தேசத்தின் மொழி – சமஸ்கிருதம்

‘கடவுள் நினைய கல் ஓங்கு நெடுவரை
வட திசை எல்லை இமயம் ஆக,
தென்அம் குமரியொடு ஆயிடை’

தேசத்தின் பண்பாட்டு ஒருமை சங்ககாலத்திலேயே உணரப்பட்டுவிட்ட ஒன்று. இன்று பாரதம் சின்னாபின்னப்பட்டு சிறுமைப்படாமலும், பல்வேறு இன மொழி மக்கள் ஒருவரை ஒருவர் கொலைவெறி கொண்டு அழிக்காமலும் இருக்க உதவுவது இந்த ஒற்றுமையே. இப்பண்பாட்டு ஒருமையின் வலிமையான நூலிழையாக நம் பன்மை வளங்களை அழியாது இணைக்கிறது சமஸ்கிருதம். வடமொழி என்பதனால் அதை அன்னிய மொழி – நமக்குரியதல்ல என நம் முன்னோர் கருதினர் என்பதற்கு எவ்வித வரலாற்றுச் சான்றுமில்லை.

எங்கெல்லாம் பாரதத்தில் இந்த அடிப்படை ஒருமை அழிக்கப்பட்டதோ, அங்கெல்லாம் இனவெறியும், இனங்களை அழித்தொழித்தலும் நடைபெறுவதை காணலாம். உதாரணமாக திரிபுராவினை எடுத்துக்கொள்வோம். அங்கு ஜமாத்தியாக்களும் வங்காளிகளும் பிற வனவாசிகளும் காலம்காலமாக வாழ்ந்து வந்துள்ள நிலைக்கும், இன்று ஜமாத்தியா வனவாசிகள் தங்கள் கிராமங்களை இழந்து சொந்த நாட்டில் அகதிகளாக இருப்பதற்கும் இடையே நடந்தது என்ன ? ஐரோப்பிய இனவாத அடிப்படையிலான அரசியல் கோட்பாடுகள் மிஷினரிகளால் பரப்பப்பட்டன. ஜமாத்தியாக்கள் தங்கள் இறுதிச்சடங்குகளை கூட செய்யக்கூடாதெனவும், பெண்கள் ‘ஆரியர்களால் ‘ புகுத்தப்பட்ட அடிமைச்சின்னங்களான திலகம், வளையல்கள், பூவைப்பது ஆகியவற்றை நிறுத்தவேண்டுமெனவும் பத்வாக்கள் NLFTயினரால் சுமத்தப்பட்டன.

மிஷினரிகள் ஆரிய இனவாதத்தை தமிழ்நாட்டிலும், பல வனவாசி பிரதேசங்களிலும், எவ்வாறு பயன்படுத்தியுள்ளனர் என்பதும் இதிலெல்லாம் அந்தணர்களை அல்லது ஏதாவது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை இனரீதியில் ‘மற்றவராக ‘ எவ்வாறு மாற்றிக்காட்டினர் என்பதும் ஆய்ந்து பதிவு செய்யப் படவேண்டிய ஒன்று. இதில் ஒரு பாகம் தான் சமஸ்கிருதம் அன்னிய மொழி என்ற பிரச்சாரம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிராமத்து வைத்தியர் கற்கக்கூடிய அளவு இந்த நாட்டு பண்பாட்டோடு ஒன்றிப்போயிருந்த ஒரு மொழி நமக்கு அன்னியமாம். கரிகாலன் போன்ற தமிழ் மன்னர்களால் அவர்கள் குடும்பத்துடன் செய்யப்பட்ட வேத வேள்விகள் அன்னியமாம். ஆனால் வரலாற்றடிப்படையற்ற ஒரு இனவாத கோட்பாட்டின் அடிப்படையில் எழுப்பப்பட்ட போலி தனித்துவத்தை நம் வரலாறென்று நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமாம். சமஸ்கிருதம் அன்னியம் என்னும் எண்ணப்போக்குதான் அன்னியமே ஒழிய சமஸ்கிருதம் அன்னியமல்ல.

தமிழரின் தனிப்பெரும் தெய்வமான முருகப்பெருமானின் திருமுகமே ‘மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ‘ ஏற்குமெனில் வடமொழி தமிழருக்கு அன்னியமானதல்ல என்பதற்கு வேறெந்தச் சான்றும் தேவை இல்லை.

தமிழர் பண்பாட்டில் சமயம் பண்டை காலம் முதல் முக்கிய பகுதி பெற்றிருந்ததல்லவா? அப்பகுதியில் சமஸ்கிருதத்தை அந்நியமாக தமிழ் என்றென்றும் கருதியதில்லை ஏனெனில் வேதநெறியும் சமஸ்கிருதமும் தமிழருடையது தமிழ் பண்பாட்டில் ஒரு பங்கு.

இதோ ஒரு புறப்பாடல்:

“நன்று ஆய்ந்த நீள்நிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகாது,
ஒன்று புரிந்த ஈர்-இரண்டின்,
ஆறு உணர்ந்த ஒரு முதுநூல்
இகல் கண்டோர் மிகல் சாய்மார்,
மெய் அன்ன பொய் உணர்ந்து
பொய் ஓராது மெய் கொளீஇ
மூ-ஏழ் துறையும் முட்டு இன்று போகிய
உரைசால் சிறப்பின் உரவோர் மருக!” (புறம் 166:1-9)

வேதநெறிக்கு மாறுபட்டார் வலிமை குன்றும் படியாக, அவர்கள் மெய்போலக் கூறும் பொய் மொழி களை அடையாளம் கண்டு உண்மையை உணர்ந்து வேத வேள்வித்துறைகளில் சிறந்து விளங்கியதாக தமிழ் அரசனான பூஞ்சாற்றுர்க் கௌணியன் விண்ணந்தாயனை வியக்குகிறது புறநானூறு. இது ஆவூர் மூலங்கிழார் பாடல். ஆறு உணர்ந்த ஒரு முதுநூல் – ஆறு அங்கங்களோடு திகழும் நான்மறை என்பது இதன் பொருள். ( ‘அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ‘ என்பது ஆழ்வார் மொழி.)

யானையைப் பழக்கும் தமிழக பாகர் சமஸ்கிருத மொழியில் யானையைப் பழக்கியது குறித்து கூறுகிறது முல்லைப்பாட்டு.

தேம் படு கவுள சிறு கண் யானை
ஓங்கு நிலைக் கரும்பொடு, கதிர் மிடைந்து யாத்த,
வயல் விளை, இன் குளகு உண்ணாது, நுதல் துடைத்து,
அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டென,
கவை முட் கருவியின், வடமொழி பயிற்றி… – முல்லைப்பாட்டு (35-36).

நமது ஆரிய-திராவிட இனவாதக் கோட்பாடு உண்மையாக இருப்பின் குதிரையைப் பயிற்றுவிப்பவர்கள் அல்லவா சமஸ்கிருத மொழி பயன்படுத்த வேண்டும்? இந்த மண்ணிற்கே உரிய யானையை அதுவும் தமிழ் மன்னர்களுக்கு மிகவும் போர்களத்தில் தேவைப்படும் ஒரு படையை பயிற்றுவிக்க அந்நிய மொழியையா பயன் படுத்துவார்கள்? செங்காட்டங்குடி கிராமத்து அந்தணனல்லாத இளைஞனுக்கும் சம்ஸ்கிருதம் பயில முடிந்திருக்கிறது. தமிழரசர்களின் யானைப் பாகர்களுக்கும் அவர்கள் தொழிலுக்கேற்ற அளவில் சம்ஸ்கிருதம் பயில முடிந்திருக்கிறது.

இராமாயணத்தை ‘தெரிந்து’ வைத்துக் கொள்ள செவிவழி அறிவு போதும் தான். ஆனால் கம்ப இராமாயணம் போன்ற காவியத்தை படைக்க சமஸ்கிருத மூலத்தை படிக்கவே செய்யாமல் செவிவழி இராமகாதை அறிவின் மூலம் முயற்சித்தார் என்று வாதத்திற்காக கூட கம்ப நாட்டாழ்வாரை கீழ்மைப்படுத்த வேண்டாமே.

பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் பாரதி ‘வருகின்ற ஹிந்துஸ்தான’த்தைப் பாடுவார்,

“மெய்மை கொண்ட நூலையே – அன்போடு
வேதமென்று போற்றுவாய் வா வா வா
பொய்மை கூறலஞ்சுவாய் வா வா வா
பொய்மை நூல்களெற்றுவாய் வா வா வா”

புறநானூறு முதல் பாரதி காலம் வரை எதை தமிழ் சமுதாயம் அந்நியமென உணர்ந்தது என்பது புரியும். யாரும் வணங்கிடும் தெய்வம் பொருள் யாவினும் நின்றிடும் தெய்வம் பாருக்குள்ளே தெய்வம் ஒன்று என பாரதி கூறும் சமய ஒருமை ‘ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி ‘ எனும் வேத சிந்தனை மரபிலிருந்தே நம் அனைவருள்ளும் ஊறிப்போயிருக்கும் விஷயம்.

சமஸ்கிருதத்தில் உள்ள சில நூல்களின் அடிப்படையில் சாதியம் நிலைபெற்றிருக்கலாம். மேலும் சமஸ்கிருதத்தில் உள்ள சில நூல்கள் கூட சாதியத்தை உருவாக்கியிருக்கலாம். ஆனால் சமஸ்கிருத அறிவு கொண்டு சாதியம் வேரறுக்கப்பட முடியும் என்பதற்கான சிறந்த உதாரணங்களாக நம்முன் திகழ்பவர்கள் டாக்டர்.அம்பேத்காரும் ஸ்ரீ நாராயண குருவும், சுவாமி விவேகானந்தரும். மாறாக சமஸ்கிருத வெறுப்பை வைத்து சமுதாய முன்னேற்ற பாவ்லாக்கள் காட்டி பிழைப்பு நடத்தும் தெருக்கூத்து கும்பல்களால் ஏற்படும் இறுதிவிளைவு திண்ணிய நிகழ்வுகள்தான் என்பதும் உண்மை.

டாக்டர் அம்பேத்கர், சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ நாராயணகுரு ஆகிய மூவரும் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள். இவர்களில் டாக்டர் அம்பேத்கரும், ஸ்ரீ நாராயண குருவும் சாதியத்தின் விளைவுகளை மிகக்கடுமையாக தங்கள் வாழ்வில் அனுபவித்தவர்கள். இம்மூவருமே பாரத தத்துவ மரபுகளையும், வரலாற்றையும் நன்கு ஆராய்ந்தறிந்தவர்கள். இவர்களது பாரத சமுதாயம் மற்றும் மரபுகள் குறித்த ஆழ்ந்த அறிவின் அடிப்படையில் சமுதாய முன்னேற்றத்தில் இவர்கள் வடமொழிக்கு அளித்த ஏற்பு குறிப்பிடத்தக்க விஷயம்.

மிகத்தெளிவாகவே சுவாமி விவேகானந்தர், சமூக நீதிக்கான வழிமுறையாக சமஸ்கிருதம் படிப்பதை முன்வைக்கிறார். தாழ்த்தப்பட்ட அந்தணரல்லாதவர்களுக்கு அவர் கூறுகிறார், ‘சமஸ்கிருதத்தை நீங்கள் படியுங்கள் ; உங்களை யார் தடுப்பார்கள் ? அனைத்து சாதியினருக்கும் சமஸ்கிருதத்தை கற்றுக்கொடுங்கள். அதுவே நம் மக்களை உயர்த்துவதற்கான நிச்சயமான வழி. ‘

ஸ்ரீ நாராயணகுருவின் பிரத்யட்ச உதாரணம் நம்முன் உள்ளது. நினைத்துப்பாருங்கள். ஒரு மிகவும் தாழ்த்தப்பட்டு தம் சாதியின் பெயரால் மிகவும் அவமானப்படுத்தப்பட்ட ஒரு மேதை உள்ளம் டாக்டர்.அம்பேத்கரது. இந்த தேசத்தில் சமுதாய தாழ்விற்கான காரணங்களை அக்குவேறு ஆணிவேறாக ஆய்ந்தறிந்தவர் அவர். ஹிந்து மதத்தின் மீது மிகக்கடுமையான விமரிசனங்களை வைத்தவர் டாக்டர்.அம்பேத்கர். புராணங்களை மிகக் கேவலமானவையாக காட்டி அவர் எழுதிய எழுத்துக்களை நாம் அனைவரும் அறிவோம். அதே டாக்டர்.அம்பேத்கர் பாராளுமன்றத்தில் சட்ட அமைச்சராகவும், அதற்கு வெளியே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் போராளியாகவும் சமஸ்கிருதத்தை ஏன் ஆட்சிமொழியாக்க வேண்டுமென்றார் ?

அம்பேத்கர் சமஸ்கிருதம் பாரதத்தின் தேசியமொழியாக வேண்டுமென கூறியது பாரத பாராளுமன்றத்தில் ஆகும். அவர் மிகத்தெளிவாக சட்ட அமைச்சர் என்ற ரீதியில் நம் நாட்டின் சமூக வரலாற்று காரணிகளை கணக்கிலெடுத்துக் கொண்டு நம் சட்டப்பிரிவின் 310 A.(1) “இந்திய யூனியனின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும்.” என அமைக்கப்பட வேண்டும், எனக் கூறினார். (சண்டே ஹிந்துஸ்தான் ஸ்டண்டர்ட் 11 செப்டம்பர் 1949 நியூ டெல்லி பதிப்பு – அம்பேத்கர் பேட்டியுடன்) இதற்கு முன்பாக இக்கருத்தையே அவர் 10-செப்டம்பர்-1949 இல் நடந்த அகில இந்திய ஷெட்யூல்ட் ஜாதி பெடரேஷனின் ‘எக்ஸிக்யூட்டிவ் கமிட்டி’ கூட்டத்திலும் வலியுறுத்தினார். ஆக பாரதத்தின் சட்ட அமைச்சர் என்ற முறையிலும், தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு உழைத்த சமுதாய சீரமைப்பாளர் மற்றும் போராளி என்ற முறையிலும் அவர் சமஸ்கிருதம் பாரதத்தின் தேசிய மொழியாக வேண்டும் எனக் கூறியுள்ளார்.

பாரத தேச ஒற்றுமையின் அடையாளமாகவும் அதன் உள்ளீடாகவும் சமஸ்கிருதம் விளங்குகிறது” என்று கூறிய K.R.நாராயணன் பிறப்பால் அந்தணரல்ல. அல்லது “சம்ஸ்கிருதம் ஒரு இனத்திற்கோ ஒரு பிராந்தியத்திற்கோ சொந்தமான மொழியல்ல மாறாக அனைத்து பாரதத்திற்கும் பொதுவான மொழி” என்று கூறிய பக்ருதீன் அலி அகமது நிச்சயமாக பிறப்பால் அந்தணரல்ல.

சமஸ்க்ருதத்தின் ஆதிகவி வேடரான வால்மீகி முனிவர். அதன் ஆகச்சிறந்த மகாகவி காளிதாசன் அந்தணன் அல்ல. மீனவப்பெண்ணின் மகனான வியாசபகவானே அம்மொழியில் மறைகளை தொகுத்தளித்தவர். சமஸ்கிருதம் இந்த தேசத்தின் மொழி. சமஸ்கிருதம் இந்த தேசத்தில் அனைவரும் சொந்தம் கொண்டாட முடிந்த ஆனால் ஒருவரும் ஏகபோக உரிமை கொண்டாட முடியாத ஒரு மொழி என்ற முறையில் அதன் கலாச்சார ஒருமைப்பாட்டு முக்கியத்துவம் புலப்படும்.

[நன்றி: அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் திண்ணை.காம் தளத்தில் எழுதியவற்றிலிருந்து தொகுக்கப் பட்டது]

Tags: , , , , , , ,

13 மறுமொழிகள் தேசத்தின் மொழி – சமஸ்கிருதம்

    Warning: call_user_func(mytheme_comment) [function.call-user-func]: First argument is expected to be a valid callback in /f5/sangatham/public/wp-includes/comment-template.php on line 1334

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் கருத்து: