ஆரம்பமே அமர்க்களமாக…

சம்ஸ்க்ருத காவியங்களில் முதலில் துவங்குகையில் மங்கள ஸ்லோகம் என்று ஒரு தனி ஸ்லோகம் இருக்கும். இதில் காவிய கர்த்தா தந்து இஷ்ட தெய்வத்தையோ, அல்லது காவியத்திற்கு சம்பந்தமுள்ள தெய்வத்தையோ அல்லது கணபதி, சரஸ்வதி, விஷ்ணு, சிவன் போன்ற தெய்வங்களை வழிபடுவதாக இருக்கும். செய்யுட்களாக, சுலோகங்களாக இல்லாத காவியங்களில் கூட முதல் சில வார்த்தைகள் மங்கள சூசகமாக (வ்ருத்திராதைச் – அஷ்டாத்யாயி) அமைப்பது வழக்கம்.

பொதுவாக இந்த சுலோகங்களில் பெரிதாக கற்பனையோ, படைப்பூக்கமோ இருப்பது குறைவு. ஆனால் சில ஒரு சில காவியங்களில் இந்த மங்கள ஸ்லோகத்திலேயே புதுமைகள், ஆச்சரியங்கள் காணக் கிடைக்கின்றன. சில ஸ்லோகங்கள் சிலேடையாக, வேடிக்கையாக அமைவதும் உண்டு…

कोsयं द्वारि, हरि:, प्रयाह्युपवनं शाखामृगस्यात्र किम्!
कृष्णोsहं दयिते बिभेमि सुतरां कृष्णादहं वानरात्॥
मुग्धेSहं मधुसूदन: पिब लतां तामेव तन्वीं अले |
इत्थं निर्वचनीकृतो दयितया ह्रीतो हरि: पातु व:॥

கோsயம்ʼ த்³வாரி, ஹரி:, ப்ரயாஹ்யுபவனம்ʼ ஸா²கா²ம்ருʼக³ஸ்யாத்ர கிம்!
க்ருʼஷ்ணோsஹம்ʼ த³யிதே பி³பே⁴மி ஸுதராம்ʼ க்ருʼஷ்ணாத³ஹம்ʼ வானராத்||
முக்³தே⁴Sஹம்ʼ மது⁴ஸூத³ன: பிப³ லதாம்ʼ தாமேவ தன்வீம்ʼ அலே |
இத்த²ம்ʼ நிர்வசனீக்ருʼதோ த³யிதயா ஹ்ரீதோ ஹரி: பாது வ:||

இந்த ஸ்லோகத்தின் பின்னணி இது தான்: கண்ணன் ஒரு முறை ராதையின் வீட்டுக்கு வந்தான். கதவு மூடி இருந்தது. கதவை தட்டினான். அவர்களுக்குள் நடந்த நகைச்சுவையான உரையாடல் ஒரு ஸ்லோக வடிவில் கவிஞர் அமைத்துள்ளார். இதில் சுவை என்னவெனில் ஒவ்வொரு வார்த்தையும் சிலேடையாக அமைந்திருக்கிறது.

கோsயம்ʼ த்³வாரி?
ராதை: யார் கதவருகே?
கண்ணன்: ஹரி (ஹரி = விஷ்ணு, குரங்கு இரண்டு அர்த்தம்)
ப்ரயாஹி உபவனம்ʼ ஸா²கா²ம்ருʼக³ஸ்ய அத்ர கிம்?
ராதை: தோட்டத்துக்கு போ! இங்கே குரங்கு என்ன வேலை..?
த³யிதே! க்ருʼஷ்ணோsஹம்ʼ
கண்ணன்: அன்புக்குரியவளே! நான் கிருஷ்ணன் (கிருஷ்ணன் என்றால் கறுப்பு என்றும் பொருள்)
அஹம்ʼ க்ருʼஷ்ணாத் வானராத் ஸுதராம்ʼ பி³பே⁴மி
ராதை:எனக்கு கறுப்பு குரங்கு என்றால் இன்னும் பயம்.
முக்தே அஹம்ʼ மது⁴ஸூத³ன:
கண்ணன்: முத்தே! நான் மதுசூதனன் (மதுசூதனன் என்பதற்கு மது உண்ணும் வண்டு என்றும் பொருள்)
பிப³ லதாம்ʼ தாமேவ தன்வீம்ʼ அலே
ராதை:அப்படியானால் பூக்கள் நிறைந்த கொடிகளிடம் போ!
இத்த²ம்ʼ நிர்வசனீக்ருʼதோ த³யிதயா ஹ்ரீதோ ஹரி: பாது வ:
இவ்வாறு அன்புக்குரியவளின் பதில்களால் பேச்சற்றுப் போன ஹரி நம்மைக் காக்கட்டும்.

***

இன்னொரு ரஸமான மங்கள ஸ்லோகம், விஸ்வேஸ்வர பண்டிதர் என்பார் இயற்றிய அலங்கார கௌஸ்துபம் என்கிற நூலில் முதலாவதாக அமைந்துள்ளது. அண்ணன் தம்பிகளான கணேசரும், கந்தனும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட பாசத்தை சுவையாக எடுத்துக் கூறுகிறது. 

दत्तस्तन्यरसं कराग्रिमभुवा वक्त्रान्तरेष्वादराद्दोर्विक्षेपनिषिद्धकुम्भविरचन्मत्तद्विरेफोत्करम् ।
अम्बाया धयतो पयोधरयुगं तिर्यग्मिथः पश्यतोर्बाल्यस्नेहविजृम्भितं विजयते द्वैमातुरस्कन्दयोः ।।

த³த்தஸ்தன்யரஸம்ʼ கராக்³ரிமபு⁴வா வக்த்ராந்தரேஷ்வாத³ராத்³தோ³ர்
விக்ஷேபனிஷித்³த⁴ கும்ப⁴விரசன்மத்தத்³விரேபோ²த்கரம் |
அம்பா³யா த⁴யதோ பயோத⁴ரயுக³ம்ʼ திர்யக்³மித²​:
பஸ்²யதோர்பா³ல்யஸ்னேஹவிஜ்ருʼம்பி⁴தம்ʼ விஜயதே த்³வைமாதுரஸ்கந்த³யோ​: ||

குழந்தை கந்தனுக்கு ஆறு முகங்கள். ஆனால் அம்பிகையிடம் ஒரு முகத்தால்  பாலருந்தும் போது மீதம் உள்ள ஐந்து முகங்கள் அனாதரவாக (பால் அருந்த முடியாமல்) இருக்க, கணேசர் தன் தும்பிக்கையால் ஐந்து முகங்களுக்கும் பால் உறிஞ்சி ஊட்டுகிறாராம். அதே சமயம் கணேசரின் கழுத்தில் மொய்க்கும் ஈக்களை (யானைக்கு மத ஜலம் வடிவதால்  கழுத்தில் ஈக்கள் மொய்க்கும்) தனது பனிரெண்டு கரங்களாலும் விரட்டுகிறாராம். 

***

இன்னொரு ஸ்லோகம், இது மங்கலஸ்லோகமாக வருகிறதா என்று தெரியவில்லை. இதுவும் முதல் ஸ்லோகத்தைப் போலவே வேறொரு சம்பவத்தில் பார்வதி – பரமேச்வரர்களுக்கு நடுவே நடக்கும் சம்பாஷனை போல அமைந்துள்ளது. 

कस्त्वं ? शूली, मृगय भिषजं, नीलकण्ठः प्रियेऽहम् ।
केकाम् एकां कुरु, पशुपतिर् नैव दृष्टे विषाणे ॥
स्थाणुर् मुग्धे, न वदति तरुर् जीवितेशः शिवायाः ।
गच्छाटव्याम् इति हतवचाः पातु वश्-चन्द्रचूडः ॥

கஸ்த்வம்ʼ ? ஸூ²லீ, ம்ருʼக³ய பி⁴ஷஜம்ʼ, நீலகண்ட²​: ப்ரியே(அ)ஹம் |
கேகாம் ஏகாம்ʼ குரு, பஸு²பதிர் நைவ த்³ருʼஷ்டே விஷாணே ||
ஸ்தா²ணுர் முக்³தே⁴, ந வத³தி தருர் ஜீவிதேஸ²​: ஸி²வாயா​: |
க³ச்சா²டவ்யாம் இதி ஹதவசா​: பாது வஸ்²-சந்த்³ரசூட³​: ||

சங்கரர்​: த்³வாரம் அங்கு³ல்யா ப்ரஹரதி|
உமா: அங்கு³ல்யா க​: கபடம்ʼ ப்ரஹரதி ?

க​: த்வம்ʼ?
உமா: நீங்கள் யார்?
ஸூ²லீ  |
சங்கரர்: நான் சூலம் தாங்கியவன் – சூலி!
ம்ருʼக³ய பி⁴ஷஜம்ʼ|
உமா: (உமக்கு சூலரோகம் வந்து விட்டதா?) மருந்து தேடி வைத்தியம் செய்து கொள்ளுங்கள்.
ப்ரியே, அஹம்ʼ நீலகண்ட² |
சங்கரர்: அன்பே, நான் நீலகண்டன்!
ஏகாம்ʼ கேகாம்ʼ குரு |
உமா: (ஓஹோ, நீ மயிலா..) சரி அப்படியானால் ஒரு குரல் கொடு!
பஸு²பதி  
சங்கரர்: அன்பே, நான் பசுபதி!
நைவ த்³ருʼஷ்டே விஷாணே
உமா: நீங்கள் பசுபதி (காளை) என்றால், நான் கொம்புகளைக் காணவில்லையே!
ஸ்தா²ணுர் முக்³தே⁴ 
சங்கரர்: முத்தே! நான் ஸ்தாணு!
ந வத³தி தரு |
உமா:  மரங்கள் பேசாதே, நீங்கள் எப்படி பேசுகிறீர்கள்?
ஸி²வாயா​: ஜீவிதேஸ²​:  
சங்கரர்: அன்பே, நான் சிவா என்கிற பார்வதியினுடைய பிராணநாதன்!
க³ச்சா²டவ்யாம் 
உமா: (சிவா என்பதற்கு நரி என்றும் பொருள்), நீ நரியின் கணவனா? அப்படியானால் காட்டுக்கு போ!
இதி ஹதவசா​: பாது வஸ்²-சந்த்³ரசூட³​: 

இவ்வாறு பார்வதி பதிலடி கொடுத்ததில் மயங்கிய பிறைசூடியான சிவபிரான் காக்கட்டும்!

***

கடைசியாக ஒரு ஸ்லோகம். இதுவும் பிள்ளையார் – முருகருக்கு இடையில் நடக்கும் போர், தீர்ப்பு சொல்ல பார்வதியிடம் முறையிடுகிறார்கள்!

हे हेरंब ! किमंब? रोदिषि कुत:? कर्णौ लुठत्यग्निभू:
किं ते स्कंद विचेष्टितं? मम पुरा संख्या कृता चक्षुषाम् | 
नैतत्तॆप्युचितं गजास्य चरितं, नासां मिमीतेम्ब मे
तावेवं सहसा विलोक्य हसितव्यग्रा शिवा पातु न: ||

ஹே ஹேரம்ப³ ! கிமம்ப³? ரோதி³ஷி குத:? கர்ணௌ லுட²த்யக்³னிபூ⁴:
கிம்ʼ தே ஸ்கந்த³ விசேஷ்டிதம்ʼ? மம புரா ஸங்க்²யா க்ருʼதா சக்ஷுஷாம் |
நைதத்தெப்யுசிதம்ʼ க³ஜாஸ்ய சரிதம்ʼ, நாஸாம்ʼ மிமீதேம்ப³ மே
தாவேவம்ʼ ஸஹஸா விலோக்ய ஹஸிதவ்யக்³ரா ஸி²வா பாது ந: ||

ஹே ஹேரம்ப³ !
ஹே கணேசா!
  கிமம்ப³?
என்ன அம்மா?
குத: ரோதி³ஷி ?
ஏன் அழுகிறாய்?
கர்ணௌ லுட²த்ய அக்³னிபூ⁴: 
அக்நிபூ: (முருகன்) என் காதுகளைப் பிடித்து இழுக்கிறான்!
கிம்ʼ ஸ்கந்த³ தே  விசேஷ்டிதம்ʼ?
கந்தா? இது என்ன சேட்டை?
மம புரா ஸங்க்²யா க்ருʼதா சக்ஷுஷாம்
முதலில் அவன் தான் என் கண்களை எண்ண ஆரம்பித்தான் (அவனைக் கேளு முதலில்)
ந ஏதத் அபி உசிதம்ʼ க³ஜாஸ்ய சரிதம்ʼ
கணேசா, இது சரியில்லையே?!
மே  நாஸாம்ʼ மிமீதே அம்ப³ 
அவன் என் மூக்கின் நீளத்தை அளக்கிறான்…!
தாவேவம்ʼ ஸஹஸா விலோக்ய ஹஸிதவ்யக்³ரா ஸி²வா பாது ந:  
இவ்வாறு இருவரின் பிரச்சனையை நோக்கிய பார்வதி மகிழ்ந்து சிரித்தாள். அவளது சிரிப்பு நம்மைக் காக்கட்டும்!

***

3 comments for “ஆரம்பமே அமர்க்களமாக…

 1. S Ravi
  June 25, 2012 at 12:00 pm

  I like your site. You may send emails to me.
  Thanks.
  RAVI

 2. May 18, 2013 at 8:07 am

  Wonderful reading…my hearty thanks to you for this useful site.Neyveli Santhanagopalan.

 3. k Sankaranarayanan
  September 7, 2013 at 10:49 am

  அருமை அருமையிலும் அருமை நீவிர் வாழ்க வளமுடன்
  உமது பணி சிறக்க எமது வாழ்த்துக்கள்

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் கருத்து: