கீதை – பதினைந்தாவது அத்தியாயம்

புருஷோத்தம யோகம்

பிரகிருதி, ஆத்மா -இவ்விரண்டையும் தன்வசப்படுத்திக் கொண்டு நிற்கும் கடவுள் எவ்விதத்திலும் இவைகளைவிட மேலானவர். ஆகையால் புருஷோத்தமனென்று பெயர் பெற்றிருக்கிறார்.

அரசம் வித்து, முளையாகவும் கன்றாகவும் பிறகு பெரிய மரமாகவும் மாறி வானளாவி யிருப்பது போல் பிரகிருதியும் ஆத்மாவுடன் சேர்ந்து மகத்து, அகங்காரம், இந்திரியங்கள், ஐந்து பூதங்கள் என்பனவாக மாறிப் பிறகு தேவ மனுஷ்ய யக்ஷ ராக்ஷஸாதி ரூபங்களுடன் எங்கும் பரவியிருக்கின்றது.

இந்த பிரகிருதியாகிய மரத்தைப் பற்றில்லாமை என்ற கோடரியால் முதலில் வெட்டி முறிக்கவேண்டும். பிறகு அயர்வு நீங்கும் பொருட்டுக் கடவுளைச் சரணம் புகுந்து யோகத்திலிறங்க வேண்டும். சம்சாரி, முக்தன் என்று ஆத்மாக்கள் இரண்டு வகைப்பட்டவர்கள். கடவுளோ இவ்விரண்டுவித ஆத்மாக்களைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டவர். அவரே உலகத்தில் மறைந்து நின்று உலகத்தைத் தாங்கி நிற்பவர்.


श्रीभगवानुवाच
ऊर्ध्वमूलमधःशाखमश्वत्थं प्राहुरव्ययम् ।
छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित् ॥१५- १॥

ஸ்ரீப⁴க³வாநுவாச
ஊர்த்⁴வமூலமத⁴:ஸா²க²மஸ்²வத்த²ம் ப்ராஹுரவ்யயம் |
ச²ந்தா³ம்ஸி யஸ்ய பர்ணாநி யஸ்தம் வேத³ ஸ வேத³வித் || 15- 1||

ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
ஊர்த்⁴வமூலம் = மேலே வேர்கள்
அத⁴:ஸா²க²ம் = கீழே கிளை
அஸ்²வத்த²ம் = அரச மரம
அவ்யயம் = அழியாதது
ப்ராஹு = என்று கூறுவார்கள்
யஸ்ய ச²ந்தா³ம்ஸி பர்ணாநி = எந்த (அரச மரத்திற்கு) வேதங்களே கிளைகளோ
த²ம் = சம்சாரம் என்ற அந்த அரசமரத்தை
ய: வேத³ = எவர் அறிகிறாரோ
ஸ: வேத³வித் = அவனே வேத மறிவோன்

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அவ்யக்தம் மேலே வேர்களும் கீழே கிளைகளுமுடையதோர் அரச மரத்தைப் போன்றது என்பர். இதன் இலைகளே வேதங்கள்; அதை அறிவோனே வேத மறிவோன்.


अधश्चोर्ध्वं प्रसृतास्तस्य शाखा गुणप्रवृद्धा विषयप्रवालाः ।
अधश्च मूलान्यनुसंततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके ॥१५- २॥

அத⁴ஸ்²சோர்த்⁴வம் ப்ரஸ்ருதாஸ்தஸ்ய ஸா²கா² கு³ணப்ரவ்ருத்³தா⁴ விஷயப்ரவாலா: |
அத⁴ஸ்²ச மூலாந்யநுஸந்ததாநி கர்மாநுப³ந்தீ⁴நி மநுஷ்யலோகே || 15- 2||

தஸ்ய கு³ணப்ரவ்ருத்³தா⁴ = (சம்சாரமென்னும் அந்த மரத்தின்) அதன் கிளைகள் குணங்களால்
விஷயப்ரவாலா: = (புலன் நுகர் போகப் பொருட்கள் என்னும்) விஷயத் தளிர்களுடன் கூடிய
ஸா²கா²: = தேவ – மனித – விலங்கு முதலிய பிறவி உருவாகிய கிளைகள்
அத⁴: ஊர்த்⁴வம் ச ப்ரஸ்ருதா: = கீழும் மேலுமாக பரவியுள்ளன
மநுஷ்யலோகே கர்ம அநுப³ந்தீ⁴நி = மனித உலகில் கர்ம பிணைப்புகளாக
மூலாநி = அகந்தை, மமதை, வாசனை உருவான வேர்களும்
அத⁴ ச = கீழும் (மேலும்) ஆக
அநுஸந்ததாநி = (எல்லா உலகங்களிலும்) பரவி உள்ளன.

அதன் கிளைகள் குணங்களால் ஓங்கி விஷயத் தளிர்களுடன் பல்கி மனித உலகத்தில் கர்மத் தொடுப்புக்களாகின்றன.


न रूपमस्येह तथोपलभ्यते नान्तो न चादिर्न च संप्रतिष्ठा ।
अश्वत्थमेनं सुविरूढमूलमसङ्गशस्त्रेण दृढेन छित्त्वा ॥१५- ३॥

ந ரூபமஸ்யேஹ ததோ²பலப்⁴யதே நாந்தோ ந சாதி³ர்ந ச ஸம்ப்ரதிஷ்டா² |
அஸ்²வத்த²மேநம் ஸுவிரூட⁴மூல மஸங்க³ஸ²ஸ்த்ரேண த்³ருடே⁴ந சி²த்த்வா || 15- 3||

அஸ்ய ரூபம் ததா² = இந்த மரத்தின் உருவத்தைப் போல
இஹ ந உபலப்⁴யதே = இவ்வுலகத்தில் காணப்படுவதில்லை
ந அந்த: ந ஆதி³ ச ந ஸம்ப்ரதிஷ்டா² = முடிவும், ஆதியும், நிலைக்களனும் புலப்படுவதில்லை
ஸுவிரூட⁴மூலம் ஏநம் அஸ்²வத்த²ம் = அஹங்காரம், மமகாரம், முற்பிறவி வாசனை என்ற உறுதியான வேர்கள் கொண்ட இந்த அரச மரத்தை
த்³ருடே⁴ந அஸங்க³ஸ²ஸ்த்ரேண சி²த்த்வா = பற்றின்மையென்னும் வலிய வாளால் வெட்டி யெறிந்துவிட்டு

ஆதலால் இவ்வுலகத்தில் இதற்கு வடிவங் காணப்படுவதில்லை; முடிவும், ஆதியும், நிலைக்களனும் புலப்படுவதில்லை. நன்கு ஊன்றிய வேருடைய இந்த அரச மரத்தைப் பற்றின்மையென்னும் வலிய வாளால் வெட்டி யெறிந்துவிட்டு,


ततः पदं तत्परिमार्गितव्यं यस्मिन्गता न निवर्तन्ति भूयः ।
तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसृता पुराणी ॥१५- ४॥

தத: பத³ம் தத்பரிமார்கி³தவ்யம் யஸ்மிந்க³தா ந நிவர்தந்தி பூ⁴ய: |
தமேவ சாத்³யம் புருஷம் ப்ரபத்³யே யத: ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ || 15- 4||

தத: யஸ்மிந் க³தா பூ⁴ய: ந நிவர்தந்தி = அதன் பிறகு எங்கு சென்றவர்கள் திரும்பி வருவதில்லையோ
தத் பத³ம் பரிமார்கி³தவ்யம் = அந்த பரம பதம் நன்கு தேடப் பட வேண்டும்
ச யத: புராணீ = மேலும் எதனிடமிருந்து பழமையான
ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா = சம்சார மரத்தின் தொடர்ச்சி விரிவு அடைந்துள்ளதோ
தம் ஏவ ஆத்³யம் புருஷம் = அந்த ஆதி புருஷனையே
ப்ரபத்³யே = சரணம் அடைகிறேன்

அப்பால் ஒருவன் புகுந்தோர் மீள்வதற்ற பதவியைப் பெறலாம். (அப்பத முடையோனாகிய) எவனிடமிருந்து ஆதித் தொழில் பொழிவுற்றதோ, அந்த ஆதி புருஷனைச் சார்ந்து நிற்கிறான்.


निर्मानमोहा जितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामाः ।
द्वन्द्वैर्विमुक्ताः सुखदुःखसंज्ञैर्गच्छन्त्यमूढाः पदमव्ययं तत् ॥१५- ५॥

நிர்மாநமோஹா ஜிதஸங்க³தோ³ஷா அத்⁴யாத்மநித்யா விநிவ்ருத்தகாமா: |
த்³வந்த்³வைர்விமுக்தா: ஸுக²து³:க²ஸம்ஜ்ஞைர்க³ச்ச²ந்த்யமூடா⁴: பத³மவ்யயம் தத் || 15- 5||

நிர்மாநமோஹா = செருக்கும் மயக்கமும் அகன்றவர்கள்
ஜிதஸங்க³தோ³ஷா = பற்று என்னும் குறைபாட்டை வென்றவர்கள்
அத்⁴யாத்மநித்யா = ஆத்ம ஞானத்தில் எப்போதும் நிற்போர்
விநிவ்ருத்தகாமா: = விருப்பங்களினின்றும் நீங்கியோர்
ஸுக²து³:க²ஸம்ஜ்ஞை: த்³வந்த்³வை: விமுக்தா:= சுக துக்கக் குறிப்புக்களையுடைய இரட்டைகளினின்றும் விடுபட்டோர்
அமூடா⁴: = மடமையற்றோர்
தத் அவ்யயம் பத³ம் க³ச்ச²ந்தி = அந்த நாசமற்ற பதத்தை எய்துகின்றனர்

செருக்கும் மயக்கமு மற்றோர், சார்புக் குற்றங்களை யெல்லாம் வென்றோர், ஆத்ம ஞானத்தில் அப்போது நிற்போர், விருப்பங்களினின்றும் நீங்கியோர், சுக துக்கக் குறிப்புக்களையுடைய இரட்டைகளினின்றும் விடுபட்டோர், மடமையற்றோர், இன்னோர் அந்த நாசமற்ற பதத்தை எய்துகின்றனர்.


न तद्भासयते सूर्यो न शशाङ्को न पावकः ।
यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम ॥१५- ६॥

ந தத்³பா⁴ஸயதே ஸூர்யோ ந ஸ²ஸா²ங்கோ ந பாவக: |
யத்³க³த்வா ந நிவர்தந்தே தத்³தா⁴ம பரமம் மம || 15- 6||

யத் க³த்வா = எதை அடைந்த பிறகு
ந நிவர்தந்தே = திரும்பி வருவதில்லையோ
தத் ஸூர்யோ ந பா⁴ஸயதே = அங்கே (பரமபதத்தில்) சூரியன் ஒளி தருவதில்லை
ந ஸ²ஸா²ங்க: ந பாவக: = சந்திரனும் தீயும் ஒளிருவதில்லை
தத்³ மம பரமம் தா⁴ம = அதுவே என் மேலான வீடு (பரம பதம்)

அதனைச் சூரியனும், சந்திரனும், தீயும் ஒளி யேற்றுவதில்லை. எதனை யெய்தினோர் மீள்வதில்லையோ, அதுவே என் பரமபதம்.


ममैवांशो जीवलोके जीवभूतः सनातनः ।
मनःषष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति ॥१५- ७॥

மமைவாம்ஸோ² ஜீவலோகே ஜீவபூ⁴த: ஸநாதந: |
மந:ஷஷ்டா²நீந்த்³ரியாணி ப்ரக்ருதிஸ்தா²நி கர்ஷதி || 15- 7||

ஜீவலோகே ஸநாதந: ஜீவபூ⁴த: = இவ்வுடலில் என்றும் உள்ள ஜீவாத்மா
மம அம்ஸ² ஏவ = எனது அம்சமே!
ப்ரக்ருதிஸ்தா²நி = (அதுவே) பிரக்ருதியில் உள்ள
மந:ஷஷ்டா²நீ இந்த்³ரியாணி = மனம் மற்றும் ஐந்து புலன்களையும்
கர்ஷதி = ஈர்க்கிறது

எனது அம்சமே ஜீவலோகத்தில் என்றுமுள்ள ஜீவனாகி, இயற்கை யிலுள்ளனவாகிய மனதுட்பட்ட ஆறு இந்திரியங்களையும் கவர்கிறது.


शरीरं यदवाप्नोति यच्चाप्युत्क्रामतीश्वरः ।
गृहित्वैतानि संयाति वायुर्गन्धानिवाशयात् ॥१५- ८॥

ஸ²ரீரம் யத³வாப்நோதி யச்சாப்யுத்க்ராமதீஸ்²வர: |
க்³ருஹித்வைதாநி ஸம்யாதி வாயுர்க³ந்தா⁴நிவாஸ²யாத் || 15- 8||

வாயு: ஆஸ²யாத் க³ந்தா⁴ந் இவ = காற்று மணமுள்ள இடத்திலிருந்து பலவித மணங்களை (இழுத்துச் செல்வது) போல
ஈஸ்²வர: அபி = உடலை ஆளும் ஜீவாத்மாவும்
யத் உத்க்ராமதி = எந்த உடலை விட்டு கிளம்புகிறானோ
ஏதாநி ச க்³ருஹித்வா = மனதோடு கூடிய புலன்களையும் எடுத்துக் கொண்டு
யத் ஸ²ரீரம் அவாப்நோதி ஸம்யாதி = எந்த உடலை அடைகிறானோ அதில் வந்து சேர்கிறான்

கந்தங்களைக் காற்றுத் தோய்வினால் பற்றிச் செல்வது போல், ஈசுவரன், யாதேனுமோருடலை எய்துங் காலத்தும் விடுங்காலத்தும், இந்த இந்திரியங்களைப் பற்றிச் செல்லுகிறான்.


श्रोत्रं चक्षुः स्पर्शनं च रसनं घ्राणमेव च ।
अधिष्ठाय मनश्चायं विषयानुपसेवते ॥१५- ९॥

ஸ்²ரோத்ரம் சக்ஷு: ஸ்பர்ஸ²நம் ச ரஸநம் க்⁴ராணமேவ ச |
அதி⁴ஷ்டா²ய மநஸ்²சாயம் விஷயாநுபஸேவதே || 15- 9||

அயம் ஸ்²ரோத்ரம் சக்ஷு: ச = கேட்டல், காண்டல்
ஸ்பர்ஸ²நம் ரஸநம் க்⁴ராணம் மந: ச = தீண்டுதல், சுவை, மோப்பு, மனம்
அதி⁴ஷ்டா²ய ஏவ = இவற்றில் நிலைகொண்டு
விஷயாந் உபஸேவதே = ஜீவன் விஷயங்களைத் தொடர்ந்து நடத்துகிறான்

கேட்டல், காண்டல், தீண்டுதல், சுவை, மோப்பு, மனம் இவற்றில் நிலைகொண்டு ஜீவன் விஷயங்களைத் தொடர்ந்து நடத்துகிறான்.


उत्क्रामन्तं स्थितं वापि भुञ्जानं वा गुणान्वितम् ।
विमूढा नानुपश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुषः ॥१५- १०॥

உத்க்ராமந்தம் ஸ்தி²தம் வாபி பு⁴ஞ்ஜாநம் வா கு³ணாந்விதம் |
விமூடா⁴ நாநுபஸ்²யந்தி பஸ்²யந்தி ஜ்ஞாநசக்ஷுஷ: || 15- 10||

உத்க்ராமந்தம் வா = அவன் புறப்படுகையிலும்
ஸ்தி²தம் வா = நிற்கையிலும்
பு⁴ஞ்ஜாநம் வா = உண்ணுகையிலும்
கு³ணாந்விதம் அபி = முக்குணங்களைக் கூடி இருக்கும் போதும்
விமூடா⁴ ந அநுபஸ்²யந்தி = அவனை மூடர் காண்பதில்லை
ஜ்ஞாநசக்ஷுஷ: பஸ்²யந்தி = ஞான விழியுடையோர் காண்கின்றனர்

அவன் புறப்படுகையிலும், நிற்கையிலும், உண்ணுகையிலும், குணங்களைச் சார்ந்திருக்கையிலும், அவனை மூடர் காண்பதில்லை. ஞான விழியுடையோர் காண்கின்றனர்.


यतन्तो योगिनश्चैनं पश्यन्त्यात्मन्यवस्थितम् ।
यतन्तोऽप्यकृतात्मानो नैनं पश्यन्त्यचेतसः ॥१५- ११॥

யதந்தோ யோகி³நஸ்²சைநம் பஸ்²யந்த்யாத்மந்யவஸ்தி²தம் |
யதந்தோऽப்யக்ருதாத்மாநோ நைநம் பஸ்²யந்த்யசேதஸ: || 15- 11||

யதந்த: யோகி³ந: = முயற்சியுடைய யோகிகள்
ஆத்மநி அவஸ்தி²தம் ஏநம் பஸ்²யந்தி = இவனைத் தம்முள்ளேயே காண்கின்றனர்
ச யதந்த: அபி அக்ருதாத்மாந: = முயற்சியுடையோராயினும் தம்மைத் தாம் தூய்மைப் படுத்தாதவர்கள்
அசேதஸ: = அஞ்ஞானிகள்
ஏநம் ந பஸ்²யந்தி = இவனைக் காண்கிலர்

முயற்சியுடைய யோகிகள் இவனைத் தம்முள்ளேயே காண்கின்றனர். முயற்சியுடையோராயினும் தம்மைத் தாம் சமைக்காத அஞ்ஞானிகள் இவனைக் காண்கிலர்.


यदादित्यगतं तेजो जगद्भासयतेऽखिलम् ।
यच्चन्द्रमसि यच्चाग्नौ तत्तेजो विद्धि मामकम् ॥१५- १२॥

யதா³தி³த்யக³தம் தேஜோ ஜக³த்³பா⁴ஸயதேऽகி²லம் |
யச்சந்த்³ரமஸி யச்சாக்³நௌ தத்தேஜோ வித்³தி⁴ மாமகம் || 15- 12||

ஆதி³த்ய க³தம் தேஜ: = சூரியனிடமிருந்து ஒளி
அகி²லம் ஜக³த் பா⁴ஸயதே = அனைத்து உலகத்தையும் பிரகாசிக்கச் செய்கிறதோ
ச யத் சந்த்³ரமஸி = சந்திரனிடத்துள்ளதும்
யத் அக்³நௌ ச = தீயிலுள்ளதும்
தத் தேஜ: மாமகம் வித்³தி⁴ = அவ்வொளியெல்லாம் என்னுடையதே யென்றுணர்

சூரியனிடமிருந்து உலக முழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும் சந்திரனிடத்துள்ளதும் தீயிலுள்ளதும், அவ்வொளியெல்லாம் என்னுடையதே யென்றுணர்.


गामाविश्य च भूतानि धारयाम्यहमोजसा ।
पुष्णामि चौषधीः सर्वाः सोमो भूत्वा रसात्मकः ॥१५- १३॥

கா³மாவிஸ்²ய ச பூ⁴தாநி தா⁴ரயாம்யஹமோஜஸா |
புஷ்ணாமி சௌஷதீ⁴: ஸர்வா: ஸோமோ பூ⁴த்வா ரஸாத்மக: || 15- 13||

ச அஹம் கா³ம் ஆவிஸ்²ய = நான் பூமியுட் புகுந்து
ஒஜஸா பூ⁴தாநி தா⁴ரயாமி = உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன்
ரஸாத்மக: ஸோம: ச பூ⁴த்வா = மேலும் நான் நிலவாகி
ஸர்வா: ஒஷதீ⁴: புஷ்ணாமி = அனைத்து பயிர்பச்சைகளையும் போஷிக்கிறேன்

நான் பூமியுட் புகுந்து உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன்.ரச வடிவமுள்ள சோமமாகிப் பூண்டுகளை யெல்லாம் வளர்க்கிறேன்.


अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रितः ।
प्राणापानसमायुक्तः पचाम्यन्नं चतुर्विधम् ॥१५- १४॥

அஹம் வைஸ்²வாநரோ பூ⁴த்வா ப்ராணிநாம் தே³ஹமாஸ்²ரித: |
ப்ராணாபாநஸமாயுக்த: பசாம்யந்நம் சதுர்வித⁴ம் || 15- 14||

அஹம் ப்ராணிநாம் தே³ஹம் ஆஸ்²ரித: = உயிர்களின் உடல்களைச் சார்ந்திருக்கிறேன்
ப்ராணாபாநஸமாயுக்த: = பிராண-அபான வாயுக்களுடன் கூடி
வைஸ்²வாநர: பூ⁴த்வா = வைசுவாநரன் என்கிற அக்னியாகி
சதுர்வித⁴ம் அந்நம் பசாமி = நால்வகைப்பட்ட அன்னத்தை ஜீரணமாக்குகிறேன்

நான் வைசுவாநரனாய், உயிர்களின் உடல்களைச் சார்ந்திருக்கிறேன்; பிராணன் அபானன் என்ற வாயுக்களுடன் கூடி நால்வகைப்பட்ட அன்னத்தை ஜீரணமாக்குகிறேன்.


सर्वस्य चाहं हृदि संनिविष्टो मत्तः स्मृतिर्ज्ञानमपोहनं च ।
वेदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृद्वेदविदेव चाहम् ॥१५- १५॥

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி³ ஸந்நிவிஷ்டோ மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம் ச |
வேதை³ஸ்²ச ஸர்வைரஹமேவ வேத்³யோ வேதா³ந்தக்ருத்³வேத³விதே³வ சாஹம் || 15- 15||

ஸர்வஸ்ய ஹ்ருதி³ அஹம் ஸந்நிவிஷ்ட: = எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன்
ச மத்த: = மேலும் என்னிடம் இருந்து தான்
ஸ்ம்ருதி: ஜ்ஞாநம் அபோஹநம் ச = நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் பிறக்கின்றன
ஸர்வை: வேதை³: ச வேத்³ய: அஹம் ஏவ = எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் நான்
வேதா³ந்தக்ருத் வேத³வித் ச அஹம் ஏவ = வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே

எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன். நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் என்னிடமிருந்து பிறக்கின்றன. எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் யான்; வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.


द्वाविमौ पुरुषौ लोके क्षरश्चाक्षर एव च ।
क्षरः सर्वाणि भूतानि कूटस्थोऽक्षर उच्यते ॥१५- १६॥

த்³வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்²சாக்ஷர ஏவ ச |
க்ஷர: ஸர்வாணி பூ⁴தாநி கூடஸ்தோ²ऽக்ஷர உச்யதே || 15- 16||

லோகே க்ஷர: ச அக்ஷர ஏவ ச = உலகத்தில் அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என
இமௌ த்³வௌ புருஷௌ = இரண்டு வகைப் புருஷருளர்
ஸர்வாணி பூ⁴தாநி க்ஷர: = க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும்
கூடஸ்த²: அக்ஷர உச்யதே = கூடஸ்தனே அக்ஷர புருஷன்

உலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர்; அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என. க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும். கூடஸ்தனே அக்ஷர புருஷன்.


उत्तमः पुरुषस्त्वन्यः परमात्मेत्युदाहृतः ।
यो लोकत्रयमाविश्य बिभर्त्यव्यय ईश्वरः ॥१५- १७॥

உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதா³ஹ்ருத: |
யோ லோகத்ரயமாவிஸ்²ய பி³ப⁴ர்த்யவ்யய ஈஸ்²வர: || 15- 17||

ய: லோகத்ரயம் ஆவிஸ்²ய = எவர் மூன்று உலகுகளினுட் புகுந்து
பி³ப⁴ர்தி = தாங்கி போஷிக்கிறாரோ
அவ்யய: ஈஸ்²வர: பரமாத்மா இதி = அழிவற்றவர் என்றும் ஈசுவரன் என்றும் பரமாத்மா என்றும்
உதா³ஹ்ருத: = அழைக்கப் படுகிறாரோ
உத்தம: புருஷ: து = அந்த புருஷோத்தமன்
அந்ய: = இவரில் வேறுபட்டோன்

இவரில் வேறுபட்டோன் உத்தம புருஷன். அவனே பரமாத்மா எனப்படுவோன். அவன் மூன்று உலகுகளினுட் புகுந்து அவற்றைத் தரிக்கிறான்; கேடற்ற ஈசுவரன்.


यस्मात्क्षरमतीतोऽहमक्षरादपि चोत्तमः ।
अतोऽस्मि लोके वेदे च प्रथितः पुरुषोत्तमः ॥१५- १८॥

யஸ்மாத்க்ஷரமதீதோऽஹமக்ஷராத³பி சோத்தம: |
அதோऽஸ்மி லோகே வேதே³ ச ப்ரதி²த: புருஷோத்தம: || 15- 18||

யஸ்மாத் அஹம் க்ஷரம் அதீத: ச = எக்காரணத்தினால் நான் அழியக் கூடிய ஜட வர்க்கத்திற்கு அப்பாற்ப்பட்டவனாகவும்
அக்ஷராத் அபி உத்தம: = அக்ஷர புருஷனைக் (ஜீவாத்மாவைக்) காட்டிலும் சிறந்தவனாக உள்ளேனோ
அத: லோகே வேதே³ ச = அக்காரணத்தினால் உலகத்தாராலும் வேதங்களாலும்
புருஷோத்தம: ப்ரதி²த: அஸ்மி = புருஷோத்தமன் என்று புகழ் பெற்றுள்ளேன்

நான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஷனைக் காட்டிலும் சிறந்தோனாதலாலும், உலகத்தாராலும் வேதங்களாலும் புருஷோத்தம னென்று கூறப்படுகிறேன்.


यो मामेवमसंमूढो जानाति पुरुषोत्तमम् ।
स सर्वविद्भजति मां सर्वभावेन भारत ॥१५- १९॥

யோ மாமேவமஸம்மூடோ⁴ ஜாநாதி புருஷோத்தமம் |
ஸ ஸர்வவித்³ப⁴ஜதி மாம் ஸர்வபா⁴வேந பா⁴ரத || 15- 19||

பா⁴ரத: = பாரதா!
ய: அஸம்மூட⁴: மாம் = எந்த ஞானி என்னை
ஏவம் புருஷோத்தமம் ஜாநாதி = இவ்வாறு புருஷோத்தமன் என்று அறிகிறானோ
ஸர்வவித் ஸ: ஸர்வபா⁴வேந = எல்லாமறிந்த அவன் எல்லா விதமாகவும்
மாம் ப⁴ஜதி = என்னை வழிபடுகிறான்.

மடமை தீர்ந்தவனாய், எவன் யானே புருஷோத்தமனென்பத அறிவானோ, அவனே எல்லா மறிந்தோன். அவன் என்னை எல்லாத் தன்மையாலும் வழிபடுகிறான்.


इति गुह्यतमं शास्त्रमिदमुक्तं मयानघ ।
एतद्‌बुद्ध्वा बुद्धिमान्स्यात्कृतकृत्यश्च भारत ॥१५- २०॥

இதி கு³ஹ்யதமம் ஸா²ஸ்த்ரமித³முக்தம் மயாநக⁴ |
ஏதத்³‌பு³த்³த்⁴வா பு³த்³தி⁴மாந்ஸ்யாத்க்ருதக்ருத்யஸ்²ச பா⁴ரத || 15- 20||

அநக⁴: = குற்றமற்றோய்
இதி இத³ம் கு³ஹ்யதமம் ஸா²ஸ்த்ரம் = இங்ஙனம் இந்த மிகவும் ரகசியமான சாஸ்திரத்தை
மயா உக்தம் = என்னால் கூறப் பட்டது
ஏதத்³ பு³த்³த்⁴வா பு³த்³தி⁴மாந் க்ருதக்ருத்ய: ச = இதை யுணர்ந்தோன் புத்திமானாவான். செய்யத்தக்கது செய்பவன்
ஸ்யாத் = ஆகிறான்

குற்றமற்றோய், இங்ஙனம் மிகவும் ரகசியமான இந்தச் சாஸ்திரத்தை உனக்கு உரைத்தேன். பாரதா, இதை யுணர்ந்தோன் புத்திமானாவான். அவனே செய்யத்தக்கது செய்தான்.


ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
श्रिकृष्णार्जुन सम्वादे पुरुषोत्तमयोगो नाम पञ्चदशोऽध्याय: || 15 ||

ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘புருஷோத்தம யோகம்’ எனப் பெயர் படைத்த
பதினைந்தாம் அத்தியாயம் நிறைவுற்றது.