வடமொழி ஆளுமை அல்ல, அறிமுகம் போதும்…

ஒரு நடுத்தர வயதினை தொட்ட ஒருவர், அவருக்கு வடமொழி பரிச்சயம் இல்லை. தேவநாகரி எழுத்தும் தெரியாது. இரண்டொரு ஸ்லோகங்கள் கேள்விப் பட்டிருக்கிறார். அது பற்றி ஆர்வம் கொண்டு சமஸ்க்ருத மொழியை மேலும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அலுவல், வீட்டு பொறுப்புகள், சமூக பொறுப்புகள் என்று இருக்கும் போது, சமஸ்க்ருத வகுப்பிற்கு சென்று நேரம் செலவிட பெரும்பாலும் இவரைப் போன்றவர்களுக்கு வாய்ப்பு இருக்காது.

பொதுவாக இவரைப் போன்றவர்கள் முதலில் தானே சொந்த முயற்சியில் சமஸ்க்ருதம் கற்றுக் கொள்ள எண்ணி, புத்தகங்கள், இணையம் போன்ற ஊடகங்கள் மூலமாக கற்றுக் கொள்ள முயற்சி செய்வர். பெரும்பாலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர் இந்த நிலையிலேயே இருக்கிறார்கள். பாரதத்தை விட்டு வெளிநாடு சென்று வாழும் பொது இந்தியாவையும், அதன் கலாசாரங்களையும் நினைத்துப் பார்த்து அவர்களுக்கு எதோ ஒரு வகையில் ஆர்வம் வருகிறது. அதிலும் இரண்டாம் தலைமுறை வெளிநாடுவாழ் இந்தியர்கள் சம்ஸ்க்ருதம் கற்றுக் கொள்ள விரும்பினால் முதலில் புத்தகங்களை நாடுவதே சகஜம்.

ஆனால் நடைமுறையில் தேவநாகரி எழுத்து முறை தெரியாத ஒருவர் சமஸ்க்ருதம் கற்றுக் கொள்ள விரும்பினால், அவர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவார் என்பது உண்மை. அதிலும் சமஸ்க்ருதம் போன்ற ஒரு கடினமான மொழியை தெரிந்து கொள்ள புத்தகங்களை நாடுவது பெரும்பாலும் அயற்சியையே தரும். மிகுந்த முயற்சி செய்தாலும் கடல் போன்ற பரந்த மொழியை கற்றுக் கொள்வது ஆகாத காரியமாகவே இருக்கும். இறுதியில் இது நம்மால் ஆகாது என்று வெறுத்து ஒதுங்கவே நேரிடும்.

இதற்கு முதல் காரணம், பெரும்பாலும் சமஸ்க்ருதம் கற்றுத் தரும் புத்தகங்கள் முதலில் சமஸ்க்ருத இலக்கணத்திலிருந்தே துவங்குகின்றன.  அதிலும் சமஸ்க்ருதத்தின் ஆழத்துக்கு எடுத்த எடுப்பிலேயே படிப்பவர்களை கொண்டு செல்ல முயற்சி செய்கின்றன. பத்து விதமான தாதுக்கள், ஏழு விதமான வேற்றுமைகள், தொண்ணூறு விதங்களில் வினைச்சொற்கள் என்று இவை அனைத்தையும் விளக்க முற்பட்டு சமஸ்க்ருதம் படிக்க வருபவர்களை இந்த புத்தகங்களே விரட்டி விடுகின்றன.

இவ்வாறு உள்ள நிலையில், சமஸ்க்ருத மொழி ஆளுமை நமது குறிக்கோள் அல்ல.  முதலில் அறிமுகம் செய்து கொள்வோம் என்கிறது இந்த புத்தகம்  – Sanskrit: An Appreciation Without Apprehension.  பாரத் ஷா என்பவர் இதனை எழுதி இருக்கிறார்.  சமஸ்க்ருதத்தை அறிந்து கொள்வதில் பலகாலமாக இருந்து வரும் சிக்கலை தீர்த்து வைக்கக் கூடிய மிக எளிமையான புத்தகம் இது.  தேவநாகரி எழுத்து முறையை விளக்க துவங்குவதிலிருந்தே இந்த புத்தகத்தின் ஆசிரியர், படிப்பவர்களின் மீது மனப்பாடம் செய்யும் சுமை கூட சேராமல் பார்த்துக் கொள்ளுகிறார்.

வடமொழியில் மேதை ஆவதல்ல, அது நடைமுறையில் சாத்தியமும் அல்ல. பதிலாக சமஸ்க்ருத மொழியை  அறிமுகம் செய்து கொண்டு அதன் அழகினை உணர்ந்து பாராட்டுவதே நோக்கம். சமஸ்க்ருத மொழியின் முடிவற்ற இலக்கண விதிகள்,  அந்த விதிகளின் விதிவிலக்குகள், விதிவிலக்குகளுக்கு விதிவிலக்குகள் என்று சிக்கிக் கொள்வதிலிருந்து கற்றுக்கொள்ள வருபவரை காப்பாற்றுகிறது இந்த புத்தகம். ஆசிரியரின் துணையுடன் எழுத்து முறையில் துவங்கி, சமஸ்க்ருததின் புதிரான பகுதிகளையும், நுணுக்கங்களையும் எளிமைப் படுத்தி கொடுக்கிறது இந்த புத்தகம்.

நான்கு பகுதிகளாக உள்ள இந்த புத்தகத்தில் முதல் பகுதி தேவநாகரி எழுத்துக்களை புது விதமாக கற்றுக் கொடுக்கின்றது.  இரண்டாவது பகுதி சமஸ்க்ருத மொழியைப் புரிந்து கொள்ள ஏதுவான அம்சங்களை, படிப்பவர் மனப்பாடம் செய்யும் அவசியம் இல்லாமலே, சொல்லிக் கொடுக்கிறது.  மூன்றாவது பகுதியில் சமஸ்க்ருத மொழியின் ஆச்சரியப்பட வைக்கும் அம்சங்களை அறிமுகப் படுத்துகிறது. நான்காவது பகுதியில் கற்றுக் கொள்ள என்று எதுவும் இல்லை – சமஸ்க்ருத மொழியின் சிறப்பினை – மொழியின் உச்சங்களை அறிமுகப் படுத்துகிறது.  இவ்வாறு சமஸ்க்ருத மொழியைப் பற்றி கேள்வி பட்டதோடு துவங்குகிற ஒருவர் இந்த புத்தகத்தை படித்து முடித்தவுடன், சமஸ்க்ருத ஸ்லோகங்களை காவியங்களை ரசிக்க முடியும் – பாராட்ட முடியும் என்ற நிலைக்கு கொண்டு வந்து விடுகிறது.

சமஸ்க்ருத மொழியில் ஆர்வம் கொண்டு, புத்தகங்கள் மூலமாக கற்க முயலுபவர்களுக்கு அவசியமான புத்தகம் இது. அதே நேரத்தில் தேவநாகரி எழுத்துக்களுக்கும், சமஸ்க்ருத இலக்கணமும் ஏற்கனவே பரிச்சயம் ஆனவர்களுக்கு இந்த புத்தகம் தேவைப் படாது – ஏனெனில் இந்த புத்தகத்தின் நோக்கமே எளிய முறையில் தேவநாகரி எழுத்துக்களில் துவங்கி அடிப்படை இலக்கணம் வரை சொல்லிக் கொடுப்பது தான்.

இந்த புத்தகம் அமெரிக்காவில் அச்சாகிறது. அதனால் விலை அதிகம்.   வலையில் இந்த புத்தகத்தை வாங்க கீழ்கண்ட சுட்டிகள் உதவும்.

Sanskrit: An Appreciation Without Apprehension in Amazon.com

Sanskrit: An Appreciation Without Apprehension in Flipkart.com

6 comments for “வடமொழி ஆளுமை அல்ல, அறிமுகம் போதும்…

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் கருத்து:

*