கீதை – இரண்டாவது அத்தியாயம்

ஸாங்கிய யோகம்

போர் புரிய மனம் வராமல் திகைத்துத் தன்னைச் சரணடைந்த அர்ஜுனனை நோக்கிக் கண்ணன் உரைக்கின்றான்:- “அர்ஜுனா, நீ வருந்துவது முற்றிலும் தவறு. எதிரிகளின் ஆன்மாவைப் பற்றி வருந்துகின்றாயா? அல்லது அவர்களின் உடலைப் பற்றி வருந்துகின்றாயா? இரண்டும் சரியல்ல.

ஆன்மா என்றும் அழிவற்றது. அதைக் கத்தியால் வெட்டவும், தீயினால் எரிக்கவும் முடியாது. உடலோ அழியும் இயல்பு வாய்ந்தது. நீ அழிக்காவிடினும் அது தானே அழிய வேண்டியதுதான். ஆன்மாவுக்கு ஓருடல் அழிந்ததும், மற்றோருடல் தானே வந்து சேரும். ஆன்மாவின் இயற்கையை எண்ணி உனக்கு ஏற்படுத்தப்பட்ட செயல்களை நீ செய்தே தீரவேண்டும். அச்செயல்களைச் செய்யுங்கால், நாம் செய்ய வேண்டியதைச் செய்கிறோம். அதுவும் ஈசுவரப் பிரீதிக்காகவே என்று எண்ணிச் செய். இதனால் ஆத்மஞானம் பெருகி, அதில் நிலைபெற்று நற்கதியடைவாய். ஈசுவர பிரீதியைத் தவிர மற்ற பலனைக் கோரினால் சம்சாரக்கட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது.” சஞ்ஜயன் சொல்லுகிறான்:


सञ्जय उवाच
तं तथा क्रिपयाविष्टमश्रुपूर्णाकुलेक्षणम्। 
विषीदन्तमिदं वाक्यमुवाच मधुसूदनः॥१॥

ஸஞ்ஜய உவாச 
தம் ததா² க்ரிபயாவிஷ்டமஸ்²ருபூர்ணாகுலேக்ஷணம்| 
விஷீத³ந்தமித³ம் வாக்யமுவாச மது⁴ஸூத³ந: ||2-1||

ஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்லுகிறான்
ததா² க்ரிபயா ஆவிஷ்டம் = அவ்வண்ணம் இரக்கம் மிஞ்சியவனாய்
அஸ்²ருபூர்ண ஆகுல ஈக்ஷணம்= நீர் நிரம்பிய விழிகளுடன்
விஷீத³ந்தம் = சோகத்தோடு கூடிய
தம் = அவனை (அர்ஜுனனை)
மது⁴ஸூத³ந: இத³ம் வாக்யம் உவாச= மதுசூதனன் இந்த வாக்கியத்தை சொல்லுகிறான்

அவ்வண்ணம் இரக்க மிஞ்சியவனாய் நீர் நிரம்பிய சோக விழிகளுடன் வருந்திய அர்ஜுனனை நோக்கி மதுசூதனன் சொல்லுகிறான்:


श्रीभगवानुवाच
कुतस्त्वा कश्मलमिदं विषमे समुपस्थितम्। 
अनार्यजुष्टमस्वर्ग्यमकीर्तिकरमर्जुन॥२॥

ஸ்ரீப⁴க³வாநுவாச
குதஸ்த்வா கஸ்²மலமித³ம் விஷமே ஸமுபஸ்தி²தம்| 
அநார்யஜுஷ்டமஸ்வர்க்³யமகீர்திகரமர்ஜுந ||2-2||

ஸ்ரீப⁴க³வான் உவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
அர்ஜுந! = அர்ஜுனா
விஷமே = தகாத சமயத்தில்
குத த்வா இத³ம் கஸ்²மலம் ஸமுபஸ்தி²தம் = எங்கிருந்து உன்னை இந்த உள்ளச் சோர்வு அடைந்தது
அநார்யஜுஷ்டம் = ஆரியருக்கு தகாதது
அஸ்வர்க்³யம் = வானுலகை தடுப்பது
அகீர்திகரம் = புகழையும் தராதது

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த முட்டுதலில் இவ்வுள்ளச் சோர்வை நீ எங்கிருந்து பெற்றாய்? இஃது ஆரியருக்குத் தகாது. வானுலகைத் தடுப்பது; அபகீர்த்தி தருவது அர்ஜுனா!


क्लैब्यं मा स्म गमः पार्थ नैतत्त्वय्युपपद्यते।
क्षुद्रं हृदयदौर्बल्यं त्यक्त्वोत्तिष्ठ परन्तप॥३॥

க்லைப்³யம் மா ஸ்ம க³ம: பார்த² நைதத்த்வய்யுபபத்³யதே|
க்ஷுத்³ரம் ஹ்ருத³ய தௌ³ர்ப³ல்யம் த்யக்த்வோத்திஷ்ட² பரந்தப ||2-3||

க்லைப்³யம் மா ஸ்ம க³ம: = அலியின் தன்மையை அடையாதே
ஏதத் ந உபபத்³யதே = இது பொருத்தமன்று
க்ஷுத்³ரம் ஹ்ருத³ய தௌ³ர்ப³ல்யம் த்யக்த்வா = இழிந்த மனத்தளர்ச்சியை விடுத்து
உத்திஷ்ட² பரந்தப = எழுந்து நில், பகைவரைச் சுடுவோனே

பார்த்தா பேடித்தன்மையடையாதே! இது நினக்குப் பொருந்தாது. இழிபட்ட மனத் தளர்ச்சியை நீக்கி எழுந்து நில்; பகைவரைச் சுடுவோனே!


अर्जुन उवाच
कथं भीष्ममहं सङ्ख्ये द्रोणं च मधुसूदन। 
इषुभिः प्रतियोत्स्यामि पूजार्हावरिसूदन॥४॥

அர்ஜுந உவாச
கத²ம் பீ⁴ஷ்மமஹம் ஸங்க்²யே த்³ரோணம் ச மது⁴ஸூத³ந| 
இஷுபி⁴: ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூத³ந ||2-4||

அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்
அஹம் ஸங்க்²யே = நான் போரில்
கத²ம் இஷுபி⁴: = எவ்வாறு அம்புகளால்
பூஜார்ஹௌ பீ⁴ஷ்மம் த்³ரோணம் ச = தொழுதற்குரிய பீஷ்மர், துரோணர் ஆகியோரை
ப்ரதியோத்ஸ்யாமி = எதிர்ப்பேன்
அரிஸூத³ந = பகைவர்களை அழிப்பவனே

அர்ஜுனன் சொல்லுகிறான்: மதுசூதனா, பீஷ்மனையும் துரோணரையும் போரில் அம்புகளால் எப்படி எதிர்ப்பேன்? இவர்கள் தொழுதற்குரியவர்; பகைவரை யழிப்போய்!


गुरूनहत्वा हि महानुभावाञ्छ्रेयो भोक्तुं भैक्ष्यमपीह लोके।
हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान्रुधिरप्रदिग्धान्॥५॥

கு³ரூநஹத்வா ஹி மஹாநுபா⁴வாஞ்ச்²ரேயோ போ⁴க்தும் பை⁴க்ஷ்யமபீஹ லோகே|
ஹத்வார்த²காமாம்ஸ்து கு³ரூநிஹைவ பு⁴ஞ்ஜீய போ⁴கா³ந்ருதி⁴ரப்ரதி³க்³தா⁴ந் ||2-5||

மஹாநுபா⁴வாந் கு³ரூந் அஹத்வா= பெரியோராகிய குருக்களைக் கொல்லாமல்
இஹ லோகே = இவ்வுலகத்தில்
பை⁴க்ஷ்யம் அபி = பிச்சையெடுத்து
போ⁴க்தும் ஸ்ரேய: = உண்பதும் நன்று
ஹி = ஏனெனில்
அர்த²காமாந் கு³ரூந் ஹத்வா = பொருளை விரும்பும் குருக்களைக் கொன்று
இஹ = உலகில்
பு⁴ஞ்ஜீய = துய்க்கும்
போ⁴கா³ந் ருதி⁴ரப்ரதி³க்³தா⁴ந் ஏவ = இன்பங்கள் உதிரத்திற் (ரத்தத்தில்) கலந்தனவாம்

பெரியோராகிய குருக்களைக் கொல்லாமல், உலகத்தில் பிச்சையெடுத்துண்பதும் நன்று. பொருளை விரும்பும் குருக்களைக் கொன்று நாம் துய்க்கும் இன்பங்கள் உதிரத்திற் (ரத்தத்தில்) கலந்தனவாம்.


न चैतद्विद्मः कतरन्नो गरीयो यद्वा जयेम यदि वा नो जयेयुः।
यानेव हत्वा न जिजीविषामस्तेऽवस्थिताः प्रमुखे धार्तराष्ट्राः॥६॥

ந சைதத்³வித்³ம: கதரந்நோ க³ரீயோ யத்³வா ஜயேம யதி³ வா நோ ஜயேயு:|
யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாமஸ்தேऽவஸ்தி²தா: ப்ரமுகே² தா⁴ர்தராஷ்ட்ரா: ||2-6||

ந: = நமக்கு
கதரத் க³ரீயோ = இவற்றுள் எது மேன்மை
யத்³வா ஜயேம = இவர்களை வெல்லுதல்
யதி³ வா நோ ஜயேயு: = இவர்கள் நம்மை வெல்லுதல்
ந வித்³ம: = விளங்கவில்லை
யாந் ஹத்வா ந ஜிஜீவிஷாம =எவரைக் கொன்றபின் நாம் வாழ விரும்ப மாட்டோமோ
தே தா⁴ர்தராஷ்ட்ரா: ஏவ = அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார்
ப்ரமுகே² அவஸ்தி²தா: = முன்னே நிற்கிறார்கள்

மேலும், நாம் இவர்களை வெல்லுதல், இவர்கள் நம்மை வெல்லுதல் -இவற்றுள் எது நமக்கு மேன்மையென்பது விளங்கவில்லை. எவரைக் கொன்றபின் நாம் உயிர்கொண்டு வாழ விரும்போமோ, அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார் போர் முனையில் வந்து நிற்கிறார்கள்.


कार्पण्यदोषोपहतस्वभावः पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः।
यच्छ्रेयः स्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नम्॥७॥

கார்பண்யதோ³ஷோபஹதஸ்வபா⁴வ: ப்ருச்சா²மி த்வாம் த⁴ர்மஸம்மூட⁴சேதா:|
யச்ச்²ரேய: ஸ்யாந்நிஸ்²சிதம் ப்³ரூஹி தந்மே ஸி²ஷ்யஸ்தேऽஹம் ஸா²தி⁴ மாம் த்வாம் ப்ரபந்நம் ||2-7||

கார்பண்யதோ³ஷ உபஹத ஸ்வபா⁴வ: = கோழைத் தனத்தால் சீரழிந்த சுபாவம்
த⁴ர்மஸம்மூட⁴சேதா: = அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன்
த்வாம் ப்ருச்சா²மி = உன்னைக் கேட்கிறேன்
யத் ஸ்²ரேய: ஸ்யாத் = எது நல்லது
தத் மே நிஸ்²சிதம் ப்³ரூஹி = அதை நிச்சயப் படுத்தி சொல்லுக
அஹம் தே ஸி²ஷ்ய = நான் உங்கள் சீடன்
த்வாம் ப்ரபந்நம் மாம் ஸா²தி⁴ = உன்னை சரணடைந்த எனக்கு கட்டளை இடுக

சிறுமையாகிய குறையால் இயல்பு அழிந்தவனாய், அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன், யான் உன்னைக் கேட்கிறேன். எது நன்றென்பதை எனக்கு நிச்சயப்படுத்திக் சொல்லுக. நான் உன் சீடன். உன்னையே சரணமெனப் புகுந்தேன். கட்டளை தருக.


न हि प्रपश्यामि ममापनुद्याद्यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम्।
अवाप्य भूमावसपत्नमृद्धं राज्यं सुराणामपि चाधिपत्यम्॥८॥

ந ஹி ப்ரபஸ்²யாமி மமாபநுத்³யாத்³யச்சோ²கமுச்சோ²ஷணமிந்த்³ரியாணாம்|
அவாப்ய பூ⁴மாவஸபத்நம்ருத்³த⁴ம் ராஜ்யம் ஸுராணாமபி சாதி⁴பத்யம் ||2-8||

ஹி = ஏனெனில்
பூ⁴மௌ = பூமியில்
அஸபத்நம் = எதிரிகளற்ற
ருத்³த⁴ம் = செழிப்பான
ஸுராணாம் ச அதி⁴பத்யம் ராஜ்யம் = வானோர்மிசை ஆட்சி
அவாப்ய அபி = அடைந்தாலும்
யத் மம இந்த்³ரியாணாம் = என்னுடைய புலன்களை
உச்சோ²ஷணம் சோகம் = வாட வைக்கின்ற சோகம்
அபநுத்³யாத் = போக்கடிக்கும்
ந ப்ரபஸ்²யாமி = காணவில்லை

பூமியின் மேல் நிகரில்லாத செல்வமுடைய ராஜ்யம் பெறினும், அன்றி வானோர்மிசை ஆட்சி பெறினும் புலன்களை அடக்கும் இயல்புடைய இந்தத் துயர் எம்மை விட்டு நீங்குமென்று தோன்றவில்லை.


सञ्जय उवाच
एवमुक्त्वा हृषीकेशं गुडाकेशः परन्तपः। 
न योत्स्य इति गोविन्दमुक्त्वा तूष्णीं बभूव ह॥९॥

ஸஞ்ஜய உவாச
ஏவமுக்த்வா ஹ்ருஷீகேஸ²ம் கு³டா³கேஸ²: பரந்தப:|
ந யோத்ஸ்ய இதி கோ³விந்த³முக்த்வா தூஷ்ணீம் ப³பூ⁴வ ஹ ||2-9||

ஸஞ்ஜய உவாச = ஸஞ்ஜயன் சொல்லுகிறான்
பரந்தப: = எதிரிகளை எரிப்பவனே!
கு³டா³கேஸ²: ஹ்ருஷீகேஸ²ம் ஏவம் உக்த்வா = உறக்கத்தை வென்றவன் (அர்ஜுனன்), ஸ்ரீ கிருஷ்ணனிடம் இவ்விதம் சொல்லி
ந யோத்ஸ்யே இதி ஹ கோ³விந்த³ம் உக்த்வா = இனி போர் புரியேன் என்று கொவிந்தனிடம் சொல்லி
தூஷ்ணீம் ப³பூ⁴வ = மௌனம் ஆனான்

சஞ்ஜயன் சொல்லுகிறான்: “பகைவரைக் கொளுத்தும் பார்த்தனங்கு பசுநிரை காக்கும் பகவனை நோக்கிப் ‘போரினிப் புரியேன்’ என்று வாய்புதைத்திருந்தான்.”


तमुवाच हृषीकेशः प्रहसन्निव भारत।
सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदं वचः॥१०॥

தமுவாச ஹ்ருஷீகேஸ²: ப்ரஹஸந்நிவ பா⁴ரத|
ஸேநயோருப⁴யோர்மத்⁴யே விஷீத³ந்தமித³ம் வச: ||2-10||

பா⁴ரத = பாரதா
உப⁴யோ: ஸேநயோ: மத்⁴யே = இரண்டு படைகளுக்கும் நடுவே
விஷீத³ந்தம்= துயருற்று இருக்கும்
தம் = அவனிடம் (அர்ஜுனன்)
ப்ரஹஸன் இவ= புன்னகை பூத்து
இத³ம் வச: உவாச = இவ்வசனம் கூறினான்

பாரதா, அப்போது கண்ணன் புன்னகை பூத்து, இரண்டு படைகளுக்கும் நடுவே துயருற்று நின்ற பார்த்தனை நோக்கி இவ்வசனமுரைக்கிறான்:


श्रीभगवानुवाच अशोच्यानन्वशोचस्त्वं प्रज्ञावादांश्च भाषसे।
गतासूनगतासूंश्च नानुशोचन्ति पण्डिताः॥११॥

ஸ்ரீப⁴க³வாநுவாச அஸோ²ச்யாநந்வஸோ²சஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதா³ம்ஸ்²ச பா⁴ஷஸே|
க³தாஸூநக³தாஸூம்ஸ்²ச நாநுஸோ²சந்தி பண்டி³தா: ||2-11||

ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்கிறான்
த்வம் = நீ
அஸோ²ச்யாந் = துயர் படத் தகாதார்
அந்வஸோ²ச: = வருந்துகிறாய்
ப்ரஜ்ஞாவாதாந் = பண்டிதர்களைப் போன்று
பா⁴ஷஸே = பேசுகிறாய்
க³தாஸூந் = இறந்தார்க் கேனும்
அக³தாஸூந் = இருந்தார்க் கேனும்
பண்டி³தா: ந அநுஸோ²சந்தி = பண்டிதர்கள் வருந்துவது இல்லை

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: “துயர்ப் படத் தகாதார் பொருட்டுத் துயர்ப்படுகின்றாய். ஞான வுரைகளு முரைக்கின்றாய்! இறந்தார்க் கேனும் இருந்தார்க் கேனுந் துயர் கொளார் அறிஞர்.”


नत्वेवाहं जातु नासं न त्वं नेमे जनाधिपाः।
न चैव न भविष्यामः सर्वे वयमतः परम्॥१२॥

நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதி⁴பா:|
ந சைவ ந ப⁴விஷ்யாம: ஸர்வே வயமத: பரம் ||2-12||

ஜாது அஹம் ந ஆஸம் ந ஏவ = எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன்
ந த்வம் இமே ஜநாதி⁴பா: ச ந ஏவ = நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே
அத: பரம் = இனி மேலும்
வயம் ஸர்வே ந ப⁴விஷ்யாம: = நாம் அனைவரும் இல்லாமற் போகவும் மாட்டோம்

இதன் முன் எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன். நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே. இனி நாம் என்றைக்கும் இல்லாமற் போகவும் மாட்டோம்.


देहिनोऽस्मिन्यथा देहे कौमारं यौवनं जरा॥
तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति॥१३॥

தே³ஹிநோऽஸ்மிந்யதா² தே³ஹே கௌமாரம் யௌவநம் ஜரா|
ததா² தே³ஹாந்தரப்ராப்திர்தீ⁴ரஸ்தத்ர ந முஹ்யதி ||2-13||

யதா² தே³ஹிந: = எப்படி ஆத்மாவுக்கு
அஸ்மிந் தே³ஹே = இந்த உடலில்
கௌமாரம் யௌவநம் ஜரா = பிள்ளைப் பிராயமும் இளமையும், மூப்பும்
ததா² தே³ஹாந்தரப்ராப்தி = அப்படியே வேறு உடலும் வந்து சேருகிறது
தீ⁴ர தத்ர ந முஹ்யதி = தீரன் அதில் கலங்கமாட்டான்

ஆத்மாவுக்கு இவ்வுடலில் எங்ஙனம் பிள்ளைப் பிராயமும் இளமையும், மூப்பும் தோன்றுகின்றனவோ அங்ஙனமே மற்றொரு சரீரப் பிறப்புந் தோன்றுகிறது. தீரன் அதில் கலங்கமாட்டான்.


मात्रास्पर्शास्तु कौन्तेय शीतोष्णसुखदुःखदाः।
आगमापायिनोऽनित्यास्तांस्तितिक्षस्व भारत॥१४॥

மாத்ராஸ்பர்ஸா²ஸ்து கௌந்தேய ஸீ²தோஷ்ணஸுக²து³:க²தா³:|
ஆக³மாபாயிநோऽநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பா⁴ரத ||2-14||

கௌந்தேய = குந்தியின் மகனே
ஸீ²தோஷ்ண ஸுக² து³:க²தா³: = குளிரையும் வெப்பத்தையும், இன்பத்தையும் துன்பத்தையும்
மாத்ராஸ்பர்ஸா²: து = இயற்கையின் தீண்டுதல்கள்
ஆக³மாபாயிந: = உண்டாகி அழிபவை
அநித்யா: = அநித்யமானவை
பா⁴ரத தாந் ஸ்திதிக்ஷஸ்வ = பாரதா, அவற்றைப் பொறுத்துக் கொள்.

குந்தியின் மகனே, குளிரையும் வெப்பத்தையும், இன்பத்தையும் துன்பத்தையும் தரும் இயற்கையின் தீண்டுதல்கள் தோன்றி மறையும் இயல்புடையன. என்றுமிருப்பனவல்ல. பாரதா, அவற்றைப் பொறுத்துக் கொள்.


यं हि न व्यथयन्त्येते पुरुषं पुरुषर्षभ।
समदुःखसुखं धीरं सोऽमृतत्वाय कल्पते॥१५॥

யம் ஹி ந வ்யத²யந்த்யேதே புருஷம் புருஷர்ஷப⁴|
ஸமது³:க²ஸுக²ம் தீ⁴ரம் ஸோऽம்ருதத்வாய கல்பதே ||2-15||

ஹி = ஏனெனில்
புருஷர்ஷப = புருஷர்களில் சிறந்தவனே
ஸமது³:க²ஸுக²ம் = இன்பமுந்துன்பமும் நிகரென
யம் தீ⁴ரம் புருஷம் = எந்த தீர புருஷன்
ந வ்யத²யந்தி = கலங்க வைப்பதில்லையோ
ஸ: அம்ருதத்வாய கல்பதே = அந்த தீரன் சாகாதிருக்கத் தகுவான்

யாவன் இவற்றால் துயர்ப்படான், இன்பமுந்துன்பமும் நிகரெனக் கொள்வான், அந்த தீரன், சாகாதிருக்கத் தகுவான்.


नासतो विद्यते भावो नाभावो विद्यते सतः।
उभयोरपि दृष्टोऽन्तस्त्वनयोस्तत्त्वदर्शिभिः॥१६॥

நாஸதோ வித்³யதே பா⁴வோ நாபா⁴வோ வித்³யதே ஸத:|
உப⁴யோரபி த்³ருஷ்டோऽந்தஸ்த்வநயோஸ்தத்த்வத³ர்ஸி²பி⁴: ||2-16||

அஸத: பா⁴வ ந வித்³யதே = இல்லாததற்கு இருப்பது என்பது இல்லை
ஸத: அபா⁴வ ந வித்³யதே = உள்ளதற்கு இல்லாதது என்பது இல்லை
அநயோ உப⁴யோ அபி அந்த: = இந்த இரண்டுக்குமுள்ள தத்துவம்
தத்த்வத³ர்ஸி²பி⁴: த்³ருஷ்டா = தத்துவ தரிசிகள் உணர்வார்

இல்லாதது உண்மையாகாது. உள்ளது இல்லாததாகாது. உண்மையறிவார் இவ்விரண்டுக்குமுள்ள வேற்றுமை யுணர்வார்.


अविनाशि तु तद्विद्धि येन सर्वमिदं ततम्।
विनाशमव्ययस्यास्य न कश्चित्कर्तुमर्हति॥१७॥

அவிநாஸி² து தத்³வித்³தி⁴ யேந ஸர்வமித³ம் ததம்|
விநாஸ²மவ்யயஸ்யாஸ்ய ந கஸ்²சித்கர்துமர்ஹதி ||2-17||

அவிநாஸி² து = அழிவற்றது தான் என்று
தத்³ வித்³தி⁴: = அதை அறிந்து கொள்
யேந இத³ம் ஸர்வம் = எதனால் இவை அனைத்தும்
ததம் = வியாபிக்கப் பட்டிருக்கிறதோ
அஸ்ய அவ்யயஸ்ய = அந்த அழிவற்றதற்கு
விநாஸ²ம் கர்தும் கஸ்²சித் ந அர்ஹதி = அழிவை ஏற்படுத்த யாருக்கும் இயலாது

இவ்வுலக முழுவதிலும் பரந்து நிற்கும் பொருள் அழிவற்ற தென்றறி; இது கேடற்றது; இதனை யழித்தல் யார்க்கும் இயலாது.


अन्तवन्त इमे देहा नित्यस्योक्ताः शरीरिणः।
अनाशिनोऽप्रमेयस्य तस्माद्युध्यस्व भारत॥१८॥

அந்தவந்த இமே தே³ஹா நித்யஸ்யோக்தா: ஸ²ரீரிண:|
அநாஸி²நோऽப்ரமேயஸ்ய தஸ்மாத்³யுத்⁴யஸ்வ பா⁴ரத ||2-18||

அநாஸி²ந: = அழிவற்றான்
அப்ரமேயஸ்ய = அளவிடத்தகாதான்
நித்யஸ்ய = நித்தியன்
ஸ²ரீரிண: இமே தே³ஹா = ஆத்மாவினுடைய இந்த வடிவங்கள்
அந்தவந்த உக்தா: = அழியக் கூடியவையாக என்பர்
தஸ்மாத்³ யுத்⁴யஸ்வ பா⁴ரத = ஆதலால் பாரதா, போர் செய்

ஆத்மா நித்தியன்; அழிவற்றான்; அளவிடத்தகாதான். எனினும் அவனுடைய வடிவங்கள் இறுதியுடையன என்பர். ஆதலால் பாரதா, போர் செய்.


य एनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हतम्।
उभौ तौ न विजानीतो नायं हन्ति न हन्यते॥१९॥

ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யஸ்²சைநம் மந்யதே ஹதம்|
உபௌ⁴ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே ||2-19||

ய: ஏநம் = எவன் இந்த (ஆத்மாவை)
ஹந்தாரம் வேத்தி = கொல்பவனாக நினைக்கிறானோ
ய: ஏநம் ஹதம் மந்யதே = எவன் இந்த ஆத்மாவை கொல்லப் பட்டவனாக நினைக்கிறானோ
தௌ உபௌ⁴ = அந்த இருவருமே
ந விஜாநீத: = அறியாதவர்கள்
அயம் ந ஹந்தி = இவன் கொல்லுவதுமில்லை
ந ஹந்யதே = கொலையுண்டதுமில்லை

இவன் கொல்வானென்று நினைப்போனும் கொல்லப்படுவானென்று நினைப்போனும் -இருவரும் அறியாதார். இவன் கொல்லுவதுமில்லை, கொலையுண்பதுமில்லை. இவன் பிறப்பதுமில்லை;


न जायते म्रियते वा कदाचिन्नायं भूत्वा भविता वा न भूयः।
अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे॥२०॥

ந ஜாயதே ம்ரியதே வா கதா³சிந்நாயம் பூ⁴த்வா ப⁴விதா வா ந பூ⁴ய:|
அஜோ நித்ய: ஸா²ஸ்²வதோऽயம் புராணோ ந ஹந்யதே ஹந்யமாநே ஸ²ரீரே ||2-20||

அயம் கதா³சித் = இந்த ஆத்மா எப்போதும்
ந ஜாயதே வா ம்ரியதே = பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை
பூ⁴த்வா பூ⁴ய: ந ப⁴விதா = முன் உண்டாகி பிறகு ஏற்படக் கூடியதும் இல்லை
அயம் அஜ: நித்ய: ஸா²ஸ்²வத: புராண: = இவன் பிறப்பற்றான்; அனவரதன்; சாசுவதன்; பழையோன்
ஸ²ரீரே ஹந்யமாநே ந ஹந்யதே = உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்.

எக்காலத்திலும் இறப்பதுமில்லை. இவன் ஒரு முறையிருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை. இவன் பிறப்பற்றான்; அனவரதன். இவன் சாசுவதன்; பழையோன்; உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்.


वेदाविनाशिनं नित्यं य एनमजमव्ययम्।
कथं स पुरुषः पार्थ कं घातयति हन्ति कम्॥२१॥

வேதா³விநாஸி²நம் நித்யம் ய ஏநமஜமவ்யயம்|
கத²ம் ஸ புருஷ: பார்த² கம் கா⁴தயதி ஹந்தி கம் ||2-21||

பார்த² = பார்த்தா!
ஏநம் = இந்த பொருள் (ஆத்மா)
அவ்யயம் = மாறாதது
ஆவிநாஸிநம் = அழிவற்றது
நித்யம் = என்றும் உளது
அஜம் = பிறப்பற்றது
ய: புருஷ: வேத³ = எந்த மனிதன் உணர்கிறானோ
ஸ: கத²ம் கம் கா⁴தயதி ஹந்தி = அவன் யாரை கொல்வது? யாரை கொல்விப்பது?

இப்பொருள் அழிவற்றது, பிறப்பற்றது, என்றுமுளது இங்ஙனமுணர்வான் கொல்வதெவனை? அவன் கொல்விப்பதெவனை?


वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोऽपराणि।
तथा शरीराणि विहाय जीर्णान्यन्यानि संयाति नवानि देही॥२२॥

வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா² விஹாய நவாநி க்³ருஹ்ணாதி நரோऽபராணி|
ததா² ஸ²ரீராணி விஹாய ஜீர்ணாந்யந்யாநி ஸம்யாதி நவாநி தே³ஹீ ||2-22||

யதா² நர: = எப்படி மனிதன்
ஜீர்ணாநி வாஸாம்ஸி விஹாய = பழைய துணிகளை நீக்கி விட்டு
நவாநி க்³ருஹ்ணாதி = புதியதை எடுத்துக் கொள்கிறானோ
ததா² தேஹி ஜீர்ணாநி ஸ²ரீராணி விஹாய = அவ்வாறே ஆத்மா நைந்த உடல்களை களைந்து
அந்யாநி நவாநி ஸம்யாதி = வேறு புதியதை அடைகிறான்

நைந்த துணிகளைக் கழற்றி யெறிந்துவிட்டு மனிதன் புதிய துணிகள் கொள்ளுமாறு போல, ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து புதியனவற்றை எய்துகிறான்.


नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः।
न चैनं क्लेदयन्त्यापो न शोषयति मारुतः॥२३॥

நைநம் சி²ந்த³ந்தி ஸ²ஸ்த்ராணி நைநம் த³ஹதி பாவக:|
ந சைநம் க்லேத³யந்த்யாபோ ந ஸோ²ஷயதி மாருத: ||2-23||

ஏநம் ஸ²ஸ்த்ராணி ந சி²ந்த³ந்தி = இவனை ஆயுதங்கள் வெட்டுவதில்லை
ஏநம் பாவக: ந த³ஹதி = இவனை நெருப்பு எரிப்பதில்லை
ஏநம் ஆப: ந க்லேத³யந்தி = இவனை தண்ணீர் நனைப்பதில்லை
மாருத: ச ந ஸோ²ஷயதி = காற்றும் உலர்த்துவதில்லை

இவனை ஆயுதங்கள் வெட்ட மாட்டா; தீ எரிக்காது; நீர் இவனை நனைக்காது; காற்று உலர்த்தாது.


अच्छेद्योऽयमदाह्योऽयमक्लेद्योऽशोष्य एव च।
नित्यः सर्वगतः स्थाणुरचलोऽयं सनातनः॥२४॥

அச்சே²த்³யோऽயமதா³ஹ்யோऽயமக்லேத்³யோऽஸோ²ஷ்ய ஏவ ச|
நித்ய: ஸர்வக³த: ஸ்தா²ணுரசலோऽயம் ஸநாதந: ||2-24||

அயம் அச்சே²த்³ய: = இவன் பிளத்தற்கரியவன்
அயம் அதா³ஹ்ய: = எரிக்கப் பட முடியாதவன்
அக்லேத்³ய: = நனைக்கப் படமுடியாதவன்
அஸோ²ஷ்ய: = உலர்த்தப் படமுடியாதவன்
நித்ய: ஸர்வக³த: = நித்தியன்; எங்கும் நிறைந்தவன்
ஸ்தா²ணு அசல: = உறுதி உடையவன்; ஆசையாதான்
ஸநாதந: = என்றும் இருப்பான்

பிளத்தற் கரியவன்; எரித்தற்கும், நனைத்தற்கும், உலர்த்துதற்கும் அரியவன்; நித்தியன்; எங்கும் நிறைந்தவன்; உறுதியுடையான்; அசையாதான்; என்றும் இருப்பான்.


अव्यक्तोऽयमचिन्त्योऽयमविकार्योऽयमुच्यते।
तस्मादेवं विदित्वैनं नानुशोचितुमर्हसि॥२५॥

அவ்யக்தோऽயமசிந்த்யோऽயமவிகார்யோऽயமுச்யதே|
தஸ்மாதே³வம் விதி³த்வைநம் நாநுஸோ²சிதுமர்ஹஸி ||2-25||

அயம் அவ்யக்த: = இந்த ஆத்மா புலன்களுக்கு புலப் படாதவன்
அயம் அசிந்த்ய: = மனத்தால் சிந்தனைக்கு அரியவன்
அயம் அவிகார்ய: = மாறுதல் இல்லாதவன்
உச்யதே = என்று கூறப் படுகிறது
தஸ்மாத் ஏநம் ஏவம் விதி³த்வா = இவனை இவ்வாறு அறிந்து கொண்டு
அநுஸோ²சிதும் அர்ஹஸி = வருத்தப் படாமல் இரு

“தெளிதற் கரியான் சிந்தனைக் கரியான் மாறுத லில்லாதா னென்ப! ஆதலால் இவனை இங்ஙனம் அறிந்து நீ துயர்ப் படாதிருக்கக் கடவாய்.”


अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतम्।
तथापि त्वं महाबाहो नैनं शोचितुमर्हसि॥२६॥

அத² சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம்|
ததா²பி த்வம் மஹாபா³ஹோ நைநம் ஸோ²சிதுமர்ஹஸி ||2-26||

அத² ச த்வம் = ஆயினும்
ஏநம் நித்யஜாதம் நித்யம் ம்ருதம் வா மந்யஸே = இந்த ஆத்மா எப்போதும் பிறந்து கொண்டே இருக்கிறது, அல்லது எப்போதும் இறந்து கொண்டே இருப்பான் என்று நினைப்பாயானால்
மஹாபா³ஹோ = நீண்ட கைகளை உடையவனே
ததா²பி த்வம் ஏவம் ஸோ²சிதும் ந அர்ஹஸி = அப்போதும் வருத்தப்படுவது தகாது

அன்றி, நீ இவனை நித்தமும் பிறந்து நித்தமும் மடிவானென்று கருதினால், அப்போதும், பெருந்தோளுடையாய், நீ இவன் பொருட்டுத் துயருறல் தகாது.


जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च।
तस्मादपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि॥२७॥

ஜாதஸ்ய ஹி த்⁴ருவோ ம்ருத்யுர்த்⁴ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச|
தஸ்மாத³பரிஹார்யேऽர்தே² ந த்வம் ஸோ²சிதுமர்ஹஸி ||2-27||

ஜாதஸ்ய ம்ருத்யு: த்⁴ருவ: ஹி = பிறந்தவன் சாவது உறுதி எனில்
ம்ருதஸ்ய ச ஜந்ம த்⁴ருவம் = செத்தவன் பிறப்பது உறுதி எனில்
தஸ்மாத் அபரிஹார்யே அர்தே² = ஆகவே பரிகாரம் இல்லாத விஷயத்துக்காக
த்வம் ஸோ²சிதும் ந அர்ஹஸி = நீ துயரப் படுவது தகாது

பிறந்தவன் சாவது உறுதியெனில், செத்தவன் பிறப்பது உறுதியெனில், இந்த விலக்கொணாச் செய்திக்கு நீ அழுங்குதல் தகுதியன்று.


अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत।
अव्यक्तनिधनान्येव तत्र का परिदेवना॥२८॥

அவ்யக்தாதீ³நி பூ⁴தாநி வ்யக்தமத்⁴யாநி பா⁴ரத|
அவ்யக்தநித⁴நாந்யேவ தத்ர கா பரிதே³வநா ||2-28||

பா⁴ரத = பாரதா!
பூ⁴தாநி அவ்யக்தாதீ³நி = உயிர்கள் ஆரம்பம் தெளிவில்லை
அவ்யக்தநித⁴நாநி ஏவ = இறுதியும் தெளிவில்லை
வ்யக்தமத்⁴யாநி = நடுநிலைமை தெளிவுடையது
தத்ர கா பரிதே³வநா = இதில் துயற்படுவது என்ன ?

பாரதா, உயிர்களின் ஆரம்பம் தெளிவில்லை; நடுநிலைமை தெளிவுடையது; இவற்றின் இறுதியுந் தெளிவில்லை. இதில் துயர்ப்படுவதென்ன?


आश्चर्यवत्पश्यति कश्चिदेनमाश्चर्यवद्वदति तथैव चान्यः।
आश्चर्यवच्चैनमन्यः शृणोति श्रुत्वाऽप्येनं वेद न चैव कश्चित्॥२९॥

ஆஸ்²சர்யவத்பஸ்²யதி கஸ்²சிதே³நமாஸ்²சர்யவத்³வத³தி ததை²வ சாந்ய:|
ஆஸ்²சர்யவச்சைநமந்ய: ஸ்²ருணோதி ஸ்²ருத்வாऽப்யேநம் வேத³ ந சைவ கஸ்²சித் ||2-29||

கஸ்²சித் ஏநம் = யாரோ ஒருவன்
ஆஸ்²சர்யவத் பஸ்²யதி = வியப்பெனக் காண்கிறான்
ஆஸ்²சர்யவத் வத³தி = வியப்பென ஒருவன் சொல்கிறான்
ஆஸ்²சர்யவத் அந்ய ஸ்²ருணோதி = வியப்பென ஒருவன் கேட்கிறான்
கஸ்²சித் ஸ்²ருத்வா அபி ஏநம் ந ஏவ வேத³ = கேட்கினும் இதனை அறிந்தவன் எவனும் இலன்

இந்த ஆத்மாவை, “வியப்பென ஒருவன் காண்கிறான், வியப்பென ஒருவன் சொல்லுகிறான், வியப்பென ஒருவன் கேட்கிறான், கேட்கினும், இதனை அறிவான் எவனுமிலன்.”


देही नित्यमवध्योऽयं देहे सर्वस्य भारत।
तस्मात्सर्वाणि भूतानि न त्वं शोचितुमर्हसि॥३०॥

தே³ஹீ நித்யமவத்⁴யோऽயம் தே³ஹே ஸர்வஸ்ய பா⁴ரத|
தஸ்மாத்ஸர்வாணி பூ⁴தாநி ந த்வம் ஸோ²சிதுமர்ஹஸி ||2-30||

பா⁴ரத = பாரதா
அயம் தே³ஹீ = இந்த ஆத்மா
ஸர்வஸ்ய தே³ஹே = எல்லா உடலிலும்
நித்யம் அவத்⁴ய = எப்பொழுதும் கொல்லப் படமுடியாதவன்
தஸ்மாத் ஸர்வாணி பூ⁴தாநி = ஆகவே எந்த உயிரின் பொருட்டும்
த்வம் ஸோ²சிதும் ந அர்ஹஸி = நீ வருந்துதல் தகாது

பாரதா, எல்லாருடம்பிலுமுள்ள இந்த ஆத்மா கொல்ல முடியாதவன். ஆதலால் நீ எந்த உயிரின் பொருட்டும் வருந்துதல் வேண்டா!


स्वधर्ममपि चावेक्ष्य न विकम्पितुमर्हसि।
धर्म्याद्धि युद्धाच्छ्रेयोऽन्यत्क्षत्रियस्य न विद्यते॥३१॥

ஸ்வத⁴ர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி|
த⁴ர்ம்யாத்³தி⁴ யுத்³தா⁴ச்ச்²ரேயோऽந்யத்க்ஷத்ரியஸ்ய ந வித்³யதே ||2-31||

ஸ்வத⁴ர்மம் சாவேக்ஷ்ய அபி = ஸ்வதர்மத்தைப் கருதினாலும்
விகம்பிதும் ந அர்ஹஸி = நீ நடுங்குதல் தகாது
க்ஷத்ரியஸ்ய த⁴ர்ம்யாத் யுத்³தா⁴த் அந்யத் = மன்னருக்கு அறப்போரைக் காட்டிலும்
ஸ்ரேய: ந வித்³யதே = உயர்ந்ததொரு நன்மை இல்லை

ஸ்வதர்மத்தைக் கருதியும் நீ நடுங்குதல் இசையாது. அறப்போரைக் காட்டிலும் உயர்ந்ததொரு நன்மை மன்னர்க்கில்லை.


यदृच्छया चोपपन्नं स्वर्गद्वारमपावृतम्।
सुखिनः क्षत्रियाः पार्थ लभन्ते युद्धमीदृशम्॥३२॥

யத்³ருச்ச²யா சோபபந்நம் ஸ்வர்க³த்³வாரமபாவ்ருதம்|
ஸுகி²ந: க்ஷத்ரியா: பார்த² லப⁴ந்தே யுத்³த⁴மீத்³ருஸ²ம் ||2-32||

பார்த² = பார்த்தா;
யத்³ருச்ச²யா உபபந்நம் = தானே வந்திருப்பதும்
அபாவ்ருதம் ஸ்வர்க³த்³வாரம் = திறந்து கிடக்கும் பொன்னுலக வாயில்
ஈத்³ருஸ²ம் யுத்³த⁴ம் = இத்தகைய போர்
ஸுகி²ந: க்ஷத்ரியா: லப⁴ந்தே = பாக்கியமுடைய மன்னரே அடைகிறார்கள்

தானே வந்தெய்துவது, திறந்து கிடக்கும் பொன்னுலக வாயில் போன்றது. இத்தகைய போர் கிடைக்கப் பெறும் மன்னர் இன்பமுடையார்!


अथ चेत्त्वमिमं धर्म्यं सङ्ग्रामं न करिष्यसि।
ततः स्वधर्मं कीर्तिं च हित्वा पापमवाप्स्यसि॥३३॥

அத² சேத்த்வமிமம் த⁴ர்ம்யம் ஸங்க்³ராமம் ந கரிஷ்யஸி|
தத: ஸ்வத⁴ர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி ||2-33||

அத² = அன்றி
இமம் த⁴ர்ம்யம் ஸங்க்³ராமம் = இந்தத் தர்மயுத்தத்தை
த்வம் ந கரிஷ்யஸி சேத் = நீ நடத்தாமல் விடுவாயானால்
தத: ஸ்வத⁴ர்மம் கீர்திம் ச ஹித்வா = அதனால் ஸ்வதர்மத்தையும், கீர்த்தியையும் கொன்று
பாபம் அவாப்ஸ்யஸி = பாவத்தையடைவாய்

அன்றி நீ இந்தத் தர்மயுத்தத்தை நடத்தாமல் விடுவாயானால், அதனால் ஸ்வதர்மத்தையும், கீர்த்தியையும் கொன்று பாவத்தையடைவாய்.


अकीर्तिं चापि भूतानि कथयिष्यन्ति तेऽव्ययाम्।
सम्भावितस्य चाकीर्तिर्मरणादतिरिच्यते॥३४॥

அகீர்திம் சாபி பூ⁴தாநி கத²யிஷ்யந்தி தேऽவ்யயாம்|
ஸம்பா⁴விதஸ்ய சாகீர்திர்மரணாத³திரிச்யதே ||2-34||

பூ⁴தாநி ச = உலகத்தாரும்
தே அவ்யயாம் = உனக்கு நீண்டகாலம் இருக்கக் கூடிய
அகீர்திம் அபி கத²யிஷ்யந்தி = வசை உரைப்பார்கள்
ஸம்பா⁴விதஸ்ய = புகழ் கொண்டோன்
அகீர்தி: மரணாத் அதிரிச்யதே = அபகீர்த்தி மரணத்திலுங் கொடிதன்றோ?

உலகத்தார் உனக்கு மாறாத வசையுமுரைப்பார்கள். புகழ் கொண்டோன் பின்னரெய்தும் அபகீர்த்தி மரணத்திலுங் கொடிதன்றோ?


भयाद्रणादुपरतं मंस्यन्ते त्वां महारथाः।
येषां च त्वं बहुमतो भूत्वा यास्यसि लाघवम्॥३५॥

ப⁴யாத்³ரணாது³பரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா²:|
யேஷாம் ச த்வம் ப³ஹுமதோ பூ⁴த்வா யாஸ்யஸி லாக⁴வம் ||2-35||

ச யேஷாம் த்வம் ப³ஹுமதோ பூ⁴த்வா = மேலும் எவர்களுடைய (கருத்தில்) நீ நன்மதிப்பைப் பெற்று இருந்து
லாக⁴வம் யாஸ்யஸி = தாழ்மையாய் அடைவாயோ
மஹாரதா²: த்வாம் = அந்த மகாரதர்கள் உன்னை
ப⁴யாத் ரணாத் உபரதம் = பயத்தினால் யுத்தத்திலிருந்து பின்வாங்கியவனாக
மம்ஸ்யந்தே = கருதுவார்கள்

நீ அச்சத்தால் போரை விட்டு விலகியதாக மகாரதர் கருதுவார்கள். அவர்களுடைய நன்மதிப்பைப் பெற்ற நீ இதனால் சிறுமையடைவாய்.


अवाच्यवादांश्च बहून्वदिष्यन्ति तवाहिताः।
निन्दन्तस्तव सामर्थ्यं ततो दुःखतरं नु किम्॥३६॥

அவாச்யவாதா³ம்ஸ்²ச ப³ஹூந்வதி³ஷ்யந்தி தவாஹிதா:|
நிந்த³ந்தஸ்தவ ஸாமர்த்²யம் ததோ து³:க²தரம் நு கிம் ||2-36||

தவ அஹிதா: = உனக்கு வேண்டாதார்
தவ ஸாமர்த்²யம் நிந்த³ந்த = உன் திறமையைப் பழிப்பார்கள்
ப³ஹூந் அவாச்யவாதா³ம் ச = சொல்லத் தகாத வார்த்தைகள் பல
வதி³ஷ்யந்தி = சொல்லுவார்கள்
தத: து³:க²தரம் நு கிம் = இதைக் காட்டிலும் அதிகமான துன்பமெது

உனக்கு வேண்டாதார் சொல்லத் தகாத வார்த்தைகள் பல சொல்லுவார்கள். உன் திறமையைப் பழிப்பார்கள். இதைக் காட்டிலும் அதிகமான துன்பமெது?


हतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा भोक्ष्यसे महीम्।
तस्मादुत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चयः॥३७॥

ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்க³ம் ஜித்வா வா போ⁴க்ஷ்யஸே மஹீம்|
தஸ்மாது³த்திஷ்ட² கௌந்தேய யுத்³தா⁴ய க்ருதநிஸ்²சய: ||2-37||

ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்க³ம் = கொல்லப்படினோ வானுல கெய்துவாய்
ஜித்வா வா போ⁴க்ஷ்யஸே மஹீம் = வென்றால் பூமியாள்வாய்
தஸ்மாத் கௌந்தேய = ஆகவே குந்தி மைந்தனே
க்ருதநிஸ்²சய: யுத்³தா⁴ய உத்திஷ்ட² = நிச்சயித்துக் கொண்டு போருக்கு எழுந்திரு

கொல்லப்படினோ வானுல கெய்துவாய். வென்றால் பூமியாள்வாய். ஆதலால் போர் செயத் துணிந்து நீ எழுந்து நில்.


सुखदुःखे समे कृत्वा लाभालाभौ जयाजयौ।
ततो युद्धाय युज्यस्व नैवं पापमवाप्स्यसि॥३८॥

ஸுக²து³:கே² ஸமே க்ருத்வா லாபா⁴லாபௌ⁴ ஜயாஜயௌ|
ததோ யுத்³தா⁴ய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி ||2-38||

ஸுக² – து³:கே² = இன்பம், துன்பம்
லாப⁴ – அலாப⁴= பேறு, இழவு
ஜய அஜயௌ = வெற்றி, தோல்வி
ஸமே க்ருத்வா = நிகரெனக் கொண்டு
ததோ யுத்³தா⁴ய யுஜ்யஸ்வ = அதற்கு பின் யுத்தத்துக்கு தயாராவாயாக
ஏவம் ந பாபம் அவாப்ஸ்யஸி = இவ்விதம் (செய்தால்) பாவத்தை அடைய மாட்டாய்

இன்பம், துன்பம், இழவு, பேறு, வெற்றி, தோல்வி இவற்றை நிகரெனக் கொண்டு, நீ போர்க்கொருப்படுக. இவ்வணம் புரிந்தால் பாவமெய்தாய்.


एषा तेऽभिहिता साङ्ख्ये बुद्धिर्योगे त्विमां शृणु।
बुद्ध्या युक्तो यया पार्थ कर्मबन्धं प्रहास्यसि॥३९॥

ஏஷா தேऽபி⁴ஹிதா ஸாங்க்²யே பு³த்³தி⁴ர்யோகே³ த்விமாம் ஸ்²ருணு|
பு³த்³த்⁴யா யுக்தோ யயா பார்த² கர்மப³ந்த⁴ம் ப்ரஹாஸ்யஸி ||2-39||

பார்த² = பார்த்தா
ஏஷா பு³த்³தி⁴ தே = இந்த புத்தி (அறிவுரை) உனக்கு
ஸாங்க்²யே அபி⁴ஹிதா = ஸாங்கிய வழிப்படி சொன்னேன்
து இமாம் யோகே³ ஸ்²ருணு = இனி யோக வழியால் (சொல்லுகிறேன்) கேள்
யயா பு³த்³த்⁴யா யுக்த: =இந்தப் புத்தி கொண்டவன்
கர்மப³ந்த⁴ம் ப்ரஹாஸ்யஸி = கர்மத் தளைகளைச் சிதறிவிடுவான்

இங்ஙனம் உனக்கு ஸாங்கிய வழிப்படி புத்தி சொன்னேன். இனி யோக வழியால் சொல்லுகிறேன்; கேள். இந்தப் புத்தி கொண்டவன் கர்மத் தளைகளைச் சிதறிவிடுவான்.


नेहाभिक्रमनाशोऽस्ति प्रत्यवायो न विद्यते।
स्वल्पमप्यस्य धर्मस्य त्रायते महतो भयात्॥४०॥

நேஹாபி⁴க்ரமநாஸோ²ऽஸ்தி ப்ரத்யவாயோ ந வித்³யதே|
ஸ்வல்பமப்யஸ்ய த⁴ர்மஸ்ய த்ராயதே மஹதோ ப⁴யாத் ||2-40||

இஹ = இதில் (கர்ம யோகத்தில்)
அபி⁴க்ரமநாஸ: ந அஸ்தி = விதைக்கு (முயற்சிக்கு) நஷ்டம் இல்லை
ப்ரத்யவாய: ந வித்³யதே = நேரெதிரான விளைவும் இல்லை
அஸ்ய த⁴ர்மஸ்ய ஸ்வல்பம் அபி = இந்த தர்மத்தில் (கர்ம யோகம்) சிறிதிருப்பினும்
மஹதோ ப⁴யாத் த்ராயதே = பேரச்சத்தினின்று காப்பாற்றும்

இதில் முயற்சிக்கு அழிவில்லை. இது வரம்பு மீறிய செய்கையுமன்று. இந்தத் தர்மத்தில் சிறிதிருப்பினும், அஃதொருவனைப் பேரச்சத்தினின்று காப்பாற்றும்.


व्यवसायात्मिका बुद्धिरेकेह कुरुनन्दन।
बहुशाखा ह्यनन्ताश्च बुद्धयोऽव्यवसायिनाम्॥४१॥

வ்யவஸாயாத்மிகா பு³த்³தி⁴ரேகேஹ குருநந்த³ந |
ப³ஹுஸா²கா² ஹ்யநந்தாஸ்²ச பு³த்³த⁴யோऽவ்யவஸாயிநாம் ||2-41||

குருநந்த³ந = குருகுலத் தோன்றலே!

இஹ வ்யவஸாயாத்மிகா பு³த்³தி⁴ ஏகா = இந்த உலகத்தில் உறுதியுடைய புத்தி ஒருமையுடையது

அவ்யவஸாயிநாம் = உறுதியில்லாதோரின்
பு³த்³த⁴ய: = புத்திகள்
ப³ஹுஸா²கா² = பல கிளைப்பட்டது
அநந்தா: ச = முடிவற்றது
குருகுலத் தோன்றலே! உறுதியுடைய புத்தி இவ்வுலகத்தில் ஒருமையுடையது. உறுதியில்லாதோரின் மதி பல கிளைப்பட்டது, முடிவற்றது.


यामिमां पुष्पितां वाचं प्रवदन्त्यविपश्चितः।
वेदवादरताः पार्थ नान्यदस्तीति वादिनः॥४२॥

யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவத³ந்த்யவிபஸ்²சித:|
வேத³வாத³ரதா: பார்த² நாந்யத³ஸ்தீதி வாதி³ந: ||2-42||

பார்த² = பார்த்தா!
வேத³வாத³ரதா: = வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார்
புஷ்பிதாம் வாசம் ப்ரவத³ந்த்ய = பூக்களைப் போன்ற (அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள்
ந அந்யத் அஸ்தி இதி வாதி³ந: = தமது கொள்கை தவிர மற்றது பிழையென்கிறார்கள்

வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார் சிலர், பூக்களைப் போன்ற (அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள். தமது கொள்கையழிய மற்றது பிழையென்கிறார்கள்.


कामात्मानः स्वर्गपरा जन्मकर्मफलप्रदाम्।
क्रियाविशेषबहुलां भोगैश्वर्यगतिं प्रति॥४३॥

காமாத்மாந: ஸ்வர்க³பரா ஜந்மகர்மப²லப்ரதா³ம்|
க்ரியாவிஸே²ஷப³ஹுலாம் போ⁴கை³ஸ்²வர்யக³திம் ப்ரதி ||2-43||

காமாத்மாந: = ஆசைகளில் மூழ்கியவர்கள்
ஸ்வர்க³பரா: = சொர்க்கத்தைப் பரமாகக் கொண்டோர்
ஜந்மகர்மப²லப்ரதா³ம் = பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர்
போ⁴கை³ஸ்²வர்யக³திம் = போகத்தையும் ஆட்சியையும் வேண்டுவோர்
க்ரியாவிஸே²ஷப³ஹுலாம் = பலவகையான கிரியைகள்

இவர்கள் காமிகள்; சொர்க்கத்தைப் பரமாகக் கொண்டோர். பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர்; போகத்தையும் ஆட்சியையும் வேண்டுவோர்; பலவகையான கிரியைகளைக் காட்டிப் பேசுகிறார்கள்.


भोगैश्वर्यप्रसक्तानां तयापहृतचेतसाम्।
व्यवसायात्मिका बुद्धिः समाधौ न विधीयते॥४४॥

போ⁴கை³ஸ்²வர்யப்ரஸக்தாநாம் தயாபஹ்ருதசேதஸாம்|
வ்யவஸாயாத்மிகா பு³த்³தி⁴: ஸமாதௌ⁴ ந விதீ⁴யதே ||2-44||

தயா அபஹ்ருத சேதஸாம் = அந்த (பேச்சினால்) மனம் அபஹரிக்கப் பட்டு
போ⁴க³ ஐஸ்²வர்ய ப்ரஸக்தாநாம் = போகத்திலும் ஆட்சியுலும் பற்றுறுவோர்
வ்யவஸாயாத்மிகா பு³த்³தி⁴: = நிச்சய புத்தி
ஸமாதௌ⁴ ந விதீ⁴யதே = சமாதியில் நிலைபெறாது

இவர்கள் சொல்லுவதைக் கேட்டு மதிமயங்கி போகத்திலும் ஆட்சியுலும் பற்றுறுவோருடைய நிச்சய புத்தி சமாதியில் நிலைபெறாது.


त्रैगुण्यविषया वेदा निस्त्रैगुण्यो भवार्जुन।
निर्द्वन्द्वो नित्यसत्त्वस्थो निर्योगक्षेम आत्मवान्॥४५॥

த்ரைகு³ண்யவிஷயா வேதா³ நிஸ்த்ரைகு³ண்யோ ப⁴வார்ஜுந|
நிர்த்³வந்த்³வோ நித்யஸத்த்வஸ்தோ² நிர்யோக³க்ஷேம ஆத்மவாந் ||2-45||

வேதா³ = வேதங்கள்
த்ரைகு³ண்ய விஷயா = மூன்று குணங்களுக்குட்பட்டன
நிஸ்த்ரைகு³ண்யோ = மூன்று குணங்களையும் கடந்தோனாக
நிர்த்³வந்த்³வ = இருமைகளற்று
நித்யஸத்த்வஸ்த² = எப்போதும் உண்மையில் நின்று
நிர்யோக³க்ஷேம = யோக க்ஷேமங்களைக் கருதாமல்
ஆத்மவாந் ப⁴வ = ஆத்மாவை வசப்படுத்தியவனாகுக

மூன்று குணங்களுக்குட்பட்டனவற்றைக் குறித்து வேதங்கள் பேசுகின்றன. அர்ஜுனா, நீ மூன்று குணங்களையும் கடந்தோனாகுக. இருமைகளற்று, எப்போதும் உண்மையில் நின்று, யோக க்ஷேமங்களைக் கருதாமல், ஆத்மாவை வசப்படுத்தியவனாகுக.


यावानर्थ उदपाने सर्वतः सम्प्लुतोदके।
तावान्सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानतः॥४६॥

யாவாநர்த² உத³பாநே ஸர்வத: ஸம்ப்லுதோத³கே|
தாவாந்ஸர்வேஷு வேதே³ஷு ப்³ராஹ்மணஸ்ய விஜாநத: ||2-46||

ஸர்வத: ஸம்ப்லுத உத³கே = எங்கும் நீர் நிரம்பிய இடத்தில்
யாவாந் அர்த² உத³பாநே = ஒரு சிறு குட்டை என்ன பொருளுடையது
ஸர்வேஷு வேதே³ஷு = எல்லா வேதன்களினாலும்
விஜாநத: ப்³ராஹ்மணஸ்ய = ஞானமுடைய பிராமணனுக்கு
தாவாந் = அவ்வளவு தான் (பயன்)

எங்கும் நீர் நிரம்பிய இடத்தில் ஒரு சிறு குட்டம் என்ன பொருளுடையது; அன்னபொருளே ஞானமுடையை பிராமணனுக்கு வேதங்களுமுடையன.


कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन।
मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि॥४७॥

கர்மண்யேவாதி⁴காரஸ்தே மா ப²லேஷு கதா³சந|
மா கர்மப²லஹேதுர்பூ⁴ர்மா தே ஸங்கோ³ऽஸ்த்வகர்மணி ||2-47||

தே கர்மணி ஏவ அதி⁴கார = தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு
கதா³சந மா ப²லேஷு = எப்போதுமே பலன்களில் இல்லை
கர்மப²லஹேது மா பூ⁴ = செய்கையின் பயனைக் கோருபவனாக ஆகாதே
தே அகர்மணி = உனக்கு கர்மங்களை ஆற்றாமல்
ஸங்க³: மா அஸ்து = இருப்பதிலும் பற்று கூடாது

தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதன் பயன்களில் எப்போதுமே உனக்கதிகாரமில்லை. செய்கையின் பயனைக் கருதாதே; தொழில் செய்யாமலுமிராதே.


योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय।
सिद्ध्यसिद्ध्योः समो भूत्वा समत्वं योग उच्यते॥४८॥

யோக³ஸ்த²: குரு கர்மாணி ஸங்க³ம் த்யக்த்வா த⁴நஞ்ஜய|
ஸித்³த்⁴யஸித்³த்⁴யோ: ஸமோ பூ⁴த்வா ஸமத்வம் யோக³ உச்யதே ||2-48||

த⁴நஞ்ஜய = அர்ஜுனா!
யோக³ஸ்த²: = யோகத்தில் நின்று
ஸங்க³ம் த்யக்த்வா = பற்றை நீக்கி
ஸித்³தி⁴ அஸித்³த⁴யோ: ஸமோ பூ⁴த்வா = வெற்றி தோல்விகளை நிகரெனக் கொண்டு
கர்மாணி குரு = தொழில்களைச் செய்க
ஸமத்வம் யோக³ உச்யதே = நடுநிலையே யோகமெனப்படும்

தனஞ்ஜயா, யோகத்தில் நின்று, பற்றை நீக்கி, வெற்றி தோல்விகளை நிகரெனக் கொண்டு தொழில்களைச் செய்க. நடுநிலையே யோகமெனப்படும்.


दूरेण ह्यवरं कर्म बुद्धियोगाद्धनञ्जय।
बुद्धौ शरणमन्विच्छ कृपणाः फलहेतवः॥४९॥

தூ³ரேண ஹ்யவரம் கர்ம பு³த்³தி⁴யோகா³த்³த⁴நஞ்ஜய|
பு³த்³தௌ⁴ ஸ²ரணமந்விச்ச² க்ருபணா: ப²லஹேதவ: ||2-49||

த⁴நஞ்ஜய = தனஞ்ஜயா!
பு³த்³தி⁴யோகா³த் கர்ம = புத்தி யோகத்தைக் காட்டிலும் கர்மம்
தூ³ரேண அவரம் = நெடுந்தொலைவு தாழ்ந்தது
பு³த்³தௌ⁴ ஸ²ரணம் அந்விச்ச² = புத்தியைச் சரணடை
ப²லஹேதவ: க்ருபணா: = பயனைக் கருதுவோர் லோபிகள்

தனஞ்ஜயா, புத்தி யோகத்தைக் காட்டிலும் கர்மம் நெடுந்தொலை தாழ்ந்தது. புத்தியைச் சரணடை. பயனைக் கருதுவோர் லோபிகள்.


बुद्धियुक्तो जहातीह उभे सुकृतदुष्कृते।
तस्माद्योगाय युज्यस्व योगः कर्मसु कौशलम्॥५०॥

பு³த்³தி⁴யுக்தோ ஜஹாதீஹ உபே⁴ ஸுக்ருதது³ஷ்க்ருதே|
தஸ்மாத்³யோகா³ய யுஜ்யஸ்வ யோக³: கர்மஸு கௌஸ²லம் ||2-50||

பு³த்³தி⁴யுக்த: = புத்தியுடையவன்
ஸுக்ருத து³ஷ்க்ருதே = நற்செய்கை தீச்செய்கை
உபே⁴ இஹ ஜஹாதி = இரண்டையும் இங்கு துறக்கிறான்
தஸ்மாத்³ யோகா³ய யுஜ்யஸ்வ = ஆதலால் நீ யோகத்திலே பொருந்தி விடு
யோக³: கர்மஸு கௌஸ²லம் = யோகம் செயல்களில் திறமையாம் (விடுபட உபாயமாகும்)

புத்தியுடையவன் இங்கு நற்செய்கை தீச்செய்கை இரண்டையுந் துறக்கிறான். ஆதலால் நீ யோகத்திலே பொருந்தி விடு. யோகம் செயல்களில் திறமையாம்.


कर्मजं बुद्धियुक्ता हि फलं त्यक्त्वा मनीषिणः।
जन्मबन्धविनिर्मुक्ताः पदं गच्छन्त्यनामयम्॥५१॥

கர்மஜம் பு³த்³தி⁴யுக்தா ஹி ப²லம் த்யக்த்வா மநீஷிண:|
ஜந்மப³ந்த⁴விநிர்முக்தா: பத³ம் க³ச்ச²ந்த்யநாமயம் ||2-51||

ஹி பு³த்³தி⁴யுக்தா மநீஷிண: = ஏனெனில் புத்தியுடைய மேதாவிகள்
ப²லம் த்யக்த்வா = பயனைத் துறந்து
ஜந்மப³ந்த⁴விநிர்முக்தா: = பிறவித் தளை நீக்கி
அநாமயம் பத³ம் க³ச்ச²ந்தி = மாறுதலற்ற பரமபதத்தை அடைகிறார்கள்

புத்தியுடைய மேதாவிகள் செய்கையில் விளையும் பயனைத் துறந்து, பிறவித் தளை நீக்கி, ஆனந்தப் பதவி அடைகிறார்கள்.


यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति।
तदा गन्तासि निर्वेदं श्रोतव्यस्य श्रुतस्य च॥५२॥

யதா³ தே மோஹகலிலம் பு³த்³தி⁴ர்வ்யதிதரிஷ்யதி|
ததா³ க³ந்தாஸி நிர்வேத³ம் ஸ்²ரோதவ்யஸ்ய ஸ்²ருதஸ்ய ச ||2-52||

யதா³ தே பு³த்³தி⁴ = எப்போது உனது புத்தி
மோஹகலிலம் = மோகக் குழப்பத்தை
வ்யதிதரிஷ்யதி = கடந்து செல்லுகிறதோ
ததா³ = அப்போது
ஸ்²ரோதவ்யஸ்ய ஸ்²ருதஸ்ய ச = கேட்கப் போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும்
நிர்வேத³ம் க³ந்தாஸி = வேதனையேற்படாது

உனது புத்தி மோகக் குழப்பத்தைக் கடந்து செல்லுமாயின், அப்போது கேட்கப் போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும் உனக்கு வேதனையேற்படாது.


श्रुतिविप्रतिपन्ना ते यदा स्थास्यति निश्चला।
समाधावचला बुद्धिस्तदा योगमवाप्स्यसि॥५३॥

ஸ்²ருதிவிப்ரதிபந்நா தே யதா³ ஸ்தா²ஸ்யதி நிஸ்²சலா|
ஸமாதா⁴வசலா பு³த்³தி⁴ஸ்ததா³ யோக³மவாப்ஸ்யஸி ||2-53||

ஸ்²ருதிவிப்ரதிபந்நா = கேள்வியிலே கலக்கமுறாததாய்
தே பு³த்³தி⁴ = உனது புத்தி
ஸமாதௌ⁴ = சமாதி நிலையில்
நிஸ்²சலா அசலா = உறுதிகொண்டு, அசையாது
யதா³ ஸ்தா²ஸ்யதி = நிற்குமாயின்
ததா³ யோக³ம் அவாப்ஸ்யஸி = அப்போது யோகத்தை அடைவாய்

உனது புத்தி, கேள்வியிலே கலக்கமுறாததாய், உறுதிகொண்டு, சமாதி நிலையில் அசையாது நிற்குமாயின், அப்போது யோகத்தை அடைவாய்.


अर्जुन उवाच
स्थितप्रज्ञस्य का भाषा समाधिस्थस्य केशव।
स्थितधीः किं प्रभाषेत किमासीत व्रजेत किम्॥५४॥

அர்ஜுந உவாச
ஸ்தி²தப்ரஜ்ஞஸ்ய கா பா⁴ஷா ஸமாதி⁴ஸ்த²ஸ்ய கேஸ²வ|
ஸ்தி²ததீ⁴: கிம் ப்ரபா⁴ஷேத கிமாஸீத வ்ரஜேத கிம் ||2-54||

அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்
கேஸ²வ = கேசவா!
ஸமாதி⁴ஸ்த²ஸ்ய ஸ்தி²தப்ரஜ்ஞஸ்ய கா பா⁴ஷா = உறுதிகொண்ட அறிவுடன் சமாதியில் நிற்போன் எவ்வாறு பேசுவான்?
ஸ்தி²ததீ⁴: = ஸ்திர புத்தியுடையவன் என்ன சொல்வான்?
கிம் ப்ரபா⁴ஷேத = என்ன சொல்வான்?
கிம் ஆஸீத = எப்படியிருப்பான்?
கிம் வ்ரஜேத = எதனையடைவான்?

அர்ஜுனன் சொல்லுகிறான்: கேசவா, உறுதிகொண்ட அறிவுடன் சமாதியில் நிற்போன் எவ்வாறு பேசுவான்? ஸ்திர புத்தியுடையவன் என்ன சொல்வான்? எப்படியிருப்பான்? எதனையடைவான்?


श्रीभगवानुवाच
प्रजहाति यदा कामान्सर्वान्पार्थ मनोगतान्।
आत्मन्येवात्मना तुष्टः स्थितप्रज्ञस्तदोच्यते॥५५॥

ஸ்ரீப⁴க³வாநுவாச
ப்ரஜஹாதி யதா³ காமாந்ஸர்வாந்பார்த² மநோக³தாந்|
ஆத்மந்யேவாத்மநா துஷ்ட: ஸ்தி²தப்ரஜ்ஞஸ்ததோ³ச்யதே ||2-55||

ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
பார்த² = அர்ஜுனா!
மநோக³தாந் ஸர்வாந் காமாந் = மனதில் எழும் விருப்பங்களனைத்தையும்
ப்ரஜஹாதி = துறக்கிறான்
யதா³ ஆத்மநா ஆத்மநி ஏவ துஷ்ட: = தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின்
ததா³ ஸ்தி²தப்ரஜ்ஞ: உச்யதே = அப்போது ஸ்திர புத்தியுடையவனென்று சொல்லப்படுகிறான்

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஒருவன் தன் மனதில் எழும் விருப்பங்களனைத்தையும் துறந்து தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின், அப்போது ஸ்திர புத்தியுடையவனென்று சொல்லப்படுகிறான்.


दुःखेष्वनुद्विग्नमनाः सुखेषु विगतस्पृहः।
वीतरागभयक्रोधः स्थितधीर्मुनिरुच्यते॥५६॥

து³:கே²ஷ்வநுத்³விக்³நமநா: ஸுகே²ஷு விக³தஸ்ப்ருஹ:|
வீதராக³ப⁴யக்ரோத⁴: ஸ்தி²ததீ⁴ர்முநிருச்யதே ||2-56||

து³:கே²ஷு அநுத்³விக்³நமநா: = துன்பங்களிலே மனங்கொடாதவனாய்
ஸுகே²ஷு விக³தஸ்ப்ருஹ: = இன்பங் களிலே ஆவலற்ற வனாய்
வீதராக³ப⁴யக்ரோத⁴: = அச்சமும் சினமுந் தவிர்த்தவன்
முநி ஸ்தி²ததீ⁴ உச்யதே = அம்முனி, மதியிலே யுறுதி வாய்ந்தவ னென்ப

“துன்பங்களிலே மனங்கொடாதவனாய், இன்பங் களிலே ஆவலற்ற வனாய், அச்சமும் சினமுந் தவித்தவ னாயின், அம்முனி, மதியிலே யுறுதி வாய்ந்தவ னென்ப.”


यः सर्वत्रानभिस्‍नेहस्तत्तत्प्राप्य शुभाशुभम्।
नाभिनन्दति न द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता॥५७॥

ய: ஸர்வத்ராநபி⁴ஸ்நேஹஸ்தத்தத்ப்ராப்ய ஸு²பா⁴ஸு²ப⁴ம்|
நாபி⁴நந்த³தி ந த்³வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா ||2-57||

ய: = எவன்
ஸு²ப⁴ அஸு²ப⁴ம் = நல்லதும் கெட்டதும்
ப்ராப்ய = அடைந்து
ந அபி⁴நந்த³தி = மகிழ்வதில்லை
ந த்³வேஷ்டி = வெறுப்பதும் இல்லை
ஸர்வத்ர அநபி⁴ஸ்நேஹ = பகைப்பதுமின்றியிருப்பானோ
தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா = அவனுடைய அறிவே நிலைகொண்டது

எவன் நல்லதும் கெட்டதும் வருமிடத்தே எதனிலும் வீழ்ச்சியற்றவனாய், ஆவலுறுவதும் பகைப்பதுமின்றியிருப்பானோ, அவனுடைய அறிவே நிலைகொண்டது.


यदा संहरते चायं कूर्मोऽङ्गानीव सर्वशः।
इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता॥५८॥

யதா³ ஸம்ஹரதே சாயம் கூர்மோऽங்கா³நீவ ஸர்வஸ²:|
இந்த்³ரியாணீந்த்³ரியார்தே²ப்⁴யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா ||2-58||

கூர்ம ஸர்வஸ²: ச = ஆமை தன் அவயங்களையும்
ஸம்ஹரதே இவ = இழுத்துக்கொள்ளுவது போல்
அர்தே²ப்⁴ய இந்த்³ரிய = விஷயப் பதார்த்தங்களினின்று புலன்களை
யதா³ அயம் = எப்போது இந்த மனிதன் (இழுத்துக் கொள்ள வல்லானாயின்)
தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா = அவனுடைய அறிவே நிலைகொண்டது

ஆமை தன் அவயங்களை இழுத்துக்கொள்ளுவது போல், எப்புறத்தும் விஷயப் பதார்த்தங்களினின்று புலன்களை யருவன் மீட்க வல்லானாயின், அவனறிவே நிலைகொண்டது.


विषया विनिवर्तन्ते निराहारस्य देहिनः।
रसवर्जं रसोऽप्यस्य परं दृष्ट्वा निवर्तते॥५९॥

விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தே³ஹிந:|
ரஸவர்ஜம் ரஸோऽப்யஸ்ய பரம் த்³ருஷ்ட்வா நிவர்ததே ||2-59||

நிராஹாரஸ்ய தே³ஹிந: = கவராத ஜீவனிடமிருந்து
விஷயா விநிவர்தந்தே = விஷயங்கள் தாமே விலகிக் கொள்ளுகின்றன
ரஸவர்ஜம் = (எனினும் இவன் அவற்றிடமுள்ள ) சுவையை மறப்பதில்லை
அஸ்ய பரம் த்³ருஷ்ட்வா = இவன் பரம்பொருளைக் கண்டதும்
ரஸ: அபி நிவர்ததே = அச்சுவையுந் தீர்ந்துவிடும்

தம்மைக் கவராத ஜீவனிடமிருந்து விஷயங்கள் தாமே விலகிக் கொள்ளுகின்றன. எனினும் அவற்றிடமுள்ள சுவையை இவன் மறப்பதில்லை. பரம்பொருளைக் காண்பானாயின் அச்சுவையுந் தீர்ந்துவிடும்.


यततो ह्यपि कौन्तेय पुरुषस्य विपश्चितः।
इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मनः॥६०॥

யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்²சித:|
இந்த்³ரியாணி ப்ரமாதீ²நி ஹரந்தி ப்ரஸப⁴ம் மந: ||2-60||

கௌந்தேய = குந்தியின் மகனே
ஹி = ஆனால்
யதத: விபஸ்²சித: = முயற்சியுள்ள புத்திசாலியான
புருஷஸ்ய மந: அபி = புருஷனின் மனதிலே கூட
ப்ரமாதீ²நி இந்த்³ரியாணி = கலக்குபவையான இந்திரியங்கள்
ப்ரஸப⁴ம் ஹரந்தி = வலிய வாரிச் செல்கின்றன

குந்தியின் மகனே, (தவ) முயற்சியுடைய புருஷனிடத்திலே கூட, இந்திரியங்கள் வரம்பு கடந்து செல்லும்போது தம்முடன் மனத்தையும் வலிய வாரிச் செல்கின்றன.


तानि सर्वाणि संयम्य युक्त आसीत मत्परः।
वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता॥६१॥

தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர:|
வஸே² ஹி யஸ்யேந்த்³ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா ||2-61||

தாநி ஸர்வாணி ஸம்யம்ய = அவற்றையெல்லாம் நன்றாக அடக்கி
மத்பர: = என்னைப் பரமாகக் கொண்டு
யுக்த ஆஸீத = யோகத்தில் அமர்ந்தவனாய்
யஸ்ய இந்த்³ரியாணி வஸே² = எவன் புலன்களை வசப்படுத்தியிருக்கிறானோ
தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா = அவனுடைய அறிவே நிலைகொண்டது

அவற்றையெல்லாம் நன்றாக அடக்கி, யோகத்தில் அமர்ந்தவனாய், என்னைப் பரமாகக் கொண்டு, புலன்களை வசப்படுத்தி வைத்திருப்பவன் எவனோ, அவனுடைய அறிவே நிலைகொண்டது.


ध्यायतो विषयान्पुंसः सङ्गस्तेषूपजायते।
सङ्गात्सञ्जायते कामः कामात्क्रोधोऽभिजायते॥६२॥

த்⁴யாயதோ விஷயாந்பும்ஸ: ஸங்க³ஸ்தேஷூபஜாயதே|
ஸங்கா³த்ஸஞ்ஜாயதே காம: காமாத்க்ரோதோ⁴ऽபி⁴ஜாயதே ||2-62||

பும்ஸ: விஷயாத் த்⁴யாயத = மனிதன் விஷயங்களைக் கருதும் போது
தேஷூ ஸங்க³: உபஜாயதே = அவற்றில் பற்றுதலுண்டாகிறது
ஸங்கா³த் காம: ஸஞ்ஜாயதே = பற்றுதலால் விருப்பமுண்டாகிறது
காமாத் க்ரோத⁴: அபி⁴ஜாயதே = விருப்பத்தால் சினம் பிறக்கிறது.

மனிதன் விஷயங்களைக் கருதும்போது அவற்றில் பற்றுதலுண்டாகிறது. பற்றுதலால் விருப்பமுண்டாகிறது. விருப்பத்தால் சினம் பிறக்கிறது.


क्रोधाद्भवति सम्मोहः सम्मोहात्स्मृतिविभ्रमः।
स्मृतिभ्रंशाद्बुद्धिनाशो बुद्धिनाशात्प्रणश्यति॥६३॥

க்ரோதா⁴த்³ப⁴வதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்⁴ரம:|
ஸ்ம்ருதிப்⁴ரம்ஸா²த்³பு³த்³தி⁴நாஸோ² பு³த்³தி⁴நாஸா²த்ப்ரணஸ்²யதி ||2-63||

க்ரோதா⁴த் ஸம்மோஹ: ப⁴வதி = சினத்தால் மயக்கம் உண்டாகிறது
ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்⁴ரம: = மயக்கத்தால் நினைவு தவறுதல்
ஸ்ம்ருதிப்⁴ரம்ஸா²த் பு³த்³தி⁴ நாஸ²= நினைவு தவறுதலால் புத்தி நாசம்
பு³த்³தி⁴நாஸா²த் ப்ரணஸ்²யதி = புத்தி நாசத்தால் அழிகிறான்.

சினத்தால் மயக்கம்; மயக்கத்தால் நினைவு தவறுதல்; நினைவு தவறுதலால் புத்தி நாசம்; புத்தி நாசத்தால் அழிகிறான்.


रागद्वेषवियुक्तैस्तु विषयानिन्द्रियैश्चरन्।
आत्मवश्यैर्विधेयात्मा प्रसादमधिगच्छति॥६४॥

ராக³த்³வேஷவியுக்தைஸ்து விஷயாநிந்த்³ரியைஸ்²சரந்|
ஆத்மவஸ்²யைர்விதே⁴யாத்மா ப்ரஸாத³மதி⁴க³ச்ச²தி ||2-64||

விதே⁴யாத்மா = தன் விதிக்குத்தான் உட்பட்ட மனிதன் (சாதகன்)
ராக³ த்³வேஷ வியுக்தை: = விழைதலும் பகைத்தலுமின்றி
ஆத்மவஸ்²யை இந்த்³ரியை: = தனக்கு வசப்பட்ட புலன்களுடன்
விஷயாந் சரந் = போகத்தில் சஞ்சரித்துக் கொண்டு
ப்ரஸாத³ம் அதி⁴க³ச்ச²தி = உள்ளத் தெளிவை அடைகிறான்

விழைதலும் பகைத்தலுமின்றி தனக்கு வசப்பட்ட புலன்களுடன் விஷயங்களிலே ஊடாடுவோனாய் தன் விதிக்குத்தான் உட்பட்ட மனிதன் ஆறுதலடைகிறான்.


प्रसादे सर्वदुःखानां हानिरस्योपजायते।
प्रसन्नचेतसो ह्याशु बुद्धिः पर्यवतिष्ठते॥६५॥

ப்ரஸாதே³ ஸர்வது³:கா²நாம் ஹாநிரஸ்யோபஜாயதே|
ப்ரஸந்நசேதஸோ ஹ்யாஸு² பு³த்³தி⁴: பர்யவதிஷ்ட²தே ||2-65||

ப்ரஸாதே³ = உள்ளம் தெளிவு பெற்ற சாந்தி நிலையில்
ஸர்வது³:கா²நாம் = எல்லாத் துன்பங்களுக்கும்
ஹாநி: உபஜாயதே = அழிவு ஏற்படுகிறது
ப்ரஸந்ந சேதஸ: = சித்தம் சாந்தி பெற்ற மனிதன்
பு³த்³தி⁴ ஆஸு ஹி பர்யவதிஷ்ட²தே = புத்தி விரைவிலே நிலைப்படுகிறது

சாந்தி நிலையில் மனிதனுக்கு எல்லாத் துன்பங்களும் அழிகின்றன. சித்தம் சாந்தி பெற்ற பின் ஒருவனுடைய புத்தி விரைவிலே நிலைப்படுகிறது.


नास्ति बुद्धिरयुक्तस्य न चायुक्तस्य भावना।
न चाभावयतः शान्तिरशान्तस्य कुतः सुखम्॥६६॥

நாஸ்தி பு³த்³தி⁴ரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பா⁴வநா|
ந சாபா⁴வயத: ஸா²ந்திரஸா²ந்தஸ்ய குத: ஸுக²ம் ||2-66||

அயுக்தஸ்ய = யோகமில்லாதவனுக்கு
பு³த்³தி⁴ நாஸ்தி = புத்தியில்லை
அயுக்தஸ்ய ந பா⁴வநா ச = யோகமில்லாதவனுக்கு மனோபாவனையும் இல்லை
அபா⁴வயத: ந ஸா²ந்தி ச = மனோபாவனையில்லாதவனுக்குச் சாந்தி இல்லை
அஸா²ந்தஸ்ய குத: ஸுக²ம் = சாந்தியில்லாதவனுக்கு இன்பமேது?

யோகமில்லாதவனுக்குப் புத்தியில்லை. யோகமில்லாதவனுக்கு மனோபாவனை இல்லை. மனோபாவனையில்லாதவனுக்குச் சாந்தி இல்லை. சாந்தியில்லாதவனுக்கு இன்பமேது?


इन्द्रियाणां हि चरतां यन्मनोऽनुविधीयते।
तदस्य हरति प्रज्ञां वायुर्नावमिवाम्भसि॥६७॥

இந்த்³ரியாணாம் ஹி சரதாம் யந்மநோऽநுவிதீ⁴யதே|
தத³ஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்நாவமிவாம்ப⁴ஸி ||2-67||

ஹி = ஏனெனில்
அம்ப⁴ஸி நாவம் வாயு: ஹரதி இவ = கடலில் தோணியைக் காற்று இழுப்பது போல்
சரதாம் இந்த்³ரியாணாம் = (போகங்களில்) சஞ்சரிக்கின்ற இந்திரியங்கள் (புலன்கள்)
யத் மந: அநுவிதீ⁴யதே = மனமும் ஒட்டி இருக்கிறதோ
தத் அஸ்ய ப்ரஜ்ஞாம் ஹரதி = அதுவே அவனது அறிவை இழுத்து செல்கிறது

இந்திரியங்கள் சலிக்கையில் ஒருவனுடைய மனமும் அவற்றைப் பின்பற்றிச் செல்லுமாயின், அம்மனம் கடலில் தோணியைக் காற்று மோதுவதுபோல் அறிவை மோதுகிறது.


तस्माद्यस्य महाबाहो निगृहीतानि सर्वशः।
इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता॥६८॥

தஸ்மாத்³யஸ்ய மஹாபா³ஹோ நிக்³ருஹீதாநி ஸர்வஸ²:|
இந்த்³ரியாணீந்த்³ரியார்தே²ப்⁴யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா ||2-68||

மஹாபா³ஹோ = பெருந்தோளாய்
தஸ்மாத் = ஆகையால்
யஸ்ய இந்த்³ரியாணி = எவனுடைய புலன்கள்
இந்த்³ரிய அர்தே²ப்⁴ய = புலன்களுக்குரிய போக விஷயங்களில் இருந்து
நிக்³ருஹீதாநி = மீட்கப் பட்டு விட்டதோ
தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா = அவனறிவே நிலைகொண்டது

ஆதலால், பெருந்தோளாய், யாங்கணும் விஷயங்களினின்றும் இந்திரியங்களைக் கட்டவல்லான் எவனோ, அவனறிவே நிலைகொண்டது.


या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमी।
यस्यां जाग्रति भूतानि सा निशा पश्यतो मुनेः॥६९॥

யா நிஸா² ஸர்வபூ⁴தாநாம் தஸ்யாம் ஜாக³ர்தி ஸம்யமீ |
யஸ்யாம் ஜாக்³ரதி பூ⁴தாநி ஸா நிஸா² பஸ்²யதோ முநே: ||2-69||

ஸர்வபூ⁴தாநாம் யா நிஸா² = எல்லா உயிர்களுக்கும் இரவாகிய நேரத்தில்
தஸ்யாம் ஸம்யமீ ஜாக³ர்தி = (தன்னைக் கட்டிய) முனி விழித்திருக்கிறான்
யஸ்யாம் பூ⁴தாநி ஜாக்³ரதி = மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரமெதுவோ
பஸ்²யத: முநே: ஸா நிஸா² = பரமனைக் கண்ட (உண்மையை உணர்ந்த) முனிக்கு அது இரவு

எல்லா உயிர்களுக்கும் இரவாகிய நேரத்தில், (தன்னைக் கட்டிய) முனி விழித்திருக்கிறான். மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரமெதுவோ அதுவே முனிக்கிரவு.


आपूर्यमाणमचलप्रतिष्ठं समुद्रमापः प्रविशन्ति यद्वत्।
तद्वत्कामा यं प्रविशन्ति सर्वे स शान्तिमाप्नोति न कामकामी॥७०॥

ஆபூர்யமாணமசலப்ரதிஷ்ட²ம் ஸமுத்³ரமாப: ப்ரவிஸ²ந்தி யத்³வத்|
தத்³வத்காமா யம் ப்ரவிஸ²ந்தி ஸர்வே ஸ ஸா²ந்திமாப்நோதி ந காமகாமீ ||2-70||

யத்³வத் = எவ்விதம்
ஆப: ப்ரவிஸ²ந்தி = நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில்
ஆபூர்யமாணம் அசலப்ரதிஷ்ட²ம் ஸமுத்³ரம் = நிறைந்து இருந்து அசையா நிலைகொண்டிருக்கும் கடல்
தத்³வத் = அதே விதமாக
யம் காமா: ப்ரவிஸ²ந்தி = எவன் விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது (கடலைப் போல இருக்கிறானோ)
ஸ ஸா²ந்திம் ஆப்நோதி = அவன் சாந்தியடைகிறான்
காமகாமீ ந = விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்

கடலில் நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில் அது மேன்மேலும் நிரப்புதற்குரியதாய் அசையா நிலைகொண்டிருப்பது போலே விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது இயல்வான் எவனோ அவன் சாந்தியடைகிறான். விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்.


विहाय कामान्यः सर्वान्पुमांश्चरति निःस्पृहः।
निर्ममो निरहङ्कारः स शान्तिमधिगच्छति॥७१॥

விஹாய காமாந்ய: ஸர்வாந்புமாம்ஸ்²சரதி நி:ஸ்ப்ருஹ:|
நிர்மமோ நிரஹங்கார: ஸ ஸா²ந்திமதி⁴க³ச்ச²தி ||2-71||

ய: புமாந் = எந்த மனிதன்
ஸர்வாந் காமாந் விஹாய = எல்லா இன்பங்களையும் துறந்து
நிர்மம: நிரஹங்கார: = எனதென்பதற்றான், யானென்பதற்றான்
நி:ஸ்ப்ருஹ: சரதி = இச்சையற்றான்
ஸ ஸா²ந்திம் அதி⁴க³ச்ச²தி = அவனே சாந்தி நிலை அடைகிறான்

இச்சையற்றான், எல்லா இன்பங்களையும் துறந்தான், எனதென்பதற்றான், யானென்பதற்றான், அவனே சாந்தி நிலை அடைகிறான்.


एषा ब्राह्मी स्थितिः पार्थ नैनां प्राप्य विमुह्यति।
स्थित्वास्यामन्तकालेऽपि ब्रह्मनिर्वाणमृच्छति॥७२॥

ஏஷா ப்³ராஹ்மீ ஸ்தி²தி: பார்த² நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி|
ஸ்தி²த்வாஸ்யாமந்தகாலேऽபி ப்³ரஹ்மநிர்வாணம்ருச்ச²தி ||2-72||

பார்த² ஏஷா ப்³ராஹ்மீ ஸ்தி²தி: = பார்த்தா! இது பிரம்ம ஸ்திதி
ஏநாம் ப்ராப்ய ந விமுஹ்யதி = இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை
அந்தகாலே அபி = இறுதிக் காலத்திலேனும்
அஸ்யாம் ஸ்தி²த்வா = இதில் நிலை கொண்டு
ப்³ரஹ்ம நிர்வாணம் ருச்ச²தி = பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.

பார்த்தா, இது பிரம்ம ஸ்திதி. இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை. இறுதிக் காலத்திலேனும் இதில் நிலை கொள்வோன், பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.


ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
श्रिकृष्णार्जुन सम्वादे साङ्खययोगो नाम द्वितीयोऽध्याय: || 2 ||

ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘ஸாங்க்ய யோகம்’ எனப் பெயர் படைத்த
இரண்டாம் அத்தியாயம் நிறைவுற்றது.