிதாக திறந்து உச்சரிப்பது
  • விவ்ருʼத = வாயை திறந்த நிலையில் உச்சரிப்பது
  • ஸம்ʼவ்ருʼத = நன்றாக வாயைத் திறந்து உச்சரிப்பது

तत्र स्पृष्ट प्रयतनं स्पर्शानाम्‌ ।
தத்ர ஸ்ப்ருʼஷ்ட-ப்ரயதநம்ʼ ஸ்பர்ஸா²நாம்‌
நாக்கின் அழுந்திய முயற்சியில் க வர்க்கம், ச வர்க்கம், ட வர்க்கம், த வர்க்கம் மற்றும் ப வர்க்கம் ஆகிய இருபது எழுத்துக்களும் உருவாகின்றன. कादयो मावसाना स्पर्‌शा । (காத³யோ மாவஸாநா ஸ்பர்‌ஸா²) க வில் துவங்கி ம-வரை உள்ள எழுத்துக்கள் ஸ்பர்ஸ வர்ணம் எனப்படுகின்றன

ईषत्स्पृष्टमन्तस्थानाम्‌ ।
ஈஷத் ஸ்ப்ருʼஷ்டமந்தஸ்தா²நாம்‌
நாக்கின் மெல்லிய ஸ்பர்ச முயற்சியில் அந்தஸ்த எழுத்துக்கள் உருவாகின்றன . यणोऽन्तस्था (யணோ(அ)ந்தஸ்தா²) ய, வ, ர, ல ஆகிய எழுத்துக்கள் அந்தஸ்த வர்ணம் எனப்படுகின்றன

ईषद्विवृतमूष्मणाम्‌ ।
ஈஷத்³விவ்ருʼதமூஷ்மணாம்‌
ஊஷ்மாண எழுத்துக்களை உச்சரிக்க சற்றே உயர்த்திய வாயினால் செய்யும் முயற்சி (ஈஷத்விவ்ருதம்) ஆகும். शल ऊष्माण: (ஶல ஊஷ்மாண:) – श श स ह ஆகிய எழுத்துக்கள் ஊஷ்மாண வர்ணம் எனப்படுகின்றன.

विवृतं स्वराणाम्‌ ।
விவ்ருʼதம்ʼ ஸ்வராணாம்‌
அ முதல் ஔ வரையிலான (अच स्वरा (அச ஸ்வரா:)) அச் எழுத்துக்கள் (ஸ்வர வர்ணம்) உச்சரிக்க வாயைத் திறந்த நிலை முயற்சி (விவ்ருதம்) தேவை. அதனால் இவை விவ்ருத வர்ணங்கள்

ह्रस्वस्यावर्णस्य प्रयोगे संवृतम्‌ ।
ஹ்ரஸ்வஸ்யாவர்ணஸ்ய ப்ரயோகே³ ஸம்ʼவ்ருʼதம்‌
அ போன்ற ஹ்ரஸ்வ எழுத்துக்களை உச்சரிக்க ஸம்வ்ருத முயற்சி தேவை. (प्रक्रियादशायां तु विवृतमेव (ப்ரக்ரியாத³ஸா²யாம்ʼ து விவ்ருʼதமேவ)) ஆனால் உபயோகத்தின் போது விவ்ருத முயற்சி ஆகிறது

बाह्यप्रयत्नस्त्वेकादशधा – विवार संवार श्वासो नादो घोषोऽघोषोऽल्पप्राणोमहाप्राण उदात्तोऽनुदात्त स्वरितश्चेति ।
பா³ஹ்யப்ரயத்நஸ்த்வேகாத³ஶதா⁴ – விவார ஸம்ʼவார ஶ்வாஸோ நாதோ³ கோ⁴ஷோ(அ)கோ⁴ஷோ(அ)ல்பப்ராணோமஹாப்ராண உதா³த்தோ(அ)நுதா³த்த ஸ்வரிதஶ்சேதி |
பாஹ்ய ப்ரயத்நம் என்பது பதினோரு வகைப்படும்:

  • விவார மற்றும் ஶ்வாஸ மற்றும் அகோ⁴ஷ ப்ரயத்நங்கள் हश संवारा (ஹஶ ஸம்ʼவாரா) என்ற படி ஹஶ ப்ரத்யாஹாரத்தில் வரும் எழுத்துக்கள் (य व र ल ञ म ङ ण न झ भ घ ढ ध ज ब ग ड द)
  • அல்பப்ராணवर्गाणां द्वितीयचतुर्थौ शलश्च महाप्राणा (வர்கா³ணாம்ʼ த்³விதீயசதுர்தௌ² ஶலஶ்ச மஹாப்ராணா), மகாப்ராண எழுத்துக்கள் என்பவை (இரண்டாவது ख फ छ ठ थ, நான்காவது झ भ घ ढ ध மற்றும் शल ப்ரத்யாஹாரத்தில் உள்ள श ष स ह) ஆகும்.

இவற்றுடன் உதா³த்த, அநுதா³த்த, ஸ்வரித ஆகிய மூன்றும் சேரும். இவை மூன்றும் ஸம்ஜ்ஞா பிரகரணத்தில் விளக்கப் பட்டுள்ளன.


११ अणुदित्सवर्णस्य चाप्रत्यय १ । १। ६९ ॥

प्रतीयते विधीयत इति प्रत्यय । अविधीयमानोऽणुदिच्च सवर्णस्य संज्ञा स्यात्‌ । अत्रैवाण्‌ परेण णकारेण । कु चु टु तु पु एते उदिता: । तदेवम्‌ – अ इत्यष्टादशानां संज्ञा । तथेकारोकारौ । ऋकारस्त्रिंशत: । एवं – लृकारोऽपि । एचो द्वादशानाम्‌ । अनुनासिकाननुनासिकभेदेन यवला द्विधा | तेनाऽननुनासिकास्ते द्वयोर्द्वयोस्संज्ञा ।

11 அணுதி³த்ஸவர்ணஸ்ய சாப்ரத்யய 1 |  1|  69 ||

அண் உதி³த் ஸவர்ணஸ்ய ச அப்ரத்யய

ப்ரதீயதே விதீ⁴யத இதி ப்ரத்யய | அவிதீ⁴யமாநோ(அ)ணுதி³ச்ச ஸவர்ணஸ்ய ஸம்ஜ்ஞா ஸ்யாத்‌ | அத்ரைவாண்‌ பரேண ணகாரேண | கு சு டு து பு ஏதே உதி³தா: | ததே³வம்‌ – அ இத்யஷ்டாத³ஸா²நாம்ʼ ஸம்ஜ்ஞா | ததே²காரோகாரௌ | ருʼகாரஸ்த்ரிம்ʼஶத: | ஏவம்ʼ – ல்ருʼகாரோ(அ)பி | ஏசோ த்³வாத³ஸா²நாம்‌ | அநுநாஸிகாநநுநாஸிகபே⁴தே³ந யவலா த்³விதா⁴ | தேநா(அ)நநுநாஸிகாஸ்தே த்³வயோர்த்³வயோஸ்ஸம்ஜ்ஞா |

ப்ரதீயதே விதீ⁴யத இதி ப்ரத்யய = விதிக்கப் பட்டது அல்லது சுட்டிக் காட்டப்பட்டது (specified or indicated) பிரத்யயம் எனப்படும்
அவிதீ⁴யமாநோ (அப்ரத்யய) = விதிக்கப் படாதது / சுட்டிக் காட்டப் படாதது அப்ரத்யயம்
அணுதி³ச்ச (அண் + உதி³த் + ச) = அண் உதி³த் பிரத்யஹாரங்களால் சுட்டப் படும் எழுத்துக்கள் ஸவர்ண எழுத்துக்கள்
அத்ர ஏவ அண்‌ பரேண ணகாரேண = இங்கே மட்டும் ண் பிரத்யஹாராம் “லண்” சூத்திரம் வரை நீளுகிறது
கு சு டு து பு ஏதே உதி³தா: = க-வர்க்கம் (கு), ச-வர்க்கம்(சு) இவ்வாறு ப வர்க்கம் வரை இவை உதி³த் எனப்படும்
தத் ஏவம்‌ அ இத்யஷ்டாத³ஸா²நாம்ʼ ஸம்ஜ்ஞா = அதனால் இவ்விதம் அ என்பது பதினெட்டு ஸவர்ண எழுத்துக்களை குறிக்கும் (3 ஹ்ரஸ்வதீர்க்கப்லுதம் x 3 உதாத்தஅநுதாத்தஸ்வரிதம் x 2 அநுநாசிகஅநநுநாசிக)
ததே²காரோகாரௌ = (ததா² + இகார + உகாரௌ) = இவ்விதமே இ உ ஆகிய எழுத்துக்களும் பதினெட்டு ஸவர்ண எழுத்துக்களை குறிக்கும்
ருʼகாரஸ்த்ரிம்ʼஶத: = ரு’ காரம் முப்பது ஸவர்ண எழுத்துக்களை குறிக்கும் (ரு’ காரத்தின் பதினெட்டு, ல்ருகாரத்தின் பனிரெண்டு எழுத்துக்கள் சேர்ந்து 30 எழுத்துக்கள்)
ஏவம்ʼ – ல்ருʼகாரோ(அ)பி = இதே விதமாக ல்ரு-காரமும் முப்பது ஸவர்ண எழுத்துக்களை குறிக்கும்
ஏசோ த்³வாத³ஸா²நாம்‌ (ஏச: த்³வாத³ஸா²நாம்‌) = ஏ ஓ ஐ ஔ ஆகியவை பனிரெண்டு ஸவர்ண எழுத்துக்களைக் குறிக்கும்
அநுநாஸிகாநநுநாஸிக பே⁴தே³ந யவலா த்³விதா⁴ = ய வ ல மூன்று எழுத்துக்களும் அநுநாசிக மற்றும் அநநுநாசிகம் என்று இரு ஸவர்ண எழுத்துக்களைக் குறிக்கும்
தேந அநநுநாஸிகா தே த்³வயோ: த்³வயோ: ஸம்ஜ்ஞா) = மீதம் உள்ள ஹ மற்றும் ர ஸவர்ண எழுத்துக்கள் தனியாக ஏதும் இல்லை

இது ஒரு முக்கியமான விதி. இதில் இரண்டு பகுதிகள் உள்ளன.
(1) ஸவர்ண எழுத்துக்கள் எவை என்று முதலில் தீர்மானம் செய்யப் படுகிறது. அண் பிரத்யஹாரத்தில் (அ, இ, உ, ரு, ல்ரு, ஏ, ஓ, ஐ, ஔ, ஹ், ய், வ், ர், ல்) ஆகிய எழுத்துக்கள் ஒவ்வொன்றும் தம் வரிசையில், (உதாத்தம், அநுத்தாதம் ஆகிய) வகைகளில் ஸவர்ண எழுத்துகள்.

ஒரு உதாரணம்: सुधी + उपास्य: = सुध्युपास्य:

இது इकोयणचि என்கிற சூத்திரத்தின்படி ஏற்பட்ட சந்தி. இந்த சூத்திரம் இக் ப்ரத்யாஹாரம் வரும் இடத்தில் யண் பிரதியாஹாரத்தில் உள்ள எழுத்தாக மாறும் என்கிறது. இதில் யண் என்பது विधीयमान – சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. सुधी (सुध्ई) என்ற சொல்லின் இறுதியில் உள்ள தீர்க்க “ஈ”காரம் “இகோ யணசி” என்ற சூத்திரத்தை பயன்படுத்தும் போது “இ”காரமாகவே கருதப் படுகிறது. இங்கு ஈகாரம் अविधीयमान: – சூத்திரத்தில் வெளிப்படையாகச் சொல்லப் படாதது. ஒரு எழுத்தின் தீர்க்க, ப்லுத எழுத்துக்கள் அதன் ஸவர்ண எழுத்துக்கள். இவ்வாறு வெளிப்படையாக சொல்லப்படாவிடில், ஸவர்ண எழுத்துக்கள் எல்லாவற்றின் மீதும் இலக்கண விதியை பயன்படுத்தமுடியும்.
(2) ஐந்து வகையான எழுத்துக்கள் (கு சு டு து பு) ஆகியவை தம் வரிசையில் உள்ள மற்ற எழுத்துக்களுடன் (அதாவது கு, கு2, கு3, கு4, ஙு) ஸவர்ணமாகும். அதனால் वाक् + ईश = वागीश: என்பதில் க தன் ஸவர்ண எழுத்தாக மாறுவதை காணலாம். இதே போல மற்ற ச, ட, த, ப ஆகியவையும் மாறும்.


१२ पर संनिकर्ष संहिता १ । ४ । १०९ ॥

वर्णानामतिशयित संनिधि संहितासंज्ञ स्यात्‌ ।।.

12 பர: ஸம்ʼநிகர்ஷ ஸம்ʼஹிதா 1 | 4 |  109 ||

வர்ணாநாமதிஶயித ஸம்ʼநிதி⁴ ஸம்ʼஹிதாஸம்ஜ்ஞ ஸ்யாத்‌

வர்ணாநாம் = எழுத்துக்களுடைய
அதிஶயித = பக்கத்தில் இருக்கும் (இடைவெளி இன்றி உச்சரிக்கப் படும்) சொல்
ஸம்ʼநிதி⁴ ஸம்ʼஹிதா ஸம்ஜ்ஞ = ஸம்ஹிதா அல்லது சந்தி எனப்படும்

எழுத்துக்கள் அருகருகே நெருங்கி அமைந்து உச்சரிக்கப் படுவதால், இணைந்து ஒற்றைச் சொல்லாக ஒலிப்பதை ஸம்ஹிதா என்று அழைக்கப் படுகிறது
இரு எழுத்துக்களை சந்தி கொண்டு இணைக்க முதலில் வக்தா (சொல்பவர்) ஒரு எழுத்தையும் இன்னொரு எழுத்தையும் உச்சரிக்கும் போது, நீண்ட இடைவெளி விட்டு உச்சரித்தால் சந்தி ஏற்படாது. உச்சரிக்கும் இடைவெளி அரை மாத்திரையோ அதற்கு குறைவாக இருந்தாலே ஸம்ஹிதா என்று கருத வேண்டும்.
உதா: मधु + अरि = मध्वरि
दधि + अत्र = दध्यत्र


१३ हलोऽनन्तरा संयोग  १ । १ । ७ ॥

अज्भिरव्यवहिता हल संयोगसंज्ञा स्यु ।।.

13 ஹலோ(அ)நந்தரா ஸம்ʼயோக³  1 | 1 |  7 ||

அஜ்பி⁴ரவ்யவஹிதா ஹல ஸம்ʼயோக³ஸம்ஜ்ஞா ஸ்யு ||

அஜ்பி⁴: அவ்யவஹிதா ஹல: = (அச்) உயிர் எழுத்துக்கள் இல்லாத மெய் எழுத்துகளின் கூட்டு
ஸம்ʼயோக³ஸம்ஜ்ஞா ஸ்யு: = ஸம்யோக ஸம்ஜ்ஞா எனப்படும்

உயிர் எழுத்துக்கள் அன்றி, மெய்யெழுத்துக்கள் ஒன்றாக கூட்டு சேர்வது ஸம்யோகம் எனப்படும். அதாவது மெய்யெழுத்துக்கள் (ஹல்) இடையில் வேறு எழுத்துக்கள் (அதாவது உயிர் எழுத்துக்கள்) வராமல் தொடர்ந்து ஒரு சொல்லில் காணப்படுவதே ஸம்யோகம் எனப்படும். மெய்கள் இரண்டோ, அல்லது அதற்கும் மேற்பட்டதோ ஒரு சொல்லில் தொடர்ந்து வரும் வாய்ப்பு உண்டு.
உதாரணம்: அக்நி (க்ந), இந்த்ர (ந்த்)


१४ सुप्तिङन्तं पदम्‌ १ । ४ । १४ ॥

सुबन्तं तिङन्तं च पदसंज्ञं स्यात्‌ ।।.

14 ஸுப்திஙந்தம்ʼ பத³ம்‌ 1 |  4 |  14 ||

ஸுப³ந்தம்ʼ திஙந்தம்ʼ ச பத³ஸம்ஜ்ஞம்ʼ ஸ்யாத்‌ ||

ஸுப் அந்தம் = ஸுப் என்ற பிரத்யயத்தில் முடியும் சொற்கள்
திங் அந்தம் = திங் என்ற பிரத்யயத்தில் முடியும் சொற்கள்
பத³ஸம்ஜ்ஞம்ʼ ஸ்யாத்‌ = பதம் எனப்படும்

ராம என்பது போன்ற பெயர்ச்சொல், எந்த வேற்றுமை உருபும் சேராமல் இருக்கும் போது அதற்கு பெயர் ப்ராதிபதிகம் (प्रातिपदिक). அந்த ப்ராதிபதிகத்துடன் ஸுப் என்கிற பின்னொட்டு சேர்ந்து விபக்திகளை (வேற்றுமை உருபுகளை) உருவாக்குகிறது. ஆக ஸுப் என்றால் பெயர்சொற்கள்.
ராம + ஸுப் = ராம: (ராமஹ)
நில், செல், போன்ற வினைச்சொற்கள் சம்ஸ்க்ருதத்தில் தனியான ஒரு வேர்ச்சொல்லில் இருந்து உருவாக்கப் படுகின்றன. உதாரணமாக பூ⁴ என்ற தாது ப⁴வதி என்ற வினைச்சொல் ஆகிறது. இதற்கு திங் என்னும் பின்னொட்டு சேர்க்கப் படுகிறது.
பூ⁴ + ஸப் + திப் = ப⁴வதி
ஆக பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களும் பதம் எனப் படும். இவ்வாறு பின்னொட்டு எதுவும் சேர்க்கப் படாதது சப்தம் (शब्द) எனப்படும்.

इति संज्ञाप्रकरणम्‌