ஸம்ஜ்ஞா ப்ரகரணம் – முன்னுரை

லகு சித்தாந்த கௌமுதியில் முதல் பிரகரணம் ஸம்ஜ்ஞா ப்ரகரணம். ஸம்ஜ்ஞா என்றால் கலைச்சொற்கள் அல்லது பொருள் பொதிந்த பெயர்கள் என்று அர்த்தம். யா யா ஸம்ஜ்ஞா ஸா ஸா ப்ரயோஜனவதீ (या या संज्ञा सा सा प्रयोजनवती) என்றொரு பழமொழி இருக்கிறது. எல்லா ஸம்ஜ்ஞாக்களுக்கும் ஏதாவது ஒரு பயன் இருக்க வேண்டும் என்பது இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இங்கே வ்யாகரணத்தில் (இலக்கணத்தில்) விதிகளை விளக்குவதற்கு சில பெயர்களை பாணினி மகரிஷி கொடுத்துள்ளார். இவை அஷ்டாத்யாயி நூலில் நூற்றுக்கு மேல் காணப்படுகின்றன. அவற்றில் அடிப்படையானவற்றை லகு சித்தாந்த கௌமுதி நூலின் ஸம்ஜ்ஞா ப்ரகரணத்தில் இந்நூலின் ஆசிரியர் வரதராஜர் தொகுத்துக் கொடுத்துள்ளார்.

துவக்கம் (மங்களாசரண ஸ்லோகம்)

नत्वा सरस्वतीं देवीं शुद्धां गुण्यां करोम्यहम्।
पाणिनीयप्रवेशाय लघुसिद्धान्तकौमुदीम्।।

நத்வா ஸரஸ்வதீம்ʼ தே³வீம்ʼ ஸு²த்³தா⁴ம்ʼ கு³ண்யாம்ʼ கரோம்யஹம்|
பாணிநீயப்ரவேஸா²ய லகு⁴ஸித்³தா⁴ந்தகௌமுதீ³ம்||

அனுபந்த சதுஷ்டயம்: அனுபந்தம் என்பது தொடர்பு. அனுபந்த சதுஷ்ட்யம் என்பது நான்கு வகை தொடர்புகள். கல்வி கற்க புதிதாக துவங்குபவர்கள் இந்த நான்கு தொடர்புகளை அறிந்து கொள்வது அவசியம். லகு சித்தாந்த கௌமுதி குறித்து நான்கு வகை தொடர்புகள் இந்த மங்களாசரண ஸ்லோகத்தில் தரப்பட்டுள்ளது. அவையாவன

 • விஷயம் – லகு சித்தாந்த கௌமுதி. என்ன படிக்கிறோம் என்று தெரிந்து கொள்ள இந்த நூலின் பெயரை முதலிலேயே கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.
 • ஸம்ப³ந்த⁴ம் – தொடர்பு, பாணிநீயம் என்பது பாணிநியின் வியாகரண நூலைக் குறிக்கும் – அஷ்டாத்யாயியைக் குறிக்கும், அது சம்பந்தமான நூல் இது
 • ப்ரயோஜனம் – இதனால் என்ன பலன் கிட்டும் என்பது அடுத்து வரும் தொடர்பு – பாணிநீய பிரவேசம் – பாணிநீய இலக்கணத்தில் நுழைதல் என்பது இந்த நூலின் பயன். பாணினியின் அஷ்டாத்யாயி இலக்கணத்தில் சுமார் நான்காயிரம் சூத்திரங்கள் உள்ளன – அவற்றை சுருக்கி ஆயிரத்துச் சொச்சம் சூத்திரங்களை மட்டுமே இந்த நூலில் ஆசிரியர் கருத்து தருவதால், பெரிய நூலான அஷ்டாத்யாயி நூலை அணுகுவதற்கு இது உபயோகமாகும் என்ற பிரயோஜனத்தை இங்கே குறிப்பிடுகிறார். ப்ரயோஜனமனுத்³ரிஸ்²ய ந மந்தோ³(அ)பி ப்ரவர்ததே
  (प्रयोजनमनुद्रिश्य न मन्दोऽपि प्रवर्तते) என்றொரு சம்ஸ்க்ருத பழமொழி உண்டு. பிரயோஜனம் இல்லாமல் முட்டாள் கூட காரியம் செய்வதில்லை என்று பொருள். ஆகவே இதனால் என்ன பயன் கிட்டும் என்பது மிக முக்கியமான தொடர்பு.
 • அதிகாரி – இந்த நூலை படிப்பவர்க்கு என்ன தகுதி தேவை என்று கூறுவது மிக முக்கியமான தொடர்பு. அடிப்படை அறிவியல் கூடத் தெரியாதவர் அஸ்ட்ரோஃபிசிக்ஸ் நூலைப் படிக்க இயலாதோ அதுபோல சில நூல்களை சிலர் தான் படிக்க முடியும். இந்த நூலைப் படிப்பவர்க்கு தேவையான அதிகாரம் – தகுதி – பாணிநீய பிரவேசம் செய்ய விருப்பம் மட்டுமே

ஸம்ஜ்ஞா ப்ரகரணத்தில்…
லகு சித்தாந்த கௌமுதியின் ஸம்ஜ்ஞா ப்ரகரணத்தில் பதினான்கே சூத்திரங்கள் மட்டுமே தரப் பட்டுள்ளன. இவற்றில்

 • மாஹேஸ்வர சூத்திரங்கள் எனப்படும் உயிர் மற்றும் மெய் எழுத்துக்களின் வரிசை
 • அவற்றின் மூலம் உருவாகும் ப்ரத்யாஹார குறிப்புகள்
 • எழுத்துக்களை சரியாக உச்சரிக்கும் முறை
 • ஹல், இத், லோபம், பிரத்யயம், ஸவர்ணம், ஸம்ஹிதா, சம்யோகம், பதம் ஆகிய கலைச்சொற்கள்

எப்படி படிப்பது?
பாணினியின் அஷ்டாத்யாயி சூத்திரங்கள் ஒவ்வொன்றும் மிகவும் அளவில் சுருக்கமாகவும் அதே சமயம் ஆழ்ந்த அர்த்தம் கொண்டதாகவும் அமைந்துள்ளது. சூத்திரங்களிலேயே வார்த்தைகளை ஒன்றுடன் ஒன்றாகச் சேர்த்து, முந்தைய சூத்திரங்களில் இருந்து கொண்டு கூட்டி பொருள் கொள்ளத் தக்கதாகவும் அமைக்கப் பட்டுள்ளது.

லகு சித்தாந்த கௌமுதியில் முதலில் பாணினியின் சூத்திரம் ஒன்றை கொடுத்து விட்டு, அதற்கு கீழே ரத்தின சுருக்கமான உரையை ஆசிரியர் கொடுத்திருக்கிறார்.

படிக்கும் போது, முதலில் பாணிநியின் சூத்திரத்தில் வார்த்தைகளை பிரித்துக் (அந்வயம்) கொள்ள வேண்டும். தமிழில் ராமனை, ராமனால், ராமனுக்கு என்று ஐ, ஆல், கு என்று வேற்றுமை உருபுகளை சேர்ப்பது போல பாணினியின் சூத்திரங்களிலேயே இன்ன எழுத்துக்கு பதிலாக இன்ன எழுத்து என்று விதிப்பதற்கு ஏற்றவாறு வேற்றுமை உருபுகளை பயன்படுத்தி உள்ளார். ஆகையால் சூத்திரத்தின் சொற்களை அவற்றின் வேற்றுமை உருபு அறிந்து பிரித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரித்துக் கொள்ளும் போதே ஓரளவு அர்த்தம் புரிந்து விடும். பல சூத்திரங்களில் அப்படியும் புரியாது. அப்போது வ்ருத்தியில் உள்ள (உரையில்) விளக்கத்தைப் பார்த்தால் புரியும்.

2 Comments ஸம்ஜ்ஞா ப்ரகரணம் – முன்னுரை

 1. Pingback: The woes and joys of a Tamilist reading Pāṇini

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)