கீதை – எட்டாவது அத்தியாயம்

அக்ஷர பிரம்ம யோகம்

முற்கூறிய நான்குவித பக்தர்களும் தனித்தனியே கைப்பற்ற வேண்டிய பக்தி வழிகளும் அவைகளுக்குள் வித்தியாசமும் கூறப்படுகின்றன. ஆக்ஞையினின்றும் ஆவி கிளம்புங்கால் எத்தகைய எண்ணம் மனிதனின் மனத்துக்குள் இருக்கின்றதோ அத்தகைய பலனையே மறுபிறவியில் பெறுவானாதலால் பக்தர்கள் இறக்கும் தருணத்தில் கடவுளைத் தியானித்திருப்பது அவசியம்.

வாழ்நாட்களில் மனதுக்குக் கடவுளிடம் நிலைத்திருக்கும் பழக்கத்தை உண்டுபண்ணினால்தான் அம்மனம் மரண காலத்தில் கடவுளிடம் நிலைபெறும். ஆகையால் பக்தர் அனைவரும் தங்கள் வாழ்நாட்களில் மனதால் கடவுளைத் தியானம் செய்துகொண்டே தங்கள் கர்மங்களைச் செய்ய வேண்டும்.

நான்காவது வகையான பக்தர்கள் பெறும் பரமபதம்தான் அழிவற்றது. மற்ற பலனெல்லாம் அழிவுற்றது. பக்தர்கள் இறந்தபிறகு ஆத்மா செல்லும் வழி இருவகைப்பட்டிருக்கும். ஒன்றில் சென்றால் என்றைக்கும் திரும்பி வராத வீட்டைப் பெறலாம். மற்றொன்றில் சென்றால், காலக் கிரமத்தில் திரும்பி வரவேண்டிய இடத்தை அடையலாம்.


अर्जुन उवाच
किं तद्ब्रह्म किमध्यात्मं किं कर्म पुरुषोत्तम ।
अधिभूतं च किं प्रोक्तमधिदैवं किमुच्यते ॥८- १॥

அர்ஜுந உவாச
கிம் தத்³ப்³ரஹ்ம கிமத்⁴யாத்மம் கிம் கர்ம புருஷோத்தம |
அதி⁴பூ⁴தம் ச கிம் ப்ரோக்தமதி⁴தை³வம் கிமுச்யதே || 8- 1||

அர்ஜுந உவாச = அர்ஜுனன் செல்லுகிறான்
புருஷோத்தம தத் ப்³ரஹ்ம கிம்? = புருஷோத்தமா, அந்த பிரம்மம் எது?
அத்⁴யாத்மம் கிம் = ஆத்ம ஞானம் யாது?
கிம் கர்ம = கர்மமென்பது யாது?
அதி⁴பூ⁴தம் கிம் ப்ரோக்தம் = பூத ஞானம் என்று எது அழைக்கப் படுகிறது?
அதி⁴தை³வம் கிம் உச்யதே = தேவ ஞானம் என்பது எதனை அழைக்கிறார்கள்?

அர்ஜுனன் செல்லுகிறான்: அந்த பிரம்மம் எது? ஆத்ம ஞானம் யாது? புருஷோத்தம, கர்மமென்பது யாது? பூத ஞானம் யாது? தேவஞானம் என்பது எதனை?


अधियज्ञः कथं कोऽत्र देहेऽस्मिन्मधुसूदन ।
प्रयाणकाले च कथं ज्ञेयोऽसि नियतात्मभिः ॥८- २॥

அதி⁴யஜ்ஞ: கத²ம் கோऽத்ர தே³ஹேऽஸ்மிந்மது⁴ஸூத³ந |
ப்ரயாணகாலே ச கத²ம் ஜ்ஞேயோऽஸி நியதாத்மபி⁴: || 8- 2||

மது⁴ஸூத³ந! அதி⁴யஜ்ஞ: அத்ர க: = யாகஞானம் என்பதென்ன?
அஸ்மிந் தே³ஹே கத²ம் ? = இந்த தேகத்தில் எப்படி (இருக்கிறார்?)
ச நியதாத்மபி⁴: = மேலும் தம்மைத் தாம் கட்டியவர்களால்
ப்ரயாணகாலே கத²ம் ஜ்ஞேய: அஸி = இறுதிக் காலத்திலேனும் எவ்வாறு அறியப் படுகிறாய்?

யாகஞானம் என்பதென்ன? தம்மைத் தாம் கட்டியவர்களால் இறுதிக் காலத்திலேனும் இவ்வுலகத்தில் நீ அறியப்படுவதெங்ஙனே?


श्रीभगवानुवाच
अक्षरं ब्रह्म परमं स्वभावोऽध्यात्ममुच्यते ।
भूतभावोद्भवकरो विसर्गः कर्मसंज्ञितः ॥८- ३॥

ஸ்ரீப⁴க³வாநுவாச
அக்ஷரம் ப்³ரஹ்ம பரமம் ஸ்வபா⁴வோऽத்⁴யாத்மமுச்யதே |
பூ⁴தபா⁴வோத்³ப⁴வகரோ விஸர்க³: கர்மஸம்ஜ்ஞித: || 8- 3||

ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
ப்³ரஹ்ம அக்ஷரம் பரமம் = அழிவற்ற பரம்பொருளே பிரம்மம்
ஸ்வபா⁴வ: அத்⁴யாத்மம் உச்யதே = அதனியல்பை அறிதல் ஆத்ம ஞானமெனப்படும்
பூ⁴தபா⁴வ: உத்³ப⁴வகர: = உயிர்த் தன்மையை விளைவிக்கும் இயற்கை
விஸர்க³: கர்மஸம்ஜ்ஞித: = இயற்கை கர்மமெனப்படுகிறது

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அழிவற்ற பரம்பொருளே பிரம்மம். அதனியல்பை அறிதல் ஆத்ம ஞானமெனப்படும். உயிர்த் தன்மையை விளைவிக்கும் இயற்கை கர்மமெனப்படுகிறது.


अधिभूतं क्षरो भावः पुरुषश्चाधिदैवतम् ।
अधियज्ञोऽहमेवात्र देहे देहभृतां वर ॥८- ४॥

அதி⁴பூ⁴தம் க்ஷரோ பா⁴வ: புருஷஸ்²சாதி⁴தை³வதம் |
அதி⁴யஜ்ஞோऽஹமேவாத்ர தே³ஹே தே³ஹப்⁴ருதாம் வர: || 8- 4||

க்ஷரோ பா⁴வ: அதி⁴பூ⁴தம் = அழிவுபடும் இயற்கையைக் குறித்தது பூத ஞானம்
புருஷ அதி⁴தை³வதம் ச = புருஷனைப் பற்றியது தேவ ஞானம்
தே³ஹப்⁴ருதாம் வர: = உடம்பெடுத்தோரில் உயர்ந்தவனே!
அத்ர தே³ஹே அஹம் ஏவ அதி⁴யஜ்ஞ: = உடம்புக்குள் என்னையறிதல் யாக ஞானம்

அழிவுபடும் இயற்கையைக் குறித்தது பூத ஞானம். புருஷனைப் பற்றியது தேவ ஞானம். உடம்பெடுத்தோரில் உயர்ந்தவனே! உடம்புக்குள் என்னையறிதல் யாக ஞானம்.


अन्तकाले च मामेव स्मरन्मुक्त्वा कलेवरम् ।
यः प्रयाति स मद्भावं याति नास्त्यत्र संशयः ॥८- ५॥

அந்தகாலே ச மாமேவ ஸ்மரந்முக்த்வா கலேவரம் |
ய: ப்ரயாதி ஸ மத்³பா⁴வம் யாதி நாஸ்த்யத்ர ஸம்ஸ²ய: || 8- 5||

ய: அந்தகாலே ச மாம் ஏவ ஸ்மரந் = எவன் இறுதிக் காலத்தில் எனது நினைவுடன்
கலேவரம் முக்த்வா ப்ரயாதி = உடம்பைத் துறந்து கிளம்புகிறானோ (இறப்போன்)
ஸ: மத்³பா⁴வம் யாதி = எனதியல்பை எய்துவான்
நாஸ்தி அத்ர ஸம்ஸ²ய: = இதில் ஐயமில்லை.

இறுதிக் காலத்தில் உடம்பைத் துறந்து எனது நினைவுடன் இறப்போன் எனதியல்பை எய்துவான். இதில் ஐயமில்லை.


यं यं वापि स्मरन्भावं त्यजत्यन्ते कलेवरम् ।
तं तमेवैति कौन्तेय सदा तद्भावभावितः ॥८- ६॥

யம் யம் வாபி ஸ்மரந்பா⁴வம் த்யஜத்யந்தே கலேவரம் |
தம் தமேவைதி கௌந்தேய ஸதா³ தத்³பா⁴வபா⁴வித: || 8- 6||

கௌந்தேய! அந்தே = குந்தியின் மகனே! மரணத்தருவாயில்
யம் யம் பா⁴வம் வா ஸ்மரந் அபி = எந்தெந்த ஸ்வரூபத்தை சிந்தித்த வண்ணமாய்
கலேவரம் த்யதி = உடலைத் துறக்கின்றானோ
ஸதா³ தத்³பா⁴வ பா⁴வித: = எப்போதும் அத்தன்மையிலே கருத்துடையவனாய்
தம் தம் ஏவ ஏதி = அந்த அந்த ஸ்வரூபத்தையே அடைகிறான்

ஒருவன் முடிவில் எவ்வெத் தன்மையை நினைப்பானாய் உடலைத் துறக்கின்றானோ, அவன் எப்போதும் அத்தன்மையிலே கருத்துடையவனாய் அதனையே எய்துவான்.


तस्मात्सर्वेषु कालेषु मामनुस्मर युध्य च ।
मय्यर्पितमनोबुद्धिर्मामेवैष्यस्यसंशयम् ॥८- ७॥

தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு மாமநுஸ்மர யுத்⁴ய ச |
மய்யர்பிதமநோபு³த்³தி⁴ர்மாமேவைஷ்யஸ்யஸம்ஸ²யம் || 8- 7||

தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு = ஆதலால், எல்லாக் காலங்களிலும்
மாம் அநுஸ்மர: = என்னை நினை
யுத்⁴ய ச = போர் செய்
மயி அர்பித மந: பு³த்³தி⁴: = என்னிடத்தே மனத்தையும், புத்தியையும் அர்ப்பணம் செய்வதனால்
அஸம்ஸ²யம் மாம் ஏவ ஏஷ்யஸி = ஐயமின்றி என்னையே பெறுவாய்

ஆதலால், எல்லாக் காலங்களிலும் என்னை நினை, போர் செய். என்னிடத்தே மனத்தையும், புத்தியையும் அர்ப்பணம் செய்வதனால் என்னையே பெறுவாய்.


अभ्यासयोगयुक्तेन चेतसा नान्यगामिना ।
परमं पुरुषं दिव्यं याति पार्थानुचिन्तयन् ॥८- ८॥

அப்⁴யாஸயோக³யுக்தேந சேதஸா நாந்யகா³மிநா |
பரமம் புருஷம் தி³வ்யம் யாதி பார்தா²நுசிந்தயந் || 8- 8||

பார்த²! ந அந்ய கா³மிநா = பார்த்தா! வேறிடஞ் செல்ல விரும்பாமல்
யோக³ அப்⁴யாஸ யுக்தேந சேதஸா = யோகம் பயிலும் சித்தத்துடன்
அநுசிந்தயந் = சிந்தனை செய்து கொண்டிருப்போன்
தி³வ்யம் பரமம் புருஷம் = தேவனாகிய பரம புருஷனை
யாதி = அடைகிறான்.

வேறிடஞ் செல்லாமலே யோகம் பயிலும் சித்தத்துடன் சிந்தனை செய்து கொண்டிருப்போன் தேவனாகிய பரம புருஷனை அடைகிறான்.


कविं पुराणमनुशासितारमणोरणीयांसमनुस्मरेद्यः ।
सर्वस्य धातारमचिन्त्यरूपमादित्यवर्णं तमसः परस्तात् ॥८- ९॥

கவிம் புராணமநுஸா²ஸிதாரமணோரணீயாம்ஸமநுஸ்மரேத்³ய: |
ஸர்வஸ்ய தா⁴தாரமசிந்த்யரூபமாதி³த்யவர்ணம் தமஸ: பரஸ்தாத் || 8- 9||

கவிம் புராணம் = அறிவாளியானவரை, பழமையானவரை
அநுஸா²ஸிதாரம் = எல்லாவற்றையும் ஆள்பவரை
அணோ: அணீயாம்ஸம் = அணுவைக் காட்டிலும் நுண்ணியவரை
ஸர்வஸ்ய தா⁴தாரம் = எல்லாவற்றையும் தாங்குபவரை
ஆதி³த்யவர்ணம் = சூரியனின் நிறம் கொண்டிருப்பவரை
அசிந்த்யரூபம் = எண்ணுதற்கரிய வடிவுடையவரை
தமஸ: பரஸ்தாத் = அஞ்ஞான இருளுக்கு அப்பற்பட்டவரை
ய: அநுஸ்மரேத் = எவன் நினைக்கிறானோ

கவியை, பழையோனை, ஆள்வோனை, அணுவைக் காட்டிலும் அணுவை, எல்லாவற்றையும் தரிப்பவனை எண்ணுதற்கரிய வடிவுடையோனை, இருளுக்கப்பால் கதிரோனது நிறங்கொண்டிருப்பானை, எவன் நினைக்கின்றானோ,


प्रयाणकाले मनसाचलेन भक्त्या युक्तो योगबलेन चैव ।
भ्रुवोर्मध्ये प्राणमावेश्य सम्यक् स तं परं पुरुषमुपैति दिव्यम् ॥८- १०॥

ப்ரயாணகாலே மநஸாசலேந ப⁴க்த்யா யுக்தோ யோக³ப³லேந சைவ |
ப்⁴ருவோர்மத்⁴யே ப்ராணமாவேஸ்²ய ஸம்யக் ஸ தம் பரம் புருஷமுபைதி தி³வ்யம் || 8- 10||

ப்ரயாணகாலே = இறுதிக் காலத்தில்
அசலேந மநஸா = அசைவற்ற மனத்துடன்
ப்⁴ருவோ: மத்⁴யே ப்ராணம் ஸம்யக் ஆவேஸ்²ய = புருவங்களிடையே உயிரை நன்கேற்றி
ப⁴க்த்யா யோக³ப³லேந ச யுக்த: = பக்தியுடனும், யோக பலத்துடனும் (நினைத்துக் கொண்டு)
தம் தி³வ்யம் பரம் புருஷம் உபைதி = அவன் அந்தக் கடவுளாகிய பரம புருஷனை அடைகிறான்

இறுதிக் காலத்தில் அசைவற்ற மனத்துடன், புருவங்களிடையே உயிரை நன்கேற்றி, பக்தியுடனும், யோக பலத்துடனும், எவன் நினைக்கிறானோ அவன் அந்தக் கடவுளாகிய பரம புருஷனை அடைகிறான்.


यदक्षरं वेदविदो वदन्ति विशन्ति यद्यतयो वीतरागाः ।
यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण प्रवक्ष्ये ॥८- ११॥

யத³க்ஷரம் வேத³விதோ³ வத³ந்தி விஸ²ந்தி யத்³யதயோ வீதராகா³: |
யதி³ச்ச²ந்தோ ப்³ரஹ்மசர்யம் சரந்தி தத்தே பத³ம் ஸங்க்³ரஹேண ப்ரவக்ஷ்யே || 8- 11||

யத் அக்ஷரம் வேத³வித³: வத³ந்தி = எந்த நிலையை வேதமுணர்ந்தோர் அழிவற்ற தென்பர்
வீதராகா³: யதய: யத் விஸ²ந்தி = விருப்பமற்ற முனிகள் எதனுட் புகுவர்
யத் இச்ச²ந்த: ப்³ரஹ்மசர்யம் சரந்தி = எதை விரும்பி பிரம்மச்சரிய விரதம் காக்கப்படும்
தத் பத³ம் தே = அந்த பதத்தைப் பற்றி உனக்கு
ஸங்க்³ரஹேண ப்ரவக்ஷ்யே = சுருக்கமாகச் சொல்லுகிறேன்

எந்த நிலையை வேதமுணர்ந்தோர் அழிவற்ற தென்பர், விருப்பமற்ற முனிகள் எதனுட் புகுவர். எதை விரும்பி பிரம்மச்சரிய விரதம் காக்கப்படும், அந்த நிலையை உனக்குச் சுருக்கமாகச் சொல்லுகிறேன்.


सर्वद्वाराणि संयम्य मनो हृदि निरुध्य च ।
मूर्ध्न्याधायात्मनः प्राणमास्थितो योगधारणाम् ॥८- १२॥

ஸர்வத்³வாராணி ஸம்யம்ய மநோ ஹ்ருதி³ நிருத்⁴ய ச |
மூர்த்⁴ந்யாதா⁴யாத்மந: ப்ராணமாஸ்தி²தோ யோக³தா⁴ரணாம் || 8- 12||

ஸர்வத்³வாராணி ஸம்யம்ய = எல்லா வாயில்களையும் நன்கு கட்டி
மந: ஹ்ருதி³ நிருத்⁴ய = மனத்தை உள்ளத்தில் நிறுத்தி
ப்ராணம் மூர்த்⁴நி ஆதா⁴ய = உயிரைத் தலையின் உச்சியில் நிலையுறுத்தி
ஆத்மந: யோக³தா⁴ரணாம் ஸ்தி²த: = யோக தாரணையில் உறுதி பெற்று

எல்லா வாயில்களையும் நன்கு கட்டி, மனத்தை உள்ளத்தில் நிறுத்தி, உயிரைத் தலையின் உச்சியில் நிலையுறுத்தி யோக தாரணையில் உறுதி பெற்று,


ओमित्येकाक्षरं ब्रह्म व्याहरन्मामनुस्मरन् ।
यः प्रयाति त्यजन्देहं स याति परमां गतिम् ॥८- १३॥

ஓமித்யேகாக்ஷரம் ப்³ரஹ்ம வ்யாஹரந்மாமநுஸ்மரந் |
ய: ப்ரயாதி த்யஜந்தே³ஹம் ஸ யாதி பரமாம் க³திம் || 8- 13||

ஓம் இதி ஏகாக்ஷரம் ப்³ரஹ்ம = ஓம் என்ற பிரம்ம எழுத்து ஒன்றையே
வ்யாஹரந் மாம் அநுஸ்மரந் = ஜபித்துக்கொண்டு என்னை ஸ்மரிப்பவனாய்
ய: தே³ஹம் த்யஜந் ப்ரயாதி = உடம்பைத் துறந்து
பரமாம் க³திம் யாதி = பரமகதி பெறுகிறான்

ஓம் என்ற பிரம்ம எழுத்து ஒன்றையே ஜபித்துக்கொண்டு என்னை ஸ்மரிப்பவனாய் உடம்பைத் துறப்போன் பரமகதி பெறுகிறான்.


अनन्यचेताः सततं यो मां स्मरति नित्यशः ।
तस्याहं सुलभः पार्थ नित्ययुक्तस्य योगिनः ॥८- १४॥

அநந்யசேதா: ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யஸ²: |
தஸ்யாஹம் ஸுலப⁴: பார்த² நித்யயுக்தஸ்ய யோகி³ந: || 8- 14||

பார்த²: ய: = பார்த்தா! எவன்
அநந்யசேதா: = பிரிது நினைப்பின்றி
நித்யஸ²: ஸததம் மாம் ஸ்மரதி = என்னை எப்பொழுதும் நினைக்கிறானோ
நித்யயுக்தஸ்ய தஸ்ய யோகி³ந: = அந்த நித்தியமாக யோகத்தில் இசைந்திருக்கும் யோகிக்கு
அஹம் ஸுலப⁴: = நான் எளிதில் அகப்படுவேன்

நித்திய யோகத் திசைந்து, பிரிது நினைப்பின்றி என்னை எப்பொழுதும் எண்ணும் யோகிக்கு நான் எளிதில் அகப்படுவேன், பார்த்தா.


मामुपेत्य पुनर्जन्म दुःखालयमशाश्वतम् ।
नाप्नुवन्ति महात्मानः संसिद्धिं परमां गताः ॥८- १५॥

மாமுபேத்ய புநர்ஜந்ம து³:கா²லயமஸா²ஸ்²வதம் |
நாப்நுவந்தி மஹாத்மாந: ஸம்ஸித்³தி⁴ம் பரமாம் க³தா: || 8- 15||

மாம் உபேத்ய = என்னையடைந்து
பரமாம் ஸம்ஸித்³தி⁴ம் க³தா: = பரம சித்தி பெற்ற
மஹாத்மாந: = மகாத்மாக்கள்
அஸா²ஸ்²வதம் து³:கா²லயம் = நிலையற்றதும் துன்பத்தின் ஆலயமும் ஆகிய
புநர்ஜந்ம ந ஆப்நுவந்தி = மறு பிறப்பை யடைய மாட்டார்

என்னையடைந்து பரம சித்தி பெற்ற மகாத்மாக்கள், மறுபடி நிலையற்றதும் துன்பத்தின் ஆலயமும் ஆகிய மறு பிறப்பை யடைய மாட்டார்.


आब्रह्मभुवनाल्लोकाः पुनरावर्तिनोऽर्जुन ।
मामुपेत्य तु कौन्तेय पुनर्जन्म न विद्यते ॥८- १६॥

ஆப்³ரஹ்மபு⁴வநால்லோகா: புநராவர்திநோऽர்ஜுந |
மாமுபேத்ய து கௌந்தேய புநர்ஜந்ம ந வித்³யதே || 8- 16||

அர்ஜுந! ஆப்³ரஹ்மபு⁴வநாத் = பிரம்மலோகம் வரை
லோகா: புந: ஆவர்திந: = எல்லா உலகங்களும் மறுபிறப்பு உடையன
து கௌந்தேய = ஆனால் குந்தி மகனே!
மாம் உபேத்ய = என்னை அடைந்தவனுக்கு
புநர்ஜந்ம ந வித்³யதே = மறுபிறப்பு இல்லை

அர்ஜுனா, பிரம்மலோகம் வரை எல்லா உலகங்களும் மறுபிறப்பு உடையன. குந்தி மகனே! என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பு இல்லை.


सहस्रयुगपर्यन्तमहर्यद्ब्रह्मणो विदुः ।
रात्रिं युगसहस्रान्तां तेऽहोरात्रविदो जनाः ॥८- १७॥

ஸஹஸ்ரயுக³பர்யந்தமஹர்யத்³ப்³ரஹ்மணோ விது³: |
ராத்ரிம் யுக³ஸஹஸ்ராந்தாம் தேऽஹோராத்ரவிதோ³ ஜநா: || 8- 17||

ப்³ரஹ்மண: யத் அஹ: = பிரம்மாவுக்கு எது ஒரு பகலோ (அது)
ஸஹஸ்ர யுக³ பர்யந்தம் = ஆயிரம் யுகங்களைக் கொண்டது
ராத்ரிம் யுக³ஸஹஸ்ராந்தரம் = இரவும் ஆயிரம் யுகங்களைக் கொண்டது என்று
விது³: = அறிகிறார்களோ
தே ஜநா: அஹோராத்ரவித³: = அந்த மக்களே இரவு பகலின் தத்துவத்தை அறிந்தவர்கள்

பிரம்மத்துக்கு ஆயிரம் யுகம் ஒரு பகல் ஆயிரம் யுகம் ஓரிரவு. இதையறிந்தோரே இராப் பகலின் இயல்பறிவார்.


अव्यक्ताद्व्यक्तयः सर्वाः प्रभवन्त्यहरागमे ।
रात्र्यागमे प्रलीयन्ते तत्रैवाव्यक्तसंज्ञके ॥८- १८॥

அவ்யக்தாத்³வ்யக்தய: ஸர்வா: ப்ரப⁴வந்த்யஹராக³மே |
ராத்ர்யாக³மே ப்ரலீயந்தே தத்ரைவாவ்யக்தஸம்ஜ்ஞகே || 8- 18||

அஹராக³மே = பிரம்மாவின் பகல் தொடங்கும் போது
ஸர்வா: வ்யக்தய: = எல்லா விதமான சராசர தொகுதிகளும்
அவ்யக்தாத் ப்ரப⁴வந்தி = மறைவுபட்ட உலகத்தினின்றும் வெளிப்படுகின்றன
ராத்ர்யாக³மே = இரவு வந்தவுடன்
தத்ர அவ்யக்த ஸம்ஜ்ஞகே ஏவ = அந்த மறைவுலகத்திலேயே
ப்ரலீயந்தே = மீண்டும் மறைகின்றன

‘அவ்யக்தம்,அதாவது, மறைவுபட்ட உலகத்தினின்றும் தோற்றப் பொருள்கள் வெளிப்படுகின்றன. இரவு வந்தவுடன் அந்த மறைவுலகத்துக்கே மீண்டும் கழிந்துவிடுகின்றன.


भूतग्रामः स एवायं भूत्वा भूत्वा प्रलीयते ।
रात्र्यागमेऽवशः पार्थ प्रभवत्यहरागमे ॥८- १९॥

பூ⁴தக்³ராம: ஸ ஏவாயம் பூ⁴த்வா பூ⁴த்வா ப்ரலீயதே |
ராத்ர்யாக³மேऽவஸ²: பார்த² ப்ரப⁴வத்யஹராக³மே || 8- 19||

பார்த² ஸ: ஏவ அயம் = அர்ஜுனா! அதே இந்த
பூ⁴தக்³ராம: = உயிரினங்களின் தொகுதிகள்
பூ⁴த்வா பூ⁴த்வா அவஸ²: = மீண்டும் மீண்டும் தன் வசமின்றியே
ராத்ர்யாக³மே ப்ரலீயதே = இரவு வந்தவுடன் அழிகிறது
அஹராக³மே ப்ரப⁴வதி = பகல் வந்தவுடன் பிறக்கிறது

இந்த பூதத் தொகுதி ஆதியாகித் தன் வசமின்றியே இரவு வந்தவுடன் அழிகிறது. பார்த்தா, பகல் வந்தவுடன் இது மீண்டும் பிறக்கிறது.


परस्तस्मात्तु भावोऽन्योऽव्यक्तोऽव्यक्तात्सनातनः ।
यः स सर्वेषु भूतेषु नश्यत्सु न विनश्यति ॥८- २०॥

பரஸ்தஸ்மாத்து பா⁴வோऽந்யோऽவ்யக்தோऽவ்யக்தாத்ஸநாதந: |
ய: ஸ ஸர்வேஷு பூ⁴தேஷு நஸ்²யத்ஸு ந விநஸ்²யதி || 8- 20||

து தஸ்மாத் அவ்யக்தாத் = ஆனால் அந்த அவ்யக்தத்தை காட்டிலும்
பர: அந்ய: ஸநாதந: = மிகவும் உயர்ந்த வேறான சாஸ்வதமான
அவ்யக்த: பா⁴வ: ய: = வெளிப்படாத தன்மையுடன் எது இருக்கிறதோ
ஸ: ஸர்வேஷு பூ⁴தேஷு நஸ்²யத்ஸு = அது எல்லா உயிர்களும் அழிகையில்
ந விநஸ்²யதி = அழிவதில்லை

அவ்யக்ததினும் அவ்யக்தமாய் அதற்கப்பால் சநாதன பதமொன்றிருக்கிறது. எல்லா உயிர்களும் அழிகையில் அப்பதம் அழியாது


अव्यक्तोऽक्षर इत्युक्तस्तमाहुः परमां गतिम् ।
यं प्राप्य न निवर्तन्ते तद्धाम परमं मम ॥८- २१॥

அவ்யக்தோऽக்ஷர இத்யுக்தஸ்தமாஹு: பரமாம் க³திம் |
யம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத்³தா⁴ம பரமம் மம || 8- 21||

அவ்யக்த: அக்ஷர: இதி உக்த: = அவ்யக்தம் அழிவற்றதெனப்படும்
தம் பரமாம் க³திம் ஆஹு: = அதனையே பரமகதி யென்பர்
யம் ப்ராப்ய ந நிவர்தந்தே = எதை எய்திய பின் மீள்வதில்லையோ
தத் மம பரமம் தா⁴ம = அது என்னுடைய பரம பதம் (உயர்ந்த வீடு)

அவ்யக்தம் அழிவற்றதெனப்படும். அதனையே பரமகதி யென்பர். எதை எய்தபின் மீள்வதில்லையோ, அதுவே என் பரமபதம்.


पुरुषः स परः पार्थ भक्त्या लभ्यस्त्वनन्यया ।
यस्यान्तःस्थानि भूतानि येन सर्वमिदं ततम् ॥८- २२॥

புருஷ: ஸ பர: பார்த² ப⁴க்த்யா லப்⁴யஸ்த்வநந்யயா |
யஸ்யாந்த:ஸ்தா²நி பூ⁴தாநி யேந ஸர்வமித³ம் ததம் || 8- 22||

பார்த² பூ⁴தாநி யஸ்ய அந்த: ஸ்தா²நி = அர்ஜுனா எவனுள்ளே எல்லா உயிர்களும் இருக்கின்றனவோ
யேந இத³ம் ஸர்வம் ததம் = எவனால் இவை எல்லாம் நிறைந்திருக்கின்றதோ
ஸ: பர: புருஷ: து = அந்த பரம புருஷன்
அநந்யயா ப⁴க்த்யா = வேறிடஞ் செல்லாத பக்தியால்
லப்⁴ய = அடையப் படுவான்

வேறிடஞ் செல்லாத பக்தியால், பார்த்தா, அந்தப் பரம புருஷன் எய்தப்படுவான். அவனுள்ளே எல்லாப் பொருள்களும் நிலைகொண்டன. அவன் இவ்வுலகமெங்கும் உள்ளூரப் பரந்திருக்கிறான்.


यत्र काले त्वनावृत्तिमावृत्तिं चैव योगिनः ।
प्रयाता यान्ति तं कालं वक्ष्यामि भरतर्षभ ॥८- २३॥

யத்ர காலே த்வநாவ்ருத்திமாவ்ருத்திம் சைவ யோகி³ந: |
ப்ரயாதா யாந்தி தம் காலம் வக்ஷ்யாமி ப⁴ரதர்ஷப⁴ || 8- 23||

ப⁴ரதர்ஷப⁴ = பரதர் ஏறே!
யத்ர காலே ப்ரயாதா யோகி³ந: = எக்காலத்தில் இறப்பதால் யோகிகள்
அநாவ்ருத்திம் ச ஆவ்ருத்திம் ஏவ யாந்தி = மீளா நிலையும் மீளும் நிலையும் பெறுவாரோ
தம் காலம் வக்ஷ்யாமி = அக்காலத்தைச் சொல்லுகிறேன்

யோகிகள் இறப்பதால் எக்காலத்தில் மீளா நிலையும் மீளும் நிலையும் பெறுவாரோ, அக்காலத்தைச் சொல்லுகிறேன்.


अग्निर्ज्योतिरहः शुक्लः षण्मासा उत्तरायणम् ।
तत्र प्रयाता गच्छन्ति ब्रह्म ब्रह्मविदो जनाः ॥८- २४॥

அக்³நிர்ஜ்யோதிரஹ: ஸு²க்ல: ஷண்மாஸா உத்தராயணம் |
தத்ர ப்ரயாதா க³ச்ச²ந்தி ப்³ரஹ்ம ப்³ரஹ்மவிதோ³ ஜநா: || 8- 24||

அக்³நி: ஜ்யோதி: அஹ: = தீ, ஒளி, பகல்
ஸு²க்ல: உத்தராயணம் ஷண்மாஸா = சுக்கில பக்ஷம், உத்தராயாணத்தின் ஆறு மாதங்கள்
தத்ர ப்ரயாதா ப்³ரஹ்மவித³: ஜநா:= இவற்றில் இறக்கும் பிரம்ம ஞானிகள்
ப்³ரஹ்ம: க³ச்ச²ந்தி = பிரம்மத்தை அடைகிறார்கள்

தீ, ஒளி, பகல், சுக்கில பக்ஷம், உத்தராயாணத்தின் ஆறு மாதங்கள்; இவற்றில் இறக்கும் பிரம்ம ஞானிகள் பிரம்மத்தை யடைகிறார்கள்.


धूमो रात्रिस्तथा कृष्णः षण्मासा दक्षिणायनम् ।
तत्र चान्द्रमसं ज्योतिर्योगी प्राप्य निवर्तते ॥८- २५॥

தூ⁴மோ ராத்ரிஸ்ததா² க்ருஷ்ண: ஷண்மாஸா த³க்ஷிணாயநம் |
தத்ர சாந்த்³ரமஸம் ஜ்யோதிர்யோகீ³ ப்ராப்ய நிவர்ததே || 8- 25||

தூ⁴ம: ராத்ரி: ததா² க்ருஷ்ண: = புகை, இரவு, கிருஷ்ண பக்ஷம்
த³க்ஷிணாயநம் ஷண்மாஸா = தக்ஷிணாயனத்தின் ஆறு மாதங்கள் இவற்றில் இறக்கும்
தத்ர யோகீ³ சாந்த்³ரமஸம் ஜ்யோதி ப்ராப்ய = அந்த யோகி சந்திரனொளியைப் பெற்றிருந்து
நிவர்ததே = மீளுகிறான்

புகை, இரவு, கிருஷ்ண பக்ஷம், தக்ஷிணாயனத்தின் ஆறு மாதங்கள்; இவற்றில் இறக்கும் யோகி சந்திரனொளியைப் பெற்றிருந்து மீளுகிறான்.


शुक्लकृष्णे गती ह्येते जगतः शाश्वते मते ।
एकया यात्यनावृत्तिमन्ययावर्तते पुनः ॥८- २६॥

ஸு²க்லக்ருஷ்ணே க³தீ ஹ்யேதே ஜக³த: ஸா²ஸ்²வதே மதே |
ஏகயா யாத்யநாவ்ருத்திமந்யயாவர்ததே புந: || 8- 26||

ஹி ஜக³த: ஏதே ஸு²க்ல க்ருஷ்ணே க³தீ = ஏனெனில் உலகத்தில் இந்த ஒளி வழியும், இருள் வழியும்
ஸா²ஸ்²வதே மதே = சாசுவதமாகக் கருதப்பட்டன
ஏகயா அநாவ்ருத்திம் யாதி = இவற்றுள் ஒன்றினால் மனிதன் மீளாப் பதம் பெறுவான்
அந்யயா: புந: வர்ததே = மற்றொன்று மீளும் பதந் தருவது

உலகத்தில் எந்த ஒளி வழியும், இருள் வழியும் சாசுவதமாகக் கருதப்பட்டன. இவற்றுள் ஒன்றினால் மனிதன் மீளாப் பதம் பெறுவான். மற்றொன்று மீளும் பதந் தருவது.


नैते सृती पार्थ जानन्योगी मुह्यति कश्चन ।
तस्मात्सर्वेषु कालेषु योगयुक्तो भवार्जुन ॥८- २७॥

நைதே ஸ்ருதீ பார்த² ஜாநந்யோகீ³ முஹ்யதி கஸ்²சந |
தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு யோக³யுக்தோ ப⁴வார்ஜுந || 8- 27||

பார்த²! ஏதே ஸ்ருதீ ஜாநந் = பார்த்தா! இவ் வழிகளிரண்டையும் உணர்ந்த
கஸ்²சந யோகீ³ முஹ்யதி = எந்த யோகியும் மயக்கமுறுவதில்லை
தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு = ஆதலால் எப்போதும் யோகத்தில்
யோக³ யுக்த: ப⁴வ = யோகத்தில் கலந்திரு

இவ் வழிகளிரண்டையும் உணர்ந்தால் அப்பால் யோகி மயக்கமுறுவதில்லை. ஆதலால், அர்ஜுன, எப்போதும் யோகத்தில் கலந்திரு.


वेदेषु यज्ञेषु तपःसु चैव दानेषु यत् पुण्यफलं प्रदिष्टम् ।
अत्येति तत्सर्वमिदं विदित्वा योगी परं स्थानमुपैति चाद्यम् ॥८- २८॥

வேதே³ஷு யஜ்ஞேஷு தப:ஸு சைவ தா³நேஷு யத் புண்யப²லம் ப்ரதி³ஷ்டம் |
அத்யேதி தத்ஸர்வமித³ம் விதி³த்வா யோகீ³ பரம் ஸ்தா²நமுபைதி சாத்³யம் || 8- 28||

யோகீ³ இத³ம் விதி³த்வா = யோகி இதனை யறிவதால்
வேதே³ஷு யஜ்ஞேஷு தப:ஸு தா³நேஷு ச = வேதங்களிலும், யாகங்களிலும், தவங்களிலும், தானங்களிலும்
யத் புண்யப²லம் ப்ரதி³ஷ்டம் = எந்த புண்ணியத்தின் பயன் சொல்லப் பட்டிருக்கிறதோ
தத் ஸர்வம் அத்யேதி = அவை அனைத்தையும் கடந்து செல்கிறான்
ச ஆத்³யம் பரம் ஸ்தா²நம் உபைதி = மேலும் ஆதி நிலையாகிய பரநிலையை எய்துகிறான்

இதனை யறிவதால் யோகி வேதங்களிலும், தவங்களிலும், தானங்களிலும் காட்டிய தூய்மைப் பயனைக் கடந்து, ஆதி நிலையாகிய பரநிலையை எய்துகிறான்.


ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
श्रिकृष्णार्जुन सम्वादे अक्षरब्रह्मयोगो नामाष्टमोऽध्याय: || 8 ||

ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘அக்ஷர பிரம்ம யோகம்’ எனப் பெயர் படைத்த
எட்டாம் அத்தியாயம் நிறைவுற்றது.