கீதை – மூன்றாவது அத்தியாயம்

கர்ம யோகம்

கர்ம யோக ஞான யோகங்களுள் ஞான யோகமே கடுகப் பலனை அளிக்குமென்றாலும் கர்ம யோகமே செய்யத் தக்கது. ஆக்கையிருக்கும் வரையில் மனிதனுக்கு ஏதாவதொரு தொழிலைச் செய்வதே இயற்கையாயிருக்கும். அவன் துணிந்து வேறு துறைகளிலிருந்த போதிலும் புலன்கள் அவனை இழுத்துச் செய்கையிலேயே கொண்டுவந்து நிறுத்தும். இந்திரியங்களை அடக்கி ஞான நிலையில் நிற்கும் திறமை வாய்ந்தவனும் கர்மங்களையே செய்யக் கடவன். ஏனெனில், இவனது உண்மை நிலையறியாத பாமரர்களும், இவனைக் கண்டு தாங்களும் கர்மங்களைவிட்டு ஞானத்துறையில் துணிவுறுகிறார்கள்.

அதனால் அவர்கள் கர்ம யோகத்தை யிழந்ததுமன்றி ஞான யோகத்தையுமிழந்து முன்னிலும் தாழ்ந்த நிலைமைக்கு வந்து விடுவார்கள். அவர்கள் கெடுவதற்கு இவனே காரணமாவான். ஆகையால் ஞானயோகத்தில் திறமையுள்ளவனுக்கும், திறமையில்லாதவனுக்கும் கர்ம யோகமே மேலானது. கர்மங்களைச் செய்யும்போது, ‘இந்நிலைமை எனக்கு பிரகிருதி சம்பந்தத்தால் வந்தேறியதென்றும், ஈசுவரனுடைய கட்டளையினால் அவனுதவியைக் கொண்டு அவனுடையை பிரீதிக்காகவே செய்கிறோம்,’ என்றும் எண்ணிச் செய்ய வேண்டும்.


अर्जुन उवाच
ज्यायसी चेत्कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन।
तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव॥१॥

அர்ஜுந உவாச
ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா பு³த்³தி⁴ர்ஜநார்த³ந|
தத்கிம் கர்மணி கோ⁴ரே மாம் நியோஜயஸி கேஸ²வ ||3-1||

அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்
ஜநார்த³ந = ஜநார்த்தனா
கர்மண: பு³த்³தி⁴ ஜ்யாயஸீ = செய்கையைக் காட்டிலும் புத்தியே சிறந்ததென்பது
தே மதா சேத் = நின் கொள்கையாயின்
தத் கோ⁴ரே கர்மணி = இந்தக் கொடிய செய்கையில்
மாம் கிம் நியோஜயஸி கேஸ²வ = என்னைப் புகுத்துவதென்னே, கேசவா?

அர்ஜுனன் சொல்லுகிறான்: ஜநார்த்தன, செய்கையைக் காட்டிலும் புத்தியே சிறந்ததென்பது நின் கொள்கையாயின் இந்தக் கொடிய செய்கையில் என்னைப் புகுத்துவதென்னே, கேசவா?


व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे।
तदेकं वद निश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम्॥२॥

வ்யாமிஸ்²ரேணேவ வாக்யேந பு³த்³தி⁴ம் மோஹயஸீவ மே|
ததே³கம் வத³ நிஸ்²சித்ய யேந ஸ்²ரேயோऽஹமாப்நுயாம் ||3-2||

வ்யாமிஸ்²ரேண இவ வாக்யேந = குழம்பியது போன்ற பேச்சினால்
மே பு³த்³தி⁴ம் மோஹயஸி இவ = என் புத்தியை மயங்கச் செய்கிறாய் போல!
யேந அஹம் ஸ்²ரேய: ஆப்நுயாம் = எது எனக்கு நன்மை தருமென்பதை
தத் ஏகம் நிஸ்²சித்ய வத³ = அந்த ஒன்றை நிச்சயப் படுத்தி சொல்

குழப்பமான பேச்சினால் என் புத்தியை மயங்கச் செய்கிறாய். ஆதலால் எது எனக்கு நன்மை தருமென்பதை உறுதிப்படுத்தி ஒரே வார்த்தையாகச் சொல்.


श्रीभगवानुवाच
लोकेऽस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मयानघ।
ज्ञानयोगेन साङ्ख्यानां कर्मयोगेन योगिनाम्॥३॥

ஸ்ரீப⁴க³வாநுவாச
லோகேऽஸ்மிந் த்³விவிதா⁴ நிஷ்டா² புரா ப்ரோக்தா மயாநக⁴|
ஜ்ஞாநயோகே³ந ஸாங்க்²யாநாம் கர்மயோகே³ந யோகி³நாம் ||3-3||

ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீபகவான் சொல்லுகிறான்
அநக⁴ = பாபமொன்று மில்லாத அர்ஜுனா
லோகே மயா = இவ்வுலகில் என்னால்
த்³விவிதா⁴ நிஷ்டா² = இரண்டுவித நிஷ்டை
புரா ப்ரோக்தா = முன்னர் கூறப்பட்டது
ஸாங்க்²யாநாம் ஜ்ஞாநயோகே³ந = ஸாங்கியர்களின் ஞான யோகத்தால்
யோகி³நாம் கர்மயோகே³ந = யோகிகளின் கர்ம யோகத்தால்

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்: பாபமொன்று மில்லாத அர்ஜுனா, இவ்வுலகில் இரண்டுவித நிஷ்டை முன்னர் என்னால் கூறப்பட்டது. ஸாங்கியர்களின் ஞான யோகத்தால் எய்துவது, யோகிகளின் கர்ம யோகத்தால் எய்துவது என.


न कर्मणामनारम्भान्नैष्कर्म्यं पुरुषोऽश्नुते।
न च सन्न्यसनादेव सिद्धिं समधिगच्छति॥४॥

ந கர்மணாமநாரம்பா⁴ந்நைஷ்கர்ம்யம் புருஷோऽஸ்²நுதே|
ந ச ஸந்ந்யஸநாதே³வ ஸித்³தி⁴ம் ஸமதி⁴க³ச்ச²தி ||3-4||

புருஷ: கர்மணாம் அநாரம்பா⁴த் = தொழில்களைத் ஆரம்பிக்காமல் இருப்பதால்
நைஷ்கர்ம்யம் ந அஸ்²நுதே = செயலற்ற நிலை அடைவதில்லை
ஸந்ந்யஸநாத் ஏவ = துறவினாலேயே
ஸித்³தி⁴ம் ச ந ஸமதி⁴க³ச்ச²தி = ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான்

தொழில்களைத் தொடாமலே யிருப்பதனால் மனிதன் செயலற்ற நிலை அடைவதில்லை. துறவினாலேயே மனிதன் ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான்.


न हि कश्चित्क्षणमपि जातु तिष्ठत्यकर्मकृत्।
कार्यते ह्यवशः कर्म सर्वः प्रकृतिजैर्गुणैः॥५॥

ந ஹி கஸ்²சித்க்ஷணமபி ஜாது திஷ்ட²த்யகர்மக்ருத்|
கார்யதே ஹ்யவஸ²: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர்கு³ணை: ||3-5||

ஹி கஸ்²சித் ஜாது க்ஷணம் அபி = எவனும் ஒரு கணப்பொழுதேனும்
அகர்மக்ருத் ந திஷ்ட²தி = செய்கையின்றிருப்பதில்லை
ஹி ப்ரக்ருதிஜை கு³ணை: = இயற்கையில் விளையும் குணங்களே
ஸர்வ: அவஸ²: = எல்லா உயிர்களையும் தன் வசமின்றி
கர்ம கார்யதே = தொழில் புரிவிக்கின்றன

எவனும் ஒரு கணப்பொழுதேனும் செய்கையின்றிருப்பதில்லை. இயற்கையில் விளையும் குணங்களே எல்லா உயிர்களையும் அவசரமாகத் தொழில் புரிவிக்கின்றன.


कर्मेन्द्रियाणि संयम्य य आस्ते मनसा स्मरन्।
इन्द्रियार्थान्विमूढात्मा मिथ्याचारः स उच्यते॥६॥

கர்மேந்த்³ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்|
இந்த்³ரியார்தா²ந்விமூடா⁴த்மா மித்²யாசார: ஸ உச்யதே ||3-6||

ய: விமூடா⁴த்மா = எந்த மூடாத்மா
கர்மேந்த்³ரியாணி ஸம்யம்ய = கர்மேந்திரியங்களை அடக்கிக்கொண்டு
இந்த்³ரியார்தா²ந் = இந்திரிய விஷயங்களை
மநஸா ஸ்மரந் ஆஸ்தே = மனத்தால் ஸ்மரித்துக் கொண்டிருக்கிறானோ
ஸ மித்²யாசார: உச்யதே = பொய்யழுக்கமுடையவனென்று சொல்லப்படுகிறான்

கர்மேந்திரியங்களை அடக்கிக்கொண்டு, ஆனால் இந்திரிய விஷயங்களை மனத்தால் ஸ்மரித்துக் கொண்டிருப்போனாகிய மூடாத்மா பொய்யழுக்கமுடையவனென்று சொல்லப்படுகிறான்.


यस्त्विन्द्रियाणि मनसा नियम्यारभतेऽर्जुन।
कर्मेन्द्रियैः कर्मयोगमसक्तः स विशिष्यते॥७॥

யஸ்த்விந்த்³ரியாணி மநஸா நியம்யாரப⁴தேऽர்ஜுந|
கர்மேந்த்³ரியை: கர்மயோக³மஸக்த: ஸ விஸி²ஷ்யதே ||3-7||

து அர்ஜுந = ஆனால் அர்ஜுநா
ய மநஸா இந்த்³ரியாணி = எவன் இந்திரியங்களை மனத்தால்
நியம்ய அஸக்த: = கட்டுப்படுத்திக்கொண்டு பற்றில்லாமல்
கர்மேந்த்³ரியை: கர்மயோக³ம் ஆரப⁴தே = கர்மேந்திரியங்களால் கர்ம யோகம் பண்ணுகிறானோ
ஸ விஸி²ஷ்யதே = அவன் சிறந்தவன்

அர்ஜுனா, எவன் இந்திரியங்களை மனத்தால் கட்டுப்படுத்திக்கொண்டு, கர்மேந்திரியங்களால் கர்ம யோகம் பண்ணுகிறானோ, அவன் சிறந்தவன்.


नियतं कुरु कर्म त्वं कर्म ज्यायो ह्यकर्मणः।
शरीरयात्रापि च ते न प्रसिद्ध्येदकर्मणः॥८॥

நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:|
ஸ²ரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்³த்⁴யேத³கர்மண: ||3-8||

நியதம் கர்ம த்வம் குரு = விதிக்கப்பட்ட தொழிலை நீ செய்
ஹி அகர்மண: கர்ம ஜ்யாய: = ஏனெனில் தொழிலின்மையைக் காட்டிலும் தொழில் சிறந்ததன்றோ
அகர்மண: = தொழிலின்றி
தே ஸ²ரீரயாத்ரா அபி = உனக்கு உடம்பைப் பேணுதல் கூட
ந ப்ரஸித்³த்⁴யேத் = சாத்தியம் ஆகாது

விதிக்கப்பட்ட தொழிலை நீ செய். தொழில் தொழிலின்மையைக் காட்டிலும் சிறந்ததன்றோ? தொழிலின்றி இருப்பதால் உடம்பைக் கொண்டுசெலுத்துதல்கூட உனக்கில்லாமல் போய்விடும்.


यज्ञार्थात्कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्मबन्धनः।
तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्गः समाचर॥९॥

யஜ்ஞார்தா²த்கர்மணோऽந்யத்ர லோகோऽயம் கர்மப³ந்த⁴ந:|
தத³ர்த²ம் கர்ம கௌந்தேய முக்தஸங்க³: ஸமாசர ||3-9||

யஜ்ஞார்தா²த் கர்மண: = வேள்வியின் பொருட்டென்று செய்யப்படுவது
அந்யத்ர அயம் லோக கர்மப³ந்த⁴ந: = தவிர (மற்றைத் தொழில்) மனிதருக்குத் தளையாகிறது
கௌந்தேய முக்தஸங்க³: = குந்தி மகனே, பற்றைக் களைந்து
தத³ர்த²ம் கர்ம ஸமாசர = அந்த வேள்வியின் பொருட்டே தொழில் செய்து கொண்டிரு

வேள்வியின் பொருட்டென்று செய்யப்படுவது தவிர மற்றைத் தொழில் மனிதருக்குத் தளையாகிறது. ஆதலால், குந்தி மகனே, பற்றைக் களைந்து தொழில் செய்து கொண்டிரு.


सहयज्ञाः प्रजाः सृष्ट्वा पुरोवाच प्रजापतिः।
अनेन प्रसविष्यध्वमेष वोऽस्त्विष्टकामधुक्॥१०॥

ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:|
அநேந ப்ரஸவிஷ்யத்⁴வமேஷ வோऽஸ்த்விஷ்டகாமது⁴க் ||3-10||

புரா = முன்பு
ப்ரஜாபதி: ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா = பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க்குலத்தை படைத்து
உவாச = சொல்லினான்
அநேந ப்ரஸவிஷ்யத்⁴வம் = இதனால் பல்குவீர்கள்
ஏஷ: வ: இஷ்டகாமது⁴க் அஸ்து = இது (இந்த வேள்வி) உங்களுக்கு விரும்பும் விருப்பங்களையெல்லாம் தருவதாக ஆகட்டும்

முன்பு பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க்குலத்தை ஒருமிக்கப் படைத்துச் சொல்லினான்: “இதனால் பல்குவீர்கள், நீங்கள் விரும்பும் விருப்பங்களையெல்லாம் உங்களுக்கிது கறந்து தரும்.


देवान्भावयतानेन ते देवा भावयन्तु वः।
परस्परं भावयन्तः श्रेयः परमवाप्स्यथ॥११॥

தே³வாந்பா⁴வயதாநேந தே தே³வா பா⁴வயந்து வ:|
பரஸ்பரம் பா⁴வயந்த: ஸ்²ரேய: பரமவாப்ஸ்யத² ||3-11||

அநேந தே³வாந் பா⁴வயத = இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்
தே தே³வா வ: பா⁴வயந்து = அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர்
பரஸ்பரம் பா⁴வயந்த: = பரஸ்பரமான பாவனை செய்வதனால்
பரம் ஸ்²ரேய: = உயர்ந்த நலத்தை
அவாப்ஸ்யத² = எய்துவீர்கள்

இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்; அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர். (இங்ஙனம்) பரஸ்பரமான பாவனை செய்வதனால் உயர்ந்த நலத்தை எய்துவீர்கள்.


इष्टान्भोगान्हि वो देवा दास्यन्ते यज्ञभाविताः।
तैर्दत्तानप्रदायैभ्यो यो भुङ्क्ते स्तेन एव सः॥१२॥

இஷ்டாந்போ⁴கா³ந்ஹி வோ தே³வா தா³ஸ்யந்தே யஜ்ஞபா⁴விதா:|
தைர்த³த்தாநப்ரதா³யைப்⁴யோ யோ பு⁴ங்க்தே ஸ்தேந ஏவ ஸ: ||3-12||

யஜ்ஞபா⁴விதா: தே³வா: = வேள்வியில் பாவனை செய்யப்பட்ட தேவர்
வ: இஷ்டாந் போ⁴கா³ந் = உங்களுக்கு விரும்பிய போகங்களையெல்லாம்
ஹி தா³ஸ்யந்தே = தருவர்
தை த³த்தாந் = அவர்கள் தந்தவற்றுக்கு
ஏப்⁴ய: அப்ரதா³ய ய: பு⁴ங்க்தே = அவர்களுக்கு கைம்மாறு (அர்ப்பணம்) செய்யாமல் உண்போன்
ஸ: ஸ்தேந ஏவ = கள்வனே ஆவான்.

வேள்வியில் பாவனை செய்யப்பட்ட தேவர் உங்களுக்கு விரும்பிய போகங்களையெல்லாந் தருவர். அவர்களுக்குக் கைம்மாறு செலுத்தாமல் அவர்கள் கொடுப்பதை உண்போன் கள்வனே யாவன்.”


यज्ञशिष्टाशिनः सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषैः।
भुञ्जते ते त्वघं पापा ये पचन्त्यात्मकारणात्॥१३॥

யஜ்ஞஸி²ஷ்டாஸி²ந: ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பி³ஷை:|
பு⁴ஞ்ஜதே தே த்வக⁴ம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத் ||3-13||

யஜ்ஞஸி²ஷ்டாஸி²ந: ஸந்த: = வேள்வியின் மிச்சத்தை யுண்ணும் நல்லோர்
ஸர்வகில்பி³ஷை: முச்யந்தே = எல்லா பாபங்களினின்றும் விடுபடுகிறார்கள்
யே பாபா: ஆத்மகாரணாத் பசந்தி = தம்பொருட்டென்று மாத்திரமே உணவு சமைக்கும் பாவிகள்
தே து அக⁴ம் பு⁴ஞ்ஜதே = பாவத்தை உண்ணுகிறார்கள்

வேள்வியின் மிச்சத்தை யுண்ணும் நல்லோர் எல்லா பாபங்களினின்றும் விடுபடுகிறார்கள். தம்பொருட்டென்று மாத்திரமே உணவு சமைக்கும் பாவிகள் பாவத்தை உண்ணுகிறார்கள்.


अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसंभवः।
यज्ञाद्भवति पर्जन्यो यज्ञः कर्मसमुद्भवः॥१४॥

அந்நாத்³ப⁴வந்தி பூ⁴தாநி பர்ஜந்யாத³ந்நஸம்ப⁴வ:|
யஜ்ஞாத்³ப⁴வதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்மஸமுத்³ப⁴வ: ||3-14||

பூ⁴தாநி அந்நாத்³ ப⁴வந்தி = உயிர்கள் அன்னத்தால் உண்டாகின்றன
பர்ஜந்யாத் அந்ந ஸம்ப⁴வ: = மழையால் உணவு தோன்றுகிறது
பர்ஜந்ய: யஜ்ஞாத்³ ப⁴வதி = மழை வேள்வியால் ஆகிறது
யஜ்ஞ: கர்ம ஸமுத்³ப⁴வ: = வேள்வி செய்கையினின்று பிறப்பது

அன்னத்தால் உயிர்கள் சமைகின்றன. மழையால் உணவு தோன்றுகிறது. மழை வேள்வியால் ஆகிறது. வேள்வி செய்கையினின்று பிறப்பது.


कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षरसमुद्भवम्।
तस्मात्सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम्॥१५॥

கர்ம ப்³ரஹ்மோத்³ப⁴வம் வித்³தி⁴ ப்³ரஹ்மாக்ஷரஸமுத்³ப⁴வம்|
தஸ்மாத்ஸர்வக³தம் ப்³ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டி²தம் ||3-15||

கர்ம ப்³ரஹ்மோத்³ப⁴வம் = செய்கை பிரம்மத்தினின்றும் பிறப்பதென்றுணர்
ப்³ரஹ்ம: அக்ஷரஸமுத்³ப⁴வம் வித்³தி = பிரம்மம் அழிவற்ற பரமாத்மாவில் தோன்றுவது
தஸ்மாத் ஸர்வக³தம் ப்³ரஹ்ம = ஆதலால் எங்கும் நிறைந்த பிரம்மம்
நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டி²தம் = எப்போதும் வேள்வியில் நிலைபெற்றது

செய்கை பிரம்மத்தினின்றும் பிறப்பதென்றுணர். பிரம்மம் அமிர்தத்தில் தோன்றுவது. ஆதலால் எங்கும் நிறைந்த பிரம்மம் எப்போதும் வேள்வியில் நிலைபெற்றது.


एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयतीह यः।
अघायुरिन्द्रियारामो मोघं पार्थ स जीवति॥१६॥

ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்தயதீஹ ய:|
அகா⁴யுரிந்த்³ரியாராமோ மோக⁴ம் பார்த² ஸ ஜீவதி ||3-16||

பார்த² ய: இஹ = பார்த்தா எவன் இவ்வுலகில்
ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் = இங்ஙனம் சுழலும் வட்டத்தை
ந அநுவர்தயதி = பின்பற்றி ஒழுகாதவனாக
இந்த்³ரியாராம: = புலன்களிலே களிக்கிறானோ
ஸ: அகா⁴யு: = அவன் பாப வாழ்க்கையுடையான்
மோக⁴ம் ஜீவதி = (அவன்) வாழ்க்கை விழலேயாம்

இங்ஙனம் சுழலும் வட்டத்தை இவ்வுலகில் பின்பற்றி ஒழுகாதோன் பாப வாழ்க்கையுடையான்; புலன்களிலே களித்தான்; பார்த்தா, அவன் வாழ்க்கை விழலேயாம்.


यस्त्वात्मरतिरेव स्यादात्मतृप्तश्च मानवः।
आत्मन्येव च सन्तुष्टस्तस्य कार्यं न विद्यते॥१७॥

யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாதா³த்மத்ருப்தஸ்²ச மாநவ:|
ஆத்மந்யேவ ச ஸந்துஷ்டஸ்தஸ்ய கார்யம் ந வித்³யதே ||3-17||

து ய: மாநவ: = ஆனால் எந்த மனிதன்
ஆத்மரதி ஏவ ச = தன்னிலேதான் இன்புறுவான்
ஆத்மத்ருப்த ச = தன்னிலேதான் திருப்தியடைவான்
ஆத்மநி ஏவ ஸந்துஷ்ட: ஸ்யாத் = தன்னிலேதான் மகிழ்ந்திருப்பான் எனில்
தஸ்ய கார்யம் ந வித்³யதே = அவனுக்குத் தொழிலில்லை

தன்னிலேதான் இன்புறுவான்; தன்னிலேதான் திருப்தியடைவான்; தன்னிலேதான் மகிழ்ந்திருப்பான், அவனுக்குத் தொழிலில்லை.


नैव तस्य कृतेनार्थो नाकृतेनेह कश्चन।
न चास्य सर्वभूतेषु कश्चिदर्थव्यपाश्रयः॥१८॥

நைவ தஸ்ய க்ருதேநார்தோ² நாக்ருதேநேஹ கஸ்²சந|
ந சாஸ்ய ஸர்வபூ⁴தேஷு கஸ்²சித³ர்த²வ்யபாஸ்²ரய: ||3-18||

தஸ்ய இஹ க்ருதேந = அவனுக்குச் செய்கையில்
கஸ்²சந அர்த² ந = யாதொரு பயனுமில்லை
அக்ருதேந: ஏவ ந = செயலின்றி இருப்பதிலும் (அவனுக்கு பயன்) இல்லை
ச ஸர்வபூ⁴தேஷு = எந்த உயிரிலும்
அஸ்ய அர்த² வ்யபாஸ்²ரய: = அவனுக்கு எவ்வித பயனும்
கஸ்²சித் ந = சிறிது கூட இல்லை

அவனுக்குச் செய்கையில் யாதொரு பயனுமில்லை; செயலின்றி இருப்பதிலும் அவனுக்குப் பயனில்லை; எவ்விதப் பயனையுங் கருதி அவன் எந்த உயிரையுஞ் சார்ந்து நிற்பதில்லை.


तस्मादसक्तः सततं कार्यं कर्म समाचर।
असक्तो ह्याचरन्कर्म परमाप्नोति पूरुषः॥१९॥

தஸ்மாத³ஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர|
அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ: ||3-19||

தஸ்மாத் ஸததம் அஸக்த: = ஆதலால், எப்போதும் பற்று நீக்கி
கார்யம் கர்ம = செய்யத்தக்க தொழிலை
ஸமாசர = செய்து கொண்டிரு
ஹி அஸக்த: = ஏனெனில் பற்றில்லாமல்
கர்ம ஆசரந் பூருஷ: = தொழில் செய்துகொண்டிருக்கும் மனிதன்
பரம் ஆப்நோதி = பரம்பொருளை எய்துகிறான்

ஆதலால், எப்போதும் பற்று நீக்கிச் செய்யத்தக்க தொழிலைச் செய்து கொண்டிரு. பற்றில்லாமல் தொழில் செய்துகொண்டிருக்கும் மனிதன் பரம்பொருளை எய்துகிறான்.


कर्मणैव हि संसिद्धिमास्थिता जनकादयः।
लोकसङ्ग्रहमेवापि सम्पश्यन्कर्तुमर्हसि॥२०॥

கர்மணைவ ஹி ஸம்ஸித்³தி⁴மாஸ்தி²தா ஜநகாத³ய:|
லோகஸங்க்³ரஹமேவாபி ஸம்பஸ்²யந்கர்துமர்ஹஸி ||3-20||

ஜநகாத³ய: ஹி = ஜனகன் முதலியோரும்
கர்மணா ஏவ = செய்கையாலேயே
ஸம்ஸித்³திம் ஆஸ்தி²தா = சித்தி (சிறந்த பேற்றை) பெற்றார்கள்
லோகஸங்க்³ரஹம் ஸம்பஸ்²யந் = உலக நன்மையைக் கருதியும்
அபி கர்தும் ஏவ அர்ஹஸி = நீ தொழில் புரிதல் தகும்

ஜனகன் முதலியோர் செய்கையாலேயே சித்தி பெற்றார்கள். உலக நன்மையைக் கருதியும் நீ தொழில் புரிதல் தகும்.


यद्यदाचरति श्रेष्ठस्तत्तदेवेतरो जनः।
स यत्प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते॥२१॥

யத்³யதா³சரதி ஸ்²ரேஷ்ட²ஸ்தத்ததே³வேதரோ ஜந:|
ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்தத³நுவர்ததே ||3-21||

ஸ்²ரேஷ்ட² யத் யத் ஆசரதி = எதனை யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ
இதர ஜந: தத் தத் ஏவ = மற்ற மனிதர் அதை அதையே (பின்பற்றுகிறார்கள்)
ஸ யத் ப்ரமாணம் குருதே = அவன் எதை பிரமாணம் ஆக்குகிறானோ
லோக தத் அநுவர்ததே = உலகத்தார் அதையே தொடருகிறார்கள்

எதனை யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ அதையே மற்ற மனிதர் பின்பற்றுகிறார்கள். அவன் எதை பிரமாணமாக்குகிறானோ, அதையே உலகத்தார் தொடருகிறார்கள்.


न मे पार्थास्ति कर्तव्यं त्रिषु लोकेषु किञ्चन।
नानवाप्तमवाप्तव्यं वर्त एव च कर्मणि॥२२॥

ந மே பார்தா²ஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சந|
நாநவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி ||3-22||

பார்த² = பார்த்தா
மே = எனக்கு
த்ரிஷு லோகேஷு = மூன்றுலகத்திலும்
கர்தவ்யம் கிஞ்சந ந அஸ்தி = யாதொரு கடமையுமில்லை
அவாப்தவ்யம் அவாப்தம் ச ந = பெற்றிராத பேறுமில்லை
கர்மணி ஏவ வர்தே = தொழிலிலேதான் இயங்குகிறேன்

பார்த்தா, மூன்றுலகத்திலும் எனக்கு யாதொரு கடமையுமில்லை. நான் பெற்றிராத பேறுமில்லை. எனினும் நான் தொழிலிலேதான் இயங்குகிறேன்.


यदि ह्यहं न वर्तेयं जातु कर्मण्यतन्द्रितः।
मम वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः॥२३॥

யதி³ ஹ்யஹம் ந வர்தேயம் ஜாது கர்மண்யதந்த்³ரித:|
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த² ஸர்வஸ²: ||3-23||

ஹி பார்த² = ஏனெனில் பார்த்தா!
ஜாது அஹம் அதந்த்³ரித: = ஒருக்கால் நான் சோம்பலில்லாமல்
யதி³ கர்மணி ந வர்தேயம் = எப்போதும் தொழில் கொண்டிராவிடின்
ஸர்வஸ²: மநுஷ்யா: மம வர்த்ம அநுவர்தந்தே = எல்லாப் பக்கங்களிலும் மனிதர் என் வழியையே பின்பற்றுகிறார்கள்

நான் சோம்பலில்லாமல் எப்போதும் தொழில் கொண்டிராவிடின், பார்த்தா, எல்லாப் பக்கங்களிலும் மனிதர் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.


उत्सीदेयुरिमे लोका न कुर्यां कर्म चेदहम्।
सङ्करस्य च कर्ता स्यामुपहन्यामिमाः प्रजाः॥२४॥

உத்ஸீதே³யுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேத³ஹம்|
ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாமுபஹந்யாமிமா: ப்ரஜா: ||3-24||

அஹம் கர்ம ந குர்யாம் சேத் = நான் தொழில் செய்யாவிட்டால்
இமே லோகா: உத்ஸீதே³யு = இந்த ஜனங்களெல்லோரும் அழிந்து போவார்கள்
ஸங்கரஸ்ய கர்தா = குழப்பத்தை ஆக்கியோன்
இமா: ப்ரஜா: = இந்த மக்களை
உபஹந்யாம் ஸ்யாம் = கொல்வோன் ஆவேன்

நான் தொழில் செய்யாவிட்டால், இந்த ஜனங்களெல்லோரும் அழிந்து போவார்கள்; குழப்பத்தை நான் ஆக்கியோன் ஆவேன்; இந்த மக்களை யெல்லாங் கொல்வோனாவேன்.


सक्ताः कर्मण्यविद्वांसो यथा कुर्वन्ति भारत।
कुर्याद्विद्वांस्तथासक्तश्चिकीर्षुर्लोकसङ्ग्रहम्॥२५॥

ஸக்தா: கர்மண்யவித்³வாம்ஸோ யதா² குர்வந்தி பா⁴ரத|
குர்யாத்³வித்³வாம்ஸ்ததா²ஸக்தஸ்²சிகீர்ஷுர் லோகஸங்க்³ரஹம் ||3-25||

பா⁴ரத = பாரதா
அவித்³வாம்ஸ: கர்மணி ஸக்தா: = அறிவில்லாதோர் செய்கையில் பற்றுடையோராய்
யதா² குர்வந்தி = எப்படித் தொழில் செய்கிறார்களோ
ததா² வித்³வாம்ஸ: அஸக்த: = அப்படியே அறிவுடையோன் பற்றை நீக்கி
லோகஸங்க்³ரஹம் சிகீர்ஷு = உலக நன்மையை நாடி
குர்யாத் = தொழில் செய்ய வேண்டும்

பாரதா, அறிவில்லாதோர் செய்கையில் பற்றுடையோராய் எப்படித் தொழில் செய்கிறார்களோ அப்படியே அறிவுடையோன் பற்றை நீக்கி உலக நன்மையை நாடித் தொழில் செய்ய வேண்டும்.


न बुद्धिभेदं जनयेदज्ञानां कर्मसङ्गिनाम्।
जोषयेत्सर्वकर्माणि विद्वान्युक्तः समाचरन्॥२६॥

ந பு³த்³தி⁴பே⁴த³ம் ஜநயேத³ஜ்ஞாநாம் கர்மஸங்கி³நாம்|
ஜோஷயேத்ஸர்வகர்மாணி வித்³வாந்யுக்த: ஸமாசரந் ||3-26||

யுக்த: வித்³வாந் = அறிவுடையோன்
கர்மஸங்கி³நாம் அஜ்ஞாநாம் = தொழிலில் பற்றுதல் கொண்ட அஞ்ஞானிகளுக்கு
பு³த்³தி⁴பே⁴த³ம் ந ஜநயேத் = புத்தி பேதம் விளைவிக்கக் கூடாது
ஸர்வகர்மாணி ஸமாசரந் = எல்லா கர்மங்களையும் செவ்வனே ஆற்றி
ஜோஷயேத் = (அவர்களையும்) செய்யச் செய்ய வேண்டும்

அறிவுடையோன் தொழிலில் பற்றுதல் கொண்ட அஞ்ஞானிகளுக்கு புத்தி பேதம் விளைவிக்கக் கூடாது. அவன் யோகத்தில் நின்று தொழில் செய்து எல்லாத் தொழில்களையும் கவர்ச்சியுடையவனாக்க வேண்டும்.


प्रकृतेः क्रियमाणानि गुणैः कर्माणि सर्वशः।
अहङ्कारविमूढात्मा कर्ताहमिति मन्यते॥२७॥

ப்ரக்ருதே: க்ரியமாணாநி கு³ணை: கர்மாணி ஸர்வஸ²:|
அஹங்காரவிமூடா⁴த்மா கர்தாஹமிதி மந்யதே ||3-27||

ப்ரக்ருதே: கு³ணை: ஸர்வஸ²: = இயற்கையின் குணங்களால் எங்கும்
கர்மாணி க்ரியமாணாநி = தொழில்கள் செய்யப்படுகின்றன
அஹங்கார விமூடா⁴த்மா = அகங்காரத்தால் மயங்கியவன்
கர்தா அஹம் இதி மந்யதே = “நான் செய்கிறேன்” என்று நினைக்கிறான்

எங்கும் தொழில்கள் இயற்கையின் குணங்களால் செய்யப்படுகின்றன. அகங்காரத்தால் மயங்கியவன், “நான் செய்கிறேன்” என்று நினைக்கிறான்.


तत्त्ववित्तु महाबाहो गुणकर्मविभागयोः।
गुणा गुणेषु वर्तन्त इति मत्वा न सज्जते॥२८॥

தத்த்வவித்து மஹாபா³ஹோ கு³ணகர்மவிபா⁴க³யோ:|
கு³ணா கு³ணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே ||3-28||

து மஹாபா³ஹோ = ஆனால் பெருந்தோளாய்!
கு³ண கர்ம விபா⁴க³யோ: = குணம், செய்கை இவற்றினுடைய பிரிவுகளின்
தத்த்வவித் = உண்மையறிந்தோன்
கு³ணா கு³ணேஷு வர்தந்த = குணங்கள் குணங்களில் செயல்படுகின்றன
இதி மத்வா ந ஸஜ்ஜதே = என்று கருதி பற்றற்றிருப்பான்

குணம், செய்கை இவற்றினுடைய பிரிவுகளின் உண்மையறிந்தோன், ‘குணங்கள் குணங்களில் இயலுகின்றன’ என்று கருதி பற்றற்றிருப்பான்.


प्रकृतेर्गुणसम्मूढाः सज्जन्ते गुणकर्मसु।
तानकृत्स्नविदो मन्दान्कृत्स्नविन्न विचालयेत्॥२९॥

ப்ரக்ருதேர்கு³ணஸம்மூடா⁴: ஸஜ்ஜந்தே கு³ணகர்மஸு|
தாநக்ருத்ஸ்நவிதோ³ மந்தா³ந்க்ருத்ஸ்நவிந்ந விசாலயேத் ||3-29||

ப்ரக்ருதே: கு³ணஸம்மூடா⁴: = இயற்கையில் குணங்களால் மயங்கியவர்கள்
கு³ணகர்மஸு ஸஜ்ஜந்தே = குணங்களிலும் தொழில்களிலும் பற்றுதலடைகிறார்கள்
தாந் அக்ருத்ஸ்நவித³: = அந்த முற்றும் அறிந்திராத
மந்தா³ந் ந விசாலயேத் = சிற்றறிவுடைய அந்த மாந்தர்களை உழல்விக்கக் கூடாது

இயற்கையில் குணங்களால் மயங்கியவர்கள் குணங்களிலும் தொழில்களிலும் பற்றுதலடைகிறார்கள். சிற்றறிவுடைய அந்த மாந்தர்களை முழுதுணர்ந்த ஞானி உழல்விக்கக் கூடாது.


मयि सर्वाणि कर्माणि सन्न्यस्याध्यात्मचेतसा।
निराशीर्निर्ममो भूत्वा युध्यस्व विगतज्वरः॥३०॥

மயி ஸர்வாணி கர்மாணி ஸந்ந்யஸ்யாத்⁴யாத்மசேதஸா|
நிராஸீ²ர்நிர்மமோ பூ⁴த்வா யுத்⁴யஸ்வ விக³தஜ்வர: ||3-30||

அத்⁴யாத்மசேதஸா: = என்னிடம் ஒன்றிய மனதுடயவனாக
ஸர்வாணி கர்மாணி = எல்லாச் செய்கைகளையும்
மயி ஸந்ந்யஸ்ய = என்னில் அர்ப்பணம் செய்து விட்டு
விக³தஜ்வர: = மனக் காய்ச்சல் தீர்ந்தவனாய்
நிராஸீ² நிர்மம: பூ⁴த்வா = ஆசை நீங்கி, எனது என்பது அற்று
யுத்⁴யஸ்வ = போர் செய்

எல்லாச் செய்கைகளையும் உள்ளறிவினால் எனக்கு அர்ப்பணமாகத் துறந்துவிட்டு, ஆசை நீங்கி, எனது என்பது அற்று, மனக் காய்ச்சல் தீர்ந்தவனாய்ப் போர் செய்யக் கடவாய்.


ये मे मतमिदं नित्यमनुतिष्ठन्ति मानवाः।
श्रद्धावन्तोऽनसूयन्तो मुच्यन्ते तेऽपि कर्मभिः॥३१॥

யே மே மதமித³ம் நித்யமநுதிஷ்ட²ந்தி மாநவா:|
ஸ்²ரத்³தா⁴வந்தோऽநஸூயந்தோ முச்யந்தே தேऽபி கர்மபி⁴: ||3-31||

யே மாநவா: அநஸூயந்த: = எந்த மனிதர் பொறாமையின்றி
ஸ்²ரத்³தா⁴வந்த: = சிரத்தையுடையோராய்
மே இத³ம் மதம் = என்னுடைய இந்த கொள்கையை
நித்யம் அநுதிஷ்ட²ந்தி = எப்பொழுதும் பின்பற்றுகிறார்களோ
தே அபி கர்மபி⁴: முச்யந்தே = அவர்களும் தொழில்களிலிருந்து விடுபடுகிறார்கள்

என்னுடைய இந்த நித்தியமான கொள்கையை எந்த மனிதர் சிரத்தையுடையோராய்ப் பொறாமையின்றிப் பின்பற்றுகிறார்களோ, அவர்களும் தொழில்களிலிருந்து விடுபடுகிறார்கள்.


ये त्वेतदभ्यसूयन्तो नानुतिष्ठन्ति मे मतम्।
सर्वज्ञानविमूढांस्तान्विद्धि नष्टानचेतसः॥३२॥

யே த்வேதத³ப்⁴யஸூயந்தோ நாநுதிஷ்ட²ந்தி மே மதம்|
ஸர்வஜ்ஞாநவிமூடா⁴ம்ஸ்தாந்வித்³தி⁴ நஷ்டாநசேதஸ: ||3-32||

து யே அப்⁴யஸூயந்த: = யாவர் பொறாமையால்
மே எதத் மதம் ந அநுதிஷ்ட²ந்தி = என்னுடைய இக்கொள்கையை பின்பற்றாது விடுகிறார்களோ
தாந் அசேதஸ: = அந்த மூடர்களை
ஸர்வஜ்ஞாந விமூடா⁴ந் = முழுமையான ஞானத்தில் அறிவு மயக்கம் அடைந்தவர்கள் என்றும்
நஷ்டாந் வித்³தி⁴ = நாசமடைந்தோராகவே தெரிந்துகொள்

என்னுடைய இக்கொள்கையை யாவர் பொறாமையால் பின்பற்றாது விடுகிறார்களோ, எவ்வித ஞானமுமில்லாத அம்மூடர்களை நாசமடைந்தோராகவே தெரிந்துகொள்.


सदृशं चेष्टते स्वस्याः प्रकृतेर्ज्ञानवानपि।
प्रकृतिं यान्ति भूतानि निग्रहः किं करिष्यति॥३३॥

ஸத்³ருஸ²ம் சேஷ்டதே ஸ்வஸ்யா: ப்ரக்ருதேர்ஜ்ஞாநவாநபி|
ப்ரக்ருதிம் யாந்தி பூ⁴தாநி நிக்³ரஹ: கிம் கரிஷ்யதி ||3-33||

பூ⁴தாநி ப்ரக்ருதிம் யாந்தி = எல்லா உயிர்களும் (இயற்கைக்கு ஏற்ப) இயல்பை அடைகின்றன
ஜ்ஞாந்வாந் அபி = ஞானமுடையவன் கூட
ஸ்வஸ்யா: ப்ரக்ருதே ஸத்³ருஸ²ம் = தன்னுடைய இயற்கைக்கு தக்கபடியே
சேஷ்டதே = நடக்கிறான்
நிக்³ரஹ: கிம் கரிஷ்யதி = (என்றால்) பலவந்தமாக அடக்குதல் என்ன செய்யும்?

ஞானமுடையவன்கூடத் தன் இயற்கைக்குத் தக்கபடியே நடக்கிறான். உயிர்கள் இயற்கைப்படி நடக்கின்றன. அடக்குதல் பயன்படாது.


इन्द्रियस्येन्द्रियस्यार्थे रागद्वेषौ व्यवस्थितौ।
तयोर्न वशमागच्छेत्तौ ह्यस्य परिपन्थिनौ॥३४॥

இந்த்³ரியஸ்யேந்த்³ரியஸ்யார்தே² ராக³த்³வேஷௌ வ்யவஸ்தி²தௌ|
தயோர்ந வஸ²மாக³ச்சே²த்தௌ ஹ்யஸ்ய பரிபந்தி²நௌ ||3-34||

இந்த்³ரியஸ்ய இந்த்³ரியஸ்ய அர்தே² = இந்திரியத்துக்கு இந்திரிய விஷயத்தில்
ராக³த்³வேஷௌ வ்யவஸ்தி²தௌ = விருப்பு வெறுப்புகள் ஏற்பட்டிருக்கின்றன
தயோ: வஸ²ம் ந ஆக³ச்சே²த் = இவ்விரண்டுக்கும் வசப்படலாகாது
ஹி தௌ அஸ்ய பரிபந்தி²நௌ = ஏனெனில் இவ்விரண்டும் இவனுக்கு வழித்தடைகளாம்

இந்திரியத்துக்கு இந்திரிய விஷயத்தில் விருப்பு வெறுப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இவ்விரண்டுக்கும் ஒருவன் வசப்படலாகாது. இவை இவனுக்கு வழித்தடைகளாம்.


श्रेयान्स्वधर्मो विगुणः परधर्मात्स्वनुष्ठितात्।
स्वधर्मे निधनं श्रेयः परधर्मो भयावहः॥३५॥

ஸ்²ரேயாந்ஸ்வத⁴ர்மோ விகு³ண: பரத⁴ர்மாத்ஸ்வநுஷ்டி²தாத்|
ஸ்வத⁴ர்மே நித⁴நம் ஸ்²ரேய: பரத⁴ர்மோ ப⁴யாவஹ: ||3-35||

ஸ்வநுஷ்டி²தாத் பரத⁴ர்மாத் = நன்றாகச் செய்யப்படும் பர தர்மத்தைக் காட்டிலும்
விகு³ண: ஸ்வத⁴ர்மோ ஸ்²ரேயாந் = குணமற்றதெனினும் ஸ்வதர்மமே சிறந்தது
ஸ்வத⁴ர்மே நித⁴நம் ஸ்²ரேய: = ஸ்வதர்மத்தில் இறந்துவிடினும் நன்றேயாம்
பரத⁴ர்ம: ப⁴யாவஹ: = பரதர்மம் பயத்துக்கிடமானது

நன்றாகச் செய்யப்படும் பர தர்மத்தைக் காட்டிலும் குணமற்றதெனினும் ஸ்வதர்மமே சிறந்தது. ஸ்வதர்மத்தில் இறந்துவிடினும் நன்றேயாம். பரதர்மம் பயத்துக்கிடமானது.


अर्जुन उवाच।
अथ केन प्रयुक्तोऽयं पापं चरति पूरुषः।
अनिच्छन्नपि वार्ष्णेय बलादिव नियोजितः॥३६॥

அர்ஜுந உவாச|
அத² கேந ப்ரயுக்தோऽயம் பாபம் சரதி பூருஷ:|
அநிச்ச²ந்நபி வார்ஷ்ணேய ப³லாதி³வ நியோஜித: ||3-36||

அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்
வார்ஷ்ணேய = விருஷ்ணி குலத் தோன்றலே
அத² அயம் பூருஷ: = பின் இந்த மனிதன்
அநிச்ச²ந் அபி = இச்சையில்லாத போதும்
ப³லாத் நியோஜித: இவ = வலியக் கொண்டு புகுத்துவதுபோல்
கேந ப்ரயுக்த: பாபம் சரதி = எதனால் ஏவப்பட்டு பாவம் செய்கிறான்?

அர்ஜுனன் சொல்லுகிறான்: விருஷ்ணி குலத் தோன்றலே, மனிதனுக்கு இச்சையில்லாத போதும் அவனை வலியக் கொண்டு புகுத்துவதுபோல் தூண்டிப் பாவம் செய்விப்பது யாது?


श्रीभगवानुवाच
काम एष क्रोध एष रजोगुणसमुद्भवः।
महाशनो महापाप्मा विद्ध्येनमिह वैरिणम्॥३७॥

ஸ்ரீப⁴க³வாநுவாச
காம ஏஷ க்ரோத⁴ ஏஷ ரஜோகு³ணஸமுத்³ப⁴வ:|
மஹாஸ²நோ மஹாபாப்மா வித்³த்⁴யேநமிஹ வைரிணம் ||3-37||

ஸ்ரீப⁴க³வாநுவாச = பகவான் சொல்லுகிறான்
ரஜோகு³ணஸமுத்³ப⁴வ: = ரஜோ குணத்திற்பிறப்பது
ஏஷ: காம: க்ரோத⁴ = இஃது விருப்பமும் சினமும்
மஹாஸ²ந: மஹாபாப்மா = பேரழிவு செய்வது; பெரும்பாவம்
யேநம் இஹ வைரிணம் வித்³தி⁴ = இங்கு சத்துருவாகத் தெரிந்து கொள்

பகவான் சொல்லுகிறான்: இஃது விருப்பமும் சினமும்; ரஜோ குணத்திற்பிறப்பது; பேரழிவு செய்வது; பெரும்பாவம். இதனை இங்கு சத்துருவாகத் தெரிந்து கொள்.


धूमेनाव्रियते वह्निर्यथादर्शो मलेन च।
यथोल्बेनावृतो गर्भस्तथा तेनेदमावृतम्॥३८॥

தூ⁴மேநாவ்ரியதே வஹ்நிர்யதா²த³ர்ஸோ² மலேந ச|
யதோ²ல்பே³நாவ்ருதோ க³ர்ப⁴ஸ்ததா² தேநேத³மாவ்ருதம் ||3-38||

யதா² தூ⁴மேந வஹ்நி= எப்படி புகையினால் தீயும்
மலேந ஆத³ர்ஸ²: ச = அழுக்கால் கண்ணாடியும்
ஆவ்ரியதே = மறைக்கப் படுகிறதோ
யதா² உல்பே³ந க³ர்ப⁴ ஆவ்ருத: = எப்படி தசையால் கர்ப்பம் மூடப் பட்டிருக்கிறதோ
ததா² தேந இத³ம் ஆவ்ருதம் = அதே போல இது (ஞானம்) இவ்வுலகைச் சூழ்ந்திருக்கிறது

புகையினால் தீ சூழப்பட்டிருப்பது போலவும், கண்ணாடி அழுக்கால் மாசுபடுவது போலவும் இது இவ்வுலகைச் சூழ்ந்திருக்கிறது.


आवृतं ज्ञानमेतेन ज्ञानिनो नित्यवैरिणा।
कामरूपेण कौन्तेय दुष्पूरेणानलेन च॥३९॥

ஆவ்ருதம் ஜ்ஞாநமேதேந ஜ்ஞாநிநோ நித்யவைரிணா|
காமரூபேண கௌந்தேய து³ஷ்பூரேணாநலேந ச ||3-39||

ச கௌந்தேய = மேலும் குந்தியின் மகனே
து³ஷ்பூரேண அநலேந = திருப்தி அடையாத நெருப்பைப் போன்றதும்
காமரூபேண = விருப்பமேனும் வடிவில் இருப்பதும்
ஜ்ஞாநிந: நித்யவைரிணா = ஞானிக்கு நித்தியப் பகை
ஏதேந ஜ்ஞாநம் ஆவ்ருதம் = இந்த காமம் (ஆசை) ஞானத்தைச் சூழ்ந்து நிற்கிறது

குந்தியின் மகனே, விருப்பமெனப்படும் இந் நிரப்பொணாத் தீ, ஞானிக்கு நித்தியப் பகையாய் ஞானத்தைச் சூழ்ந்து நிற்கிறது.


इन्द्रियाणि मनो बुद्धिरस्याधिष्ठानमुच्यते।
एतैर्विमोहयत्येष ज्ञानमावृत्य देहिनम्॥४०॥

இந்த்³ரியாணி மநோ பு³த்³தி⁴ரஸ்யாதி⁴ஷ்டா²நமுச்யதே|
ஏதைர்விமோஹயத்யேஷ ஜ்ஞாநமாவ்ருத்ய தே³ஹிநம் ||3-40||

இந்த்³ரியாணி மந: பு³த்³தி⁴ = இந்திரியங்களும், மனமும், புத்தியும்
அஸ்ய அதி⁴ஷ்டா²நம் உச்யதே = இதற்கு நிலைக்களன் என்பர்
ஏதை: ஏஷ: ஜ்ஞாநம் ஆவ்ருத்ய = இவற்றால் இது ஞானத்தைச் சூழ்ந்து
தே³ஹிநம் விமோஹயத் = மனிதனை மயங்குவிக்கிறது

இந்திரியங்களும், மனமும், புத்தியும் இதற்கு நிலைக்களன் என்பர். இவற்றால் இது ஞானத்தைச் சூழ்ந்து மனிதனை மயங்குவிக்கிறது.


तस्मात्त्वमिन्द्रियाण्यादौ नियम्य भरतर्षभ।
पाप्मानं प्रजहि ह्येनं ज्ञानविज्ञाननाशनम्॥४१॥

தஸ்மாத்த்வமிந்த்³ரியாண்யாதௌ³ நியம்ய ப⁴ரதர்ஷப⁴|
பாப்மாநம் ப்ரஜஹி ஹ்யேநம் ஜ்ஞாநவிஜ்ஞாநநாஸ²நம் ||3-41||

தஸ்மாத் ப⁴ரதர்ஷப⁴ = ஆதலால் பாரத ரேறே
ஆதௌ³ இந்த்³ரியாணி நியம்ய = தொடக்கத்தில் இந்திரியங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு
ஜ்ஞாந விஜ்ஞாந நாஸ²நம் = ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அழிப்பதாகிய
ஏநம் பாப்மாநம் ஹி ப்ரஜஹி = இந்தப் பாவத்தைக் கொன்றுவிடு

ஆதலால் பாரத ரேறே, நீ தொடக்கத்தில் இந்திரியங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அழிப்பதாகிய இந்தப் பாவத்தைக் கொன்றுவிடு.


इन्द्रियाणि पराण्याहुरिन्द्रियेभ्यः परं मनः।
मनसस्तु परा बुद्धिर्यो बुद्धेः परतस्तु सः॥४२॥

இந்த்³ரியாணி பராண்யாஹுரிந்த்³ரியேப்⁴ய: பரம் மந:|
மநஸஸ்து பரா பு³த்³தி⁴ர்யோ பு³த்³தே⁴: பரதஸ்து ஸ: ||3-42||

இந்த்³ரியாணி பராணி ஆஹு = இந்திரியங்களை உயர்வுடையன என்பர்
இந்த்³ரியேப்⁴ய: பரம் மந: = அவற்றிலும் மனம் மேல்
மநஸ: து பரா பு³த்³தி⁴ = மனத்தைக் காட்டிலும் புத்தி மேல்
பு³த்³தே⁴: பரத து ஸ: = புத்திக்கு மேலே அவன் (ஆத்மா)

இந்திரியங்களை உயர்வுடையன வென்பர். அவற்றிலும் மனம் மேல்; மனத்தைக் காட்டிலும் புத்தி மேல்; புத்திக்கு மேலே அவன் (ஆத்மா).


एवं बुद्धेः परं बुद्ध्वा संस्तभ्यात्मानमात्मना।
जहि शत्रुं महाबाहो कामरूपं दुरासदम्॥४३॥

ஏவம் பு³த்³தே⁴: பரம் பு³த்³த்⁴வா ஸம்ஸ்தப்⁴யாத்மாநமாத்மநா|
ஜஹி ஸ²த்ரும் மஹாபா³ஹோ காமரூபம் து³ராஸத³ம் ||3-43||

ஏவம் பு³த்³தே⁴: பரம் = இங்ஙனம் புத்திக்கு மேலான
பு³த்³த்⁴வா = பொருளை (ஆத்மாவை) உணர்ந்து
ஆத்மநா ஆத்மாநம் ஸம்ஸ்தப்⁴ய = தன்னைத்தான் உறுதிபடுத்திக் கொண்டு
து³ராஸத³ம் காமரூபம் = வெல்லற்கரிய விருப்பமாம்
ஸ²த்ரும் ஜஹி மஹாபா³ஹோ = பகையைக் கொல்லக் கடவாய், பெருந்தோளுடையாய்!

இங்ஙனம் புத்திக்கு மேலான பொருளை (ஆத்மாவை) உணர்ந்து, தன்னைத்தான் உறுதிபடுத்திக் கொண்டு, வெல்லற்கரிய விருப்பமாம் பகையைக் கொல்லக் கடவாய், பெருந்தோளுடையாய்!


ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
श्रिकृष्णार्जुन सम्वादे कर्मयोगो नाम तृतीयोऽध्याय: || 3 ||

ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘கர்ம யோகம்’ எனப் பெயர் படைத்த
மூன்றாம் அத்தியாயம் நிறைவுற்றது.