நாடகம் – நவீன சினிமாவின் புராதன வேர்கள்

இந்தியாவில் திரைப்படங்களின் மீது மக்களுக்கு அபரிமிதமான காதல். வருடத்துக்கு தமிழில் மட்டும் நானூறு ஐநூறு திரைப்படங்கள் எடுத்து வெளிவருகின்றன. இவற்றில் பெரும்பாலும் கதை அமைப்பு, பாத்திரங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. ஹீரோ, ஹீரோயின், கண்டதும் ஏற்படும் காதல், வில்லன், கதாநாயக – நாயகிக்கு உதவும் காமடியன், டூயட் பாடல்கள் என்கிற “ஃபார்முலா”வே தொடர்ந்து சினிமாக்களாக வந்து அவற்றுக்கு மக்களும் ஆதரவு அளிக்கிறார்கள். இதிலிருந்து சற்றே மாறி, கதாநாயகன் ரொம்பவும் மோசமான குணங்கள் உள்ளவனாகவோ, சினிமாவின் முடிவு சோகமாகவோ, பாடல்கள் இல்லாத படமாகவோ, இவ்வளவு ஏன் காமடியன் இல்லாமல் படம் எடுத்தாலும் கூட அந்த படங்கள் வெற்றி பெறுவது கடினம்.

நமது சினிமாக்கள், காமரா முன்னால் நாடகம் நிகழ்த்துவதைப் போலவே உருவாக்கப் படுகின்றன. திரைப்படத்துக்கே உரிய முறை இன்னும் நமக்கு கைவரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த ஃபார்முலா எப்படி ஏற்பட்டது? மேலை நாட்டுத் திரைப்படங்கள் போல, நமது நாட்டிலும் திரைமொழியில் மாற்றங்கள், திரைப்படத்துக்கேன்றே புதிய இலக்கணங்கள் உருவாகவில்லை? திரைப்படங்களுக்கு முன் இருந்த நாடக மரபு பற்றி தெரிந்து கொண்டால், நமது திரைப்படங்கள் அதன் தொடர்ச்சியாகவே அமைந்திருப்பது தெரிய வரும். அது வளர்ச்சியா வீழ்ச்சியா என்பது விவாதத்துக்குரியது. அதை விடுத்து நாடக வரலாற்றை சற்று பார்ப்போம்.

நாடகங்களின் வரலாறு மிகப் பழமையானது. நாடகக்கலை மிகப் பழமையான ரிக்வேதத்திலிருந்தே துவங்குகிறது. ரிக் வேதத்தில் யம – யமி சம்வாதம், இந்திரன் – இந்திராணி சம்வாதம், ஊர்வசி – புரூரவஸ் சம்வாதம் போன்ற பல உரையாடல்கள் (சம்வாதம் = உரையாடல்) இடம்பெறுகின்றன. இதிலிருந்தே நாடகம் என்னும் கலை உருவாகி இருக்கலாம் என்று பல அறிஞர்களின் கருத்து. பழமையான சம்ஸ்க்ருத இலக்கண நூல்களில் பாணினி, பதஞ்சலி ஆகியோரும் நாடகங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். பதஞ்சலியின் மஹாபாஷ்யத்தில் கம்சவதம், பலி பந்தம் போன்ற நாடகங்கள் குறித்த செய்திகள் உண்டு. இவ்வளவு பழமையான சம்ஸ்க்ருத நாடகங்கள் வழக்கொழிந்து போய்விடவில்லை இன்றும் கேரளாவில் கூடியாட்டம் என்ற பெயரில் உயிர்ப்புடன் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

நாடகம் என்கிற அமைப்பு எப்படி உருவானது? நம் முன்னோர்கள் நாடகம் என்றால் என்ன அர்த்தம் வைத்திருந்தனர்?

सात्त्विकाद्यैरभिनयै: प्रेक्षकाणां यतो भवेत् |
नटे नायकतादात्म्यबुद्धिस्तन्नाट्यं उच्यते ||

-சிம்ஹ பூபாலரின் ரசார்ணவ சுதாகரம்

நாடகம் என்பது ஒரு நிகழ்ச்சியை திரும்ப நிகழ்த்தி, அதை நடத்திக் காட்டும் விதத்தில் பார்வையாளர்களை நாடகத்தின் நாயகனுடன் தம்மை அடையாள படுத்திக் கொள்ள வைப்பதாகும்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாடகம் குறித்த அடிப்படை நமது நாட்டு மக்கள் அறிந்து வைத்திருந்தார்கள். நாடகம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப் பட்ட பல நூல்கள் நமக்கு கிடைத்துள்ளன. பரத முனிவரின் நாட்டிய சாத்திரம், தனஞ்ஜயனின் தசரூபகம், இரட்டை ஆசிரியர்கள் ராமச்சந்திரர் – குணச்சந்திரர் ஆகியோர் எழுதிய நாட்ய த³ர்பணம், சாரதா தனயர் எழுதிய பா⁴வப்ரகாசம், வித்யாநாதரின் ப்ரதாபருத்ரீயம், சிம்ஹ பூபாலரின் ரசார்ணவ சுதாகரம், விஸ்வநாதரின் சாஹித்ய த³ர்பணம், சாகரநந்தியின் நாடக லக்ஷண ரத்ன கோசம் ஆகியவை குறிப்பிடத் தகுந்த நூல்கள். இவை ஒவ்வொன்றுமே பழமையானவை. இந்த நூல்களில் அவற்றை விட பழமையான, நமக்கு இப்போது கிடைக்காத நூல்களில் இருந்து ஆசிரியர்கள் குறிப்புகள் தருகிறார்கள். ஆகவே நமது நாடக மரபு என்பது மிக மிக பழமையானது.

***

சம்ஸ்க்ருத இலக்கியத்தில் ஸ்ரவ்ய காவ்யம் (கேட்டு ஆனந்தப் படக்கூடியவை), த்ருஸ்ய காவியம் (பார்த்து ரசிக்கத் தக்கவை) என இருவகை உள்ளது. இவற்றில் நாடகங்கள் த்ருஸ்ய வகை இலக்கியங்கள். சாஹித்யம் – கவிதை, சங்கீதம் – இசை, சம்வாதம் – வசனம், அபிநயம் – உடல் அசைவுகளால் உணர்த்துதல் ஆகியவை சேர்ந்ததுதான் நாடகம். ஆங்கிக – உறுப்புகளால், வாசிக – வார்த்தைகளால், ஆஹார்ய – அலங்காரங்கள், சாத்விக – உணர்ச்சிகளால் எல்லாம் ஒருங்கே சேர்ந்து ஒரு செய்தியை சொல்வதே நாடகம். இசையும், கவிதையும் மட்டுமே உள்ள நாடக முறை ந்ருத்யம் அல்லது நாட்டியம். வசனங்களும் சேர்ந்ததே நாடகம்.

நாடகங்களில் தலை சிறந்த படைப்புகளாக குறிப்பிடப் படுபவை:

  • காளிதாசனின் சாகுந்தலம், விக்ரமோர்வசியம், மாளவிகா அக்னிமித்ரம் ஆகியவை
  • ஷுத்ரகர் இயற்றிய ம்ருச்சகடிகா
  • பவபூதியின் மாலதீமாதவம், உத்தரராமசரிதம்
  • விசாகதத்தாவின் முத்ரரக்ஷசம்
  • பட்ட நாராயணரின் வேணி சம்ஹாரம்
  • கிருஷ்ண மிஸ்ரரின் பிரபோத சந்திரோதயம்

நாடகத்துக்கு ரூபகம் என்பது இன்னொரு பெயர். இதில் பத்து வகைகள் உண்டு. தசரூபகம் என்ற நூல் பத்து வகையான நாடகங்களைப் பற்றியது. நாடக, ப்ரகரண, பா⁴ண, வ்யாயோக, சமவகார, டிம, இஹாம்ருக, உத்ஸ்ருதாங்க, வீதீ மற்றும் பிரஹசன என்பவை அந்த பத்து வகைகளின் பெயர்கள் ஆகும். இந்த பத்தில் நாடகம் என்பது ஒரு வகை என்றாலும் பொதுவாக இவை அனைத்தும் நாடகம் அல்லது ரூபகம் என்றே அழைக்கப் படுகின்றன.

  • நாடகம் என்பது முழுமையான அமைப்பு, திருப்பங்கள் எல்லாவற்றையும் கொண்டு புராண இதிகாச கதையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். ப்ரகரணம் என்பது சமூக விமர்சனத்தை அடிப்படையாகக் கொண்ட பத்து காட்சிகளுக்கு மிகாத, புராண – இதிகாச அடிப்படை இல்லாத நாடகங்கள்.
  • பா⁴ண என்கிற வகை ஒரு கதாபாத்திரம் தனிப்பேச்சாக பேசுவதாக அமைந்திருக்கும்.
  • வ்யாயோகம் என்பது பெண்கள் அதிகம் இடம் பெறும் வகை. இதில் கதை பொதுவாக ராணுவ, போர் சம்பந்தமாக இருப்பதுண்டு.
  • சமவகார என்னும் வகை, நாடகத்தைப் போன்றே ஆனால் குறைந்த காட்சிகள் கொண்டதாக இருக்கும்.
  • டிம என்னும் வகையில் போராட்டம், வலி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும். ஹாஸ்யம், சிருங்காரம் ஆகிய உணர்ச்சிகள் இடம்பெறாது.
  • இஹாம்ருக என்பது ஏமாற்றத்தினால் மிருகம் போல அலையும் நாயகனைக் கொண்டதாக இருக்கும்.
  • உத்ஸ்ருதாங்க என்னும் வகை, போரின் பின்னால் ஏற்பட்ட பேரழிவையும், பெண்கள் புலம்புவது போன்ற காட்சிகளையும் கொண்டிருக்கும்.
  • வீதீ என்பது ஓரங்க நாடகம்.
  • ப்ரஹசனம் என்பது கேலி நாடகம். இதில் அதிகக் கட்டுப் பாடுகள் கிடையாது. கதையின் நாயகன் கெட்ட குணங்கள், பழக்க வழக்கங்கள் கொண்டவனாகக் கூட இருக்கலாம். சமூக விமர்சனத்தை கேலியாக எடுத்துரைப்பது இந்த வகையின் நோக்கம்.

***

நாடகத்தின் கதையமைப்பு எப்படி அமைக்கப்படவேண்டும் என்பது குறித்து விரிவான விதிகள், வழிகாட்டுதல்கள் பண்டைய நாட்டிய சாத்திர நூல்களில் காணப்படுகின்றன. நாடகக் கதையில் அதிகாரிக கதா, ப்ராசங்கிக கதா என்று இருவகை. ஒரு நாயகனைச் சுற்றி கதை செல்லும் போது அது அதிகாரிக கதா. ஒன்றுக்கு மேற்பட்டோரை முக்கியமாகக் கொண்டு செல்லும் கதை ப்ராசங்கிக கதா.

ஒரு நாடகத்துக்கு அதன் கதையின் முக்கிய பிரச்சனை (Plot), பாத்திரங்கள் மற்றும் ஆதார உணர்ச்சிகள் அவசியம். இக்கால திரைப்படங்கள் ஆரம்பம், திருப்பம், முடிவு என்னும் (Three Act Structure) மூன்று அங்க அமைப்பை கொண்டு எழுதப் படுகின்றன. பழமையான நாடக அமைப்பு இதனை ஐந்து அங்க அமைப்பாகக் கொண்டு மேலும் விரிவாக விதிக்கிறது.

ஆரம்பம் (துவக்கம்), யத்ந (முயற்சி), ப்ராப்த்யச (முக்கியப் பிரச்சனைக்கு துணையான சிறு சிறு சம்பவங்கள் நிகழும் இடம் – முயற்சியில் வெற்றியா தோல்வியா என்ற இரு வாய்ப்புக்கும் சமமான நிகழ்வுகள்), நியதாப்தி (எல்லா இடர்களும் களைந்து வெற்றியை நெருங்கிய நிலை), ப²லாக³ம (வெற்றியும் நிறைவும்).

ஒரு நாடக திரைக்கதையை வளர்த்தெடுக்கவும் ஐந்து நிலைகளை சாத்திரங்கள் கூறுகின்றன. ஒரு குறிக்கோளுக்காக (கார்யம்) செயல் துவங்குகிறது. அந்த செயலுக்கான முகாந்திரம் சிறிய அளவில் விதை போல துவக்கம் அமைகிறது. இதற்கு பீஜம் என்று பெயர். சாகுந்தல நாடகத்தில் துஷ்யந்தனுக்கு சகுந்தலையைக் கண்டதும் ஏற்படும் காதல், அக்கதையின் பீஜம் ஆகும். கதை துவங்கிய உடனே சில சம்பவங்கள் நிகழ்ந்து முக்கிய கார்யத்தை விடுத்து வேறு விஷயங்களில் கதை பயணிக்கும் போது, திரும்ப முக்கிய கார்யத்துக்கு ஒரு சம்பவம், அல்லது பாத்திரத்தின் மூலம் இழுத்து வருவது பிந்து எனப்படும். பிந்து, கதையின் ஒவ்வொரு கட்டத்திலும் முக்கிய பிரச்சனையை நினைவூட்டிய படியே இருக்கும் நிகழ்வு. அடுத்து துணைச் சம்பவங்கள் என்று சொல்லும் வகையில் நிகழும் சம்பவங்களுக்கு பதாக, ப்ரகரீ என்று பெயர். இவை நாடகத்தில் கட்டாயம் இல்லாவிட்டாலும், இவை இருந்தால் நாடகக் கதை செழுமையாக இருக்கும். ஐந்தாவதாக கதையின் முக்கிய குறிக்கோள் கார்யம் எனப்படும். நாடகத்தின் கதை இதை நோக்கிய பயணமாகவே அமையும்.

நாடகத்தின் கதை விறுவிறுப்பாக அமைய கதையில் திருப்பங்கள் அவசியம். நாட்டிய சாத்திர நூல்களில் இவை ஸந்தி⁴ (juncture) என்று அழைக்கப் படுகின்றன. இவை ஐந்து வகைப்படும். முதலாவது முக² ஸந்தி⁴ எனும் சூழ்நிலை. இதில் தான் கதையின் கரு அறிமுகம் ஆகிறது – கதையின் விதை (பீஜம்) விதைக்கப் படுகிறது.

கதையின் முதல் திருப்பம், குறிக்கோளை அடைவதில் ஏற்படும் சிக்கல் கதாநாயகன் கார்யத்துக்கான முயற்சியில் (பிரயத்ன) ஈடுபடும் நிலையில் ஏற்படுகிறது. இது ப்ரதிமுக² ஸந்தி⁴ எனப்படும். இதனை அடுத்து சிக்கலை தீர்க்க நிகழும் சம்பவங்கள், ப்ராப்த்யச என்னும் கட்டத்தில் பதாக என்னும் சம்பவங்கள் நிகழும் போது, அந்த சூழ்நிலைக்கு க³ர்ப⁴ ஸந்தி⁴ எனப்படும். இதன் பின்னர் நியதாப்தி மற்றும் ப்ரகரீஎன்னும் கட்டம் நிகழும் போது விமர்ச ஸந்தி⁴ ஏற்படுகிறது. இந்நிலை வெற்றியா – தோல்வியா, வாழ்வா – சாவா என்கிற உச்சகட்டம். இறுதியில் ப²லாக³மம் மற்றும் கார்யம் சந்திக்கும் நிலை நிர்வஹண ஸந்தி⁴. இந்த ஐந்து வகை ஸந்தி⁴ – திருப்பங்களும் கூட அறுபத்தி நான்கு அங்க லட்சணங்கள் கொண்டவை. விரிவுக்கு அஞ்சி அவற்றை விளக்காமல் விடுகிறோம்.

***

பொதுவாக நாடகத்தில் நாயக (Hero), நாயிகா (Heroin), ப்ரதிநாயக (Villain) ஆகியோர் முக்கிய பாத்திரங்கள். இதில் நாடகத்தினை ஒவ்வொரு கட்டத்திலும் நகர்த்தி செல்லுவது, கதையை மக்களுக்கு புரியும்படி தெளிவாக்குவது, சோகத்தை மாற்றி சந்தோசப் படுத்துவது என்று பல வகையான பொறுப்புகள் கதாபாத்திரங்கள் தவிர்த்த சில சிறப்பு பகுதிகள் நாடகங்களுக்கு அவசியமாகின்றன. காரணம், நாடகம் என்பது ஒலிபெருக்கி எல்லாம் இல்லாத காலத்தில் இருந்து உருவாகி வந்தது, அதிலும் மேடைக்கு தூரத்தில் உட்கார்ந்திருக்கும் மக்கள் கதையை ஒரு வார்த்தை விடாமல் கேட்பது என்பது சிரமம். இதற்காக சில சிறப்பு பாத்திரங்கள் பொதுவாக எல்லா நாடகங்களிலுமே இடம் பெரும்.

நாடகம் துவங்குவதற்கு முன், நாடக மேடையை தயார் செய்வதற்கு பெயர் பூர்வரங்க பிரசாதனம் அல்லது பூர்வரங்கம். இதில் பதினெட்டு விதமான செயல்கள் உண்டு. இவை அனைத்தும் பார்வையாளர்களுக்கு தெரியுமாறு செய்யப் படுவதில்லை. நாடகம் துவங்கும் போது நாந்தி என்னும் கடவுள் வாழ்த்து ஸ்லோகங்கள் இசைக்கப் படும். (இன்றும் கூட சில கல்யாணம், சீமந்தம் போன்ற நிகழ்வுகளில் நாந்தி எனும் பகுதி இடம் பெறுவதுண்டு).

இதன் பின்னர் சூத்ரதாரா என்பவர் பார்வையாளர்கள் முன் தோன்றுவார். தமிழில் இவரை கட்டியங்காரர் என்று கூறுவர். சூத்ரம் என்றால் நூல் இழை, அதை தாரா என்றால் நிர்வகிப்பவர் – Stage Manager. இவர் நாடகத்தின் பல பகுதிகளிலும் தோன்றி ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் உள்ள தொடர்பு, இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் ஆகியவற்றை தனியாகவோ, இன்னொரு கதாபாத்திரத்துடன் சேர்ந்து உரையாடியோ விளக்குவார். நவீனத் திரைப்படங்களில் கூட “வாய்ஸ் ஓவர்” என்று கதை நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே பின்னணியில் விளக்கப் படுவது நினைவுக்கு வரலாம்.

இதனை அடுத்து விதூஷகர் என்னும் நகைச்சுவை நடிகர் கதைக்குள் பார்வையாளர்களை, நகைச்சுவையாக பேசி அழைத்துச் செல்வார். பொதுவாக விதூஷகர் அரசருக்கு நண்பராகவோ, சேவகராகவோ இருந்து அவருக்கு உதவி செய்பவராக இருப்பார். விதூஷகர், கதா நாயகர், நாயகியர், பிரதி நாயகர் (வில்லன்) ஒவ்வொருவருக்கும் நாடகத்தின் வகையைப் பொறுத்து என்னென்ன குணநலன்கள் இருக்க வேண்டும் என்று நாட்டிய சாத்திரங்கள் விரிவாக கூறுகின்றன.

உதாரணமாக நகைச்சுவை என்னும் ஹாஸ்ய ரசத்தை பத்துவிதமாக பிரித்திருக்கிறார்கள். இது குறித்து சுருக்கமாக பார்ப்போம். அவலகீதா என்பது தன்னிலையில் இருந்து தாழ்ந்து போதல். ஒரு துறவி இளம்பெண்ணைப் பார்த்து ரசிப்பது, அவளை புகழ்வது இந்த வகை நகைச்சுவையில் இடம்பெறும்.

அவஸ்கந்த என்னும் வகையில், ஒரு கேவலமான வேலையை கூட்டமாக செய்து விட்டு, அந்த கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லி தாங்கள் பங்கு பெற்றதை நியாயப் படுத்துதல்.

அவஸ்கந்த:

ஒரு வேதாந்தி சந்நியாசி, பௌத்த பிக்ஷு, ஜைன குரு மூவரும் பேசுகிறார்கள்.

यति: साक्षाद् भूतं वदति कुचयोरन्तरं द्वैत वादं |
बौद्द: भावो बोध-क्षणिक-महिमा सौगते दत्त-पाद: |
जैन: बाहोर्मूले नयति सुचितां आर्हती काचिदीक्षा |
सर्वे: नाभेर्मूले प्रथयति फलं सर्व सिद्दान्त सारं |

யதி: பெண்ணின் இரண்டு ஸ்தனங்கள் இணைகிற இடத்தில் தன் த்வைத வாதம் இருக்கிறது. பௌத்தர், தோன்றி உடனே மறைகிற அந்த உணர்ச்சியில் தான் பௌத்தத்தின் க்ஷணிக வாதமே இருக்கிறது. சமணர், இரு தோள்களை காணும் போதே அர்ஹ தேவனின் கொள்கைகள் விளங்குகின்றன. எல்லோரும் சேர்ந்து, ஆமாம், பெண்ணின் நாபி சுழியில் சகல சித்தாந்தங்களும் ஒன்று சேர்ந்து இருக்கின்றன…

மூவரும் தாசி வீட்டுக்கு போய்விட்டு வந்து ஒவ்வொரு காரணத்தை சொல்லிக் கொள்கிறார்கள்.

மூன்றாவது நகைச்சுவை வகை, வ்யவஹாரம். இது ஒருவரோ, சில கதாபாத்திரங்கள் ஒன்று சேர்ந்து விளையாட்டாக நகைச்சுவை, விமர்சனம் (satire) கலந்து பேசுவது ஆகும். பொதுவாக விதூஷகர்கள் இவ்வாறு பேசுவார்கள். அடுத்த வகை விப்ரலம்பம். இதில் கதாபாத்திரம் பேய் போலவோ, கடவுள் போலவோ அல்லது வேறு ஏதாவது வேடமிட்டு மற்றவர்களை நகைச்சுவையாக ஏமாற்றுவது. உபபத்தி என்கிற அடுத்த வகையில், நன்றாக எல்லோரும் அறிந்த விஷயத்தை, தனக்கு வேண்டிய வேறொரு பொருளாக எண்ணிக் கொள்வது. ஆறாவது வகை பயம். போலீசைப் பார்த்து பயப்படுவது போன்ற நகைச்சுவைகள். ஏழாவது வகை நகைச்சுவை அந்ருதம் – பொய்யாக புகழ்வது, வஞ்சப் புகழ்ச்சி. எட்டாவது வகை நகைச்சுவை, ஒரு பாத்திரம் தன் இயல்புக்கு மாறாக வேறொன்றாக நடித்து நம்பவைக்க முயற்சிப்பது விப்ராந்தி. ஒன்பதாவது வகை கத்-கத வாக் – வாய் குளறி, நடுங்கி பேசுவது. பத்தாவது வகை பிரலாபம் – அவசிய மில்லாத இடத்தில் நீட்டி முழக்கி பேசுதல்.

navarasa

இதே போல நாயகர்கள் தீ⁴ரோதா³த்த (அமைதியும், பெருந்தன்மையும் உள்ளவர்), தீ⁴ரோத்³த⁴த (வன்முறை மிகுந்தவர்), தீ⁴ரலலித (அழகும், காதல், கலையார்வம் உள்ளவர்), தீ⁴ரசாந்த (அமைதி, நற்குணங்கள் உடையவர்) என நான்கு வகைகள். நாயகியர்களிலும் பல வகை உண்டு. முக்கியமாக ஸ்வகீய (மனைவியாக), பரகீய (திருமணம் ஆகாத காதலி அல்லது தாசி), சாதாரணீ (சாதாரணப் பெண்).

பலவகையான கதாபாத்திரங்கள் விதவிதமான சூழ்நிலைகளில் சந்திக்கும் போது, அங்கே உணர்ச்சிகள் வெளிப்படுகின்றன. இவற்றை இருவகையாக பிரிக்கலாம். அகஉணர்ச்சி (மனதில் தோன்றுவது – sentiment), புற உணர்ச்சி (முக மாற்றம் போன்றவை – emotion). அக உணர்ச்சிகளைத்தான் நவரசங்கள் என்று அழைக்கிறோம் – சிருங்காரம் (அழகியல்), ஹாஸ்யம் (நகைச்சுவை), கருணா (இரக்கம்), ரௌத்திரம் (கோபம்), வீரம் (வீரம்), பயாநகம் (கொடூரம்), பீபத்சம் (வெறுப்பு), அத்புதம் (வியப்பு), சாந்தம் (அமைதி). இவற்றின் புற உணர்ச்சி வெளிப்பாடுகளும் ஒன்பது வகை முறையே ரதி (காதல்), ஹாசம் (சிரிப்பு), சோகம் (வருத்தம்), க்ரோதம் (கோபம்), உத்சாஹம் (மகிழ்ச்சி), பயம், ஜுகுப்சை (வெறுப்பு), விஸ்மயம் (திகைப்பு), ஸாம (அமைதி).

***

சம்ஸ்க்ருத நாடகங்களுக்கே உரியதாக சில சிறப்பம்சங்கள் உண்டு. சம்ஸ்க்ருத நாடகத்தில் சம்ஸ்க்ருதம் தவிர வேறு பல மொழிகளும் இடம் பெறும். பெரும்பாலும் நகைச்சுவையாகப் பேசும் விதூஷகர் அந்தந்த பிரதேச மொழியிலேயே பேசுவார். பெண்கள், குழந்தைகள் போன்றோர் ப்ராக்ருத மொழியில் பேசுவர். வில்லன், சதி செய்பவன் போன்றோர் பிசாசி போன்ற மொழிகளில் பேசுவர்.

நாடக மேடையில் வெறுக்கத்தக்க காட்சிகள், கைகலப்பு சண்டைகள், மரணம் போன்றவை காண்பிக்கப் படுவதே இல்லை. திட்டுதல், பழித்தல், வன்முறை என்று எதுவுமே நாடகங்களில் இடம்பெறாது. நாடகக் கதையின் தன்மை, சமூக நலத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும். தனிமனித வாழ்வில் அபத்தங்கள் எல்லாம் விமர்சனமாக எடுத்து வைக்கப் படுவது நகைச்சுவையாக இருக்கலாமே தவிர முக்கிய கதையாக இடம் பெறுவது அரிது.

சம்ஸ்க்ருத நாடகங்கள் துன்பமான முடிவை கொண்டிருப்பதே இல்லை. எல்லா நாடகங்களும் தீமை அழிதலும், தர்மம் வெல்லுவதாகவுமே முடியும். நாடகத்தின் நோக்கமே நவரசங்கள் என்னும் உணர்ச்சியை அனுபவமாக்குதல், பார்வையாளர்களின் மனசாட்சியை தர்மத்தின் வழி கட்டமைப்பது, குழப்பத்திலிருந்து தெளிவையும், சிக்கலிலிருந்து விடுவிப்பதுமானதே உட்பொருளாக அமைந்திருக்கும். உதாரணமாக ராமாயணத்தில் ராமனே கதாநாயகன், அவனே ஆதர்சம் – பின்பற்றத் தக்கவன் என்று உணர்த்துவதே நாடகமாக அமையும். இன்றும் நமது சினிமாக்கள் இதனை ஒட்டியே அமைகின்றன. இவற்றிலிருந்து வேறு பட்டால் அவற்றை மக்கள் ரசிப்பதில்லை என்பது தான் நிதர்சனம்.

4 Comments நாடகம் – நவீன சினிமாவின் புராதன வேர்கள்

  1. Dr. Ram Ramamoorty

    Samskrit is a language so pure in construct and grammar.
    The name Samskritham – SAMYAKu KRUTHAM ithi SAMSKRUTHAM!!! means “That which is purified” (my Samskrit GURU told in the class years before in Bharathiya Vidhya Bhavan) in Chennai.

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)